பகல் உணவு பற்றி கொஞ்சம் கூடுதலாக சொல்ல விரும்புகின்றேன்.

நம்முடையது வெய்யில் தேசம். உடம்பை குளுமையாக வைத்துக் கொள்வது அவசியம். எனவே தயிர், மோர் என்பது சாதத்தோடு கலக்க வேண்டிய நிர்பந்தம். பாதி வெந்த காய்கறிகள் நார் சத்து நிரம்பியவை. இவை குடலை சுத்தம் செய்யும். நிறைய புரோட்டீன் வேண்டும் என்று மித மிஞ்சிய மாமிசம் சாப்பிட்டால் அந்த புரோட்டீன்கள் தேவையானது தங்கி மீதி சிறுநீரில் வெளியேறிவிடும். அதாவது குப்பைக்கு போய் விடும். உடம்புக்கு உதவாது. அதிக புரோட்டீன்களால் பிற்பாடு வயதான காலத்தில் சிறுநீரகம் கெட்டுப் போக வாய்ப்பிருக்கிறது. அல்லது பலவீனப்பட்டாவது அவஸ்தை கொடுக்கும். குறைவான தண்ணீர் எடுக்கும்படி நேரிடும். இந்த கூடுதல் புரோட்டீன்கள் பருப்பு வகையறாக்களிலும் இருக்கின்றன. அளவுக்கு மிஞ்சிய பருப்பு புரோட்டீனும் அதே விதமாக வெளியேறும். சிறுநீரகத்தை பலவீனப்படுத்தலாம். எனவே காய்கறியும், அரிசி உணவும், பருப்பு அதாவது புரோட்டீன் கலந்த சாம்பாரும் , தயிரும் ஜீரணத்திற்கு எளியவை. சத்து மிகுந்தவை.

உங்கள் உணவை தேர்ந்தெடுக்கும் உரிமை உங்களுக்கு உண்டு. மாமிசத்தை அவித்து திங்கலாமா, அல்லது பச்சையாய் உறிஞ்சலாமா என்கிற விவாதமும் உலகில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ரத்தம் எத்தனை ருசி என்று சொல்வார் உண்டு. ஆனால் ஒரு உணவை வாழும் இடமும், செய்யும் வேலையும், உங்கள் பரம்பரை பலமும், உங்கள் உணவு ஆசையும் தீர்மானிக்கின்றன. ஆசையற்று உண்ணுதல் அதாவது ருசியற்று உண்ணுதல் உடம்புக்கு உதவாது. ருசிக்கு மட்டுமே உண்ணுதல் சிறப்பாகாது. தயிரும், மோரும், சிட்டிகை உப்பும், எண்ணையும், பருப்பும் மிதமாக இருப்பது நல்லது.

உணவை உணர்ந்து அதாவது ஆராய்ந்து உண்ணுதல் பலம் தரும். என்ன உண்ணுகிறோம், எப்படி பக்குவப்பட்டிருக்கிறது என்று ஆராய்ந்து உண்ணுதல் பலம். இப்படிப்பட்ட உணவிற்குப் பிறகு முழுத் தூக்கம் அல்லது அரைத் தூக்கம் அல்லது அமைதியாய் அமர்ந்திருத்தல் உயர்வு. மூளையை துரிதப்படுத்தாது இருப்பது உடல் நலத்திற்கு உதவும். ஆனால் உணவு உண்ட அரை மணிநேரத்திற்குப் பிறகு அந்த ஓய்வுக்குப் பிறகு மூளை சுதாரித்துக் கொள்ளும்.

இந்த மாதிரியெல்லாம் எனக்கு முடியாதப்பா என்று நீங்கள் சொன்னால் அதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். இது தலையெழுத்து. விதி. கர்மா. உழைத்து உண்பதும் உண்டபின் ஓய்வும், ஓய்வுக்குப் பின் உழைப்பும் எல்லோருக்கும் லபித்து விடுவதில்லை. ஆனால் இந்த வழிமுறைக்கு முயற்சி செய்யலாம். தவறில்லை.

