அந்த மலையப்ப ஸ்வாமி கோவிலுக்கு மூன்றாம் முறை நீங்கள் போனால் என்ன ஆகும். இரண்டு முறை அமைதியாக அந்தக் கோவிலுக்கு போய் அங்கு எது உட்கார்ந்திருக்கிறதோ அதை அனுபவித்துவிட்டு, அதை நேரே பார்த்துவிட்டு அதனோடு உளமார பேசிவிட்டு வந்து அதன் தன்மையை தெரிந்து கொண்டு இப்பொழுது மூன்றாம் முறை போகப் போகிறீர்கள். எப்படிப் போவது என்பது தெள்ளத் தெளிவாய் தெரிந்துவிட்டது. ஒரு கோவிலுக்குப் போவது எங்ஙனம் என்பது உங்களுக்குப் புரிந்துவிட்டது. எனவே, நீங்கள் முன்னைக் காட்டிலும், அமைதியாய், உறுதியாய் ஒருவரோடும் சம்பந்தம் இன்றி நீங்கள் மட்டுமே ஒரு மிகப் பெரிய சன்னிதானத்திற்குள் பெரும் வேண்டுதலோடு நுழைகிறீர்கள்.

என்ன வேண்டுதல்? இதுதான் கேள்வி வரும். என்ன வேண்டிக் கொள்வது என்ற எண்ணம் வரும். வேண்டுதலுக்கு இருப்பது உடனே தெரியாது. நான் வேண்டுவதை அறிந்தவன் நீ. உனக்கு என்ன கொடுக்க வேண்டும் என்று தோன்றுகிறதோ அதைக் கொடு என்று சொல்ல, மிகப் பெரிய பக்குவம் வேண்டும். அது அனேகமாக வயதும் அனுபவமும் நிறைந்தவருக்கு போதும். வயது முதிர்ந்தோருக்கு வராமலும் போகலாம். இதுதான் சிந்தனை.

என்ன வேண்டிக் கொள்வது. நல்லபடியான எண்ணிக்கையோடு தேர்வடைய வேண்டும். நல்ல வேலை கிடைக்க வேண்டும். கிடைத்த வேலையில் ஜெயிக்க வேண்டும். நல்ல உயர்ந்த இடத்தில் நல்ல சம்பளத்தில் இருக்கும்பொழுது திருமண பேச்சு நடத்தல் வேண்டும். வசதியான, அழகான, ஆற்றல் மிக்க, ஒரு பெண் துணையாக வர வேண்டும். எங்களுக்கு நல்ல குழந்தைகள் பெற வேண்டும் தோப்பு, துறவு என்றெல்லாம் வாங்க வேண்டும் என்கிற பிராத்தனைகள் வந்து முட்டும்.

இப்படி வேண்டுதலில் என்ன தவறு. ஒரு தவறும் இல்லை. தாராளமாக மலையப்ப ஸ்வாமியை பார்த்து வேண்டிக் கொள்ள ஆசை. ஆனால், மூன்றாம் முறை வந்தது இதற்கா இதுதான் தபசா. இதைக் கேட்கத்தான் இப்படி ஓடி வருகிறோமா. இதை அங்கிருந்தே கேட்க முடியாதா மலையப்ப ஸ்வாமி எங்கும் நிறைந்தவரல்லவா. உள்ளங்கை அகல படம் போதுமே என்ற கேள்வியும் வரலாம். அந்த ஏழு மணி நேர வரிசையின் நகர்வில் இது பற்றிய சிந்தனைகள் பொங்கி பெருக வேண்டும். கேட்பதா, கேட்க வேண்டாமா. எனக்குக் கேட்கத் தெரியுமா. அவருக்குக் கொடுக்கத் தெரியாதா என்றெல்லாம் அலசல்கள் நகர்த்தவே அந்த ஏழு மணி நேர வரிசை பயணம்.

“நான் மெட்ராஸ். நீங்க, வந்தவாசியா. வந்தவாசியில எங்க இருக்கீங்க. அங்க எனக்குச் சொந்தக்காரர் இருக்காரு.” இப்படி ஆரம்பித்தோமென்றால் எந்தவித லாபமும் இன்றி வெறும் குளறுபடி பேச்சாகவே இருக்கும்.

