உ
யோகிராம் சுரத்குமார்
என் இனிய மகன் சூர்யாவிற்கு…
என் இனிய மகன் சூர்யாவிற்கு…
இனிய சூர்யா, நீ போராளி என்பது எனக்கு நன்றாகத் தெரியும். உன்னால் ஒரு சிறிய இடத்தில் உழன்று கொண்டு இருக்க முடியாது என்பதை நான் உன் சிறு வயதிலேயே உணர்ந்திருக்கிறேன். உட்கார்ந்து கணக்கு போடுவதை விட, விஞ்ஞானம் படிப்பதைவிட, சரித்திரம் மனப்பாடம் செய்வதை விட கடற்கரையில் கால் அகட்டி நின்று கை கட்டி இடையறாது கடலை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பாய். என்ன தெரிகிறது என்று உன்னை கேட்டபோது, எவ்வளவு பெரிசு இல்ல..என்று உன்னுடைய சிறுமையை உணர்ந்தாய். அப்பொழுதே தெரியும் உனக்கு வாழ்க்கை கொஞ்சம் கஷ்டமாக இருக்கும் என்று.
ஆனால் எனக்கு கிடைத்தது போல மோசமான தகப்பனாக நான் இல்லை. உன்னை புரிந்து கொண்டு உன்னை இறுக அணைத்துக் கொண்டேன். என் நெஞ்சுக்குள்ளே புதைந்து கொண்டாய். என் கை பிடித்து நிமிர்ந்து நின்றாய். பல நூறு கேள்விகள் கேட்டாய். பதில்களை கேட்டு விவாதித்தாய். கலை வெளிப்பாடே வாழ்க்கை. அதுவே பிழைப்பு. ஜீவிதம். அதுவே பொழுதுபோக்கு. அதுவே உயிர் மூச்சு என்று நீ திரைப்படத் துறையில் இறங்கியபோது உன் போராட்டம் கண்டு நான் கொஞ்சம் கலங்கியிருக்கிறேன். ஐய்யோ இந்தப் பிள்ளை ஜெயிக்க வேண்டுமே என்று தவித்திருக்கிறேன். ஆனால் அதற்கான நல்ல விஷயங்கள் உன்னை நெருங்கி வந்தபோது உன் பொறுமையும், முதிர்ச்சியும் , உன் புரிந்து கொள்ளும் சாமர்த்தியமும் என்னை வியக்க வைத்தன. நான் சொல்லிக் கொடுத்ததை விட நீ அதிகம் புரிந்து கொண்டிருக்கிறாய் என்ற நிம்மதியும் , நிச்சயம் ஜெயிப்பாய் என்ற நம்பிக்கையும் எனக்கு ஏற்பட்டது.
சூர்யா உனக்கு எதற்காக கடிதம் எழுதத் துவங்கினேன் தெரியுமா, நீ படிக்க வேண்டும் என்று. என் புத்தகங்களை நீ படித்திருக்கிறாய். இன்னும் படிக்க வேண்டியவைகள் இருக்கின்றன என்று எனக்குத் தெரியும். நான் வெறும் புத்தக படிப்பை மட்டும் சொல்லவில்லை. மனிதர்களை ஊன்றி கவனிப்பது ஒரு பெரிய படிப்பு. திருடனை, பொய்யனை, போலியை, கெட்டவனை, நல்லவனை, அமைதியானவனை, அப்பாவியை என்று பல்வேறு விதமான மனிதர்களை நாம் கவனிக்க வேண்டும். கவனித்ததினுடைய முக்கிய அம்சம் எதிரொலிக்காமல் இருப்பது. நீ திருடன் என்று சொல்ல சில வினாடிகள் போதும். ஆனால் அது சொல்லக் கூடாது. இவன் ஒரு பொய்யன் என்று புரிந்து கொள்ள சில வினாடி போதும். அதை உனக்கு தெரிந்ததாக காட்டிக் கொள்ளக் கூடாது. நானும் உன் கட்சிதான். உன்னைப் போல சாமர்த்தியம் உண்டா என்ற பூவைக் கூட அவன் மீது போடலாம். ஆனால் அந்தப் பொய்யனை புரிந்து கொண்ட பிறகு உன்னிடமிருந்து உன்னுடைய சிறிய பொய்களும் ஓடிவிட வேண்டும். புரிந்து கொண்டதற்கு அடையாளம் அதுதான். திருடனைப் பார்த்து திருடுவது என்பது திருட்டைப் பற்றி புரியாது போவதுதான் காரணம். பொய் சொல்லக் கூடாது என்று நான் பொய் சொல்லி விட்டு தண்டனை வாங்கி புரிந்து கொள்ளவில்லை. பொய் சொல்லி தண்டனை வாங்கியவர்களை பார்த்து , அவர்கள் புழுக்கத்தைப் பார்த்து பொய்யை என்னிடமிருந்து தவிர்த்தேன்.
