உ
யோகிராம் சுரத்குமார்
பூஜை
[என் கண்மணித்தாமரை புத்தகத்திலிருந்து …]
குனிந்து அவள் இரண்டு பாதங்களையும் எடுத்து, தன் தலையில் சூடிக் கொண்டார்.
“ஈஸ்வரா… என்ன இது?”
“நீ அம்பாள் கண்மணி”.
“இல்லை. நான் உங்கள் மனைவி” .
“ஆறு வருடமாக தான் என் மனைவி. திருமணமான பிறகுதானே மனைவி. குழந்தையாய் இருந்தபோது நீ தெய்வம் தானே… அந்த குழந்தை தனத்தை, தெய்வ ரூபத்தை நான் இன்னமும் உன்னுள் பார்க்கிறேன். நல்லவர்கள் தெய்வ ரூபம் கண்மணி. நீ நல்லவள் மிக மிக நல்லவள்” .
“என்னை அதிகமாக கொண்டாடுகிறீர்கள்”.
“இல்லை கண்மணி. உன்னை மாதிரி மனைவி கிடைக்க தவம் செய்திருக்க வேண்டும். உனக்கு பிரியமானதை நான் எப்பொழுதும் செய்து கொண்டிருக்க வேண்டும். உன் விருப்பம் எது கண்மணி?”
“நீங்கள் சௌக்கியமாக இருக்கவேண்டும் என்பதுதான் என் விருப்பம்”.
“நீ இருக்கும்போது எனக்கென்ன குறை. இதைத் தவிர உனக்கு வேறென்ன விருப்பம் கண்மணி?”
அவள் யோசித்தாள்.
அவர் மெல்ல அவளுக்கு விசிற ஆரம்பித்தார்.
அவள் காற்று சுகத்தில் கண் மூடி கொண்டாள்.
அவர் இன்னும் அக்கறையாக, மிருதுவாக விசிற ஆரம்பித்தார்.
மெல்ல பாட ஆரம்பித்தார்.
தாலாட்டு போல சிறிய வார்த்தைகள் கொண்ட அழகான பாடல். எல்லா குழந்தைகளுக்கும், எல்லா தாயாரும் பாடுகின்ற பாடல்.
அவள் மெத்தென்று நாற்காலியில் சரிந்து உட்கார்ந்தாள். கண்களை மூடிக் கொண்டாள்.
அந்த பாட்டு அவளை கிறங்கடித்தது.
அந்த பாட்டு அவள் வாயில் கைசூப்பி திரிந்த குழந்தை காலங்களை நினைவு படுத்தியது.
விசிறி விசிறி உடம்பு குளிர்ந்து போன பிறகு, அவளுக்குத் தூக்கம் இல்லாமல் விழிப்பும் இல்லாமல் ஒரு நிலை வந்தது.
அவள் உடை நெகிழ லஜ்ஜையின்றி சரிந்து உட்கார்ந்தாள். சந்தோசமான அலட்சியம் அவளிடம் பரவியிருந்தது.
இருட்டு கொடுத்த தைரியம். குத்து விளக்கின் ஒளி கொடுத்த மயக்கம். இரவின் குளுமை கொடுத்த சுகம். புருசனின் பாட்டு. விரும்பி தின்ற இனிப்பு பண்டங்கள்… அவளுக்குள் போதையை ஏற்படுத்தின.
அவள் மெல்ல தான் மயங்கிக் கிடப்பதையே பார்க்க ஆரம்பித்தாள்.
சுப்ரமணியம் மரப்பாத்திரத்தை எடுத்துக் கொண்டார். அது முழுதும் அரக்கு குங்குமம் இருந்தது.
தலையை பின்னுக்கு தள்ளி, கால் அகட்டி உட்கார்ந்திருந்தவளின் எதிரே உட்கார்ந்து கொண்டார். அவளை வியப்போடும் பிரியத்தோடும் பார்த்தார்.
மனசுக்குள் அவளை நோக்கி கை கூப்பினார்.
“ஓம் தேவ்யை நமஹ. ஓம் துர்க்காயை நமஹ. ஓம் திரிபுவன ஈஸ்வரியே நமஹ.” குங்குமத்தை அவள் பாதங்களில் போட்டு அஸ்டோத்திரம் சொல்ல ஆரம்பித்தார்.
“ஓம் ஸிவாயை நமஹ ஓம் ஜயாயை நமஹ. ஓம் விஜயாயை நமஹ.”
மனதின் அடியில் இருந்து மனைவியை போற்றினார்.
“ஓம் வ்யாதி நாஸின்யை நமஹ. ஓம் ம்ருத்ய நாஸின்யை நமஹ. ஓம் பய நாஸின்யை நமஹ. ”
மனைவியை தெய்வமாக வழிபட்டார்.
“ஓம் துர்காயை நமஹ. ஓம் சரண்யாயை நமஹ. ஓம் பக்தவத்ஸலாயை நமஹ. ஓம் ஸெக்யதாயை நமஹ.”
மிகுந்த பரவசத்தோடு அவள் காலில், குங்குமத்தை போட்டார்.
“நாணாவித பரிமள பத்ர புஷ்பாணி ஸமர்ப்பயாமி.”
பூக்களை வாரி அவள் கால்களில் போட்டார்.
அவளுக்கு உள்ளே அவளைப் பற்றி பெருமையாக இருந்தது. அந்தப் பெருமையை அவளால் பார்க்க முடிந்தது.
