உ
யோகிராம் சுரத்குமார்
மெல்ல ஒரு அம்பெடுத்து
அன்று இரவு முழுவதும் எனக்குத் தூக்கம் பிடிக்கவேயில்லை. காரணம் என்னவென்று சொல்ல முடியவில்லை. துக்கம் உள்ளவனுக்குத்தான் தூக்கமில்லாது போகுமாம். எனக்கு என்ன துக்கம் தெரியவில்லை.
வெறும் இருட்டை வெறித்துப் பார்த்துக் கொண்டே நடுநிசி வரையில் இருந்தாயிற்று. ஆசிரமத்து மண் சுவரில் சாய்ந்து கண்கள் மூடிக் கொண்டபோது கனவுமில்லாமல் நனவும் இல்லாமல் சங்கிலித் தொடராயும், சில சமயம் இடைவெளி விட்டும் எண்ணங்கள் தோன்றின. இம்சித்தன. இறந்து போன அம்மா இடி முழக்கக் குரலில் சிரிப்பது தெளிவாய்க் கேட்டது.
‘ மாரீசா… எப்போது வரப்போகிறாய் மாரீசா… வா என்னிடம் சீக்கிரம் வா.” உரத்த குரலில் காடே நடுங்கும்படி அழைப்பதாய் தோன்றியது.
மறுபடி கண் மூட நெருப்புப் போல் சீறி வரும் அம்பு தெரிந்தது. நடு நெஞ்சு தைத்தது. தைத்த வேகத்தில் தூக்கியது. வீசி வானத்தில் வெகு உயரே எறிந்தது. எறிந்ததுதான் தெரியும். அம்பு எங்கே விழுந்தது தெரியவில்லை. ஒரு சமுத்திரக் கரையில் பெரிய பள்ளம் ஏற்படும்படி தடேரென்று விழுந்தது தெரியும். எத்தனை நாள் மயங்கிக் கிடந்தேன் என்பது தெரியவில்லை. நெஞ்சு ரணத்தில் கடல் நீர் பட்டு எரிந்தது தெரியும். எப்படி, எப்போது ஆறியது? தெரியவில்லை.
எழுந்து நின்றபோது அந்த அசுர சக்தி எழவேயில்லை. பறக்கும் எண்ணம் வரவில்லை. பாழ்படுத்தும் புத்தி எழவில்லை.
பதினாலு வயதுப் பையன் கறுப்பு நிறமாய்ச் சிவந்த உதடாய் பெரிய கண்களாய் வில் வளைத்து நின்றதே கண் முன் நிற்கிறது. அந்த மானிடன் அழகன். உடம்பால் மட்டும் அழகில்லை. அவன் உயிரே ஒர் அழகுடன் இருந்தது. ஒளி வீசியது.
“அதோ தாடகை.. அதோ தாடகை.. ” ரிஷி கத்த, மறு அம்பு அம்மாவை நோக்கி அனுப்பினான். தாக்கவில்லை. அவள் அகலக் காது கீறிப் போயிற்று. அம்மா ரௌத்ரமானாள். பாறை எடுத்து வீசினாள். வீசியதை உடைத்து, வீசப்போவதை தடுத்து, வீச, கீழே வட்டமானதையும் சிதற வைத்து ஒரே நேரம் மூன்று பாணங்களும் மூன்று வேலை செய்தன.
அம்மா வெறியானாள். பேரிரைச்சலுடன் அவனை நோக்கி ஓடினாள். நாலு தாவலில் அவனை நெருங்கி மிதித்து விடுவாள் என்று நினைத்தபோது அம்பு உருவி, வில் தொடுத்து நாணிழுத்து விட்டான். நேரே சரம் நெஞ்சு துளைத்து நிற்க வைத்தது. அம்மா அலறித் திரும்பினாள். மறுபடி புறப்பட்ட இடம் ஓடி வந்தாள். நெஞ்சு பிடித்துப் பையனைப் பார்த்தாள். விழுந்தாள். இறந்தாள்.
” யார் நீ ” கேட்கத் தான் கால் பெயர்த்து வைத்தேன்.
” அவன் மாரீசன். அவனும் ராட்சஸன். தாடகையின் மைந்தன். அவனையும் கொல்.”
” இல்லை. நான்… எனக்கு சண்டை போட விருப்பமில்லை. ”
நான் பயந்தேன்.
” கொல் ராமா… கொல் ” அவனை ரிஷி விரட்டியது.
