உ
யோகி ராம்சுரத்குமார்
உள்வட்டம் (Inner Circle)
டாக்டர் ரங்கபாஷ்யம் மருத்துவமனையிலிருந்து திருவண்ணாமலை நோக்கி ஒரு பெரிய வேனில் அலுங்காமல், நலுங்காமல் அவரை அழைத்துப் போகிறார்கள்.
எல்லா மருத்துவ முயற்சிகளையும் கைவிட்டு விட்டு அங்கே அவர் விருப்பப்படி அழைத்துப் போகிறார்கள் என்று கேள்விப்பட்டதும், பலபேர் அந்த வேனோடு கிளம்பத் தயாரானார்கள்.
அவர் அருளால் எனக்குக் கிடைத்த கார் இருந்தது. நானும் அந்த வேன் பின்னே போகவேண்டும் என்று ஆசைப்பட்டேன். நான் உள்ளே கவனித்து பார்த்தபோது இது வெறும் உணர்வுப் பெருக்கேயன்றி நெல் முனையளவும் உதவி செய்யும் விஷயமில்லை என்று புரிந்தது.
அவருக்கு அண்மையில் போகாமல் முற்றிலும் விலகி இருப்பதே சிறந்த உதவி என்று புரிந்தது. அவர் மெல்ல மெல்ல தேறுவதும் மறுபடியும் துவளுவதுமாய் சில நாட்கள் கழிந்தன.
இடையறாது இடையறாது உள்ளுக்குள் ஒரு பிரார்த்தனை துன்பப்படக்கூடாது என்று ஓடிக்கொண்டிருந்தது. ஒட்டுமொத்தமாய் அவர் வாழ்க்கை ஞாபகம் வந்தது. எத்தனை பேருக்கு எவ்வளவு உதவி. எவ்வளவு ஆறுதலான வார்த்தைகள். எவ்வளவு சூட்சுமமான பேச்சுக்கள்.
உணவு உண்பதை மட்டுமே சிலாகித்துப் பேசக்கூடிய ஒரு நண்பர் அவரைத் தேடிவர அவரிடம் எந்த ஹோட்டலில் என்ன கிடைக்கும். என்ன சட்னி நன்றாக இருக்கும். எதற்கு எதைத் தொட்டுக் கொள்ளலாம் என்று மிகச் சந்தோஷமாகப் பேசுவார்.
உப்பு போட மறந்துவிட்ட ஒரு உணவை எந்தவித குறையும் சொல்லாமல் மௌனமாய் உண்டுவிட்டு பேசாமல் அமர்ந்திருப்பார். அடாடா… உப்பே போடவில்லையே என்றால், ஆமாம் உப்பே போடவில்லை என்று அவரும் வியப்பார்.
உணவு ருசித்து உண்பதிலிருந்து வெகுதூரம் அவர் இருந்ததை நான் உணர்ந்திருக்கிறேன்.
காவி என்றால் இந்தப் பிச்சைக்காரனுக்குப் பயம். இந்தப் பிச்சைக்காரன் காவி உடுத்துவதே இல்லை என்று அவர் பேசுவதை கேட்டிருக்கிறேன்.
அகந்தையைத் துறப்பதே துறவு மற்றதெல்லாம் வெறும் வெளி வேடங்கள் என்று எனக்கு சொல்லாமல் சொல்லித்தரப்பட்டது.
எதிர்பார்த்திருந்தபடி அவர் இப்பூவுலகை நீத்த செய்தியும் வந்தது. நானும், என் மனைவி சாந்தாவும் திருவண்ணாமலைக்கு காரில் பயணப்பட்டோம்.
செய்தியைக் கேள்விப்பட்ட பிறகு அழுகை வரவில்லை. மெல்லிய அதிர்ச்சி இருந்தது. இத்தனை வேதனை தேவையா பகவானே என்ற கேவல் இருந்தன. யார் யார் வலியையோ நீ வாங்கி அனுபவித்தாயா என்று பச்சாதாபம் எழுந்தது.
