உ
யோகிராம் சுரத்குமார்
குலதெய்வம்
அந்த வாசற்படியை தாண்டினால் கருவறை. கருவறையில் இரண்டு எட்டு எடுத்து வைத்தால் வெங்கடாசலபதி. திருப்பதி வெங்கடாசலபதி. மாலன் என்ற மாயன். பரதகண்டத்தை ஆட்சி செய்து கொண்டிருப்பவன். தென்னிந்தியாவின் இணையில்லாத மன்னன். சகலரும் விரும்பும் கடவுள். ஏகாந்தம் தவழும் முகம். ஆனால் ஏகப்பட்ட ஆடை அலங்காரங்கள்.
ஆனால் விடியல் நேரத்தில் ஆடைகள் களையப்பட்டு வெறுமே என்னை பணிந்திரு என்று சொல்கின்ற கையோடு கன்னங்கரேல் என்று நிற்கிறான். அதில் அந்த கற்பூர நாமம் ஜொலிக்கிறது. வெட்டிவேர் வாசனை, புனுகு வாசனை, ஜவ்வாது வாசனை என்று விதம் விதமான வாசனைகள் தாக்கின. வாசனையினாலேயே மனதில் ஒரு அமைதி ஏற்பட்டது. அந்த சிலாரூபம் பார்க்கிறபோது, எத்தனை பேருடைய வீட்டில் நீ குடிகொண்டிருக்கிறாய். எத்தனை பேருடைய அபிலாஷைகளை நிறைவேற்றுகிறாய். உன்னைத் தேடி வந்து உன் காலடியில் கொட்டுகிறார்களே, அப்படி என்ன மாயம் வைத்திருக்கிறாய். நீ யார்? கிருஷ்ணனா, அல்லது வேறு யார் யார் பெயரையோ சொல்கிறார்களே அம்மாதிரியோ. கேள்வி எழுந்தது. ஆனால் உதடுகள் நமோ நாராயணா என்று அவரை அழைத்துக் கொண்டிருந்தன.
அந்த முகவாய் பக்கம் இருக்கின்ற வெள்ளை கற்பூரத்தை விலக்கினார்கள். அந்தப் புன்னகை பெரிதாய் தெரிந்தது. அது மாயப் புன்னகை. உனக்கு விளக்கிச் சொன்னாலும் என்னைப் புரியாது. எதற்கு கேள்வி என்பது மாதிரியான புன்னகை. தேனும், பாலும் அபிஷேகமாயிற்று. தலையில் ஊற்றப்பட்டது. சுத்தமாக துடைத்தார்கள். திரையிட்டு உடை மாற்றினார்கள். மாலை கூடைகள் வந்தன. ரோஜாப்பூ மலர் மாலை. கிரீடத்திலிருந்து இடமும், வலமுமாய் தொங்க விட்டார்கள். அங்கங்கே மாலைகளை மாட்டினார்கள். நெஞ்சுலுள்ள மஹாலகூஷ்மிக்கு சார்த்தினார்கள். உடையில், பூ அலங்காரத்தில் அவர் முற்றிலும் வேறாக இருந்தார். கற்பூர ஆரத்திக்குப் பிறகு மறுபடியும் பார்க்க முடிந்தது. டாலர் சேஷாத்திரி என்ற அர்ச்சக நண்பர் அந்த இருட்டில் என்னை இனம் கண்டு கொண்டார். பாலகுமாரா நில்லு என்று ஓரமாக நிற்க வைத்தார். என்னுடன் வந்தவர்கள் நகர்ந்து போனார்கள். எனக்கு மட்டும் பத்து நிமிட தரிசனம் கிடைத்தது. மனதுள் ஒரு கேள்வி. ஏன்? எனக்கு இது ஏன் என்று கேள்வி வந்தது. இந்த தரிசனம் நீ பெற்றது அல்ல. அவர் உனக்கு கொடுத்தது. உன் பலம் அல்ல. அவர் கருணை. என்ன காரணம் என்பதும் அவருக்கே தெரியும். ஒருவேளை உனக்கு பின்னால் தெரியவரலாம் என்ற எண்ணங்கள் எழுந்தன. அந்த தரிசனத்தை நான் இன்னமும் உள்ளே தேக்கி வைத்திருக்கிறேன். திருப்பதி வேங்கடாஜலபதி என் குல தெய்வம். நான் கண் குளிர பார்த்த அந்த நாளின் ஞாபகம் என்னுள் அழியாது இருக்கிறது. நான் அழுந்தி உட்கார்ந்த அந்த கருவறை படியின் விளிம்பு இன்னும் என் தொடையில் இருக்கிறது . அந்த நறுமணங்கள் என் மனதில் இருக்கின்றன.
ஓம் நமோ நாராயணா.
Selvakumar
Om namo Narayana