உ
யோகிராம் சுரத்குமார்
கரிசனம் – பகுதி 3
ஸ்வப்னாவால் சினிமாவுக்குப் போக முடியவில்லை. அங்கு யோசிப்பதற்கு ஒன்றுமே இல்லை. இன்னும் தமிழ் சினிமாவில் உயிர் பிரிந்ததும் விளக்கணையும் காட்சி காட்டுகிறார்கள். உடனே பின்னணியில் கிளாரினெட் அல்லது ஷெனாய் வாசிக்கிறார்கள். ஸ்வப்னாவுக்கு அந்த மாதிரி காட்சி வந்தவுடனே பேஷ்…பேஷ்… என்று கைதட்ட ஆசை வருகிறது. ஒருமுறை அப்படிக் கைதட்ட முன் வரிசைப் பெண்கள் அவளை வெறுப்போடு திரும்பிப் பார்த்தார்கள். ஸ்வப்னாவிற்கு கோவிலும் பிடிக்கவில்லை. தெய்வம் மனுஷ ரூபம் என்பதாய்ப்பட்டது. கோவில் கூட்டமும், நெரிசலும் அதுகூட இல்லை என்பதாய்த்தான் தெரிவித்தன. ஆனால் இலக்கிய கூட்டங்கள் சந்தடி நிறைந்த நகரின் மையப் பகுதியில் நடைபெறுவது இல்லை. ஒதுக்குப்புறமாய் பஸ் போக்குவரத்து அதிகமில்லாத இடமாய் இருக்கிறது. காஸினோவில், சாந்தி தியேட்டரில் வாராவாரம் இலக்கிய கூட்டம் நடந்தால் நன்றாக இருக்கும் உடனே பஸ் பிடித்து மந்தைவெளிக்கு வந்துவிட முடியும்.
எல்டாம்ஸ் ரோட்டிலிருந்து மந்தைவெளி பஸ்க்கு வெகுதூரம் நடக்க வேண்டும். நடை பாதை மோசமாக இருந்தது. தெருவோரம் நடக்கையில் சைக்கிள்கள் உரசிச் சென்றன.
எதிர்பக்க சைக்கிளில் ஒருவன் “ஆத்தா ஆத்தோரமா வாரீயா…” என்று பாடியபடி போனான். அவன் முகத்தைவிட அவன் பாட்டுத்தான் அதிகம் பயமுறுத்தியது. அந்த பாட்டைப் பாடுகிறவன் நல்லவனாக இருக்க முடியாது என்று தோன்றிற்று. ஒருவேளை பகல் பொழுதில் அவன் மிகநல்லவனாகத் தனக்குப்படலாம். அந்த பாட்டை பாடினால் கூட “ஒழியறான் போ” என்று அவனை புறக்கணித்து விடலாம். இருட்டாய் இருக்கின்ற இடத்தில் பாட்டு கூட பயம்தான்.
பிறகு விஸிலிங் இன்த டார்க் என்று அதை சொல்கிறார்கள்.ஒரு வேளை அந்த ஆள் இருட்டைக் கண்டு பயந்து அந்த பாட்டை பாடுகிறானா? ஆண்களுக்கு இருட்டை கண்டு பயமுண்டா…. ஸ்வப்னாவுக்கும் இருட்டு பயம்தான். உங்களிடமிருந்தே உங்களுக்கு விடுதலை வேண்டும் என்பதன் அர்த்தம் இதுதானா. நான் எதற்கு இப்போது பயப்படுகிறேன். இவ்வளவு வேகமாய் நடக்கிறேன்?
-தொடரும்