காலங்கள் உருண்டன. பிள்ளைகள் பெரியவர்கள் ஆனார்கள். அவர்களுக்கு பல்வேறு காடுகள் காட்ட கூட்டிப் போனான்.

ஒரு காட்டின் வழியே பெரிய படைகள், தேர்கள், யானைகள் போயின. எங்கோ யுத்தமாம்.
பிள்ளைகள் பார்க்க ஆசைப்பட்டார்கள். நம்மிடமும் வில், வாள் இருக்கிறதே கலந்து கொள்ளலாமா என்று கேட்டார்கள்.

கூடாது. நாம் வேடர்கள். வில்லாளிகள் அல்ல என்று தடுத்து விட்டான். யுத்தத்தை பார்க்கலாமா கூடாதா என்று கேட்டார்கள். பார்க்கலாம் என்று அழைத்தான்.

மலை உச்சியில் நின்று யுத்தம் பார்த்தார்கள். ஆயிரக்கணக்கான அம்புகள் பறந்தன. பலர் சிரம் அறுந்தன. வெள்ளை உடையில் ஒரு வீரன் பலர் சிரம் கொய்து கொண்டிருந்தான். அவன் அம்பு பல வித்தைகள் காட்டிற்று. மந்திரம் சொல்லி அம்பு விட, காற்று கிளம்பியது . மற்றது விட, மழை பெய்தது. விஷவாயு கக்கிற்று.

என்ன இது என்று பிள்ளைகள் கேட்க, அஸ்திரம் என்று பதில் சொன்னான். லட்சக்கணக்கானவர்கள் பூச்சி புழுக்களைப் போல செத்து மடிந்தார்கள். அவனுக்குக் கணக்கு தெரியவில்லை. யுத்தம் பல நாட்கள் நடைபெற்றது. முடிந்து போயிற்று என்று சங்கு ஊத, அவன் மலையிலிருந்து பிள்ளைகளுடன் கீழே இறங்கினான். எங்கும் மரண ஓலம்.

பத்து வயது பையன், இருபது வயது இளைஞன், முப்பது வயது அரசன், நாற்பது வயது தளபதி, எழுபது வயதுக் கிழவர்…ஏன் எண்பது வயது சேனாதிபதி கூட இறந்து கிடந்தார்கள். எல்லோரையும் ஒன்றாய் இட்டு தகனம் செய்தார்கள்.

இவனை விறகு வெட்டி வரச் சொன்னார்கள். காய்ந்த விறகு அடுக்கி சிதை செய்து பெண்கள் இறந்த கணவர்களோடு தீ பாய்ந்தார்கள். சிலர் தாலி அறுத்து தலையில் அடித்து அழுதார்கள்.

குழந்தைகள் தேம்பின. அம்மா, அப்பா என்று அநாதையாய் கதறின. எங்கும் பிணக் குவியல். ஊரே சுடுகாடு.

அவன் அதிர்ந்து போனான். இது யுத்தமா, இதற்குத்தான் வில் வித்தையா. மனிதர்கள் ஒருவரை ஒருவர் கும்பலாய் கொன்று கொள்ளத்தான் அஸ்திரப் பயிற்சியா.

பாவிகளே.. பாவிகளே.. இதுதான் படிப்பா. இதற்குத்தான் குருகுலமா. இதன் பொருட்டுத்தானா நீங்கள் வேதம் கற்றதும். விரிவுரை சொன்னதும். பாவிகளே….பாவிகளே… மனசு பதறிற்று.

தரையில் குத்திட்டு உட்கார்ந்து அழுதான்.

“மனசு சரியில்லை. நீங்கள் வீட்டிற்குப் போங்கள். இனி மறந்தும் காடு வீட்டு வராதீர்கள்” என்று பிள்ளைகளை அனுப்பினான்.

கால் போனபடி நடந்தான்.

“உங்களுக்கு அஸ்திரப் பயிற்சி வேண்டாம் வேடரே. அதை நீங்களே தெரிந்து கொள்வீர்கள்”

அந்தத் தாமரைக் கண்கள் சொன்னது நினைவுக்கு வந்தது.

“வேண்டாம் …..வேண்டாம். எனக்கு அஸ்திரப் பயிற்சி வேண்டவே வேண்டாம்.” மனசு கதறிற்று.

‘துரோணரின் மீது வருத்தம் கொள்ளாதீர். அவர் உமக்கு நல்லதே செய்தார்’

“குருவே, என் கட்டை விரல் துண்டித்து என் குலத்தை காப்பாற்றிய குருவே, உம்மை வணங்குகிறேன்.”

-தொடரும்