உ
யோகி ராம்சுரத்குமார்
வெங்கண்ணா – பகுதி 2
[பிருந்தாவனம் புத்தகத்திலிருந்து …]
உலர்ந்த கட்டையைத் துளிர்க்க வைத்தவர் குரு. ஒரு எழுத்தும் அறியாத மாடுமேய்க்கும் அந்தணச் சிறுவனை அறிவாளியாக்கி மெத்தப்படித்த திவானாக்க முடியாதா? எளிதில் முடியும். எப்படி இது சாத்தியம், அன்புதான் அடிப்படையான விஷயம்.
ஞானியின் மனம் ஸ்படிகம் போல மிகத் தெளிவானது. அதனாலேயே பிரபஞ்சத்தில் சக்தியை உள்வாங்கி வெளியே அனுப்புகிறது. எந்தக் கல்மிஷமும் இல்லாத அந்த மனதுக்குள் – பிரபஞ்ச சக்தி எளிதில் வந்து குடிபுகுந்து விடுகிறது.
அந்தணச் சிறுவன் வெறும் கோமணத்துடனும் வெறும் மாடு மேய்க்கின்ற கைக்குச்சியுடனும் பின்னாலேயே ஓடிவந்து வியந்து வியந்து அவர் முகத்தைப் பார்த்து சுற்றி வந்து நமஸ்காரம் செய்து இவர் யார் என்று மற்ற சீடர்களிடம் வினவி அவர்களின் மூலம் அவரைத் தெரிந்துகொண்டு மறுபடியும் அவர் முகத்தைப் பார்த்து அவரோடேயே ஓடிவந்து மீண்டும் மீண்டும் வணக்கம் செய்து தன்னை அவரிடம் ஒப்படைத்த அந்த அன்பை அவர் முழுமனதாக ஏற்றுக் கொண்டு பிரதிபலித்தார்.
உன்னதமான குரு இப்படித்தான் செய்வார். நிழலுக்கு ஒரு குடையும் சுற்றி சில சீடர்களும் இரண்டு மாட்டு வண்டிகளில் மடத்து சாமான்களும், சமையல் பாத்திரமும் கொண்டு வரப்பட அமைதியாய் நடந்துப் போய் கொண்டிருக்கிற காவி வேட்டி சந்நியாசியைப் பார்த்ததும் இவர் ஒரு உன்னதமான குரு என்று அந்த அந்தண மாடு மேய்க்கும் சிறுவனுக்கு எப்படித் தோன்றியது. அவன் கண்ணுக்கு அவர் உன்னதமான குருவாக எப்படித் தென்பட்டார்.
ஏக்கம்தான் காரணம். தன்னை யார் மீட்சி செய்வார்கள், தன்னுடைய நிலைமையிலிருந்து தன்னை யார் கரையேற்றுவார்கள்? தாயில்லை, தந்தையுமில்லை. தன்னைப் பேணிப் பாதுகாக்கின்ற, அணைத்து ஆறுதல் சொல்கின்ற உறவுகளோ, நட்புகளோ இல்லை. ஒரு வேளை சோறு போட்டு விட்டு முகத்தில் அடிக்கின்ற மாமா தான் உண்டு. நின்றால் குற்றம், உட்கார்ந்தால் குற்றம், பேசினாலும் குற்றம், பேசாவிட்டாலும் குற்றம் என்று சகலதண்டனைக்கு ஆட்பட்டு, அவமானத்தில் குறுகி அம்மாவுக்கும், அப்பாவுக்கும் ஏங்கி, அடேய் உன் சொத்துக்களையெல்லாம் உன் மாமா தின்றுவிடப் போகிறானடா என்று அக்கம்பக்கத்தால் காதோடு பேசுகின்ற பேச்சுக்களுக்கு ஏங்கி மிரண்டு, நல்ல குலத்தில் பிறந்திருந்தும், நல்ல குடும்பத்திலே பிறந்திருந்தும், நல்ல அறிவாளியான தகப்பனுக்கு மகனாக வாய்த்திருந்தும் படிக்கமுடியாமல் முரட்டு ஆட்டம் ஆடுகின்ற சிறுவர்களிடமிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ளுதலே பெரும் போராட்டமாக அவனுக்கு மாறிவிட்டிருந்தது.
