உ
யோகிராம் சுரத்குமார்
கேள்வி – பதில்
நேற்றைய உடையார் கேள்வி-பதிலின் தொடர்ச்சி
கேள்வி: சோழ சாம்ராஜ்யத்தைப் பற்றி இப்போது முகநூலில் பலபேர் எழுதுகிறார்களே, இது பற்றி உங்கள் கருத்து என்ன?
சோழ சாம்ராஜ்ஜியம் எனது பாட்டன் வழி சொத்து அல்ல. என் குலம் வாழ்ந்த பூமி.
பட்டணத்திற்கு குடியேறினாலும் சோழர் தாக்கத்தோடுதான் வாழ்ந்தோம். உணவும், பேச்சும், குசும்புத்தனமும் எங்கள் இயல்பாக இருந்தன. மெத்தென்ற உணவு. உணவில் பட்டைக்காரம் இருக்காது. உப்பும் குறைவாக இருக்கும். ஒரு ‘சொம்பு’ காபி கொடு என்று கேட்பது எங்கள் வழக்கம். கணக்கு, சங்கீதம், ஆங்கிலம் இவை நான்கு தலைமுறைக்கு முன்னாலேயே சோழர்குல அந்தணர்களின் சொத்தாகிவிட்டன. என் வீட்டார் மாமன்னர் இராஜராஜனைப் பற்றி ஓரளவு தெரிந்து வைத்திருந்தார்கள். இதனாலும் எனக்கு எழுதும் எண்ணம் வந்தது.
இதே கல்யாண குணங்கள் மற்றவருக்கும் இருக்கும் அல்லவா. சோழ தேசத்தில் பிறந்து அந்த ருசியை வெளிப்படுத்த தவிப்பவர்கள் இருக்கலாமே. என் மத்திம வயதில் வாரப்பத்திரிகைதான் எழுத்து பரிமாற சிறந்த இடமாக இருந்தது. இப்போது முகநூல் எளிதாகி விட்டது. புதினம் எழுதுபவரை விட முகநூலில் கட்டுரை போலும் எழுதுவது எளிது. அதை தமிழ் கூறும் நன்மக்கள் செய்து வருகிறார்கள்.
நான் உடையார் எழுதத் துவங்கிய போது என் பதிப்பாளர் உட்பட என்னை அதைரியப்படுத்தியவர்கள் அதிகம். என் பதிப்பாளரின் நண்பர் ஒருவர் ‘ராஜராஜனை தொட்டவன் உருப்படமாட்டான் எழுதி வைச்சுக்க பாலகுமாரன் செத்துப் போவான்’ என்று சொன்னாராம். அப்படி ஏதும் நடக்கவில்லை. தஞ்சை பெரிய கோவிலின் சூட்சமம் என்ன என்பது எனக்கு நன்கு தெரியும். அங்கே இன்னமும் அரசன் உண்டு. அவன் இராஜராஜன். வேறு எவரும் கொம்பூதிக் கொண்டு குடிபடைகளுடன் போய்விட முடியாது. இது புரிந்து விட்டால் பல தரிசனங்கள் காணலாம்.
எழுதுவது இருக்கட்டும், சோழ தேசத்து பாழடைந்த கோவில்களை சீர் செய்து வருகிறார்களே ஒரு இளைஞர் குழு, அவர்களை ஊர் கூடி பாராட்ட வேண்டும். சீர் செய்ய எழுத்து துணை. எழுத்து வளர சீர் செய்தல் பெருகும். ஒரு சரித்திர விழிப்பு ஏற்படும். இந்த எல்லா எழுத்துக்கும் அடிப்படை ஶ்ரீமான் நீலகண்ட சாஸ்திரியார் என்பதை நினைவில் நிறுத்த வேண்டும்.
சோழ தேசத்திற்கு, சோழர் நாகரீகத்திற்கு வானுயர்ந்த அந்த கற்றளிகளுக்கு என்னாலான மரியாதையை நான் செவ்வனே செய்து விட்டேன். இல்லையெனில் ஆறுபாகம் உடையார் 21 பதிப்புகள் வந்திருக்குமா.
கூர்மையான புதினங்கள்தான் சரித்திரத்தை சுவையாக பரிமாறும். மொக்கை சரித்திர கதைகள் அதிகம் இருக்கின்றன. வல்லவர்கள் வராமலா போய்விடுவார்கள்.
Balachander, salem
வாழ்க சோழம்.