உ
யோகி ராம்சுரத்குமார்
முயற்சித்தால் முடியும்
[கடலோரக் குருவிகள் புத்தகத்திலிருந்து …]
“உனக்கொரு கதை சொல்கிறேன் கேள் மீனாட்சி. தத்துவத்தின் கடுமையைக் கதைகளின் எளிமை குறைக்கும். உனக்கு நான் ஒரு கதை சொல்லட்டுமா…”
மீனாட்சி சரியென்று தலையசைத்தாள். மாதவனும் கேட்கத் துவங்கினான்.
“கடலோரத்துப் புதர் ஒன்றில் இரண்டு குருவிகள் கூடு அமைத்து, குடித்தனம் செய்தன. இரண்டு முட்டைகள் இட்டன. கருத்தோடு பேணி வந்தன.
ஒருநாள் கடல் பொங்கி ஆடியதில், இரண்டு முட்டைகளும் நீருக்குள் போய்விட்டன. குருவிகள் பதறித் தவித்தன. ஒரு குருவி விசும்பி அழ, மறுகுருவி சொல்லிற்று.
எதற்கு அழுகிறாய்? உனக்கு அந்த முட்டைகள் வேண்டும். அவ்வளவுதானே. நான் எடுத்துத் தருகிறேன்’ என்று வீரம் பேசியது.
‘எப்படி முடியும்?’ மறுகுருவி கேட்டது.
‘உழைத்தால் முடியும். முட்டைகள் கடலுக்குள்தானே இருக்க வேண்டும். கடல் நீரை மறுபக்கம் இறைத்துவிட்டால் முட்டைகள் தெரியும் அல்லவா! அப்போது அவற்றை நாம் எடுத்துக்கொள்ளலாம் அல்லவா!” உறுதியாய்ப் பேசியது.
‘முடியுமா?” மறுகுருவி சந்தேகம் எழுப்பியது.
‘முயற்சித்தால் முடியும்!’ இறுமாப்போடு அந்தக் குருவி பேசியது. இரண்டு குருவிகளும் உயரக் கிளம்பின. தங்கள் அலகால் கடல்நீரை முகர்ந்து மறுபுறம் கொட்டின.
இரவு பகல் பாராமல் அலைந்தன. முட்டைகள் கிடைத்தே ஆக வேண்டுமென்ற வெறியில் உழைத்தன.
பசி எல்லாம் மறந்து நீரை அலகால் முகர்ந்து மறுகரையில் ஊற்றிக் கொண்டிருந்தன.
அந்தக் கடற்கரை வழியே ஒரு முனிவன் நடந்து வந்தான் இடதும் வலதுமாய் இந்தக் குருவிகள் அலைவதைப் பார்த்தான். தன் மனோசக்தியை அவற்றுக்குள் செலுத்தி, அவற்றின் நோக்கம் அறிந்துகொண்டான். சிரித்தான்.
அதே மனோசக்தியால் அந்த முட்டைகளைக் கண்டு பிடித்து நீரிலிருந்து அவற்றை மிருதுவாய் எடுத்துக் கரையில் வைத்தான். தன் வழியே நடந்து போனான்.
குருவிகள் முட்டையைப் பார்த்துத் திகைந்தன. துள்ளிப் பறந்தன.
‘நான் சொன்னது நடந்து விட்டது பார். உழைத்தால் உயரலாம். முயற்சித்தால் முடியலாம். நாம் நீர் முகர்ந்து அந்தக் கரை சேர்த்ததில் கடல் வற்றி முட்டைகள் வெளியே வந்துவிட்டன பார்’ என்று முதல் குருவி கூவிற்று.
மறுகுருவி ‘ஆமாம்.ஆமாம்’ என்றது.
“மீனாட்சி, அந்தக்குருவிகள் முயற்சி செய்திருக்காவிடில் முட்டைகள் கிடைத்திருக்காது. முட்டைகள் கிடைத்ததற்கு முயற்சி மட்டுமே காரணமில்லை.
இது ரொம்ப சூட்சுமமான கதை மீனாட்சி, யோசிக்க யோசிக்க எத்தனையோ விஷயங்கள் இதிலிருந்து புரியும். கண்மூடி இந்தக் கதைக்குள்ளேயே இரு”
மாதவனின் அப்பா மீனாட்சியின் தலையில் கை வைத்து அழுத்தினாார். நெற்றியில் புறங்கையால் வருடினார். மூக்கில் கன்னங்களில், விரல்களால் வருடினார்.
மீனாட்சி இப்போது பயமில்லாமல் தன்னுள் ஆழ்ந்தாள்.
Post your comment