உ
யோகிராம் சுரத்குமார்
கேள்வி – பதில்
கேள்வி: இப்படி எழுதி குவிக்கிறீர்களே, உங்களுக்கு இது சிரமமாக இல்லையா?
எனக்கு பிடித்த வேலை இது. வேறு எந்த வேலையும் இல்லாமல் இதை மட்டுமே நான் செய்து கொண்டிருக்கிறேன். எனவே, நெல்முனையளவும் எனக்கு சிரமமில்லை. மாறாய், இன்னும் பலம் பெறுகிறேன். சந்தோஷமாகிறேன். அந்த சந்தோஷத்தாலும் பலத்தாலும் அதிகம் எழுதுகிறேன்.
உழைப்பது மிகச் சந்தோஷமான விஷயம். ஆனால், யாருக்காக உழைக்கிறோம், எதற்காக உழைக்கிறோம், எப்படி உழைக்கிறோம் என்கிற கேள்விகள் மிகப் பெரியவை. இதில் தெளிவிருந்தால் தான் உழைப்பு சந்தோஷமாக இருக்கும். வெறும் கூலித் தொழில் செய்தால் மற்றவர் குரலுக்கு நடனமாடினால் இன்னொருவரை திருப்திப்படுத்த மன உணர்வுகளை ஒதுக்கிவீட்டு வேலை செய்தால் செய்கின்ற வேலை குப்பையாகத்தான் போகும்.
என் இருபது வயதிலிருந்தே நாவல் எழுதுவது என்னுடைய லட்சியமாக இருந்தது. முப்பத்தாறு வருடங்களாக எனக்குப் பிடிக்கின்ற இந்த வேலையை விடாது செய்து கொண்டு வருகிறேன். அப்படிச் செய்து எழுதுவதற்கான ஒரு பக்குவம் என் மனதில் ஏற்பட்டு விட்டது. எனவே, இதில் எந்த சிரமமும் எனக்கு இல்லை. சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம் வைத்ததொரு கல்வி மனப்பழக்கம்.
கயிற்றின் மீது வேகமாக நடப்பது, கரணம் போடுவது உங்களுக்கும் எனக்கும் வியப்பாக இருக்கலாம். அதையே சிறு வயதிலிருந்து செய்து வந்தவர்களுக்கு சாதாரண விஷயம். அவ்விதமே என் எழுத்து எனக்கு எளிதான காரியம். இனிமையான விஷயம்.
K.venkatachalapathy
சரணம் ஐயனே