உ
யோகிராம் சுரத்குமார்
காதோடுதான் நான் பேசுவேன் – எட்டாம் பகுதி
மாலை நேரம் உபயோகப்படுத்துவது பற்றி கவனம் கொண்டது உண்டா. மஜாவான நேரம் என்று பல நண்பர்கள் சொல்வார்கள். மது அருந்துபவர்களுக்கு மண்டைக்குள் ஒரு பரபரப்பு துளிர் விடும் நேரம். பாட்டில்களின் சத்தமும், மதுவின் நெடியும், நிறமும், சில்லிப்பும், தொண்டை கமரவைக்கும் முதல் ருசியும் இவைகளை அனுபவிக்கும் முன்பே நெஞ்சில் தோன்றிவிடும் தருணம். நான் மது அருந்துவதில்லை. ஆனால் அருந்துபவர் ஏற்படுத்திக் கொள்ளும் ஆவேசங்களை பார்த்தும், பேசியும் கவனித்திருக்கிறேன். சுய கட்டுப்பாடு என்பது படு வேகமாக சிதறக் கூடிய இடம் மதுபான நேரம். இது தலைப்பட மிகப் பெரிய ஆத்திரம் பொங்கும். நேசித்த ஆவலுற்ற பெண்ணின் அண்மை கிடைக்கவில்லை என்பது கோபம் தரும். ஆனால் அதிலும் ஒரு நிதானம் இருக்கும். ஆனால் மதுபான மரித்தல் செய்தால் மனம் பொறுக்காது. வெட்டி சாய்க்கத் தோன்றும். அப்படி தடுத்துவிடுவார்களோ என்ற பயம் குடித்த பிறகு பெரிதாய் விகசிக்கும். நான் இப்போ குடிச்சுட்டேன் என்ன பண்ணுவே என்கிற வன்முறையாய் கூத்தாடும். மது அருந்துதல் ஒரு கலை. மது அருந்த சில வழிமுறைகள் உண்டு. கடைபிடித்தால் தன்னை ஆராயலாம். தெளிந்த பிறகு ஒருவேளை திடம் தந்தாலும் தரலாம்.
மாலை நேரம் இசையோடும், நடனத்தோடும் நாடகத்தோடும் கழிக்க வேண்டிய நேரம். பேச்சு அரட்டைக்கு வேறொரு நல்ல நேரம் இருக்கிறது என்பது என் அபிப்ராயம். மாலை முடிந்து முற்றிலும் இருள் சூழ்ந்து கைரேகை தெரியாத இருட்டில் அமர்ந்து குரலால் மட்டுமே செய்தியின் கன பரிமாணத்தை சொல்லுகின்ற நேரம் ஒன்று உண்டு.
கொதிநிலை குறைவாக இங்கு இருக்கும். முகத்தின் ஆக்ரோஷம்தான் எதிர் பக்க ஆக்ரோஷத்தை தூண்டுவிக்கும். குத்தல் பேச்சுக்கு முகம் வாடுகிறதா என்கிற கணக்கு இல்லாது போகும். யாரோ ஒருவருக்கு குரலில் பதம் வர, இனிமை கலக்கப்பட மற்றவரும் அதை பின் தொடர்வர். தொலைக்காட்சியும் வானொலியும் இல்லாத எழுபது வருடங்களுக்கு முன்பு இப்படி விவாதம் நடந்திருப்பதை அதில் பெண்களும் கலந்து கொண்டிருப்பதை நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.
கிராமத்து வீட்டு திண்ணைக்கும் கீழே சாணி மெழுகிய தரையில் கயிற்று கட்டிலும், நாற்காலியும், மர பெஞ்சும் போட்டு பத்து பதினைந்து பேர் பேச ஆரம்பிப்பார்கள். முடியும் போது முப்பது நாற்பது பேர் இருப்பார்கள்.