“மெட்ராஸ்லயா இருக்கீங்க. சொந்த ஊர் எது?”

“திருச்சி.”

“அட, எங்களுக்கும் திருச்சிதாங்க. நாங்களும் விவசாயம் பண்ணிட்டுத்தான் வந்தவாசி வந்தோம்.”

“அப்படியா, திருச்சியில எங்க?”

“உறையூர் பக்கம்.”

“ஆமா, நாங்களும் உறையூர் பக்கம்.”

பேசப் பேச ஒரு அளவில் உறவு என்றே கூட தெரிந்து விடும். தெரிந்து என்ன ஆகும். உனக்கும் கடவுளுக்கும் உண்டான உறவு என்ன என்பதை சிந்திப்பதை விட்டு தெருவில் போகிறவர் உறவானார் என்பதில் என்ன லாபம்.

+2 பரீட்சை எழுதிவிட்டேன். மலையப்பா என்ன மார்க் வரும் என்று தெரியவில்லை. ஆயிரத்து நூறுக்கும் மேல் எதிர்பார்க்கிறேன். வரலாம். வராமலும் போகலாம். வந்தால்தான் வாழ்க்கை. இல்லையெனில் என் தகப்பனைப் போல நானும் ஏதாவது சிறு தொழில் செய்து பிழைக்க வேண்டியதுதான். கடன் பட்டும், கடன் அடைத்தும் வாழ்க்கை நடத்த வேண்டியதுதான்.

பிரச்சனை, உடனடியான பிரச்சனைதான் மிக முன்னதாக ஞாபகத்திற்கு வரும். மண்டபம் ஏறியாயிற்று. இன்னும் ஐந்து நிமிடம் நகர வேண்டும். அப்போதுதான் தொலைதூரத்திலிருந்து அந்தத் திகழ் சக்கரம் தெரியும். கோவிந்தா கோவிந்தா என்று பெரும் குரலோடு கூவுகிறார்கள். பார்த்தவர்கள் பதட்டப்படுகிறார்கள். பரவசப்படுகிறார்கள். அந்தக் குரல் உங்களையும் தாக்குகிறது.

இப்போது நீங்களும் அந்தப் பிரதிமை மட்டும் இருக்கிறீர்கள்.

பிரதிமை கண்ணுக்குத் தெரியவில்லை. கண்ணுக்குத் தெரிய வேண்டும். தெரியும். நல்ல தரிசனம் வேண்டும். பகவானே உன்னை நன்கு தரிசிக்க வேண்டும். மலையப்பா உன்னை கண் குளிர பார்க்க வேண்டும். இதுவரை இருந்த பல்வேறு வேண்டுதல்கள் போய் இப்போது இந்த க்ஷணம் தரிசனம் மட்டுமே முக்கியம் என்று வருகிறது. என்ன மார்க். என்ன எண்ணிக்கை என்னுடையது.

கடவுளே, மலையப்பா நூத்தி எண்பத்தைந்து இல்லை நூத்தி எண்பத்தாறு. சும்மா இருடா. இதெல்லாம் வராது. நீ என்ன எழுதியிருக்கிறாய். எவ்வளவு வரும். ஆயிரத்தி நூத்தி எழுபத்தி ஐந்தும் வருமா. வரலாம். அழுத்திச் சொல், வருமா. ஆயிரத்தி நூத்தி எழுபது வரும். போதுமா. போதாதய்யா. சீட்டும் கிடைக்காது. இன்ஜீனியர் சீட்டுக்கும் காசு கொடுக்க வேண்டும். என்ன மார்க் இது. கண்ணில் பளிச்சென்று நீர் பொங்கியது. நெஞ்சு விம்மியது.

