உ
யோகிராம் சுரத்குமார்
கேள்வி – பதில்
கேள்வி: நீங்கள் மடாதிபதி இல்லை. காவி உடுத்தவில்லை. பெரிய திருச்சின்னங்கள் இல்லை. ஆனாலும் உங்களை குரு என்று உங்கள் வாசகர்கள் அழைக்கிறார்கள். ஐயன் என்று அன்பாக கூப்பிடுகிறார்கள்.இதை எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள்?
ஒரு குருவை ஆச்சரியத்து வந்ததால் எனக்கும் அந்த வழியில் குரு என்ற பட்டம் கிடைத்திருக்கலாம். அல்லது ஆன்மீகம் அதிகம் பேசுவதால் ஆன்மீகவாதி என்று சொல்வதற்குப் பதிலாக குரு , ஐயன் என்று அழைக்கலாம். என்னால் ஒருபொழுதும் ஒரு மடத்தை நிர்வகிக்க முடியாது. வரவு செலவு கணக்கு பார்க்க முடியாது. எந்த வேலை யார் யாருக்கு என்று பகிர்ந்து கொடுத்து அதை மேற்பார்வை செய்ய இயலாது. வேறு எப்படியெல்லாம் காசு சேர்க்கலாம் என்று கணக்கு போட முடியாது.
இது சோம்பலல்ல. போதும் என்ற மனோநிலை. என்ன ஆடினாலும் பிடி சாம்பல்தான் என்கிறதை மனதிற்குள் அழுத்தமாக புரிந்து கொண்ட நிலை. பெரிய கூட்டம் கூடி பல் தெரிய நிற்பதில் ஒருவன் தன்னை இழந்து விடுவது உண்டு. சொல் ஒன்றும், செயல் ஒன்றுமாய் பிரிந்து போக வாய்ப்புகள் அதிகம். உடன் இருப்பவர்களை கடும் பிரம்மச்சாரி விரதம் என்று சொல்லிவிட்டு தான் கட்டிலில் நான்கு பேரோடு தூங்குவது மரண நேரத்தில் கலவரத்தை ஏற்படுத்தும். கலவரமான மரணம் வரும். அதனால்தான் இப்படி வலிக்கிறதோ என்கிற பயத்தை கொடுக்கும். நிம்மதியாக சாக முடியாது. எல்லோரும் சாக பயந்துதான் சாகிறார்கள். தன்னை அறிந்தவன் மட்டும்தான் மரணத்தைக் கண்டு அஞ்சாமல் வரவேற்கிறான். தன்னை அறிய காவி உடுத்த வேண்டிய அவசியம் இல்லை. சத்தியத்தோடு வாழ்ந்தால் போதும்.
ஒரு வாசகர் குருவாக ஏற்று தன்னை சிஷ்யனாக நினைத்துக் கொள்ளச் சொல்வதை நான் அங்கீகரிக்கவில்லை. நீ வாசகனாக இரு. நான் எழுதுவதை படி. படித்த பிறகு யோசி. யோசித்து செயல்படு. இதுதான் என்னுடைய விளக்கமாக இருக்கிறது. குடுமியும் வேட்டியும் அணிந்து கொண்டு எல்லாத்தையும் எங்கிட்ட விட்டுடு என்று சீடனுக்கு வெந்நீர் ஒத்தடமாக கொடுப்பது எந்த பயனும் இராது. நோய் நாடி நோய் முதல் நாடி என்று எங்கு பிரச்சனை ஆரம்பிக்கறதோ அங்கு தொட கற்றுக் கொள்ளவேண்டும். கற்றுத் தர வேண்டும். பல மடாதிபதிகள் பல பிரம்மச்சாரிகள் இங்கு நோயாளிகளாக இருக்கிறார்கள்.
கேள்வி: அரசியலில் ஈடுபடுவீர்களா?