எல்லோரும் உறங்கிக் கொண்டிருக்க, அந்தப் பகல் வேளையில் உறங்காது தன் தாயைக் குறித்தும், தந்தையைக் குறித்தும் பிரார்தனையோடும், கவலையோடும் என்னை யார் மீட்பார், எந்தக் கடவுள் மீட்பார், கிருஷ்ணரா, ஸ்ரீராமரா, சிவனா, அல்லது வேறேதும் தேவதைகளா என்று ஏங்கிக் கிடக்க, அவர் ஏக்கம்தான் தொலைதூரத்தில் வந்து கொண்டிருந்த ஸ்ரீராகவேந்திர ஸ்வாமிகளுடைய ஊர்வலத்தைப் பார்க்க வைத்தது.
குரு வேண்டுமெனில் உள்ளே ஒருவர் கதற வேண்டும். குரு வேண்டுமெனில் உள்ளே ஒருவர் தவியாய்த் தவிக்க வேண்டும். தண்ணீரில் மூழ்கியவன் ஒரு பிடி மூச்சுக்கு எப்படி தவிப்பானோ அப்படி குருவுக்காக ஏக்கம் கொள்ள வேண்டும்.
உலக வாழ்க்கையில் திருப்தி உள்ளவரை கடவுளுக்கான தேடலோ. குருவுக்கான ஏக்கமோ வராது. நான் என்ற கர்வமே மீறி நிற்கும், தலைவிரித்தாடும். உலக வாழ்க்கையில் அதிருபதி எழும்போது தான் கடவுளுக்கான ஏக்கமும் ஆசையும் கிளர்ந்து எழும். எனக்குத் தெரியவில்லை. வழிநடத்த ஒருவர் வேண்டும் என்று மனம் புலம்பத் துவங்கும். எங்கே என்று அரற்றும். வரமாட்டாரா என்று வழிமேல் விழிவைத்துக் காத்திருக்கும். அப்படிப்பட்டவர் வந்ததும், மனம் உடனே தெரிந்து கொண்டு அவரைப் பற்றிக் கொள்ளும். அதுதான் ஆதோனி வெங்கண்ணாவின் வாழ்க்கையில் நடந்தது. அதுதான் இடையறாது எல்லா சீடர்களுக்கும், எல்லா நல்ல குருவையும் இடையறாது இடையறாது காட்டிக் கொண்ருக்கிறது.
தன்னை வழிநடத்த யாருமே இல்லையென்று ஆதோனி வெங்கண்ணாவின் மனம் கதறிக் கூைப்பி அவர் முகத்தைப் பார்த்து இவரா என் மீட்பர், இவரா என்னைக் காப்பாற்றுபவர் என்று வினவி, ஆமென்று தெளிந்து, வெறும் மணலில், வைய்யிலில் நெடுஞ்சாண்கிடையாய் விழ, விழுந்ததில் சரணாகதி தெரிந்தது. சரணடைந்தவரை குரு எப்போதும் கைவிட்டதில்லை. ஒருக்காலும் மறுத்ததில்லை. அவர் தகுதி என்ன என்று எடை போட்டதில்லை. சரணடைந்ததே அங்கு மிகப்பெரிய தகுதியாய்ப் போய் விடுகிறது. தன்னை முற்றிலும், குருவிடம் ஒப்படைத்ததே அங்கு மிகப்பெரிய விஷயமாக மாறிவிடுகிறது. அதுவே குருவுக்கான சன்மானம். அதுவே குருவுக்கான காணிக்கை. தன்னை ஒப்படைத்தலே குருவுக்கு ஒரு சீடன் தரும் மரியாதை.
