அவனுக்கு இந்தக் கூச்சல் பிடிக்கவில்லை. இந்தக் கோபம் ஒப்புதல் இல்லை. அவன் வில்லும் அம்புக் கூடும் மாட்டி எழுந்து வெளியே நடந்தான். தனியே காட்டுக்குள் போனான். துண்டுபட்ட இடத்தையே அமைதியாய் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருந்தான். வில்லில் நாணேற்ற முடியவில்லை. அம்பை எடுக்கக் கூட முடியவில்லை.

பல்லால் இழுத்து நாண் கட்டினான். ஆள்காட்டி விரலும் நடுவிரலும் சேர்த்து அம்பு தொடுக்க முயற்சித்தான். குறி தவறியது. இலக்கின்றி அம்பு எங்கெங்கோ போயிற்று. ஒரே அம்பால் ஒரு நாயின் வாயை அசைக்க முடியாமல் தைத்தவன், மரக்கிளையில் தொங்கியபடி ஓடுகிற யானையையும், குளத்தில் நீந்தியபடியே மேலே பறக்கிற பட்சியையும் அடித்து வீழ்த்தியவன், பசிக்கு ஒரு பழம் கூட அடிக்க முடியவில்லை.

வில்லும் , கூடும் சுமையாய்த் தெரிந்தன.

ஏன் ஏன் ஏன் என்கிற கேள்வி துளைத்து எடுத்தது. எதற்காக என்னிடம் கட்டை விரலை தட்சணை கேட்டார் என்கிற கேள்வியே உண்ணாமல் உறங்காமல் செய்தது. அதே நேரம் அவரை இழித்துப் பேசவும் மனம் வரவில்லை. அவரின் சிலையே இத்தனை வித்தை கற்றுக் கொடுத்தால் அவர் நினைவே என்னை மிகப் பெரிய வீரனாக்கினால், அவரிடம் நேரிடையாய் பாடம் கேட்கிறவர்கள் எத்தனை பாக்கியசாலிகள் என்கிற எண்ணம்தான் வந்தது.

அவரே என் குரு. என் கூட்டம் என்ன சொல்லி அவரை வைதாலும் அவரே என் ஆசான். மறுபடி மனசுள் அவரை இருத்தி ஆள்காட்டி விரலும், நடுவிரலும் சேர்த்து எடுத்து அடிக்க குறி தைத்தது. ஆனால் முன்னம் இருந்த வேகம் இல்லை. வலக்கை கட்டை விரல் நாணிழுத்த பலம் மற்ற விரல்களுக்கு இல்லை.

பழகினான். மானடிக்க முடிந்தது.

விடாது பழகினான். சிறுத்தையைக் கொல்ல முடிந்தது.

இடைவிடாது முயற்சித்தான். பறவைகள் அடிபட்டன.

ஆனால் . நாய் வாயைத் தைப்பது. அம்பால் ஓட ஓட விரட்டுவது . சர மழையாய் பெய்வது முடியவில்லை.

அவன் நல்ல வேடன். அவ்வளவே. வில்லாளி இல்லை. அவனால் உணவுக்கு வழி தேடிக் கொள்ள முடியும். ஆனால் , வில்லெடுத்து யுத்தம் செய்ய முடியாது. காலம் உருண்டது.

 

-தொடரும்