உ
யோகிராம் சுரத்குமார்
காதோடுதான் நான் பேசுவேன் – நான்காம் பகுதி
நீர் குடித்த பிறகு டீயோ காபியோ எது பழக்கமோ அது குடித்த பிறகு பசி மெல்ல அடங்கிய பிறகு சற்று நேரம் அமைதியாக உட்காருங்கள். “எப்படி சார் முடியும்” பெரிதாக கத்துவார்கள். எழுந்த உடனே அலுவலகத்திற்கு ஓடத்தான் சரியா இருக்கு என்று அலட்டுவார்கள். இது பொய் தோற்றம். வெறும் கூச்சல். அரைமணி நேரம் அமைதியாக உட்காரக் கூடிய அவகாசத்தை எடுத்துக் கொண்டு அதற்கேற்றபடி காலையில் கண் விழியுங்கள். எட்டு மணி அலுவலகத்திற்கு ஏழு மணிக்கு எழுந்திருந்தால் எல்லாமும் குழப்பமாகத்தான் முடியும். கோபம் கோபமாகத்தான் வரும். எட்டு மணி அலுவலகத்திற்கு ஐந்து மணிக்கு கண் விழித்தால் உலகமே உங்கள் முன்பு அமைதியாய் கை கட்டி நிற்கும். ஏதேனும் சொல்லிக் கொடுங்கள் என்று உலகம் உங்களிடம் கேட்கும். உலகம் என்பது வெளியிலா இருக்கிறது. உங்கள் மனம் தானே உலகம். உங்கள் மனம் உங்களிடம் தன்னைப் பற்றி விசாரிக்கும். அருமையான நேரம் காலை நேரம். இதை அவசரத்தில் குலைத்து விடாதீர்கள்.
அரை மணி நேரம் உட்கார்ந்து என்ன செய்ய? வெறுமே உட்காருங்கள். என்ன செய்ய வேண்டும் என்று உங்கள் மனம் தானாக அறிவிக்கும். அதற்கு ஓய்வு கொடுங்கள். மிகச் சீராக செயல்படும். தூக்கம் உடம்பின் ஓய்வு. தியானம் மனதின் ஓய்வு. மனதை கவனிக்க உற்றுப் பார்க்க அது வெளிறி நிற்கும். பின்னுக்குப் போகும். மனம் இருந்த இடம் காலியாக இருக்கும். ஏதோ ஒரு விஷயத்தை பற்றிக் கொண்டு ஆரம்பத்தில் அலைந்தாலும் உற்று நோக்க பயந்து பின் வாங்கும். என்னை கவனிக்காதே என்று பதிலுக்கு சீரும். வேறு உள் மன படங்கள் போடும். கலைடாஸ்கோப்பாய் , கட்டிடமாய் , கற்பனை முகங்களாய் வரிசையாகும். மறுத்து ஒதுக்காதீர்கள். உற்று கவனியுங்கள்.
இது ஒரு வித்தை. மறுத்தால் அதிகம் சீறும். உற்று கவனித்தால் அமைதியாகும். இதை எழுதி மாளாது. இந்த சூட்சமம் சொல்லித் தர முடியாது. தானாய் பிடிபடும். சொல்லுக்கு அப்பாற்பட்ட விஷயம் இது. ஆனால் அரை மணி ஒரு நாற்காலியில் நேராக உட்கார வேண்டும். யார் நினைக்கிறார்கள், எதை நினைக்கிறார்கள் என்று துவங்கலாம்.
நினைப்பதையும் நினைப்பவரையும் ஒரு சேர கவனிக்கலாம். இங்கு மூன்று விஷயங்கள் வந்து விட்டன. நினைக்கும் விஷயம், நினைப்பவர், இவை இரண்டையும் கவனிப்பவர். சில சமயம் கவனிப்பவரையும் கவனிக்கமுடியும். அப்போது நடக்கும் மாற்றம் சொல்லில் வராது. இது சர்கஸ் பால் விளையாட்டு. பழகப் பழக புரிபட்டு விடும். துல்லியமாய் போய் எதிர் ஊஞ்சலை பிடித்து விட முடியும்.
அதே போல என்ன நடக்கிறது உள்ளே என்பதையும் ஒருவர் பிடித்து விடலாம். இதுதான் தியானமா, இல்லை. இது தியானத்தின் ஆரம்பம். ஆசன சித்தி. அதாவது உட்காரத் தெரிதல். அலைந்து கொண்டே இருக்கின்ற உடம்பை, மனதை ஒரு இடத்தில் அழுத்தி வைத்தல். ஒரு நாளைக்கு அரை மணி நேரம் முடிந்தால் ஒரு நாளைக்கு இரண்டு அரை மணி நேரங்கள் இன்னும் வசதி இருந்தால் மூன்று அரை மணி நேரங்கள் அமைதியாக இருக்கலாம்.
ஒரு குறிப்பிட்ட கால கட்டத்தில் அரை மணிக்கு ஒருமுறை இப்படி அமைதியாக அரை மணி நேரம் இருந்தேன். பரமசுகமான அனுபவம் அது. பேர் என்ன என்று கேட்பார்கள். சிரிப்புதான் பதிலாக வரும். சாப்பிட்டாயா என்று கேட்பார்கள். எப்போது சாப்பிட்டோம் ஞாபகம் இருக்காது. யோசித்தாலும் நினைவுக்கு வராது. நான் அதிகப்படுத்தி பேசவில்லை. இது பரமானந்தமான சுகானுபவ நிலை. ஆரம்பத்தில் காலை அரை மணி நேரம் போதும். அந்த நாள் முழுவதும் அமைதியாக இருக்க இயலும்.
இந்த நீர் குடித்தலும் , அமைதியாக அமர்தலும் உடல் சூட்டை குறைத்து கழிவுகளை நீக்கும் உணர்வுகளை கொண்டு வந்து தரும். வயிறு முற்றிலும் சுத்தமாகும். இதுவும் பரமசுகம்.
என்ன யோசிக்கிறோமோ அதை நோக்கித்தான் உடம்பு நகரும். ஏதோ ஒரு செயலும் ஏதோ ஒரு எண்ணமுமாக இரட்டை வேடம் சூடப்படாது இருக்கும். ஒற்றையாய் தனியாய் உள்வாங்கி உனை பார்த்து உன் வழியே உலகம் பார்ப்பது ஒரு சுகமப்பா. இருந்து பார். என்னிடம் ஓடி வருவாய். அடுத்தது என்ன என்று கை கூப்புவாய். அது இருக்கிறது ஒரு கடல் தொலைவு. இது முதல் அடி. மீதமிருக்கிறது நீண்ட நீண்ட பயணம். ஆட்டு மந்தைக்குள் சிக்கி செத்துப் போகாதே. உன்னை அறி. உன்னை அறிய தனியாய் இரு. தனித்திருக்கும் பொழுதுதானப்பா உன்னை புரியும். உன்னை உனக்கு புரியும்போதுதான் அடுத்தவரையும் புரிந்து கொள்ள முடியும். தொடர்பு கொள்ளுதலே வாழ்க்கை என்று ஞானிகள் சொல்லியிருக்கிறார்களப்பா…இதை யோசிக்க யோசிக்க வாழ்வின் பிரம்மாண்டம் புரியுமப்பா…
( என் அப்பனல்லவா என் தாயுமல்லவா பொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா )
Manju satheesh babu
Aarumai