போறும் பேச்சு யாராவது நல்ல விஷயங்கள் சொல்லுங்களேன் என்று ஒரு கிழவனோ கிழவியோ போதை தெளிவிக்க கொஞ்சம் விவரம் அறிந்தவர் ஹனுமான் சாலிஸா பாடுவர். கலந்து பேசி இராமாயண உபன்யாசமே அவர்களாகவோ ஆள் வைத்தோ நடத்துவார்கள்.
விவாதத்தின் இன்னொரு வடிவம் உபன்யாசம். வாலி வதம் சரியா, மனம் தனித்தனியாக கேள்வி கேட்டு விவாதிக்கும். உள்ளுக்குள்ளே யோசிக்கும். இத்தனை நல்லவன் ஞானி வித்வான் ஏன் பிறன்மனை விரும்புகின்றான் இதிகாச அலையலோடு வாழ்க்கை அலையல் வரும். மாலை நேரம் என்பது தன்னைப் பற்றி தன்னுள் அலசும் நேரம். சிலருக்கு இங்கு தனிமை அவசியம். அல்லது கடற்கரை மணலில் ஆறு பேர் நண்பர் குழு போதும்.
“சுஜாதாவை நம்ம சீனிவாசன் லவ் பண்றான். மறக்க முடியலேன்னு அழறான்.” அறை இருளில் பிரச்சனை தூக்கி நிறுத்தப்படும்.
மறக்கச் சொல்லும்
மறக்கக் கூடாது
ஏன் மறக்கணும்.
அப்ப அவன் அம்மாவை தங்கையை மதிக்கலை.
உண்மைதானா. பிடிப்பு போக கையில கிடைக்கறது நாற்பத்திரண்டாயிரத்து ஐநூறு. இருக்கறது வாடகை வீடு. தங்கை கல்யாணத்துக்கு இருக்கா, என்ன லவ்வு விளக்குமாறு.
“அவ செம லெட்டர் எழுதியிருக்காடா,”
“எனக்கு கெட்ட வார்த்தை சொல்லணும் போல் இருக்கு.”
சீனிவாசனின் காதல் அங்கு கொத்துக் கறி. இது பலவீனருக்கு நல்லது. பலமுள்ளவருக்கு கெடுதல். இதையே அந்த சீனிவாசன் தனியாக தேங்காய் மாங்காய் சுண்டலுடன் அறுத்து பாகங்கள் காணலாம்.
என் முப்பது வயதில் இப்படிப்பட்ட குழுவில் அமர்ந்து நானும் பத்தை போட்டிருக்கிறேன். இது சீனிவாசனுக்கு மட்டும் உபயோகமில்லை. எவர் காதலுக்கோ கிடைத்த மரியாதையில்லை. எதை எப்படி அணுகுவது என்று எனக்கு கிடைத்த பயிற்சி. மாலை என்பது மனதோடும், பலரோடும் விவாதிக்கின்ற மகிழ்வான தருணம். இங்கு யாராவது குடித்து விட்டு கிடப்பார்களா. அல்லது திரைப்படத்தில் வாய் பிளந்து கிடப்பார்களா. அல்லது அரைத் தூக்கமும் சங்கீதமுமாய் இருப்பார்களா.
சொல்லடி சிவசக்தி என்னை சுடர் மிகும் அறிவுடன் படைத்து விட்டாய். வல்லமை தாராயோ அந்த மானுடம் பயனுற வாழ்வதற்கே என்கிற அற்புத நேரம்.
என் மாலை நேரங்கள்தான் என்னை இலக்கியவாதி ஆக்கிற்று. என் இலக்கியம்தான் என்னை நல்ல மனிதனாக்கிற்று. என் மனுஷத்தனம்தான் என் குடும்பம் என்னை கொண்டாட வைக்கிறது.
மாலை நேரம் பற்றி தனிமையில் யோசனை செய்யுங்கள். தானும் தெளிவாகி மற்றவரையும் தெளிவுபடுத்தல்தான் வாழ்க்கையப்பா.
( என் அப்பனல்லவா என் தாயுமல்லவா பொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா )
Usha
நன்றி ஐயனே