என் தயக்கம் பையனுக்குப் புரிந்திருக்க வேண்டும். அச்சுறுத்தும் வகையில் உடம்பு உரசிச் சரங்கள் பாய்ந்தன.
” இல்லை.. நான்… நீ யார்?” நான் உளற ஓர் அம்பு நெஞ்சு குத்தி உயரத் தூக்கிச் சமுத்திரக் கரையில் போட்டது. அவனுக்கு என்னை விட ரிஷியின் கட்டளை முக்கியம்.
ஆனால் கொல்ல விருப்பமில்லை. சிறுவன் நாணை இன்னும் இழுத்திருப்பின் அம்பு நெஞ்சு துளைத்திருக்கும். போ… தள்ளிப் போ என்கிற விதமாய்ப் பூஜை அறைக்குள் விளையாடும் விஷமப் பிள்ளையை அப்பா துரத்தும் விதமாய் அப்படியே தூக்கிக் கடல் விளிம்பில் போட்டு விட்டான். காட்டில் பட்டிருந்தால் காயம் ஆறியிருக்காது. கற்பாறையில் போட்டிருந்தால் தலை சிதறியிருக்கும். அன்பாய், பிரியமாய் உனக்கு இங்கு என்ன வேலை போ என்று வெட்டுக்கிளியைப் பிடித்து வெளியே போடும் வண்ணமாய்… ஒரு பிரியமாய்…
அந்த அன்புதான் என்னை மாற்றிவிட்டதா? ராவணன் சகவாசமே வேண்டாம் என்று விரதம் இருக்க வைத்துவிட்டதா? ஆறும் வளமும் உள்ள இந்த இடத்தில் குடிசை போட்டு மரவுரி தரிக்க வைத்து விட்டதா? ஜடாமுடியும், மூடியகண்களுமாய் நாட்களை நகர வைத்து விட்டதா? இப்போது நான் நல்லதாய் ஏதும் செய்யவில்லை. கெடுதலும் செய்யவில்லை. சும்மா இருக்கிறேன்.
ராமா… ராமா… ராமா… மனசு அன்பில் அரற்றியது. யார் நீ… தசரதன் பிள்ளையா? இல்லை கோசலை மகனா? ரகுவம்ச ஓளியா? விசுவாமித்திரர் சீடனா? இல்லை சிவப்பாய் உன்னுடன் ஒரு சிறுவன் அவனுக்கு அண்ணனா நீ? இல்லை நீ வேறு யாரோ… வெறும் பையன் இல்லை நீ? மானுடம் இல்லை நீ? மனிதர்களுக்கு ராட்சஸர்களைக் கண்டால் பயம் வரும் பயத்தில் கோபம் வரும் கோபத்தில் முகம் கோணும். எதுவுமே இல்லையே. சிரித்து சிரித்து சரம் விட்டவனை நான் பார்த்ததேயில்லையே… யார் நீ? கேள்வி துளைத்தது.
மறுபடி உன்னைப் பார்பேனா… ராமா?
மறுபடி நீ சரம் தொடுக்கும் காட்சி காணக் கிடைக்காதா?
கிழக்கே மரப் பல்லி நொச் நொச் என்று கத்தியது.
என்ன… காணக் கிடைக்குமா? ராமனையா? அதிசயம் தான். என்னை கண்ட உடனே அம்பெடுத்து நிற்பானே.. உள்ளே சிரிப்பு பொங்கியது. சந்தோஷம் வந்தது. சந்தோஷம் பாட்டாயிற்று.
மெல்ல ஒரு அம்பெடுத்து
என்னைக் கொல்லுவாய் ராமா
மோகமெனும் ராட்சஸனை
மூளி செய்குவாய் ராமா…
ராட்சஸர்கள் மோகமுள்ளவர்கள். பெண், பொன் அதிகாரம், அந்தஸ்து சகலத்திலும் மோகமுள்ளவர்கள். ஆசை கூட இல்லை. மோகம். அளவுகடந்த ஆசை. யாருக்கெல்லாம் பேராசை இருக்கிறதோ.. அவனெல்லாம் ராட்சஸன் தான். எனக்கு உண்டா? இல்லையே.. பெண், பொன், அதிகாரம், அந்தஸ்து எந்த ஆசையுமில்லையே…
ஆனால் ராமா, உன்னைச் சந்திக்கும் ஆசை இருக்கிறது. வெறும் ஆசை இல்லை. அளவு கடந்த ஆசை. மோகம் இருக்கிறது. நீ சரம் தொடுத்து என்னைக் கொன்று போடமாட்டாயா என்று கூடத் தோன்றுகிறது. ராமா, இப்படி யாரும் உன்னைக் கேட்டிருக்கிறார்களா?
