உ
யோகிராம் சுரத்குமார்
கரிசனம் – பகுதி 2
அடுத்த மாத பேச்சாளர்கள் ….. ஒலிப்பெருக்கி மங்கலாய் சில பெயர்களை உச்சரித்துக் கொண்டிருக்க ஸ்வப்னா வெளியே வந்துவிட்டாள். அடுத்த கூட்டம் பற்றிய விவரங்களை பேப்பரில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். இப்போது நேரமாகிவிட்டது. பஸ் பிடித்து வீடு போக இன்னும் அரை மணியாகிவிடும். கூட்டத்தில் ஸ்வப்னாவோடு இருந்த பெண்மணியும் அவசரமாய் வந்தாள்.
ஆனாலும் எட்டே முக்கால் ஒன்பதுன்னு ஆக்கிடறா….. பஸ் பிடுச்சு வீட்டுக்குப் போறது, சிரமமாயிடறது. இந்த மாதிரி மீட்டிங் எல்லாம் மத்தியானம் வச்சா நன்னாயிருக்கும்.
மத்தியானம் மீட்டிங் இருந்தா நானும் நீங்களும் தான் வர முடியும். நாம கூட. வருவோமோ என்னவோ…. தூக்கத்தை கெடுத்துண்டு எதுக்கு மீட்டிங்குன்னு நாமளும் வீட்டோட இருந்துடுவோம்.
நீங்க சொல்றது வாஸ்தவம். அந்த பெண்மணி சட்டென்று ஒத்துக்கொண்டாள்.
ஆனால் பகல் தூக்கம் ஸ்வப்னாவுக்கு பழக்கமில்லை. ஆனால் அந்த பெண்ணுக்கு இருக்கும் போலிருக்கிறது. பகலோ இரவோ இந்த மாதிரி கூட்டங்களுக்குப் போவது இதமாய் இருக்கிறது. ஆழமான பேச்சுகளைக் கேட்பதில் ஒரு திருப்தி இருக்கிறது. விடுதலை என்பது என்ன என்று வேறு கோணத்தில் யோசிக்க உதவுகிறது.
ஆனால் பெண் விடுதலை பற்றிய இந்த எழுபதுபேர் கூட்டத்தில் இரண்டு பெண்கள் தான் இருந்தார்கள். ஆண்கள்தான் பேசினார்கள்.
உலகம் யாவையும் தாமுளமாக்கனும் என்று கடவுள் வணக்கம் பாடிய பெண் பாடி முடித்ததும் தம்பி மாதிரி ஒரு பையனோடு வெளியே போய்விட்டாள்.
இம்மாதிரி கூட்டங்களுக்கு பெண்கள் ஏன் வருவதில்லை என்று ஸ்வப்னா ஆச்சிரியப்பட்டாள். ஜே ஜே என்று பேச்சும் சிரிப்புமாய் சினிமாவுக்குப் போகும் பெண்கள் இம்மாதிரி இலக்கியக் கூட்டத்திற்கு வந்தால் தலை சொறிந்து தவிப்பார்களே என்று யோசித்தாள்.
-தொடரும்