[ஸ்ரீகிருஷ்ணாவதாரம் பாகம் 1 புத்தகத்திலிருந்து …]

மேகங்கள் அதிவேகமாக திரண்டன. கரும் இருட்டு பிருந்தாவனத்தை சூழ்ந்து கொண்டது. காற்று வேகமாக அடித்தது. சுழன்று அடித்து மரங்களை பிய்த்துப் போட்டது. பசுக்களுக்கு நடுவே மரங்கள் வந்து விழுந்தது.

நந்தகோபர் கவலையானார். ஆயர்பாடி பெரியவர்கள் நந்தகோபரை பயத்தோடு பார்த்தார்கள். ஸ்ரீகிருஷ்ணர் கோவர்த்தனகிரிக்கு அருகே போய் காலால் மண்ணை அழுத்த கோவர்த்தனகிரி இடைவெளிவிட்டது.

மேலே எழும்பிற்று. ஸ்ரீ கிருஷ்ணர் குனிந்து தன் இடக்கையால் கோவர்த்தனகிரியை தூக்கினார். கோவர்த்தனகிரி உயர்ந்தது. புஜங்களை உயர்த்தி இன்னும் தூக்கினார்.

கோவர்த்தனகிரியின் நடு இடத்திற்கு போனார். இன்னும் மலையை உயர்த்தினார். உயரமான ஸ்ரீ கிருஷ்ணர் இன்னும் உயர்ந்தார். அவர் சுண்டுவிரல் மையத்தில் கோவர்த்தனகிரி நின்று கொண்டிருந்தது.

அந்த மலைக்கு அடியே முதலில் கன்றுகள் ஓடிவந்தன. பிறகு பசுக்கள் ஓடி வந்தன. பிறகு ஆயர்பாடி குழந்தைகளும், பெண்களும் ஓடிவந்தார்கள். பிறகு ஆயர்கள் வந்தார்கள்.

நந்தகோபர் நனைந்தபடி கடைசியாக மலையின் விளிம்புக்குள் வந்து நின்று கொண்டார்.

காற்று வேகமாக சுழன்று அடித்தது. மழை இன்னும் வலுத்தது. இடித்துப் பெய்தது. மிகப் பெரிய இருட்டு சூழ்ந்தது. சகலரும் மலையின் கீழ் அமர்ந்து கொண்டார்கள். கண் மூடினார்கள். மெல்ல அயர்ந்தார்கள்.

தொடர்ந்து இடித்து, மின்னிட, விடாது மழை பெய்து கொண்டிருந்தது. ஒரு சொட்டு நீர் கூட உள்ளே வரவில்லை. சுழல்காற்று உள்ளே புக முடியவில்லை. எந்த அசம்பாவிதமும் யாருக்கும் ஏற்படவில்லை. எல்லோரையும் விலக்கி நந்தகோபர் ஸ்ரீகிருஷ்ணருக்கு அருகே போனார்.

யோக நிலையில், சுண்டு விரல் நுனியில் மலையை தாங்கும் ஸ்ரீகிருஷ்ணரின் வடிவைப் பார்த்து வியந்தார்.

“உன்னைப் பற்றி சந்தேகம் கொண்டதற்கு மன்னித்துக்கொள் கிருஷ்ணா. உன்னை சாதாரண மானுடன், என் மகன் என்று நினைத்ததற்காக நான் வருந்துகின்றேன். மீண்டும் உன் மன்னிப்பை கோருகின்றேன்.

ஸ்ரீகிருஷ்ணா கடவுள் என்பது, பிரபஞ்சத்தின் மைய சக்தி, அந்த மைய சக்தி ஆதிசேஷன். எந்த சக்தியை விளக்க முடியாதோ, விலக்க முடியாதோ அதன் மீது படுத்துக் கொண்டிருக்கிறது. சேஷம் என்றால் மீதியிருப்பது. எது ஆதியின் மீதியோ, எது ஆரம்பத்தின் மீதியோ, எந்த மீதியை பற்றி எதுவும் அறிந்து கொள்ள முடியாதோ, அந்த மீதியின் நடுவில் அயர்ந்தபடி இருக்கின்ற மகா சக்திக்கு கடவுள் என்று பெயர்.

அந்த கறுப்புநிறச் சக்திதான் இந்த பிரபஞ்சத்தினுடைய இயக்கத்தைக் கவனித்துக் கொண்டிருக்கிறது. உறங்குவது போலவும், உறங்காமல் சகலத்தையும் அதிகாரம் செய்துக் கொண்டிருக்கிறது.