கொல்லுதற்கு முன்பு வந்து
சொன்னவருண்டோ? உந்தன்
கூர்ச்சரத்தைத் தாங்குதற்கு
கேட்டவருண்டோ; ராமா
மெல்ல ஒரு அம்பெடுத்து
என்னைக் கொல்லுவாய்
ஆனால் இதை யாரிடம் சொல்வது. ராமன் என்கிற மகத்தானவனைக் கண்டேன் என்று எவரிடம் பகிர்ந்து கொள்வது? பகிர்ந்தால் யாருக்கு புரியும்? அம்மாவுடனும், சகோதரனுடனும் நான் அடித்து கொட்டங்களைக் கேட்கிறார்கள். அதைச் சொல்வதில் என்ன லாபம்? சிறு வயதில் போட்ட களியாட்டங்களை தேவையில்லாமல் பேசச் சொல்கிறார்கள்.
வாசமிகு இளமையிலே
கேட்டதில்லையே நான்
வாய்திறந்த உன் பெயரை
சொன்னதில்லையே ராமா
ஆனால் மனசு ராமா ராமா என்று அரற்றுகிறது. இப்போது போய் நான் பழைய ஆட்டங்களை எப்படி பேசுவது? ஏன் பேச வேண்டும்.
கண் வெளிறி தலை நரைத்த
காலம் வந்ததே! நான்
கண்டவையும் கொண்டவையும்
கந்தலாச்சுதே ராமா.
ராட்சஸ பலம் காணோம் ராட்சஸ புத்தி காணோம். ராமன் சரம் பட்டதும் பறந்து விட்டது. ஏதோ சத்தம் வெளியே. யாரங்கே… என் பாட்டு சத்தம் யாருக்கோ கேட்டிருக்க வேண்டும். எதிர் அலட்டல் பலமாய் இருந்தது.
” நான் ராவணன் ”
” நான் மாரீசன் ”
இருள் கிழிந்து ஒளியாய் எதிரே ராவணன் தேர் தரை தொட்டது. விழிப்புமின்றி உறக்கமின்றி கனவும் இன்றி நனவுமின்றி தொடர்ந்தது அத்தனையும் கலைந்தது.
எழுந்து நின்றேன்.
” மாமா…”
” வா ராவணா ”
” நலமா?”
” நலம். ஆனால் நீ வந்திருக்கிறாயே”
” அதனால் என்ன… உறக்கத்திற்கு இடையூறாகிவிட்டதா? மாமா ”
” உட்கார். சொல். என்ன விஷயம்? ”
” மனசு கலக்கமாகிவிட்டது.” உட்கார்ந்தான்.
” உனக்குமா? ”
” ஏன், உங்களுக்கென்ன?”
” கெட்ட கனவு.”
” கள் அதிகம் குடித்திருப்பீர்கள்.”
” நான் இப்போது குடிப்பதில்லை. மருமகனே. ”
” நானும். ஆனால் குடிக்காமலேயே பித்தாகித் திரிகிறேன். ”
” சில சமயம் மனசு அப்படிப் பாடுபடுத்தும்”
” மனசு இல்லை. ஒருவன் மனைவி… ”
” பிறன் மனையா? ”
” பேரழகி. அவள் எப்படிப் பிறனுக்கு மனைவியாகலாம்? மலை போல இராவணன் இங்கே இருக்க… ”
இதுதான் ராட்சஸ குணம். உலகில் எதுவெல்லாம் உயர்வோ அதுவெல்லாம் தனக்கு வேண்டும் என்கிற பேராசை குணம். ராட்சஸ பிறப்பல்ல. வளர்ப்பு. பிறவியல்ல. தருவித்து கொண்ட குணம்.
” யார் அவள் என்று கேட்கவில்லையே மாமா”
” யார் அவள்? ”
” ஜானகி. ஜனகன் மகள்.”
” பிறன்மனையென்று சொல்லி விட்டுத் தகப்பன் பேர் செல்கிறாய்.”
” புருஷன் பெயர் சொல்ல எனக்கு விருப்பமில்லை. இருப்பினும் சொல்கிறேன். ராமன். தசரதன் மகன்.”
“ஹா…” என் நெஞ்சில் மறுபடி அம்பு தைத்தது.
” என்ன மாமா வியப்பு?”
” எனக்குத் தெரியும். ”
” “ஜானகியையா? ” குரலில் காமம் கொட்டியது.