ஒரு குரு சாதாரணராய் இருந்தாலும் ஒப்படைத்தலின் உயர்வாய் அந்தச் சீடன் மிக உன்னதமான நிலைக்கு வந்து விடுகிறான்.
சரணாகதி என்பது என்ன.
அது மிகப்பெரிய பணிவு. நெல்முனையளவும் எந்தவித கர்வமும் இல்லாத பணிவு அந்தப்
பணிவு காதுகளைக் கூர்மையாக்கும். கண்களை ஜொலிக்க வைக்கும். மனதைத் திறந்து வைக்கும். எனவே, அந்தப் பணிவினால் கேட்பது என்பது எளிதாக மாறும். அறிவது என்பது தெளிவாக மாறும். புரிவது என்பது உடனடியாக நிகழும்.
வெங்கண்ணாவிடம் படிப்பு இல்லை. ஆனால் பணிவு இருந்தது. பணிவுதான் மிகப்பெரிய படிப்பு. பெரும் படிப்பு கர்வத்தைத் தான் தரும். ஆழ்ந்த நல்ல படிப்பே பணிவை ஏற்படுத்தும். பணிவு என்பது தெளிவு. தெளிவு என்பது பணிவு. அந்தத் தெளிவைக் கண்ட குரு தன்னுடைய சக்தியை அந்தச் சிறுவன் மீது செலுத்த, சிறுவன் வாழ்க்கை மெல்ல மெல்ல மாறியது. குருவின் ஆசீர்வாதம் வெற்றி கண்டது.
எது சொத்து என்று தெரியாதவர்கள் வயல்களையும், தோப்புகளையும், வீடுகளையும் பாத்திரம் பண்டங்களையும், தன்னுடையதாகக் கொள்வார். பிறருடைய விஷயங்களையும் அபகரிக்க முயல்வார்கள். மரணம் பற்றிய ஞானமுள்ளவருக்கு மண் மீது பிரேமை இருக்காது. மண் சார்ந்த விஷயங்கள் மீதும் நாட்டம் இருக்காது. ஆனால், அந்தணர் குலத்தில் பிறந்தாலும் அந்த மனிதருக்கு ஞானமில்லை. வெறும் தாவரசங்கம சுகத்துக்கு ஆசைப்பட்டவராகி, அகந்தையின் வயப்பட்டவராகி ஒன்றும் அறியாத சிறுவனைத் துன்புறுத்தத் துவங்கி தன் பலத்தையும், வீரத்தையும் காட்ட, வெகு சில நாட்களிலே அந்தச் சிறுவனுக்கு இருந்த குருவின் அருள் அவரை வேறு திசைக்கு மாற்றியது. நோயுறச் செய்தது. நோயிலிருந்து மீளமுடியாதபடி வைத்து மரணத்தை ஏற்படுத்தியது. சொத்து… சொத்து. என்று ஆசைப்பட்டவர் செத்துப் போனார்.
மரணம் எவருக்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் ஏற்படும் என்பதுதான் இந்த உலக வாழ்க்கையின் சிறப்பு. நெல்முனையளவும் கர்வம் கொள்வதற்கு எந்த
மனிதருக்கும் யோக்கியதை இல்லை என்பது தான் உண்மை. அதுவரை காட்டுக்குப்போய் மாடுகள் மேய்த்துக் கொண்டிருந்தவன் மாமா இறந்ததும் வயல்வெளிகளை கவனிக்க ஆரம்பித்தான். மாமிக்கு ஆதரவாக இருந்தான். நல்ல மனம், நல்ல புத்தி நல்லோர் நினைப்பு அனுபவத்தைக் கொடுத்தது. பொறுப்புகளை பொறுப்பாக சுமக்கவைத்தது. வயல் வேலைகளைத் திறம்படச் செய்தான்.
வெங்கண்ணா வாலிபனானான்.
