உ
யோகிராம் சுரத்குமார்
காதோடுதான் நான் பேசுவேன் – ஆறாம் பகுதி
கடவுள் விவகாரத்தை விளக்கமாக பேச இன்னொரு நாளை தேர்ந்தெடுத்துக் கொள்கிறேன். காலை உணவு பற்றி இப்போது பேசுவோம். ஒரு நாளின் உற்சாகத்திற்கு அந்தக் காலை உணவு பிரதானம். உணவை பொறுத்து உற்சாகம். நாலு இட்லி, ஒரு வடை, ஒரு பூரி செட். சாம்பார் சட்னி, வெங்காயத் துவையல், எண்ணைய் மிளகாய் பொடி என்று உணவு எடுத்துக் கொண்டால் அடுத்த ஐந்தாவது நிமிடம் தூக்கம்தான். அதாவது அந்த நாளின் வேலையை நாம் அரைத் தூக்கத்தில் ஆரம்பிக்க வேண்டும். ஒரு மயக்கத்தில் துவங்க வேண்டும்.
“எனக்கு பசி தாங்காதுங்க. இதுல ஒரு ஐட்டம் குறைஞ்சா கூட நான் தவிச்சிடுவேன்.. “. “எண் சாண் உடம்பிற்கு வயிறே பிரதானம்” என்பதாய் பழமொழியை இவர்கள் மாற்றி விடுவார்கள்.
இந்த உணவிற்குப் பிறகு எட்டரை மணிக்கு காற்றில் மோட்டார் சைக்கிளில் அலுவலகம் போனால் வழியிலேயே தூக்கம் வர வாய்ப்பிருக்கிறது. இந்த தூக்கம் மரண வாசல். இந்த வாசலுக்குக் காரணம் நாலு இட்லி , ஒரு வடை, ஒரு பூரி செட். குறைவாக உண்ணுதல் ஒரு அழகு. பாதி வயிறு உண்ணுதல் ஒருவகை தெளிவு. மீதம் வயிறுக்கு நீர் குடித்தல் ஒரு சுகம். அது ஒரு தந்திரம். மண்டையின் ரத்த ஓட்டம் முழுவதும் குடலுக்குப் போனால் மூளையில் என்ன தெளிவு இருக்கும். எனவே குறைவாக சாப்பிடுவது என்பது குமாஸ்தா வேலைக்கு சிறப்பு.
மாறாக நான் கட்டுமரம், கை வண்டி, மூட்டை தூக்கி, தார் சாலை போடுபவர் என்றால் உணவு கூட எடுத்துக் கொள்ளலாம். கொஞ்சம் உட்கார்ந்து சோம்பலை அனுபவித்து விட்டு வேலைக்குப் போகலாம். அங்கே புத்தியின் ஆளுமை குறைவு . உடம்பின் அதிகாரம் பெரிது. உங்கள் வேலையில் புத்தியின் ஆளுமை இருப்பின் இரண்டு இட்லி ஒரு வடை போதும். அதனையும் தவிர்த்து விடுபவரை நான் அறிவேன். ஒரு டம்ளர் பழச்சாறு. ஒரு வாழைப்பழம். போதும் என்று இருப்பார்கள். இதிலுள்ள குளுகோஸ் மிகுந்த உற்சாகத்தைத் தரும். இதையே எல்லோருக்கும் உணவாக கட்டளையிட முடியாது. உணவு அவரவர் விருப்பம், வசதி. ஆனால் குறைவாக உண்ணுங்கள் என்று சொல்ல முடியும். பிற்பகலில் இன்னும் கூடுதலான உணவு பலம் தரும்.