என்ன கஷ்டப்பட்டிருக்கிறான் அந்த தகப்பன். எவ்வளவு நேரம் தூங்காமல் அருகே உட்கார்ந்து இருக்கிறாள் அந்தத் தாய். ஆயிரத்தி நூத்தி எழுபத்தைந்து. என்ன செய்வேன். மலையப்பா. மலையப்பா..என்னை சகதியில் தள்ளிவிடாதே. மனம் அலறும். இன்னும் பார்க்கவில்லை. இன்னும் அவன் முகம் பார்க்கவில்லை. மண்டபம் நெருங்கியாயிற்று. இங்கிருந்து கருடாழ்வார் சன்னதி தெரிகிறதே தவிர கருடாழ்வார் தெரியவில்லை. பின்னால் அழுத்துகிறார்கள். முன்னே முட்டுகிறார்கள். யார் மேலாவது உரசிக் கொண்டேதான் இருக்க வேண்டியிருக்கிறது. அப்படி உரசிக் கொண்டிருப்பது வேதனையாக இருக்கிறது.

என்ன செய்வது. என்ன செய்வது. மலையப்பா, ஆயிரத்து நூத்தி எழுபத்தைந்தா, எனக்கு போதாதே. என்னை உருப்படச் செய்யேன். நான் பெரியாளாக வேண்டும். என் குடும்பத்தை
தூக்கி நிறுத்த வேண்டும். என் தாய்க்கு நகைகள் வாங்கி அழகு பார்க்க வேண்டும். என் தங்கைக்கு சீரும் சிறப்புமாக திருமணம் செய்ய வேண்டும். என் தகப்பனை ஓய்வாக உட்கார வைத்து நீ சும்மா இரு என்று சம்பாதித்து கொட்ட வேண்டும். மலையப்பா, என் குடும்பம் சின்னது. என்னால் தூக்க முடியும். நான் தூக்க வேண்டும். அதற்கு உதவி செய். எங்கேனும் லாரி கம்பெனியில் குப்பை குமாஸ்தாவாக மாற்றிவிடாதே.

மலையப்பா, நல்ல மார்க் வந்தால் மறுபடியும் உன் சன்னதிக்கு வருகிறேன். உன்னைக் கைகூப்பி தொழுகிறேன். வீட்டிலுள்ள உன் படத்திற்கு மாலை போடுகிறேன். உனக்காக சக்கரைப் பொங்கல் செய்து சுற்றியுள்ளோருக்கு வினியோகம் செய்கிறேன். மலையப்பா, நூற்றி எண்பத்தைந்து, நூற்றி எண்பத் தாறு என்று மனம் போகும். இந்த மார்க் வந்தால் நிச்சயம் மெடிக்கல் காலேஜில் இடம் கிடைக்கும். காசே அதிகம் கட்ட வேண்டாம். இருபத்தொன்பதாயிரம் போதும். எவ்வளவு பெரிய சந்தோஷம். ‘ரகுக்கு மெடிக்கல் காலேஜில் இடம் கிடைச்சுடுச்சு. மெரிட்ல கிடைச்சது.’ அப்பா எப்படி நெஞ்சை நிமிர்த்தி பேசுவார். அம்மாக்கு முகம் எப்படி பூரிக்கும். தங்கை எப்படி குதூகலிப்பாள். ஊர், உறவுகள் எப்படி வந்து ஒட்டிக் கொள்ளும். ”டாக்டரு, வாடா” பெரியவர்கள் எப்படி வந்து கட்டித் தழுவிக் கொள்வார்கள்.

ஐந்து வருடப் படிப்பு. டாக்டர் படிப்பு. பேயான படிப்பு. பிறகு ஸ்டெதஸ்கோப் எடுத்துக் கொண்டு பெட்டியில் வைத்து அதைக் கொண்டு போய் மலையப்பனிடம் காட்டி நாளையிலிருந்து நான் தொழில் செய்யப் போகிறேன் என்று கைகூப்பி வணக்கம் சொல்லி, நீ கூட இரு என்று வேண்டிக் கொண்டு வரவேண்டும். இனி எல்லாவற்றுக்கும் மலையப்பா ஸ்வாமிதான். ஒவ்வொரு விஷயத்திற்கும் மலையப்பா ஸ்வாமிதான். என் படிப்புக்கு. தங்கையின் திருமணத்திற்கு அப்பாவின் நலத்திற்கு. என் திருமணத்திற்கு மலையப்பாஸ்வாமிதான்.