அப்போது முஸ்லீம்களுடைய அரசு. ஒன்றாக இல்லாமல் பல பிரிவுகளாக இருந்தது. பீஜப்பூர் சுல்தான் கர்நாடகப் பகுதியை ஆண்டுவர, அந்த கர்நாடகப் பகுதியில் ஆதோனி உட்பட்ட சில நகரங்களுக்கு ஒரு சிற்றரசனை நவாப்பாக வைத்து அவனை மேற்பார்வை பார்த்துவரச் சொன்னார். அந்த நவாப்புக்குப் பெயர் சித்த மசூத்கான்.
அந்த நவாப் அவ்வப்போது தான் ஆட்சி செய்யும் இடங்களை நேரடியாகப் பார்ப்பதற்கும், அப்படிப் பார்க்கும்போதே வரிவசூல் செய்வதற்கும் பல கிராமங்களுக்கு விஜயம் செய்து வருகையில், அக்ரஹாரத்துக்கு நடுவில் தன்னுடைய சிறிய படையோடு நவாப் உள்ளே நுழைந்தான். அவன் நுழைகின்ற நேரம் பீஜப்பூர் சுல்தானிடமிருந்து ஒரு ஓலை வந்தது. சுல்தானுக்கு ஆட்சி செய்யத் தெரியும். அதிகாரம் செய்யத் தெரியும். படையெடுத்து பகைவர்களை அடக்கத் தெரியும். ஆனால், படிக்கத் தெரியாது. படிப்பில் கவனம் செலுத்தியிருந்தால் படையெடுப்பு விஷயங்களில் அனுபவம் ஏற்பட்டிருக்காது. எது முக்கியமோ அதைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு படிப்பை சுல்தான் விட்டு விட்டான். ஓலை பீஜப்பூரிலிருந்து வந்திருப்பது தெரிந்து பதட்டமானான்.
நல்ல செய்தியா, கெட்ட செய்தியா, பதவியில் இருக்கிறோமா, தூக்கியெறியப்பட்டுவிட்டோமா. தன்னுடைய படை பீஜப்பூருக்கு வரவேண்டுமென்று விரும்புகிறாரா அல்லது பீஜப்பூர் சுல்தான் தான் இருக்கும் இடத்திற்கும் படையெடுத்து வரப்போகிறாரா?
அவனுக்குக் கலவரங்கள் உள்ளுக்குள் கொப்பளித்தன.
யாரேனும் படிக்க வேண்டும். யாரேனும் ஒலையில் என்ன இருக்கிறதென்று சொல்ல வேண்டும் என்று பரபரத்தான். வீட்டு வாசலில் மலர்ந்த முகத்தோடு குருவின் கருணாகடாசம் விழுந்த ஒளிமிகுந்த கண்களோடு, பெரிய நெற்றியோடு, அந்நெற்றியில் திருச்சின்னங்களோடு கைகட்டி நின்றிருந்த வெங்கண்ணாவைப் பார்த்து “ஏ… பிராமணா இங்கு வா” என்று கட்டளையிட்டான்.
ஜாதிப்பெயரே விளிக்கும் பெயராக இருந்த காலகட்டம் அது. வெங்கண்ணா யாரைக் கூப்பிடுகிறார் என்று இடமும் வலமும் பார்த்து பிறகு தன்னைத் தான் என்று தெரிந்து கொண்டு தயக்கத்தோடு சுல்தானை அணுகினார்.
“பீஜப்பூரிலிருந்து ஓலை வந்திருக்கிறது. என்ன செய்தி படித்து உடனே சொல்” என்று சொல்ல, வெங்கண்ணா ஒலை வாங்க மறுத்தார்.
“ஏன், என்ன காரணம். சுல்தான் தொட்டதை நீ தொட்டால் தீட்டாகி விடுமா?”
அந்தணர்கள் வாழ்க்கை பற்றி அரை குறையாகத் தெரிந்து கொண்டிருந்த சுல்தான் சீறினான.
“இல்லை ஐயா, அப்படியேதும் இல்லை.”
வெங்கண்ணா ஓலையை வாங்கிக்கொண்டார்.
“எனக்குப் படிக்கத் தெரியாது. அதனால்தான் தயங்கினேன்.”
