உ
யோகிராம் சுரத்குமார்
கூரைப்பூசணி
“அந்த கிராமத்துல இருக்கறவா ஒன்னா சேர்ந்துண்டு இனி இந்த நிலம் மடத்துது இல்ல, எங்களுக்கு சொந்தம்னு சொல்லிட்டு கிட்டத்தட்ட எழுபத்தொன்பது ஏக்கர் அவாளுக்குள்ள பிரிச்சுண்டு ஒத்த பைசா கொடுக்க முடியாது, ஒரு நெல் மணி வராது அப்படிங்கறா. நமக்கு இது ஒன்னும் பெரிய காசு இல்லை. ஆனாலும் இது அநியாயம். மடத்துக்கு எதிரா ஒருத்தர் கிளம்பிட்டா இதே மாதிரி நாலாபக்கமும் நாலுவிதமா கிளம்புவா. மடத்துக்கு நிறைய சொத்து இருக்கு. யார் யாரோ நிர்வாகம் பண்ணிண்டு இருக்கா. நிர்வாகம் பண்ற அத்தனை பேரும் தனக்குதான் சொந்தம் இது மடத்துக்கு சம்பந்தம் இல்லை அப்படின்னு ஆரம்பிச்சா அது உலகத்துக்கு பிடிச்ச கேடு. இந்து தர்மத்துக்கு பிடிச்ச கேடு. உன்னை அவர் கூட்டிட்டு போனது நீ அதுல இன்வால்வ் ஆகி உதவி பண்ணணும்தான். கிராமத்துக்காரா அப்பத்துலேர்ந்து இடைஞ்சல் பண்ணிண்டுதான் இருக்கா. இப்போ சொல்லிட்டா. மடத்துலேர்ந்து யாரும் வரக்கூடாதுன்னு. என்ன பண்றதுன்னே தெரியலை.“
எல்லோரும் மௌனமாக இருந்தார்கள்.
“ஏன் தெரியலை. ஒரு வழி இருக்கு.” எல்லோரும் திரும்பிப் பார்த்தார்கள்.
“மடத்துக்கு அடுத்து வர்ர பீடாதிபதி நேரா அங்க போய் உட்கார்ந்து இது உன்னுது இல்ல என்னுது அப்படின்னு சொன்னா அவன் பயப்படுவான். சொல்லக்கூடிய தகுதியோட ஒரு பீடாதிபதி அங்க போய் நிக்கணும். கோர்ட், கேஸ்னு போ. அதுபத்தி ஆட்சேபணை இல்லை. நான் இங்க உட்கார்ந்து பூஜை பண்ணப் போறேன். என் பூஜைக்கு நீ பதில் சொல்லுன்னு அங்க நம்ம கட்டடத்துல உட்கார்ந்து ஒரு யஞ்ஞம் பண்ணா ஓடியே போயிடுவான். அவன் வீட்டு பொம்மனாட்டியெல்லாம் பயந்து மிரண்டுடுவா. அப்படி ஏதாவது பண்ணாதான் முடியும். இல்லேன்னா மூலை மூலைக்கு ஏமாத்த ஆரம்பிச்சுடுவான்.”
“பீடாதிபதி எங்க இருக்கான்னு தெரியலையே”
“அப்படி பார்த்தா நடக்காது . பீடாதிபதியை பத்து நாளுக்குள்ள நாம கொண்டு வந்து சேர்க்கத்தான் வேணும். நம்ம பாடசாலையிலேர்ந்து ஒரு பையனை பிடிச்சு நீதான் பீடாதிபதின்னு உட்கார வைக்கணும். அவனை உட்கார வைச்சுட்டு அவனுக்கு பதிலா நாம போய் சண்டை போடணும்.“
“அதுல ஒரு சிரமம் இருக்கு ஸ்வாமி. நீர் ஒன்னு பேச, அவன் ஒன்னு பேச இரண்டும்கெட்டானா போயிடுத்துன்னா அவாளுக்கு கொண்டாட்டமா போயிடும். நம்மள புரிஞ்சுண்டுவா தலைமை ஏற்கணும். தலைமை உசந்து இருந்தாதான் நம்மாள கட்டுப்பட்டு ஒன்னா இருக்க முடியும். இல்லைன்னா நமக்குள்ள சண்டை வந்துடும். நமக்குள்ள சண்டை வரணும்னுதான் இருக்கற அத்தனை பேரும் காத்திண்டு இருக்கா. ஆறு காரியஸ்தா, ஆறு பேர் ஆறு திக்குல போனா மடம் அழிஞ்சுதுன்னு வாய் நிறைய சொல்வா. சங்கர ராமா இப்பவும் ஒன்னும் கெட்டுப் போகலை.”