அவர் என்னோடு பேசியதும், சிரித்ததுமான ஞாபகங்கள் துண்டுதுண்டாய் வந்தன. திரு. மணி அவர்கள் கைப்பிடித்து ஆசிரம வாசலில் வரவேற்றார். பகவான் சித்தியாகிவிட்டார் என்று மெல்லிய குரலில் கூறினார்.
வெகுநாட்கள் பகவானுக்கு அருகே நெருங்கியிருந்த அந்த நண்பரின் மன நடுக்கம், உள்ளார்ந்த வேதனை எனக்குப் புரிந்தது.
பெரிய ஹாலில் பகவான் யோகிராம்சுரத்குமார் அவர்களை சாய்ந்த ஒரு நாற்காலியில் வைத்து மாலையிட்டிருந்தார்கள். எப்போது போனாலும் தன்னுடைய பாயை வலப்பக்கம் விரித்து இது பாலகுமாரனுடைய இடம் என்று அவர் சொன்னது நினைவுக்கு வந்தது.
அப்படி அமரும் போதெல்லாம் இவரை வேறொரு கோணத்தில் பார்க்க வேண்டுமே, சற்று விலகி நின்று இவருடைய அழகை ரசிக்க வேண்டுமே என்று நினைப்பேன்.
மிக அருகில் இருப்பதால் அவரை முழுமையாக தரிசிக்க முடியவில்லையோ என்று நினைப்பேன். எல்லாக் கோணங்களிலும் பார்க்கப்பட வேண்டியவர் இவர் என்ற நினைப்பு எனக்குள் உண்டு.
இப்போது பத்தடி தொலைவிலிருந்து அவர் சாய்ந்திருந்ததைப் பார்த்து நான் கைகூப்பினேன். உள்ளிருந்து அழுகை பீறிட்டுப் பொங்கி அலறலாக வந்தது. ஏதோவொரு துக்கம், ஏதோவொரு வேதனை ஒன்றும் புரியாத ஒரு நெஞ்சுப் பிழியல் தாக்கிற்று.
“இதுவொரு இன்னர் சர்க்கிள். நாம் போன ஜென்மத்தில் நெருக்கமாக இருந்தோம். மறுஜென்மத்திலும் நெருக்கமாக இருப்போம்” என்பதாய் அவர் கூறியவைகள் ஞாபகத்திற்கு வந்தன.
இனி முடிந்துவிட்டது. இனி அடுத்தது எங்கே பார்க்கப் போகிறோம். எப்படிப் பார்க்கப் போகிறோம் என்ற எண்ணம் வந்தது. அந்த எண்ணம் எழும்போதே உள்ளுக்குள் சிரிப்பு வந்தது. அதற்குப் பிறகு நான் அழவேயில்லை. வெகு நிச்சயமாய், வெகுதிடமாய் அவரை வேறொரு நிலையில் சந்திப்பேன் என்று தெரிந்தது.
இனி, குரு என்பவர் திருவண்ணாமலையில் இல்லை. அவர் எங்கும் இருக்கிறார். எல்லாமுமாய் இருக்கிறார். மூன்று முறை என் பெயரைச் சொல்லி அழை போதும். நான் நிச்சயம் உனக்கு உதவி செய்ய ஓடோடி வருவேன் என்று பல நண்பர்களிடமும், பலமுறை அவர் உறுதிபடச் சொல்லியிருக்கிறார்.
மகான்கள் வாக்கு பொய்ப்பதில்லை. தோளில் சுமந்து, ஆஸ்ரமம் வலம் வந்து குழியில் இறக்கிய குருவை நெஞ்சில் சுமந்துகொண்டு வீடு திரும்பினோம்.
எங்கெல்லாம் என் குருவின் நாமம் சொல்லப்படுகிறதோ, அங்கெல்லாம் என் குரு இருக்கிறார் என்பது ஒரு உண்மை.