“நீ அந்தணன்தானே.”
“ஆமாம்.”
” அந்தணன் படித்தவர் தானே.”
“அப்படி யொன்றும் அவசியமில்லை”
“படிக்காத அந்தணர்களுமா இருக்கிறார்களா”
“உண்டு. என்னைப் போல”
“என்ன, யாரை ஏமாற்றுகிறாய். இந்தச் செய்தியைப் படித்து உனக்குச் சொல்ல விருப்பமில்லை என்று சொல். நவாப்புக்கு நான் என்ன படிப்பது? அதற்காகவா படித்திருக்கிறேன் என்று கொக்கரிப்பால் ஏற்படுகின்ற அலட்சியமா. இதைப் படிக்கமாட்டேன் என்கிற பிடிவாதமா. பிய்த்து எடுத்துவிடுவேன். நான் அடிக்க ஆரம்பித்துவிட்டால் தோலை உரிக்காமல் விட மாட்டேன். படி, என்ன எழுதியிருக்கிறது என்று படி. எனக்குப் பயமும் கலவரமாக இருக்கிறது. ஊடனே படி” என்று சொல்ல, வெங்கண்ணா என்ன செய்வது என்று தெரியாமல் ஓலையின் முத்திரையை ஒடித்துப் பிரித்தார். நீண்ட துணியில் எழுதப்பட்டிருந்த எழுத்துக்கள் எதுவும் வெங்ண்ணாவிற்குப் புரியவில்லை. எழுத்துக்கள் என்று தெரிகிறதே தவிர என்ன சொல்கிறது என்று புரியவில்லை. “என்ன விழிக்கிறாய்? படிக்க விருப்பமில்லை, அப்படித் தானே? அந்தணன் என்ற கர்வம், அப்படித்தானே? நவாப்புக்கு அடிபணியமாட்டேன் என்ற எதிர்ப்புத்தானே? இந்தக் கிராமத்தில் இப்படி நீ எதிர்க்க ஆரம்பித்தால் உன்னைத் தொடர்ந்து மற்றவர்களும் எதிர்ப்பார்கள். அதனால் நவாப்பை ஓட ஓட விரட்டி விடலாம் என்ற கற்பனையா? எங்கே… கை பிரம்பு எடுத்துவாடா” என்று
கைநீட்ட, நவாப்பின் கையில் கைபிரம்பு போயிற்று. இரண்டு முறை காற்றில் வீச, வெங்கண்ணாவின் உயிர் பயத்தில் அசைந்தது.
குருநாதா… குருநாதா… குருநாதா… உள்ளுக்குள் கதறல் எழுந்தது.
எந்த நேரமும் வெங்கண்ணா மறக்காத குரு அவன் மனக்கண் முன்பு தோன்றினார். ஸ்ரீராகவேந்திர… ஸ்ரீ ராகவேந்திர… பலமுறைய விழுந்து எழுந்து தன் மனக்கண் முன்பு தோன்றிய குருநாதருக்கு வெங்கண்ணா நமஸ்காரம் செய்தார்.
நீண்ட துணியை இறுக்கப் பிடித்தார் வாட்டமாக வைத்துக் கொண்டார். உரக்கப் படிக்கத் துவங்கினார்.
நவாப் சித்தமசூத்கானுக்குப் பீஜப்பூர் சுல்தானின் ஆசீர்வாதங்கள். அல்லாஹ் அக்பர்
கடவுள் உன்னையும் இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்தையும் காக்கட்டும். அங்கு வரிவசூல் செவ்வனே நடை பெறுகிறதா. இஸ்லாமியர்கள் இருக்கிறார்களா. இந்துக்கள் எவரேனும் வாலாட்டுகிறார்களா. எல்லாவற்றிற்கும உடனடியாக கடிதம் எழுது. நீ சிறப்பாக ஆட்சி செய்தால் ஆதோனி மற்ற கிராமங்கள் அல்லாது பெரிதாக மற்ற எல்லைகளை விரிவு படுத்தியிருக்கிறேன். அந்தச் சிலநூறு கிராமங்களுக்கும் நீயே நவாப். உன்னால் அதிகம் பயணப்படமுடியவில்லையெனில், ஒரு நல்ல திவானை நியமித்துக் கொண்டு வரி வசூலில் செம்மையாக ஈடுபடு. எனக்குக் கட்ட வேண்டிய கப்பங்கள் விரைவாக வரட்டும். அல்லாஹ் அக்பர். உனக்கு என்னுடைய ஆசீர்வாதங்கள்.
