உ
யோகிராம் சுரத்குமார்
கணபதி வணக்கம்
எனக்குச் செடி கொடிகள் மிகவும் பிடிக்கும். தாவரங்களோடு பேச முடியும் என்று நான் நம்புகிறேன். “என்ன பூக்க மாட்டேங்கற. நிறைய பூ வேணும் தெரியுதா” என்று நந்தியாவட்டையோடு பேசலாம். நாலு நாளில் கை கொள்ளாத பூ கிடைக்கும். பசிக்குதா பசிக்குதா என்று உரம் போடலாம். களைகளை அப்புறப்படுத்தலாம். உலர்ந்த கிளைகளை அப்புறப்படுத்தலாம். மண்ணில் மட்டுமல்லாது செடியின் தலையிலும் நீர் வார்க்கலாம். குழந்தையை குளிப்பாட்டுகின்ற சந்தோஷத்தை அடையலாம்.
எழுபத்தியாறு தொட்டிகள் இருந்தன. விதம் விதமான பூக்கள். காய்கள் ஆனால் என்னுடைய முதுமை காரணமாக அதிகம் பராமரிக்க முடியாமல் போயிற்று. நான் யோசனை செய்து அவைகளை ஒரு கோவிலுக்கு அப்புறப்படுத்தினேன். மிக ஆவலாக வாங்கிக் கொண்டார்கள். மேல் மாடி வெறிச் சென்று இருக்கிறது. ஆனால் என் அறைக்கு அடுத்ததாக இருக்கின்ற ஒரு பால்கனியில், தொங்கு தொட்டியில் செடிகள் வளர்க்க ஆரம்பித்து விட்டேன். நாலடிக்கு பன்னிரெண்டு அடி பால்கனி அது. இடுப்புவரை சுவரும், அதற்கு மேல் கம்பிகளும் உள்ளது. அங்கங்கே கொக்கியை வெல்ட் பண்ணச் சொல்லி தொங்கு தொட்டிகளை ஒரு அமைப்பில் மாற்றினேன்.
நிறைய தொட்டிகளில் அருகம்புல் வளர்த்தேன். நீர் உறிஞ்சி அருகம்புல்கள் மிக நீளமாக வளர்கின்றன. காய்ந்த ஒரே ஒரு அருகம்புல்லை பிள்ளையாருக்கு வைத்தால் போதும். அது மிகப் பெரிய பூஜை என்று பலர் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன். அப்படி ஒரு மரியாதை, பூஜை செய்ய வேண்டுமென்ற எண்ணத்தில்தான் அருகம்புல் வளர்க்கிறேன். மாலை நேரம் நீர் ஊற்றிய பிறகு நீண்டதான அருகம்புல்லை பறித்து வரிசையாக்கி, சுழற்றி, வளையமாக்கி அவைகளை ஒரு குறிப்பிட்ட கணபதிக்கு மாலையாகவும், நீண்ட சில புற்களை அங்கங்கே இருக்கின்ற கணபதிக்கு ஒரு மரியாதையாகவும் நான் வைக்கிறேன்.
உச்சிஷ்ட கணபதி என்கிற ஒரு மந்திரம் எனக்கு உபதேசமாயிற்று. அந்த உச்சிஷ்ட கணபதி மந்திரம் மிகவும் சக்தி வாய்ந்தது. இடைஞ்சல்கள் நேரும்போது அந்த உச்சிஷ்ட கணபதி மந்திரத்தை சொல்லி கணபதியை வேண்டிக் கொண்டால் எப்பேர்பட்ட தடங்கலாக இருந்தாலும் அது நகர்ந்து போகிறது. மகா கணபதியின் வாமாச்சார வடிவம் அந்த உச்சிஷ்ட கணபதி. கணபதி பிரம்மச்சாரி என்று சொல்லப்படுவது உண்டு. ஆனால் இங்கே கணபதியின் இடது தொடையில் நீல சரஸ்வதி என்ற அவர் மனைவி அமர்ந்திருக்க, நெருக்கமாக இருக்க, பரஸ்பரம் இருவரும் தழுவிக் கொண்டிருப்பார்கள். மனைவியோடு நெருக்கமாய், சந்தோஷமாய் இருக்கும் நேரம் விண்ணப்பித்துக் கொண்டால் அந்த காரியம் நிறைவேறும் என்பது ஒரு அடிப்படை விதி. ஸ்ரீ மகாகணபதியும் அந்த நிலையில் இருக்க வைத்து, அந்த மந்திரத்தைச் சொல்லி வணங்குவது தந்திர சாஸ்திரத்தின் ஒருவகை. என் வீட்டின் முக்கியமான ஒரு இடத்தில் பச்சைத் துணி சுற்றி இந்த உச்சிஷ்ட கணபதியின் பிரதிமை இருக்கிறது. அதற்கு அருகம்புல் சாத்துவதற்கே நான் பால்கனியில் அருகம்புல் வளர்க்கிறேன்.
மிக கவனமாக தண்ணீர் ஊற்றி, வாரத்திற்கு ஒருமுறை உரம் போட்டு வெய்யில் படும் வண்ணம் மாட்டி வளர்க்கிறேன். என்ன செய்கிறேன். செடி வளர்ப்பா? கணபதி பூஜையா? இரண்டும்தான். பூஜைக்கென்று தாவரங்கள் வளர்க்கிறபோது அந்த தாவர வளர்ப்பு அர்த்தமாகிறது. அந்த பூஜை விரிவடைகிறது. ஒரு கொத்து அருகம்புல்லை உச்சிஷ்டாயா ஸ்வாஹா என்ற மாலையாக்கி போடும்போது ஒரு நிறைவு ஏற்படுகிறது. அந்த தாவரங்களின் மீது பெருத்த மரியாதையும், அன்பும் கிளர்ந்து எழுகின்றன. அருகம்புல் தவிர மணிப்ளான்ட்டும், இரண்டு செம்பருத்திச் செடியும், இரண்டு அடர்த்தியான துளசி செடியும், பசுமையை தருவதற்காக சில புல்வகைச் செடிகளும் வளர்க்கிறேன்.
தாவரங்கள் என்னைவிட என் பேரனுக்கு சந்தோஷம். பால்கனி பால்கனி என்று கத்துவான். அங்கு போனால் ஒவ்வொரு செடியாகத் தடவுவான். இலையை கையில் வைத்துக் கொண்டு கன்னத்தில ஒற்றிக் கொள்வான். அவனுக்கும் தாவரங்கள் பிடிக்கின்றன என்றுத் தெரிய வருகிறது. அந்தக் குழந்தைக்காவது பெரிய தோட்டம், உயர்ந்த மரங்கள். நிறைய செடிகள். காய்கறி தாவரங்கள். நெல் வயல்கள் என்று கிடைக்கட்டும். கணபதியின் அருள் அவனை தாவரங்களோடு சம்பந்தம் உடையவனாகச் செய்யட்டும். அவன் காலம் விவசாயத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த காலமாக இருக்கும். மாடுகட்டி போரடித்தால் மாளாது செந்நெல் என்று ஆணைகட்டி போரடிக்கின்ற தமிழ்நாடாக இவன் உணர அந்த ஆணைமுகத்தான் அருள்புரியட்டும்.
Balakumar[VVBalaji]
Yogi Ramsuratkumar
Yogi Ramsuratkumar
Yogi Ramsuratkumar
Jayagururaya