உ
யோகிராம் சுரத்குமார்
விடாது பெய்யும் மழை – பகுதி 5
“ஐயா தாங்கள் யார்? யாரை இந்த வனத்தில் தேடுகிறீர்கள், வெய்யில் கொளுத்துகிறது, வேடுவனான எனக்கே தாங்கவில்லை. தங்களால் எப்படித் தாங்க முடியும். நான் ஏதும் உதவி செய்ய வேண்டுமா?”
“காலனைப் போல் பயமின்றி கானகத்தில் சஞ்சரிக்கும் வேடரே, வாழ்க உம் நலம். இவ்வழியே ஐந்து ஆண்களும், ஒரு பெண்மணியும் சென்றது பார்த்தீரா?”
“இல்லை ஐயா”
“நல்லது. அவர்கள் மலையின் அடுத்த பக்கம் போயிருக்க வேண்டும். நான் வருகிறேன்.”
மறுபடி தேர் ஏற முயல்கையில்,
“ஐயா….” அவன் பணிவுடன் விளித்தான்.
“நீங்கள் மலையுச்சிக்குப் போவதற்குள் அவர்கள் வெகுதூரம் போய் விடக்கூடும். என்னோடு நடந்து வந்தீர்களானால் மலை மீது ஏறி அடுத்த பக்கம் விரைவாய் இறங்கி விடலாம். எனக்கு வழி தெரியும் ஐயா.”
ஏறியவர் இறங்கினார். மறுபடி சிரித்தார். அவன் சொக்கிப் போனான்.
இதோ இந்தப் பக்கம் என்று முன்னே நடந்தான். வாள் உருவி வழியில் நீட்டிக் கிடக்கும் முட்செடிகளை வெட்டிக் கொண்டு போனான்.
மலை உச்சியை அடைந்தார்கள். அந்த மனிதன் சிறிது கூட களைப்பாகவில்லை. மயிற்பீலி அசைய, மலை உச்சியிலிருந்து கூர்மையாய் சகல இடமும் பார்த்தார்.
“அதோ அங்கே இருக்கிறார்கள்” என்று ஒரு திசையை காட்டினார்.
அவன் அத்திசை நோக்கி விரைய, கை தட்டித் தடுத்தார். ஏன் என்பது போல் பார்த்தான்.
“நான் போய்க் கொள்கிறேன் வேடரே, உமது உதவிக்கு என் நன்றி. உங்கள் வேட்டையைக் கவனியுங்கள். என் பொருட்டு சிரமம் வேண்டாம்.” மறுபடி நன்றிக் கரம் குவித்தார்.
என்ன பணிவு. எவ்வளவு இதமான மொழிகள். அரசர்களுக்கு இத்தனை பணிவு உண்டா, இதம் உண்டா.
“ஐயா, தாங்கள் யார்?”
“என்னை கிருஷ்ணன் என்று அழைப்பார்கள்.”
“யாதவ மன்னரா?”
“ஆம்”
“ஐயா..” அவன் காலில் விழுந்தான். அவர் கண்களை மூடிக் கொண்டார்.
“ஐயா”
“சொல்லுங்கள் வேடரே”
“உங்களை பார்க்க நான் துவாரகைக்கு வந்தேன். நீங்கள் ஊரில் இல்லை”
“அப்படியா..என்ன விஷயம்?”
“எனக்கு கட்டை விரல் இல்லை ஐயா”
“ஏன்?”
“குருதட்சணையாகக் கொடுத்து விட்டேன்.”
“என்ன….?”
“அவன் சுருக்கமாய் கதை சொன்னான். அவர் விழியசையாது கேட்டுக் கொண்டார்..
“எனக்கு மறுபடி கட்டை விரல் வரச் செய்ய முடியுமா. மலையைத் தூக்கினீர்களாம். பாம்பைக் கொன்றீர்களாம். பல அரக்கர்களை மாய்த்தீர்களாம். எனக்கு கட்டை விரல் தர முடியுமா. இப்போது கூட கேள்விப்பட்டேன். யாரோ மானபங்கம் செய்ய, ஒரு பெண்ணுக்கு அவிழ்க்க முடியாத புடவை கொடுத்தீர்களாம். நான் உடல் பங்கப்பட்டவன் ஐயா, உதவ முடியுமா”
மறுபடி விழுந்து வணங்கினான்.
அவர் கண்கள் மறுபடி மூடின.
-தொடரும்
arulkandan
guru balakumaraney thuani….