உ
யோகிராம் சுரத்குமார்
காதோடுதான் நான் பேசுவேன் – ஐந்தாம் பகுதி
இந்த அமைதிக்குப் பிறகு அமைதியாய் அரை மணி அமர்ந்த பிறகு அந்த நாளின் வேகம் உங்களை சூழ்ந்து கொள்ள வேண்டும். சுறுசுறுப்பு மேம்பட வேண்டும். அதாவது குளிப்பதற்கு உங்கள் உடம்பு தயாராகிவிட வேண்டும். என் அனுபவத்தில் சிலீர் என்ற பச்சை ஜலத்தில் தலைக்கு குளிப்பதை நான் ஆதரிக்கவில்லை.மிதமான வெந்நீரில் ஒட்டி வெட்டிய தலை முடி நனைய தினமும் தலைக்கு குளிப்பது நல்லது. பெண்களாய் இருப்பின் அதாவது நீண்ட முடி இருப்பின் வாரத்திற்கு இரண்டு முறையாவது குளிப்பது நல்லது. குளிர் நீர் குளியலில் உடம்பு சூடு அதிகரிக்கிறது. தாறுமாறாக எகிறுகிறது. காலிலிருந்து மெல்ல தலைக்குப் போவது என்ற ஒரு குளியல் கருத்துக்கள் உண்டு. ஷவரில் இடது தோள், வலது தோள் என்று நனைத்து பிறகு முதுது, பிறகு மார்பு, பின்பு கழுத்து, முகம், தலை என்று போவது சிறப்பு. இடது தோளுக்கு போகும்போதே காலுக்கும் நீர் போய்விடும்.
இங்கே ஒரு விஷயம். நீங்கள் எப்போதும் காலணி அணிபவராக இருந்தாலும் குளிரூட்டப்பட்ட அறையின் உத்தியோகமாக இருந்தாலும் அவ்வப்போது காலை சுரண்டி விரல் இடுக்குகளை சோப்பு போட்டு தேய்ப்பது நல்லது. நகங்களை துணியால் சுத்தம் செய்வது சிறப்பு. குதிகால் வெடிப்புகளை தேய்த்து நீக்கி மருந்து தடவுவது உத்தமம். நான் குடுமியும், தாடியும் வைத்திருக்கிறபடியால் வாரம் இருமுறை ஷாம்பூ , கன்டிஷனர் , மாஸ்க், வால்யூமைனைசர் உபயோகிப்பேன். இதனால் முடி கொட்டுவதெல்லாம் நடக்கவில்லை. மாறாய் மிகவும் சுத்தமாகிறது. இந்த கொட்டை அந்த கொட்டை இந்த இலை அந்த இலை என்று உபயோகப்படுத்துவதில் எனக்கு ஆட்சேபணையில்லை. சுத்தமாகிறதா அழுக்கு போகிறதா என்பதை கவனித்துக் கொள்ளுங்கள். உதாரணமாக செவ்வாயும், சனியும் நான் ஷாம்பூ குளியல் நிகழ்த்துவேன். திங்கள் இரவும், வெள்ளி இரவும் தலைக்கு தேங்காய் எண்ணெய் தடவிக் கொள்வேன். எண்ணெய் தடவலால் முடி உறுதிப்படுகிறது. ஷாம்பூ உபயோகத்தால் அழுக்கு சேராமல் தடுக்கப்படுகிறது.
இரண்டு சக்கர வாகனத்தில் ஹெல்மேட்டோடு அதிக நேரம் பயணம் செய்கிறவர்கள் முடி ஒருவித வாடையை கிளப்பக் கூடும். இம்மாதிரி குளியல் அதை முற்றிலும் நீக்கிவிடும். கிளிசரின் கலந்த சோப்புகளும், கிளிசரின் அல்லாத சோப்புகளும் கடைகளில் அமோகமாக கிடைக்கின்றன. உங்களுக்கு ஏற்ற சோப்புக் கட்டியை தேடிப் பார்த்து நிரந்தரமாக்கிக் கொள்ளுங்கள். வேம்பு சிறந்தது, துளசி உத்தமம், ரோஜா இதழ் தவறு என்பதெல்லாம் அனுபவ அபிப்ராயமாக இருக்கட்டும். சில சோப்புகளால் சரீர எண்ணைய் முற்றிலும் நீக்கப்படுவது உண்மைதான். தோல் வறட்சி ஏற்படும்தான். குளியலுக்குப் பிறகு ஐந்து ரூபாய் எடை உள்ள மாய்சரைஸிங் க்ரீம் பாதாதி நெற்றி தடவிக் கொள்ளுங்கள். தோல் வெடிப்புகள் ஏற்படாது இருக்கட்டும். எதற்கு க்ரீம் தேங்காய் எண்ணைய் போதுமே … எனக்கு ஆட்சேபணை இல்லை. உங்களுக்கு அதுதான் விருப்பம் எனில் எண்ணெய் பொம்மையாக நிற்கலாம். இந்த க்ரீம் உடனடியாக சருமத்திற்குள் ஊடுருவி விடும். பசையாக இராது. வெளி தேச பொருட்கள் வீதியில் கிடைக்கின்றன. குறைந்த விலையில் நிறைந்த நன்மை தரும் க்ரீம்கள் உள்ளன. அதிக விலையில் அற்புதம் செய்யும் க்ரீம்களும் உள்ளன. வசதி பொறுத்து வாங்கிக் கொள்ளுங்கள். கண்ட கண்ட க்ரீம்களை தடவாதீர்கள் என்ற வாசகம் அடிக்கடி பேசப்படுகிறது. எனக்கு இந்த வாசகத்தில் நம்பிக்கை இல்லை. பரிசோதிக்கப்படாத க்ரீம்கள் எதுவும் வெளி தேசத்தில் விற்பனைக்கு வராது.