மாட்டேன். என் இயல்புக்கு ஒத்துவராத விஷயம். ஒவ்வொருவருக்கும் ஒரு அடிப்படையான வலிவு உண்டு. விருப்பம் உண்டு. பிறப்பிலேயே ஒரு சுழி இருக்க வேண்டும். ஒரு முனைப்பு இருக்க வேண்டும். நிலையாமை என்கிற விஷயம் நெஞ்சில் படிந்துகிடக்கிறபோது அவன் எப்படி அரசியல்வாதியாக முடியும். நெடுநாள் இங்கு வாழ்வோம் என்பவரே அதற்குத் தகுதியானவர். ஆனால் நெடுநாள் வாழ்வது என்பது மனிதரிடம் இல்லை. மறுநாள் வாழ்க்கைக் கூட மனிதரிடம் இல்லை.
கேள்வி: வாழ்க்கைப் பற்றி என்னவித திருப்தி இருக்கிறது?
நிறைய பேருக்கு நிறைய நல்லது சொல்லிக் கொடுத்திருக்கிறேன் என்று நன்கு உணர்கிறேன். அப்படித்தான் என்னை நெருங்கி வருகிறவர்களும் தங்களை அறிமுகப்படுத்திக் கொள்கிறார்கள். புகுந்த வீட்டிற்கு பயத்தோடு போனேன்.கணவரின் அம்மாவை புரிந்து கொள் அவர் பயமகற்று என்று நீங்கள் எழுதியது படித்து அவ்விதமே நடந்து இன்று பட்டத்து ராணியாய் வாழ்கிறேன். உங்களுக்கு பலமுறை மனதுள் நன்றி சொல்லியிருக்கிறேன் என்று ஒரு பெண்மணி சொன்னார். மனம் குளிர்ந்தது.
கேள்வி: யாரையேனும் விலக்கி வைக்க வேண்டும் என்றுத் தோன்றுவது உண்டா? இவர் சங்காத்தமே வேண்டாம் என்று விலகி இருப்பது உண்டா?
அதீத கர்விகளை, தாந்தோன்றிகளை நான் விலக்கி விடுவேன். தனக்கு எல்லாம் தெரியும் என்றும், தன் அறிவுக்கு முன்னால் மற்றவர்கள் தூசு என்றும் மிகச் சிறந்த உழைப்பாளி என்றும், அற்புதமான வேலைக்காரன் என்றும் உண்மையான மனிதர் என்றும் விதம் விதமான நினைப்பில் வருகிறவர்களை நான் விலக்கி விடுவேன்.
தன்னைப் பற்றிய சந்தேகம் ஒரு மனிதருக்கு எப்பொழுதும் இருக்க வேண்டும். ஸ்கெப்டிஸஸம் என்று பெயர். சரியாக இருக்கிறேனா என்று சோதித்துக் கொள்கிற புத்தி அடிக்கடி ஏற்பட வேண்டும். அப்படி சோதனை செய்கிறவர்களால்தான் சரியாக இயங்க முடியும். பேச முடியும். புரிந்து கொள்ள முடியும். தான் சரியாக இருக்கிறேன் என்று உறுதியானவர்கள் புரிதலில் குழப்பம் செய்கிறவர்கள். மேலும் அவர்களுடைய எல்லா பக்க உறவுமுறையும் அபத்தமாகத்தான் முடியும். ஒரு கட்டத்தில் அவர்கள் தனியாக தனக்குத்தானே பேசிக் கொள்ள ஆரம்பித்து விடுவார்கள். மனநிலை பிழன்றவர்களுடைய ஆரம்ப கால நிலை, கர்வம். அந்த அகந்தை பூமிக்குள் புதைந்திருக்கின்ற கிழங்கு போன்றது. ஆழ தோண்டி அதாவது ஆழ யோசித்து எடுக்க வேண்டும்.
வைஷ்ணவி
பாலகுமாரன் ஐயாவுக்கு நமஸ்காரம்…