” இல்லை. ராமனை. தசரதன் புதல்வனை… ”
” ஓ… உங்களை அடித்துக் கடற்கரையில் போட்டது. ”
” அவனே. அவன் யுத்தத்திலும் ஒரு கருணை இருந்தது ராவணா.”
” யுத்தத்தில் கருணையா…? இது என்ன வேடிக்கை? விளையாட்டு யுத்தமா? ”
” விளையாட்டுத்தான் அது. பொம்மை விசிறினது போல் தான் விசிறினான். ச்சீ போ… நீ கெட்ட பொம்மை என்கிற குழந்தை விளையாட்டுத்தான் செய்தான். அது ஒரு கருணை யுத்தம்.”
” கருணை யுத்தமென்றால்?” ராவணனுக்கு இது தெரிய நியாயமில்லை.
” அவனிடம் கோபம் இல்லை ராவணா. அதுதான் ராமனின் பலம். அவன் கோபம் வலிய வரவழைத்துக் கொண்ட கோபம். வளர்ப்புப் பிராணியை உம் என்று அதட்டுவார்களே… அப்படி ஒரு பாவம் ”
” மாமா. நான் உன்னிடம் வந்தது… ”
” ராமன் வீரம் பற்றி கேட்கத்தானே? சொல்கிறேன். எடுத்ததும், தொடுத்ததும், விட்டதும் அறியமுடியவில்லை. அறியும் முன்பாய் வீழ்ந்தாள். உடலைத் துளைத்த சரம் உயிரை அறுத்து எமலோகத்துக்கு அனுப்பி வெறும் உடலை உறைத்தது.”
” போதும். ”
” எது?”
” உன் ராம புகழ்ச்சி. ”
” வேறென்ன வேண்டும்? ”
” ஜானகி.”
” எதற்கு ராவணா? ஏன் இது?”
” தகப்பனால் துரத்தப்பட்டு, தாயால் வஞ்சிக்கப்பட்டு நாடிழந்து காட்டில் திரிபவனுக்கு மனைவி எதற்கு? அதுவும் பேரழகியாய் உள்ள ஜானகி எதற்கு? ”
” அது உன் வேலையல்ல…”
” பேரழகியைக் காட்டில் நடத்திக் கூட்டி வருபவன் புருஷனா?”
” யார் புருஷன்? ”
” எவனுக்கு அதிகாரமும், அந்தஸ்தும், படைபலமும், பணபலமும் பராக்கிரமமும்…”
” நான் வாழ்தல் பற்றி பேசுகிறேன். வாழ்தல் பணபலம், படைபலம் அல்ல ராவணா…”
” உன்னைப்போல பாஷாண்டியாய் இருப்பதா மாரீசா?”
” இது சுகம். இது விடுதலை. இது அமைதி. அமைதியே பௌருஷம். ”
” எனக்குத் தேவையில்லை. நான் வாழ துடிப்பவன். ”
” அதிகம் துடிக்கிறாய். துடிப்பு அதிகமாவது சீர்கேடு. ”
” எனக்கு ஜானகி வேண்டும். உதவிசெய். ”
” என்ன உதவி? ”
” ராமனைப் பிரித்து அழைத்துப் போ.”
” எவ்விதம்? ”
” மானாய்… ஸ்வர்ண நிறமுள்ள மானாய் மாறு. சீதையின் கவனம் இழு. சீதை வேண்டுவாள். ராமன் உன்னைத் துரத்துவான். கலைத்து வெகு தூரம் இழுத்துப் போ. அலுத்து உன்னைக் கொல்லும் போது ஹே சீதே, ஹே லட்சுமணா என்று கூவிச் செத்துப் போ.”
” பௌருஷம், பராக்கிரமம், படைபலம் என்று பேசினாய். இது என்ன நாடகம்? ”
” மானிடப் பதருடன் போர் எதற்கு? தந்திரம் போதும். ”
” நான் மறுத்தால்… ”
சட்டென்று என் சிகை பிடித்து ராவணன் உயரத் தூக்கினான். வானத்தில் எழுந்தான். ” வெட்டி நாலு திசையும் வீசுவேன். ” என்று கர்ஜித்தான்.
” விடு. விடு. ” நான் உதறினேன். இதுதான் கனவாய் வந்ததா. சிந்தித்தேன். இதனால்தான் உறக்கம் வர மறுத்ததா? இதனால்தான் இரவு வெறுமையில் கழிந்ததா? எனக்குக் காரணம் புரிந்தது. இது விதி.