அதற்கு எதிராக எதுவும் இல்லை. அதற்கு இணையாக எதுவும் இல்லை. அந்த சக்தி பேசுவது இல்லை. தன்னை விளம்பரப்படுத்திக் கொள்வதில்லை. தன்னைப் பற்றி புகழ்ந்து கொள்வதில்லை. மிக அமைதியாக அரை தூக்கத்தில் இருக்கின்ற ஒரு மானுடரைப் போல மிகுந்த வாத்ஸல்யத்தோடு, மிகுந்த பிரியத்தோடு இந்த பிரபஞ்சத்தின் எல்லா பகுதிகளையும் மிக உன்னிப்பாய் கவனித்துக் கொண்டிருக்கிறது.

ஸ்ரீகிருஷ்ணா கடவுள் என்ற சக்தி கறுப்பு வடிவம்தானா. எந்த உருவமற்ற ஒரு இடம் தானா. ஏன் அது எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். அது ஸ்ரீகிருஷ்ணராக இருக்கலாம். பலராமராக இருக்கலாம். நரசிம்மராக இருக்கலாம். வாமனராக இருக்கலாம்.

ஸ்ரீகிருஷ்ணா அந்த சக்தியினுடைய மனித வடிவம் நீ என்பதை நான் புரிந்து கொண்டேன். வேறு யாரால் ஒரு மலையை இப்படி தூக்க முடியும்.

மிகப்பெரிய சக்தியினுடைய ஆளுமையை அருகே இருந்து, நான் தரிசித்துக் கொண்டிருக்கிறேன். அந்த சக்திக்கு தகப்பன் என்ற பட்டப் பெயரோடு, அந்த சக்தியின் காலடியில் நின்று, தியானித்துக் கொண்டிருக்கிறேன்.

நான் தகப்பன் அல்ல, நீதான் தகப்பன். நீதான் தாய். நீதானே இந்த பிரபஞ்சத்தின் அரசன். நீ இல்லாமல் எதுவும் இல்லை. உன்னைப் புரிந்து கொண்டவர்கள் அனேகம் பேர் இருக்கும் போதே, உன்னைப் புரிந்து கொள்ளாதவர்களும் இருப்பார்கள். அப்படி புரிந்து கொள்ளாதவர்கள் இருப்பதால்தான் புரிந்து கொண்டவர்களின் மகிமை வெளியே தெரிய வருகிறது.

அந்த அந்தணர்கள் உன்னுடைய மகிமையை புரிந்து கொள்ளவில்லை. அதேபோல இந்த இந்திரனும் நீ யார் என்று தெரிந்து கொள்ளவில்லை. சக்தி முழுவதையும் வீணாக்கி உன்னை சரணடையப் போகிறான் என்று எனக்குத் தெள்ளத் தெளிவாக தெரிந்தது.

ஸ்ரீ கிருஷ்ணா, நான் உன்னை சரணடையப் போவதில்லை. நான் என்று ஒன்று இருந்தால்தானே சரண் என்ற வார்த்தை. நானே இங்கு இல்லை. உனக்குள் என்னை நான் கரைத்துவிட்டேன். கண்ணெதிரே இப்படிப்பட்ட ஒரு அற்புதம் காணும் கடவுளுக்குள் நான் என்னை இழந்துவிட்டேன்.

நான் வெறும் பொம்மை. வெறும் கருவி. வெறும் முரட்டு கம்பு. நீ என்னை இயக்குகிறாய். நான் இயங்குகிறேன்.

ஸ்ரீகிருஷ்ணா, ஒன்று புரிகிறது. நீ இங்கு ஜனித்தது, கடவுள் என்ற விஷயத்தை நிலைநாட்டுவதற்கே.

இருக்கிறாரா இல்லையா என்ற சந்தேகங்கள் எப்போது எழுகிறதோ அப்போது இருக்கிறேன் என்று வருகிறாய் என்று நினைக்கிறேன். கடவுள் இருந்தால் என்னை ஜெயித்திருப்பான் அல்லவா என்று எப்பொழுது கொக்கரிப்புகள் ஏற்படுகிறதோ. யாரடாது கடவுள் நானே கடவுள் என்று மனிதர்கள் எப்போது புலம்ப துவங்குகிறார்களோ அப்பொழுது நீ ஜனிக்கிறாய். உன்னை நிறுத்துகிறாய். அவதாரம் என்பது மனிதருக்கு கடவுள் தன்னை அறிவுறுத்துவது. அறியாமையை அகற்றுவது. சத்தியத்தை வெளிப்படுத்துவது.