முதுகும், பிருஷ்டமும் நன்கு நனைந்த பிறகு தலை துவட்டிக் கொள்ளுங்கள். இங்கு ஒரு முறை உண்டு. முதலில் முதுகை துடையுங்கள். பிறகு நெஞ்சுக் கூடு. பிறகு முகம். பிறகு தலை என்று துவட்டுங்கள். அடிவயிற்று அக்னி முதலில் பரவுவது முதுகு பகுதியில்தான். குளிக்கையில் இந்த அக்னி சீறி எழும். அதை சமனப்படுத்த இதுவே முறை. முதுகில் அலட்சுமி, முகத்தில் லட்சுமி என்று எவரும் சொன்னால் கேட்டுக் கொள்ளுங்கள். முதலில் அலட்சுமியை நீக்கிவிட்டு லட்சுமியை நீக்குங்கள் என்று விளக்கினால் கேட்டுக் கொள்ளுங்கள். இங்கு பிரச்சனை லட்சுமி அல்ல. உடல் சூடு .
குளித்து விட்டு பழசு உடுத்தாதீர்கள். வேறு வழியில்லையே என்று சொன்னால் உங்கள் தலையெழுத்து. ஆனால் உடுத்தாது தப்பித்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள். உலர்ந்த துணியை உடுத்துங்கள். அமைதியாக இருந்த மனம் குளித்து விட்டு வந்த பிறகு குதூகலமாக இருக்கும். உற்று கவனித்தால் நிச்சயம் புரியும். இந்த குதூகலத்தை நெறிப்படுத்த வேண்டும். இதுதான் பூஜை செய்யும் நேரம். கை கூப்பி வெட்கமின்றி உரக்க பாடலாம்.
“பக்தியால் யானுனைப் பலகாலும் பற்றியே மாதிருப் புகழ் பாடி” என்று குரல் எடுத்துப் பாடலாம். கடவுளை தொழ வெட்கமெதற்கு. வெட்கம் வரும் எனில் எதற்கு தொழுதல். மிகப் பெரிய சக்தியிடம் இறைஞ்சுதல் தானே பக்தி. தன் நெஞ்சோடு தான் புலத்தல்தானே வழிபாடு. உங்களோடு பேச உங்களுக்கு வெட்கமெனில் நீங்கள் வேறு யாரோடுதான் பேச முடியும். பாட்டு பாட வரவில்லையெனில் மந்திரம் சொல்லுங்கள். குருவின் நாமம் கூறுங்கள். நீங்கள் கற்றுக் கொண்டதை பலப்படுத்துங்கள். குழந்தைப் பருவத்தில் கற்றுக் கொண்டதை வாலிபத்தில் பலப்படுத்துங்கள்.ஆனால் தயவுசெய்து பிரார்த்தனை செய்யுங்கள்.
நாத்தீகனாக இருப்பது ஒரு கொடுப்பினை. ஆத்தீகனாக இருப்பது ஒரு அமைதி. சிலருக்கு செல்வம் கூடுதலாக கிடைப்பது போல சுப சௌகரியங்கள் தானாய் ஏற்படுவது போல நாத்தீகம் வந்து கவிழும். இது ஒரு கொடுப்பினை. எல்லோருக்கும் கிடைக்காது. ஆஸ்தீகம் என்பது ஒரு அமைதி. செல்வம் இருந்தாலும் இல்லாது போனாலும் நிகழுகின்ற சந்தோஷம். கூச்சலற்ற மனம்.
ஆத்தீகனாக இருப்பதா நாத்தீகனாக இருப்பதா… அது உங்கள் தலையெழுத்து.
ஆனால் இதை இரண்டையும் தாண்டி ஒரு நிலை இருக்கிறதப்பா. கடவுளை மறுக்கவும் செய்யாமல் ஏற்கவும் செய்யாமல் இருக்கக் கூடும் என்று இருப்பது. அந்த இடத்தை அடைந்தவர் மிக உயர்ந்தவரப்பா. பிற்பாடு கடைசியில் இது பற்றி மறுபடியும் பேசுவோம். வாழ்க்கை பலநூறு விஷயங்கள் கொண்டதப்பா.
( என் அப்பனல்லவா என் தாயுமல்லவா பொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா )
Vasumathi
நன்றி பாலா சார்.தெளிவாக கற்றுக் தருகிறீர்கள் ஐயன்.க்ரீம், ஷாம்புவை பற்றிய சந்தேகம் தீர்ந்தது நன்றி.யோகிராம் சுரத்குமார் ஜெய குரு ராயா.