அவளுடைய பெருமை அவளைச் சுற்றி வந்தது. அவளோடு கைகோர்த்துக் கொண்டது. அவளை விட்டு விலகி நின்றது. தான் வேறு, உணர்வுகள் வேறு என்பது அவளுக்குப் புரிந்தது.
தன்னை தன் உணர்வுகள் தாக்குவதையும், உணர்வுகளால் தாக்கப்படாமல் நாம் நகர்ந்து கொள்ளலாம் என்பதையும் அவள் புரிந்து கொண்டாள்.
உணர்வுகள் அருகே வரும்போது உற்றுப்பார்க்க, அந்த உணர்வுகள் உரசாமல் நகர்ந்து போவதை கவனித்தாள்.
கர்வப் படக் கூடாது என்று கட்டளை போட்டால் கர்வப்படும். பொய் சொல்லாதே என்று மனசுக்கு கட்டளை போட்டால் அது பொய் சொல்லும்.
கர்வப்படுன்னு விட்டுட்டு, கர்வப்படறதை வேடிக்கை பார்த்தா, நம்ம கர்வம் நம்ம எதிர்க்கயே வெட்கப்பட்டு நம்மை விட்டு ஓடிவிடும்.
கர்வப் படாதே என்று வெறுமனே விட்டுட்டு சொன்னா எப்படி? எப்படி கர்வப்படாமல் இருக்கணும்னு கத்துக் கொடுக்க வேண்டாமா.
இப்பதான் தெரியாது. இது ஒரு வித்தைன்னு. இத்தனை நாள் என்னை ஏன் உத்துப்பார்க்கலை? இத்தனை நாள் ஏன் இப்படி பிரிச்சு பிரிச்சு பார்க்கல?
என் பேச்சு தான் நான். என் சிரிப்பு தான் நான். என் அன்பு தான் நான். என் கோபம் தான் நான்னு தப்பா நெனச்சுட்டேன். இதெல்லாம் நான் இல்லை. நான் வேற. நான் என்பது முற்றிலும் வேறொன்னு.
ஏதோ தெரியறது. உள்ளே உட்கார்ந்து வேடிக்கை பார்த்துண்டு இருக்கு.
இவன் பாடினதை, இவன் பேசியதை, இப்போ உட்கார்ந்து கொண்டு பூஜை பண்றதை எல்லாத்தையும் வேடிக்கை பார்த்துண்டிருக்கு.
பூஜை பண்ணனுமா, பண்ணிக்கோயேன். உள்ளே இருந்தபடியே, உள்ளே இருக்கிறதை உணர்ந்த படியே மனசை, கண்ணை, எதிராளியை ஒட்டுமொத்தமா பார்க்கிறது.
எதிரே இருக்கறவாளைக் கண் பார்க்கிறது. கண்ணை மனசு பார்க்கறது, மனசை ‘அது’ பாக்குறது. அதுக்கு அபிப்ராயம் இல்லை. வெறும பாக்குறது.
அடேயப்பா… இத்தனை நாள் எப்படி இதெல்லாம் தெரியாம இருந்தது?
திடீர்ன்னு எப்படி தெரிஞ்சது? இந்த மனுஷன் தெரியபடுத்தறாரோ… ஏதோ மந்திரம் சொல்லி மனசுக்குள்ளே வெளிச்சம் காட்றாரோ…
கண்களைத் திறக்க பிடிக்கலை. காது கேக்கப் பிடிக்கலை. மனசுக்குள்ளயே உட்கார்ந்து மனசை பாக்கணும், போல இருக்கு. இத விட்டு வர இஷ்டமில்லை.
சர்வ சதாகாலமும் இங்கேயே கிடைக்கணும் போல இருக்கு.
இதுதான் ஸ்ரீவித்தையா? இதுக்கு பேர் தான் தபஸா.
இங்கிருந்துதான் ஆரம்பம். எல்லாமே இங்கிருந்துதான் ஆரம்பம். வெளியே பாக்கறதை, உதறிட்டு உள்ளே பார்க்கணும். உள் பார்வையாலேயே எல்லாத்தையும் பாக்கணும். உள்ளே இருந்து வெளியே பாக்கணும்.
எதிர்ல இருக்கறது யாரு. இவா பேரென்ன? இவா என்ன செய்துண்டு இருக்கா?
அவள் பார்க்க துவங்கினாள்.
எதிர்க்க இருக்கறது பரமஹம்சம். எல்லாம் தெரிந்த பூரணம். புருஷனா இருக்கறதுக்கு ஆசைப்பட்டு பூமிக்கு வந்திருக்கு. பொண்டாட்டியோட இருக்கறதுன்னா என்ன அப்படின்னு தெரிஞ்சிக்கறதுக்கு பூமிக்கு வந்திருக்கு.
மிகப்பெரிய ஜோதி இது. அணையாச்சுடர். தன் வெளிச்சத்தை தனக்குள்ளே மறைச்சிண்டு, எதிர்ல இருக்க எல்லார்கிட்டயும் பிரியமா இருக்கறது.
எல்லோரையும் சுபாவமான கருணையோடு பாக்குறது. வரவழைச்சுண்ட அன்பில்லை. நாடகமான பிரியமில்லை. தம்பட்டமான அவையடக்கமில்லை.
இது சலனமில்லாத சந்தோசம். சாத்வீகமான பிரவாகம். இடையறாத அன்பு. கார்மேகம், மழை பொழிய காத்திருக்கும் கடவுள் தனம்.
இது என்னை பூஜை செய்யவில்லை. என்னில் தன்னைக் கண்டு தன்னையே பூஜை செய்கிறது.
கதிரேசன் கி
குருவே சரணம்…
குருவே சகலமும்…
???