மலையப்பா ஸ்வாமி தவிர வேறு எதுவும் இல்லை என்று முன்னேறி வலப்பக்கம் திரும்பி கருடாழ்வார் பார்த்து மெல்ல முன்னேறி மேடேறி உயரே நின்று அதோ, தொலைவில் குத்துவிளக்கு வெளிச்சத்தில் வைரம் மின்ன, தங்கம் மின்ன அதோ மலையப்பா ஸ்வாமி. தலைக்கு மேல் ரோஜாப்பூ. மார்பில் ரோஜாப்பூ. அடேய்.. அடேய்.. என் ஸ்வாமி.. என் ஸ்வாமி.. என் ஸ்வாமி.. என் தெய்வமே, மலையப்பா மலையப்பா.. கோவிந்த கோவிந்த.. கோவிந்த கோவிந்த.. கோவிந்த கோவிந்த.. மனம் முழுவதும் அலறியது. அருகே போனதும் கண் குளிர பார்த்தது. இந்த முறை நிற்க வைப்பார்களா, உள்ளே பளிச்சென்று ஒரு எண்ணம் வந்தது. வேறு யாரையோ நிற்க வைத்தார்கள். நேரே மூன்று ஆள் தள்ளி நிற்கின்ற இவனும் நிற்க வேண்டியதாயிற்று.

“நன்னா பாத்துக்கோங்கோ, நன்னா பாத்துக்கோங்கோ.’ அவனுக்குச் சொன்னதாகத் தெரிந்தது. மலையப்பா மலையப்பா.. என் தங்கமே.. என் ஐயனே.. என் அப்பனே.. என் குல தெய்வமே.. உன்னை வணங்குகின்றேன். உன்னை வணங்குகின்றேன். எனக்குள் இரு. என் நெஞ்சுள் இரு. எப்பொழுதும் இரு. நீங்காது இரு.

“ஜரகண்டி ஜரகண்டி.”

ஒரு நிமிடம் நாற்பது வினாடிகள். திரும்பித் திரும்பி பார்த்துக் கொண்டு வந்தபோது இன்னொரு முப்பது வினாடிகள். கிட்டத்தட்ட மூன்று நிமிடங்கள் மலையப்ப ஸ்வாமியைப் பார்த்தாகி விட்டது. என்ன தரிசனம். திருப்தியான தரிசனம். என்ன வேண்டிக் கொண்டாய். சட்டென்று மூளை நின்றது. நீ வேண்டிக் கொள்ளவே இல்லையே. எதுவுமே வேண்டவில்லை. கடவுளே இது தவறல்லவா. இல்லை. இதுதான் சரி. என்ன முட்டாள்தனம் எப்படி இம்மாதிரி மறந்து போனேன். அதுதான் நல்லது. ஏன் நல்லது. மலையப்பா ஸ்வாமியிடம் விட்டுவிடு. அவர் பார்த்துக் கொள்வார். நீ என்ன விண்ணப்பம் செய்வது. அவருக்கு உனக்கு என்ன தர வேண்டும் என்று தெரியாதா. நீ எதற்கு கடிதம் எழுதுகிறாய். நீ எதற்கு கைகூப்பி கூவுகிறாய். வேண்டாம். வேண்டாம். மலையப்ப ஸ்வாமிக்குத் தெரியும். இதுதான். சரணடைந்து விடு. வெறுமே தரிசனம். கைகூப்பிய வணக்கம். நெஞ்சு நிறைந்த அன்பு. பொங்கி வரும் பக்தி. தூரத்திலே இருந்த பிரதிமையை பார்த்து தன்னுள் அவருக்கு இடம் கொடுத்தல். இப்போது நெஞ்சு முழுக்க மலையப்ப ஸ்வாமி.

மண்டபத்து ஓரம் உட்கார்ந்தபோது கண்ணிலிருந்து நீர் வழிந்தது. ஐயா, ஒன்றுமே கேட்கவில்லை. கேட்கத் தோன்ற வில்லை. மிகுந்த முட்டாளாக இருக்கிறேன். என்னை மன்னித்து விடய்யா. என்னை கைதூக்கி விடய்யா. மறுபடியும் மனம் கரைந்து அழுகை வந்தது.