ஆனால் அந்த உணவிற்குப் பிறகு ஒரு அமர்தல் அவசியம். வெய்யில் அதிகம் உள்ள நாடுகளில் மக்கள் தூங்கவே செய்கிறார்கள். அமைதியாக அமர்தல் ஒரு மணி நேர ஆழ்ந்த தூக்கத்திற்கு சமம். பிறகு காபி டீ என்று சுறுசுறுப்பு பானம். ஆறு மணிக்கு வீடு திரும்பும் போது வாலிப வயதாக இருந்தால் எண்ணையில் பொரித்த பண்டம். வயசாளியாக இருந்தால் அவித்த உணவு . சைவமா அசைவமா எது சிறப்பு? இது பழக்கம் காரணம். மனம் ஒப்பி உண்ண வேண்டும். வறுத்த கோழி கொஞ்சம் கசக்கிறது என்றால் எண்ணைய் கெட்டுப் போய் விட்டது என்று அர்த்தம். இது குடலை தொந்தரவு பண்ணும். பேதியாகும். மரக்கறி உணவு உண்பவர் மாமிசம் உண்போரை இழிவு செய்வதும், மாமிச உணவு மன்னர்கள் மரக்கறியை கேலி செய்வதும் ஒரு அறியாமை. கெட்டுப் போகாத உணவு என்பதே இங்கு முக்கியம். பச்சை காய்கறிகள்தான் தின்பேன் என்று சொன்னவர் கோசுக்கு நடுவே புழுவை தின்று விட்டு குமட்டி குமட்டி எடுத்தது தலையெழுத்து.
உண்ணும் போது பேசக் கூடாது என்பது ஒரு நல்ல விதி. பேசிக் கொண்டே சாப்பிடுவது என்ற அமைப்பு உள்ள இடங்களில் உற்று கவனித்தால் அங்கு உண்பது முக்கியமல்ல, பேச்சு சௌகரியமே முதன்மை என்பது தெரியும். பேருக்கு உண்டு விட்டு பேச்சுக்கு பீடம் போட்டிருக்கின்ற ஐந்து நட்சத்திர ஓட்டல்கள் அவை. வியாபாரம் பேச, விருந்து ஒரு சாக்கு. இந்த சூழலில் மாட்டிக் கொள்ளக் கூடாது. இருட்டில் உண்ணக் கூடாது. வெள்ளையா மஞ்சளா சிகப்பா நீளமா என்ன நிற உணவு என்றுத் தெரிய வேண்டும். காரமா கசப்பா என்பது புரிய வேண்டும். ருசித்து அரைத்து நிதானமாக விழுங்க வேண்டும். எட்டு நிமிடத்தில் உணவை முடித்து விட்டு உண்ட இடத்தை விட்டு எழுந்திருக்க வேண்டும். உணவு வாசனை எட்டாத இடத்திற்கு நகர்ந்து விடுதல் நலம். இரவு நேர உணவை தூங்குவதற்கு அரை மணி நேரம் முன்பு முடித்து விட வேண்டும். நல்ல தூக்கம் வரவேண்டும் என்பதற்காகவே உணவு எடுத்துக் கொள்ளலாம். நடுவே பசிக்காதவாறு சாப்பிடலாம். மசாலா உணவுகள் கனவு தொந்தரவு தரும் என்று ஒருவர் சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன்.
தூங்கும் முன்பு நான் டிவி பார்ப்பதில்லை. கண்மூடி அமர்ந்திருப்பேன். தூக்கம் ஆட்கொள்வதை கவனித்தபடி இருப்பேன். உங்களை கவனிக்கின்ற வித்தைக்கு இன்னொரு எளிய வழி தூக்கத்தை கவனித்தல். மனம் கை நழுவுவதை உற்றுப் பார்த்தல் ஒரு நல்ல பழக்கம். பிற்பாடு இதைப் பற்றியும் விரிவாக சொல்கிறேன்.
நீ என்று உன்னை நான் சொல்வது உன் மனம்தானப்பா. மனம் இல்லையெனில் உன்னை நீ எவ்விதம் உணர்வாய். ஒட்டுமொத்த மனக் குவியலுக்கு அந்த பண்டலுக்கு ஒரு பெயர் வைத்து உன்னை அழைக்கிறார்கள். ஆனால் அதுவா நீ. இது மிகப் பெரிய கேள்வியப்பா.
( என் அப்பனல்லவா என் தாயுமல்லவா பொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா )
Janarthana moorthy Karpagamala
குருவே சரணம்