இவன் கையால் சாவதைவிட ராமன் கையால் சாகலாம். கண்குளிரப் பார்த்துவிட்டுச சாகலாம். அப்போது பதினாலு வயசு. இப்போது இருபத்தி நாலா, இருபத்தி ஐந்தா… ராமன் வாலிபனாய் இருப்பான். அருகில் லட்சுமணன். சீதை… ஹா…என்ன தரிசனம்… இப்படி ஒரு பாக்கியம் உண்டா? ராமா, நீ யார்? லட்சுமணன் அண்ணனா? ஜானகியின் கணவனா? இல்லை… நீ வேறு ஏதோ… ”
ராவணன் விமானம் தண்ட காரண்யம் நோக்கிப் புறப்பட்டது. வாழைத் தோப்பில் இறங்கியது. ” அதோ சீதை ” ராவணன் பரவசமானன். நான் வணங்கினேன்.
” போ. போ. மானாய் உருவெடு. ”
மனசு புரட்டினேன். மானானேன். குதித்தேன். ஓடினேன். புல் கௌவினேன். தாடை அசைத்துத் தின்றேன். மருண்டு என் ராமனைப் பார்த்தேன். துள்ளினேன். ஓடினேன். ராமா… ராமா.. அருகே ஓடி அவன் பாதம் பட்ட மண்ணை முகர்ந்தேன். நிமிர்ந்தேன். அவன் குரல்… காது மடக்கிக் கேட்டேன்.
சீதை சிரிப்பு… லட்சுமணன் அமைதி… ராமனின் மந்தகாசம்… மறுபடி.. மறுபடி… மறுபடி… ராமா என் ராமா…
சீதை கைக்காட்ட ராமன் எழுந்தான். துரத்தினான். கை எட்டிப் பிடிக்க காத தூரம் ஓடினேன். காத தூரம் வந்து களைத்தவன் கையெட்டும் தூரத்தில் உலவினேன்.
இதோ என்று தாவினேன். இடம் மாறினேன்.
நான் மாறின வேகம் மானில்லை என்பது புரிந்துவிட்டது. உறுத்துப் பார்த்தான். உள்ளே மெல்லிய கோபம் கண்டேன்.
சரம் எடுத்தான். தொடுத்தான். இழுத்தான். நின்று தலை தூக்கி நெஞ்சு நிமிர்த்தி நின்றேன். ராமன் உறுத்துப் பார்த்தான்.
நோகுமெனக் கருணையுடன்
பார்ப்பதென்னவோ… இந்த
நொய்மை மிகு வாழ்க்கையிலே
சாரமுள்ளதோ ராமா…
விடு.. சரம் விடுதலை..ராம சரம் நெஞ்சு தைத்தது. உயிர் சுருண்டு வலித்தது. துடித்தது.
ராவணன் சொன்னது ஞாபகம் வந்தது. ” ஹே சீதே.. ஹே லட்சுமணா… ”
குரல் நாளம் கூவலில் அறுபட்டது.
ஹே ராமா… என்று கூவியிருக்க வேண்டும். வரவில்லை. இத்தனை நாள் கூவாமல் நெஞ்சிலே வைத்துக் கொண்டதால் ராமநாமம் நெஞ்சிலே நின்று விட்டது. மனசு ராமா ராமா என்று அழுதது. மான் உடல் தரை சரிய என்னுடம்பு வெடித்து வெளிப்பட்டது.
ராமன் திகைப்புத் தெரிந்தது.
அருகே வருவது தெரிந்தது.
என் கண்கள் மயங்கின. சிரமத்துடன் விழித்தேன். ராமா… இது ராமனில்லை. இது வேறு. இது யார்? எனக்குத் தெரிந்துவிட்டது. இது யார்? எனக்குப் புரிந்துவிட்டது. அங்கிங்கெனாது எங்கும் பிரகாசமாய் ஆனந்த பூர்த்தியாகி… என் கரங்கள் கூப்பின.
“நானிருக்க உனையறியும்
அறம் வளராதே ராமா.
அறம் வளர அறம் வளர
எனை அழிப்பாயே ராமா. “
என்று உயிர் பிரிந்தது. நான் அழிந்தேன்
இனி எனக்கு தூக்கம் என்பதும் இல்லை. துக்கம் என்பதும் இல்லை.
செந்தில் ஆறுமுகம்
நானிருக்க உனையறியும் அறம் வளராதே
அறம் வளர அறம் வளர எனை அழிப்பாயே .. ராமா ..