உ
யோகிராம் சுரத்குமார்
குரு
இந்த திருப்பதி தரிசனம் போல வேறு சில கோவில்களிலும் மிக முக்கியஸ்தராக கவனிக்கப்பட்டிருக்கிறேன். எதிர்பார்ப்பே இல்லாத நேரத்தில் மிகக் கொண்டாட்டமான தரிசனங்கள் எனக்குக் கிடைத்திருக்கின்றன. இதற்கு என்ன காரணம் என்று யோசித்தபோது என் குருநாதர் திருவண்ணாமலை மகான் யோகி ராம்சுரத்குமார் காரணம் என்று நினைக்கிறேன்.
கார்த்திகை தீபம். கமலா பரணி தீபம் பார்க்க ஆசைப்பட்டாள். பெருங் கூட்டம் அதற்கு டிக்கெட் வேறு இருக்கிறது. எல்லா டிக்கெட்டும் தீர்ந்துவிட்டதாம். எனவே பரணி தீபம் பார்ப்பது என்பது இயலாது என்று எனக்கு அங்குள்ள நண்பர்களால் சொல்லப்பட்டது. நான் மெல்ல யோகி ராம்சுரத்குமாரிடம் விண்ணப்பித்தேன்.
“பரணிதீபம் பார்க்க வேண்டும்.”
“அப்படியா. நீ அங்கு போ. உன்னை உள்ளே அனுமதிப்பார்கள்.” மிகச் சாதாரணமாகச் சொன்னார்.
“பெரும் கூட்டம் இருக்கிறது. டிக்கெட்டுகள் விற்பனையாகி விட்டன” என்று நான் அவநம்பிக்கையோடு சொல்ல,
” நீ அங்கு போ உன்னை அனுமதிப்பார்கள். ”
அவர் சொன்னது போல விடியற்காலையில் நானும் கமலாவும் எழுந்து அந்த பரணி தீபம் பார்ப்பதற்காக கோவிலுக்கு அருகே போனோம். செருப்பை விடுகின்ற இடத்தில் வாங்கிக் கொண்டார்கள்.
“எங்கே போகிறீர்கள்;?” என்று அந்த ஆள் கேட்டான்.
“பரணி தீபம் பார்ப்பதற்காக போகிறோம்.”
“டிக்கெட்டுகள் விற்பனையாகி விட்டன. இந்த கோபுரம் தாண்டி உங்களை உள்ளே விடமாட்டார்கள்” என்று சொல்ல,சரி முயற்சிக்கிறோம் என்று நாங்கள் நடந்து போக கோவிலின் மத்திய பகுதியில் பெரும் கூட்டம் இருப்பதை உணரமுடிந்தது. மற்ற இடங்களில் கடும் போலீஸ் காவல் இருந்தன. ஆனால் யாரும் தடுக்கவில்லை. கடுமையான கூட்டம் இருந்த இடத்தில் நானும் கமலாவும் இரண்டு பக்க சவுக்கு கட்டைகளுக்கு நடுவே சாதாரணமாக நடந்து போனோம். யாரும் தடுக்கவில்லை. பரணி தீபத்திற்கு அருகே போகிறபோது ஒரு போலீஸ் அதிகாரி எப்படி வந்தீர்கள், எப்படி வந்தீர்கள் என்று கேட்க,
“யாரும் தடுக்கவில்லை நேரிடையாக வந்தோம் .”
“யார் நீங்கள்?” என்று கேட்க, நான் ஒரு எழுத்தாளன் என்று என்னை அறிமுகப்படுத்திக் கொள்ள, உற்றுப் பார்த்தார். ஞாபகம் இருக்கிறது. உள்ளே போங்கள் என்று என்னை எங்கோ பார்த்த ஞாபகத்தில் உள்ளே அனுப்பி வைத்தார்.
கருவறைக்கு அருகே வந்தாகிவிட்டது. பரணி தீபம் ஏற்றப்படப் போகிறது. அங்குள்ள சிவாச்சாரிய இளைஞர்கள் என்னை அடையாளம் கண்டு கொண்டார்கள். “பாலகுமாரன் சார்,வாங்க. வாங்க வாங்க” என்று கூப்பிட்டார்கள். மிக சௌகரியமான ஒரு இடத்திலே என்னையும், என் மனைவியையும் நிற்க வைத்தார்கள். நாங்கள் அந்த கூட்டத்திலிருந்து விடுபட்டு பரணி தீபம் ஏற்றுகின்ற அந்த இடத்திலே நாங்கள் நின்றோம். ஐந்து தீபங்கள் ஒவ்வொன்றாக ஏற்றப்படுவதை பார்த்தோம். திருவண்ணாமலைக்கு அரோகரா என்ற முழக்கத்தை கேட்டோம். அந்த சிவாச்சாரிய இளைஞர்கள் அந்த தீபங்களை தூக்கிக் கொண்டு பெரு நடையோடு அந்த இடத்தை விட்டு அகன்றார்கள். கூட்டம் பின் தொடர்ந்தது. அந்த கருவறை காலியாக இருந்தது. அண்ணாமலையாரை கையெடுத்து கும்பிட்டு விபூதி வாங்கி அணிந்துகொண்டு மெல்ல வாசலுக்கு வந்தோம். செருப்பு போட்டுக் கொண்டோம். என்ன பார்க்க முடிந்ததா , உள்ளே விட்டார்களா என்று அந்த இளைஞர் கேட்க, பரணி தீபம் பக்கத்தில் இருந்து பார்த்து விட்டு வருகிறோம். கருவறையில் பார்த்தோம் எனச் சொன்னதைஅவர் நம்பவேயில்லை.ஆனால் அது முக்கியமில்லை.
ஒரு குரு நினைத்தால் ஒரு சீடனை எந்த உயர்ந்த இடத்திற்கும் அனுப்புவார் என்பது ஒரு உண்மை. எந்தவித தடங்கல் இல்லாமலும் அந்த தரிசனத்தை எனக்குக் கொடுத்தது என் குருநாதர் திருவண்ணாமலை மகான் யோகி ராம்சுரத்குமார். அதுமட்டுமல்ல, இன்னும் பல கோவில்களில் நான் நெருங்கிய தரிசனம், விசித்திரமான முறையில் அழைத்து தரப்பட்டிருக்கிறேன். அதை பிற்பாடு சொல்கிறேன்.
யோகி ராம்சுரத்குமார் யோகி ராம்சுரத்குமார் யோகி ராம்சுரத்குமார் ஜெயகுருராயா.
ARUNKUMAR R CHENNAI VASAGAR
I too deserve it sir.