காரியஸ்தரில் பெரியவர் அருகே வந்தார்.
“நீ பீடத்தை எடுத்துக்கோப்பா. தண்டத்தை கையில எடுத்துக்கோ. சன்னியாசம் வாங்கிக்கோ. நீ வந்தா போதும். நடுங்கும். இந்த மடத்துல இருக்கற அத்தனை பேரும் நடுங்குவா. எனக்கே உங்கிட்ட பயம் இருக்கு. உன்னைப் பத்தி பெரியவா அத்தனை சொல்லியிருக்கா. அவனுக்கு மந்திரம் தெரியும்டா. பிரயோகம் தெரியும். அவன் மனுஷா மனசை படிக்கறான் அப்படின்னு சொல்லியிருக்கா. நீ வரணும். உன்னை மாதிரி இருக்கறவா வரணும். இவ்வளவு பெரிய மடம் காணம போகப்படாது. யோசனை பண்ணுப்பா”
அவன் அமைதியாய் தலைகுனிந்து உட்கார்ந்திருந்தான். அவர்கள் ஒருவர் பின் ஒருவராய் அந்த அறையை விட்டு நீங்கினார்கள். பெரியவரின் படுக்கையறையில் அவர் படுக்கை அருகில் அவன் நாற்காலி போட்டு அமர்ந்து தடவிக் கொண்டிருந்தான். திடீரென்று உடம்பெல்லாம் சிலிர்த்தது. குளிர்ந்தது. எலும்புக்குள் குளிர் எடுத்தது. மூச்சு முட்டியது. எழுந்திருக்க முடியாது யாரோ அழுத்துவது போல் தெரிந்தது. அந்த படுக்கையில் யாரோ வந்து அமர்வது போல அசைவுகள் இருந்தன. அவன் பயந்தான். கூக்குரலிடுவதற்கு வாயை திறந்தான். ஆனால் சப்தம் வரவில்லை. காற்றுதான் வந்தது. சட்டென்று மனதை சமாதானப்படுத்திக் கொண்டு இது பெரியவா வருகையாய் இருந்தால் நாம எப்படி எதிர்க்க முடியும். பெரியவா என்ன சொல்றாளோ அதை கேட்போம். அவன் எழுந்து நின்று சாஷ்டாங்கமாய் விழுந்து வணங்கினான். முகத்தை படுக்கையில் வைத்துக் கொண்டான்.
அவர் தொட்டார். தடவினார். ஏதோ சொன்னார். அவனுக்குப் புரிந்தது. அது சொற்களல்ல. வேறு விதமான மொழி. அது மொழி அல்ல. வேறு விதமான உணர்வு. மொழியால் என்ன விளக்க முடியுமோ அதை மொழியற்று ஒருவர் விளக்க முடியும். தொடலால் என்ன சுகம் தர முடியுமோ அது தொடாது ஒருவர் தரமுடியும். பார்வையால் ஒருவர் எத்தனை குளுமையை தரமுடியுமோ பார்வையே இல்லாமல் மனிதரே இல்லாமல் ஒரு குளுமையை மனிதர் தரமுடியும். உலகம் என்பது உருவங்களால் ஆனது அல்ல. உருவங்களுக்கு அப்பாலும் உள்ள உருவங்கள் இங்கு இருக்கின்றன. சூட்சமங்கள் இருக்கின்றன. குருநாதர் சூட்சமமாய் வந்து அமர்ந்ததை அவன் அனுபவித்தான். சரி என்றான். கை கூப்பினான். அவர் சிரிப்பது போல் தோன்றியது. அவனும் சிரித்தான். எழுந்து நின்று மறுபடியும் வணங்கினான். நாற்காலியில் அமர்ந்து கொண்டான்.
திபுதிபுவென்று நாலைந்து பேர் ஓடிவந்தார்கள்.வேறு சிலரும் ஓடிவந்தார்கள்.
“பெரியவா போன மாதிரி இருந்தது இங்கே. அதனாலதான் ஓடிவந்தோம். பெரியவா போன மாதிரி இருந்தது இங்கே.“ என்று யாரோ சொல்ல, மற்றவரும் ஆமோதிக்க, அவன் அமைதியாக இருந்தான்.
“இருக்கலாம். வந்துட்டு போயிருக்கலாம்”
“வந்தாளா. உங்கூட பேசினாளா.”
“பேசினா அப்படின்னு சொல்ல முடியாது. பேசலை அப்படின்னும் சொல்ல முடியாது. அப்படி ஒன்னு நடந்தது.”