அவன் தன் வலக்கை கட்டை விரலை அங்குள்ள பாறையின் மீது வைத்தான். இடது கையால் வாளை ஓங்கினான். நிமர்ந்து குருவைப் பார்த்தான். சம்மதம் என்பதாய் அந்த அந்தணரின் கண்கள் மூடின. ஓங்கிய வாளை முழு வேகத்துடன் கட்டை விரல் மீது இறக்கினான். வலக்கை கட்டை விரல் துண்டுபட்டு எகிறி குருவின் காலடியில் விழுந்தது. துள்ளி இரண்டு முறை புரண்டது. கையிலிருந்து பீறிடும் இரத்தத்தை கிண்டியிலிருந்து வழியும் நீர் போல உயர நிமர்த்தி குருவின் பாதங்களுக்கு நேரே பூமியில் சொரிந்தான். போதும் என்பதாய் அவர் கை உயர்த்தினார்.

அவன் வலியில் துடித்தபடி இடக்கையால் வலது மணிக்கட்டை அழுத்திப் பிடித்துக் கொண்டு அவரை வலமாய் சுற்றிக் கொண்டு அந்த இடம் விட்டு ஓடினான். வலி தாங்காமல் உதறியபடி அருகே உள்ள குளத்தில் குதித்தான். குளம் சிவந்தது.

குளத்தில் உள்ள தேவதைகள் துடித்தன. வலியின் உச்சியில் மயக்கமாகி விட்டவனை , மெல்ல கரைக்குத் தள்ளின. அவன் வலக்கை மட்டும் பசும் சேற்றில் குளிர்ந்த நீரில் புதைந்து கிடந்தது. மர வேர்கள் ஜீவ ரசத்தை இளக்கின. ஒரு தாமரை இலை நகர்ந்து நகர்ந்து அவன் கையை மூடிக் கொண்டது.

அவைகளுக்குத் தெரியும் நடந்தது மிகப் பெரிய அநியாயம் என்று. அவைகளால் இதை எதிர்த்துக் குரல் கொடுக்க முடியாது. ஆனால் இவன் காயத்தை ஆற்றி விட முடியும் . ரத்தம் நிறுத்தி காயத்தில் மூலிகை ரசம் இறக்கிப் பூரண குணமாக்கி விட முடியும். அவன் மூன்று நாட்கள் மயக்கமாய் கிடந்தான். அவன் வில்லும், அம்புக் கூடும் அநாதையாய் கரை மீது கிடந்தன.

அவனைக் காணாமல் தேடிய வேடுவர் கூட்டம் அவனைக் குளக்கரையில் கண்டு தூங்கிப் போயிற்று. மொண்ணையாகி மூடியிருந்த காயத்தைக் கண்டு வியந்தது. கட்டை விரல் எங்கே என்று சிறிது நேரம் தேடியது. ஆள் கிடைத்த வரையில் சரி என்று அவனையும் , வித்தைகள் பல செய்த அவன் வில்லையும் , அம்புக் கூட்டையும் எடுத்துப் போயிற்று.

வலியே இல்லாது மூன்று நாட்களில் தன் கை குணமானது கண்டு அவன் வியந்தான். இது குருவின் மகிமை என்று நினைத்துக் கொண்டான்.

‘ அற்புதம் அற்புதம்’ என வியந்து விட்டு , ஏன் என் கட்டை விரலை குரு தட்சணையாகக் கேட்டார் என்று புரியாமல் விழித்தான்.

-தொடரும்