கிட்டத்தட்ட பாராட்டு பதவி உயர்வுக் கடிதம் அது. நவாப் குதிரையோடு சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தார். முன்னும் பின்னும் அலைந்தார். மிக சந்தோஷம் மிக சந்தோஷம் என்று வெங்கண்ணாவைப் பார்த்துக் கூறினான்.
ஏதோ வெங்கண்ணாவே பதவி உயர்வு கொடுத்தது போல குதிரையில் அவரை சுற்றி சுற்றி வந்தான்.
கடின உழைப்பிற்குக் கிடைத்த பலன். அல்லாவை இடையறாது பிரார்த்தனை செய்தற்குப் பலன் என்று பலவாறு வாய்விட்டுப் புலம்பினான்.
“ஏ… பிராமணா… உன் பெயரென்ன” என்று பிரம்பால் லேசாய் முதுகு தட்டிக் கேட்டான்.
“வெங்கண்ணா”
“அடே… வெங்க்… நீ என் அரண்மனைக்கு வந்துசேர்” என்று சொல்லி புரவியை துள்ளலுடன் ஓடவிட்டான். அவன் படைகள் அவனைப் பின் தொடர்ந்து ஓடின. கிராமம் திகைத்து நின்றது.
“எதற்கு அரண்மனைக்கு, உன்னை ஏன் வரச் சொன்னார்?” கேள்வி கேட்டது.
“உனக்குப் படிக்கத் தெரியாது, எப்படிட் படித்தாய்” என்று வினவியது.
வெங்கண்ணா திகைத்தார்.
“எப்படிப்படித்தேன், எதனால் படித்தேன் ஸ்ரீ ராகவேந்திரா… ஸ்ரீ ராகவேந்திரா…” உள்ளே பெரும் திகைப்போடு கைகூப்பினார்.
எனக்கா, படிப்பறிவா… எழுதப்படிக்கத் தெரியும் ஞானமா, சத்குருநாதா நான் எப்படி இதைப் படித்தேன். படிக்கின்ற ஒரு திறமை எனக்கு எப்படி வந்தது.
மனம் சில்லிட்டிருந்தது.
“உனக்கு என்ன படிக்கத் தெரியும். ஏதோ உன் வாய்க்கு வந்ததைப் படித்துவிட்டாய். அடி வாங்காமல் தப்பிக்க வேண்டும் என்று பயந்து உளறிவிட்டாய். இப்போது ஒலையோடு நவாப் அரண்மனைக்குப் போயிருக்கிறார். அரண்மனையில் அந்த ஓலை படிக்கப்படும். நவாப்போய் காதுகொடுத்துக் கேட்பார். நீ சொன்னதற்கு நேர்மாறாக இருந்தால் அந்த அரண்மனை வாசலில் உன்னைக் கட்டிவைத்து தோல் உரித்துத் தொங்கவிடுவார்கள். நீ அரண்மனைக்குப் போ. உன் சொத்துப் பத்தெல்லாம் மற்றவர்களுக்கு எழுதி வைத்து விட்டு அரண்மனைக்குப் போ” என்று ஏகடியம் பேசினார்கள்.
வெங்கண்ணா மறுபடியும் உள்ளுக்குள் கைகூப்பினார்.