முகத்தை துடைத்துக் கொண்டு வெளியே வந்து லட்டும் பொங்கலும் வாங்கியபோது ஏதோ ஒரு நிம்மதி. இன்னும் வெளியே வந்து டோக்கனுக்கு லட்டு வாங்கியபோது இன்னும் பெரிய நிம்மதி. பையில் எடுத்துக் கொண்டு வெளியே சோறு கூடம் நோக்கி ஓடியபோது இன்னும் நிம்மதி. சாதம் பரிமாறுகிறார்கள். ரசம் ஊற்றுகிறார்கள். குழம்பு, காய், மோர் அள்ளி அள்ளி பெரும் பசிக்காரனாய் தின்று தீர்த்து, சின்ன ஏப்பம் விட்டு, கை அலம்பி, முகம் துடைத்து, சாப்பாடு கூடம் விட்டு வெளியே வந்தபோது என்னமோ சாதனை செய்தது போல்தான் இருந்தது.

இன்னும் அருகே போய் விமானத்தை நோக்கி கைகூப்பி போய் வருகிறேன். மறுபடியும் நல்ல மார்க்குகளோடு வந்து சந்திக்கிறேன். ஐயனே இனிமேல் இங்கு வந்தால் நான் மட்டும் தனியாகத்தான் வருவேன். அப்பொழுதுதான் உன்னோடு பேச முடியும். அப்பொழுதுதான் உன்னோடு இருக்க முடியும். ஒருவேளை என் குடும்பத்தை அழைத்து வந்தாலும் என் குடும்பத்தோடு ஒருமுறையும், நான் ஒரு முறையும் தனியாகத்தான் பார்ப்பேன். மலையப்ப ஸ்வாமி, நீ எனக்கு நண்பன். மலையப்ப ஸ்வாமி நீ என்னுள் ஒருவன். மலையப்ப ஸ்வாமி நீதான் நான். என்னை வழி நடத்துகிறவன் நீ. மலையப்ப ஸ்வாமி ஊருக்கு நல்லது செய்ய வேண்டும். பெற்றோருக்கு பெருமை தர வேண்டும். மலையப்ப ஸ்வாமி எல்லா கெடுதல்களிலிருந்தும் என்னை விடுவித்து என்னை அமைதியானவனாய், ஆரோக்கியமானவனாய், உழைக்கிறவனாய் என்னை ஏற்பாடு செய். மலையப்ப ஸ்வாமி மார்க் வரட்டும். வந்ததும் ஓடோடி வருகிறேன். கை கூப்பிவிட்டு பஸ் ஏறி சென்னை நோக்கி திரும்புகையில் தூக்கம் சொக்கியது. உள்ளே மலையப்ப ஸ்வாமி வா, வந்து உட்கார் என்று சொன்னார். தூக்கிவாரிப் போட் டது. உட்கார்ந்தது நீயா. மலையப்ப ஸ்வாமியா.

இதுதான் இறைதேடல். இதுதான் இறைதேடலின் ஆரம்பம். இதுதான் பக்தியின் முதல் படி. அடுத்தவர் பார்க்க வேண்டும் என்பதற்காக ஆடுகின்ற நடனம் அல்ல. ஐயோ அவா பரம பாகவதாள். பெரிய பிரேமை பகவான் மேல என்று ஊர் கொண்டாடுவதற்காக போடுகின்ற வேடம் அல்ல. நீ மலையப்ப ஸ்வாமியை பிரிக்க முடியாதபடி ஆனீர்கள். இதை வெளியே சொல்ல வேண்டிய அவசியம்கூட இல்லை. அம்மாவிற்கோ, அப்பாவிற்கோ சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இது உன்னோடு இருக்க வேண்டிய விஷயம் வேறு யாரேனும் துன்பப்பட்டால் இப்படி இரு என்று சொல்லலாமா. வேண்டாம். அதற்கு உண்டான யோக்கியதையும் எனக்கில்லை. நான் குரு அல்ல. நான் உபதேசி அல்ல. நான் என் மலையப்ப ஸ்வாமி. பரஸ்பரம் அனுபவிக்க வேண்டும். இதுவே முக்கியம். இன்னும் இறுக வேண்டும். அதுவே முக்கியம்.

[பகுதி 1 – படிக்க இதை சொடுக்கவும்]