காமத்தில் சிக்கித் தவிர்த்தவன், காசுக்கு பெண்ணை வாங்கியவன் அவன் ரத்தமும், தோலும் கெட்டுப் போனதை கவனித்து அதிலிருந்து தப்பித்துக் கொண்டேன். அப்படியானால் எது புத்தகம் சூர்யா… தவறு செய்த மனிதர்கள்தான் மிகப் பெரிய புத்தகம். தண்டிக்கப்பட்ட மனிதர்கள்தான் மிகப் பெரிய புத்தகம். தவறிழைத்து தண்டிக்கப்பட்டவர்களை விடவும் வெற்றி பெற்று அடக்கமாக இருக்கிறார்களே அவர்கள் மிகப் பெரிய புத்தகம். கிட்டத்தட்ட பகவத்கீதை.
அப்படி பல பேரை என்னால் சொல்ல முடியும். உனக்கும் எனக்கும் தெரிந்த நபர் நம் இரண்டு பேரின் கண் முன்னே வளர்ந்த நபர் இயக்குனர் ஷங்கர். அவர் வெற்றியும், அவர் இப்போது இருக்கின்ற அமைதியான நிலையும் நீ கற்றுக் கொள்ள வேண்டிய விஷயம். உலகம் அறிந்த ரஜினிகாந்த் கோடீஸ்வரர். ஆனால் போலித்தனமே இல்லை. அலட்டலே கிடையாது. சாதாரணமாக நம் வீட்டு ஹாலில் வந்துஅமர்ந்து பேசியவர்.
நம் நண்பர் பைலட் அருள்மணி, கண்டம் விட்டு கண்டம் பறப்பார். காலையில் சென்னை மாலையில் சிங்கப்பூர் , மறுநாள் ஆஸ்திரேலியா என்று வாழ்வார். ஆனால் பிரதோஷத்தின் போது வேட்டியும் துண்டுமாய் தரையில் உட்கார்ந்து கண்கள் பணிக்க சிவபுராணம் சொல்வார்.
அமைதியானவர்களைக் கண்டதாலேயே நான் அலட்டுபவர்களை மிக ஊன்றிப் பார்த்தேன். பயமே பதட்டத்தின் அடிப்படை. தன்னை நம்பாததே பயம். உன்னை நம்பு சூர்யா. காலம் உனக்கு தக்க நேரத்தில் உதவி செய்யும்.யார் தன்னை நம்ப முடியும். பழுதறக் கற்றவனே. யார் பழுதறக் கற்க முடியும். அமைதியானவனே. யார் அமைதியாய் இருக்க முடியும். அமைதியாய் இருப்பவரை அறிந்து கொள்பவனே.
படி படி சூர்யா. மனிதர்களைப் படி. நான் எழுதியதும் எழுதி ஜெயித்ததும் மனிதர்களைப் படித்ததாலேயே என்ற பெருமையுடன் சொல்லிக் கொள்கிறேன்.
வாழ்க நீ சூர்யா. வளர்க உன் திறம். தெளிக உன் மனம். திடம் கொள் சத் புருஷனாய்.
P.Govindaswamy
எந்த ஜென்ம தொடர்போ நாங்களும் உங்கள் பிள்ளைகளாக??