குருவின் மந்தகாசமான முகம் அவன் மனக்கண்ணில் மிதந்தது. போய் வா என்று பிரியமுடன் புன்முறுவல் செய்தது. வெங்கண்ணா நமஸ்கரித்தார். தோளில் சால்வைப் போர்த்திக் கொண்டார். போய் வருகிறேன் என்று மாமியிடமும், மாமியின் குழந்தைகளிடமும் விடை பெற்றுக் கொண்டு கம்பீரமாக அரண்மனை நோக்கி நடந்தார்.
“படிக்கத் தெரியாது என்றுதானே சொன்னாய் பிராமணனே. என்னை ஏமாற்ற நினைத்தாயா
அல்லது என்னோடு பேசப்பிடிக்கவில்லையா” நவாப் ஆச்சரியமாக வினவினான். எதிரே ஆசனம் போட்டு அமரச் சொல்லியிருந்தான்.
நவாப் எதிரே நிற்கக்கூட தகுதியற்ற வெங்கண்ணா ஆசனத்தில் வியப்போடுதான் அமர்ந்திருந்தார்.
“உண்மையில் எனக்குப் படிக்கத்தெரியாது. நீங்கள் நம்ப வேண்டும்.” கூப்பியபடி பதில் சொன்னார்.
நவாப் ஆச்சரியத்தோடு அவரையே பார்த்துக் கொண்டிருந்தான்.
உள்ளுக்குள் என் குருநாதரை நினைத்தேன். அடிகள் அடித்து நொறுக்கிவிடுவீர்களோ என்று பயந்து என் குருநாதரை கதறலோடு கும்பிட்டேன். அவருடைய அருளால் தான் படிப்பு வாசனையே இல்லாத, படிப்புக்காக பள்ளிக்கூடம் போய் அறியாத நான் இலக்கண சுத்தமாக படிக்க முடிந்தது. இதுவொரு அதிசயம்தான். நான் சாதாரண பிராமணன். உங்கள் எதிரே உட்காரவும் தகுதியற்றவன்.”
நவாப் ஆச்சரியத்துடன் உற்றுப் பார்த்தான். அந்தக் கண்கள் சுடர்விட்டன. அந்த முகம் சாந்தியோடு இருந்தது. அந்த நெற்றி ஞானத்தில் பளபளத்தது. அந்த உதடு கல்மிஷம் இல்லாதது என்பதைக் காட்டியது. அந்தக் கைகளில் இருக்கின்ற கூப்பலும், பணிவும், இவர் உண்மையானவர் என்பதைத் தெரிவித்தன. அந்த உடலின் மொழி, அவர் உணர்ந்து பேசுகிறார் என்பதைத் தெரிவித்தது. வல்லவன் அருகே இருப்பதைவிட நல்லவர் அருகே இருப்பது நல்லது. இவர் நல்லவர். வல்லவராகவும் இருக்கிறார். இவரே அருகில் இருக்கட்டும். இவரே திவானாக இருக்கட்டும். நவாப் சட்டென்று முடிவு செய்தான். அவன் முடிவை உள்ளுக்குள் இருக்கின்ற ஆழ்மனம் சரியென்று ஆமோதித்தது.
“இன்றிலிருந்து நீரே என்னுடைய அரண்மனை திவான். எம்முடைய அலுவல்களை நீரே கவனித்துக் கொள்ளும்.” கடிதம் எழுதி கையில் கொடுத்தான். வேறு உடைகளைக் கொடுக்கச் சொன்னான்.
ஆதோனி விட்டு அரசவைக்கு வந்தவர், திருப்பியும் ஆதோனிக்குப் போகும் போது பல்லக்கில் பட்டாடைகளும், பெரும் தலைப் பாகையும், காலில் செருப்புகளும், தோளில் உத்தரியமும், காதுகளில் குண்டலமும், கையில் செங்கோலுமாய் வெறும் வேட்டியும், மேல்துண்டுமாய் வந்து இறங்கினார்.
உலர்ந்த மரம் துளிர்க்கும். குருவின் அருளால் ஒன்றுக்கும் உபயோகமில்லாதவர்கள் கூட மிக உன்னதமான நிலையை அடைவார்கள் குருவின் அருளால்.
— தொடரும்