உ
யோகிராம் சுரத்குமார்
பெண் – பகுதி 2
[சக்தி புத்தகத்திலிருந்து …]
“ஆக… நெருப்பு நாகரிகம்தான் பாதுகாப்புக்கு அடிப்படையாக இருந்ததா”
“ஆமாம். அப்படித்தான் இருந்திருக்கக்கூடும். நெருப்பு மனிதனுக்கு அறிமுகமானபோது வாழ்க்கையின் பல்வேறு விஷயங்கள் மாறிவிட்டன. கொடும் விலங்குகள், துரத்தித் துரத்தி தாக்கிய விலங்குகள் அருகே வரவில்லை. அந்தக் கொடும் விலங்குகளை இவர்கள் போய் தாக்கினார்கள். நெருப்பால் விரட்டினார்கள். இப்படி நெருப்பை வைத்துக் கொண்டு மிரட்ட வேறு எந்த இனத்திற்கும் தெரியவில்லை.
நெருப்பு கண்டுபிடித்தது போல ஆயுதங்களும் கண்டுபிடித்தார்கள். கூர்மையான கற்களும், மரக்கிளைகளும் மிகப்பெரிய மிருகங்களை தாக்க அவர்களுக்கு உதவின. அதுவும் தவிர மிருகங்கள் ஓய்வெடுக்கும் நேரம் பார்த்து தாக்குவதற்கும் இவர்களுக்கு தெரிந்தது. தந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. தந்திரங்கள் அறியப்பட்ட போது பெண் பின்வாங்கினாள். ஆண் முன்னேறினான்.
நெருப்பு ஒரு தந்திரம். ஆயுதம் ஒரு தந்திரம். படையெடுப்பு தந்திரம் என்று வந்தபோது ஆணின் தந்திரங்கள் பயன்பட்டன. பெண் அமைதியாய் தன் குழந்தைகளோடு பின்னுக்கு நகர்ந்து போனாள்.
ஆனாலும் அவள் வேகம் குறையவில்லை. அவளால் வெகு எளிதில் அழிக்க முடியும். அந்த கோபத்தை உடையவள் பெண் என்று ஆணுக்கு தெரிய, ஆண் மெல்ல மெல்ல சுமைகளை சுமத்த துவங்கினான். அவள் வேகத்தை குறைப்பதற்காக அவளுடைய குணங்கள் இன்னின்னவை என்று அவளுக்கு விளக்கத் துவங்கினான்.
மொழி என்கிற நாகரிகம் வந்தபோது குடும்பம் என்கிற நாகரீகம் வந்தபோது நிலங்கள் நம்முடையவை என்று பிரிவு பட்டபோது இந்த தன்மைகள் அதிகரித்தன. பெண்களுக்கு கட்டுப்பாடுகள் அதிகமாயின.
இந்த நிலம் என்னுடைய நிலம். நான் மரணமடைந்த பிறகு எனக்கு பிறந்தவனே இந்த நிலத்திற்கு உரியவன். எனக்கு பிறந்தவன் இவன் தான் என்று ஊரும் நானும் அறிய இவள் என்னை விட்டு எங்கேயும் நீங்காதிருக்க வேண்டும். நான் சொல்லும் வட்டத்திற்குள் அமர்ந்திருக்க வேண்டும். நான் கட்டிய கோட்டைக்குள் இவள் குடிபுக வேண்டும். வெளியே வந்தால் இவளுடைய மகன் என்னுடையவனா என்ற கேள்வி எனக்கும் என் ஊராருக்கும் எழுந்துவிடும் என்ற விதிமுறைகள் பலப் பட்டன.
உயிர் வாழ தாக்க வேண்டிய அவசியமும், குலத்தை அழிவிலிருந்து மீட்க வேண்டிய அவசியமும் பெண்ணுக்கு இல்லாது போக, அவள் இன்னும் பின்னடைந்தாள். விதிமுறைகளை ஏற்றுக்கொண்டாள்.
பெண் ஒரு சூறாவளி காற்று. அதை இந்த சமுதாயம் ஒரு குப்பியில் அடைத்து வைத்தது. பெண் ஒரு பெரு நெருப்பு. அதை இந்த சமுதாயம் தீப்பந்தம் ஆக்கியது. பெண் காட்டாற்று வெள்ளம். குறுக்கே அணைகள் பல கட்டினார்கள். நதியை நிதானமாக்கினார்கள். தேக்கி வைத்தார்கள்.
சற்று உடைந்த குரலில் வைத்தீஸ்வரர் பேச பண்டிதர் அவரையே கூர்மையாய் பார்த்தபடி “நீங்கள் வருத்தப்படுவது போல் தெரிகிறதே” என்று வினவினார்.
“ஒருவகையில் ஆமாம், ஒரு வகையில் இல்லை. பெண் என்கிற மகத்தான சக்தியை கட்டிப் போட்டதன் மூலம் வாழ்க்கைத்தடம் மாறிவிட்டது. ஆனாலும் மனிதகுலத்திற்கு அழிவு நேரும் போதெல்லாம் பெண்ணினுடைய சக்திதான் காப்பாற்றும் என்பது உண்மை.
ஏனெனில், வலி தாங்கும் சக்தியும், வாழ வேண்டும் என்ற ஆசையும், தன் குலத்தை தன்னுயிரை ஈந்தாவது காக்க வேண்டுமென்ற எண்ணமும் பெண்ணுக்கு இன்னும் இருக்கின்றன. ஆணுக்கு இவை குறைவு.
உலகம் பாதுகாப்பானதாக விளங்குகிற வரையில் பெண் பின்னடைந்துதான் இருப்பாள். மனித குலத்திற்கு பேரழிவு வரும் இனி மனிதகுலம் இல்லாது போகும் என்று வருகிறபோது மறுபடியும் பெண் சீறி எழுந்திருப்பாள். ஆண்களை பின்னுக்கு போகச்சொல்லி எந்த சக்தி அழிக்க முற்படுகிறதோ அதனோடு போராடுவாள்.”
[தொடரும்…]
Chandran
Arumai