அதே நேரம் இரவு உண்ட உணவுக்குப் பிறகு உடனே உறங்கப் போகாமல் உடம்பை ஓய்வில் ஈடுபடுத்தல் நல்லது. தொலைக்காட்சி கொதி நிலையை அதிகப்படுத்தும். புத்தகப் படிப்பும் அலைய வைக்கலாம். இசை கேட்கலாம். அல்லது அதையும் புறக்கணித்து வெறுமே இருக்கலாம். கிழக்கே தலை வைத்து படுப்பது சிறப்பு என்று சொல்லப் படுகிறது. நான் ஆராய்ந்தது இல்லை. ஆனால் அப்படித்தான் தூங்குகிறேன். இரண்டாவது பட்சமாக மேற்கு பரவாயில்லை என்று சொல்கிறார்கள். வடக்கு கூடாது என்பதற்கு காரணங்கள் உள்ளன. தெற்கு நோக்கி நாம் எதையுமே செய்வதில்லை. இறுக்கமான ஆடைகள் இல்லாது தூங்குதலும், குளுமையான இடத்தில் போர்த்திக் கொண்டு உறங்குதலும் நல்ல தூக்கத்தை தரும்.

நடுவே ஒருமுறை எழுந்திருக்கலாம். அடிக்கடி எழுந்திருப்பது நோய் அல்லது முதுமையின் காரணமாகும். நல்ல வாலிப வயதில் பதினோறு மணியிலிருந்து ஐந்து அல்லது ஆறு மணி நேர தூக்கம் போதுமானது. அதற்குப் பிறகு வரும் உறக்கம் வெறும் உடம்பு மதமதப்பு. எண்ணங்கள் விழித்திருக்க உடம்பு தூங்கும் அவஸ்தை . உடம்பு தூங்கும்போது எண்ணங்கள் அமைதியாயிட வேண்டும். இவை இரண்டும் உறங்கினால்தான் அது நல்ல உறக்கம். அப்பொழுது விடியலில் மிகத் தெளிவாக சந்தோஷமாக எழுந்திருக்க முடியும். விடியற்காலை ஐந்தரை மணிக்கு எழுந்து பல் தேய்த்து, முகம் கழுவி வயிறு சுத்தம் செய்து மூச்சுப் பயிற்சிக்கு அப்புறம்தான் உடம்பும் மூளையும் ஆரோக்கியமாக இருக்கும். ஒரு கைப்பிடி சுறுசுறுப்பு அதிகரிக்கும். நன்கு பசிக்கும். காலையில் பால் நல்ல உணவு.

பிறகு நடைபயிற்சி. உங்களுக்கு அன்றைய உலகத்தை அறிமுகப்படுத்தும். நடப்பதை தனியே செய்யுங்கள். இல்லையெனில் அக்கப்போர் முன்வந்து உலகம் அறிதலை தடுத்து விடும். ஏன் சார் சென்ரல் கவர்மெண்ட் இப்படி பண்ணுது என்று கூச்சலிட ஆரம்பித்தீர்களென்றால் அன்றைய தினம் முழுவதுமே அந்த கூச்சல் த்வனி உங்களை சுற்றிக் கொண்டிருப்பதை கவனிப்பீர்கள். கொஞ்சம் அமைதியாக நடந்தால் அக்கப்போருக்கு நடுவேயும் அமைதியாக இருக்க முடியும். அக்கப்போர் இல்லாது இருக்க முடியாது.

“அந்த நடிகைக்கு இரண்டு புருஷன்களாமே” தெரிந்து கொள்ளாவிட்டால் தூக்கம் வராது. அக்கப்போரிலிருந்து விலகுவது என்பது வேறு வித்தை.

“அந்த நடிகை எனக்கு உறவு இல்லை. உங்களுக்கு உறவா?”

“இல்லையே”

பிறகு ஏன் அந்தப் பெண்மணியைப் பற்றி பேசுகிறோம். நாம் நம்மைப் பற்றி பேசுவோம் என்பது ஞானம். இது அமைதியின் விளைவு அப்பா. நிறைவின் வெளிப்பாடு. எரிச்சலற்ற குணம். இப்படி வாழ்வது ஒரு கொடுப்பினையப்பா.

( என் அப்பனல்லவா என் தாயுமல்லவா பொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா )