உ
யோகிராம் சுரத்குமார்
திகழ் சக்கரம் – பகுதி 1
[காதல் அரங்கம் புத்தகத்திலிருந்து …]
குருவின் அண்மை என்பது பூர்வ ஜென்ம வாசனை. முற்பிறப்பில் ஏற்பட்ட தொடர்பு. ஒரு குருவை பல ஜென்மங்களாக தொடர்ந்து, நமஸ்கரித்து, ஆராதித்து, ஆனந்தமாய் கொண்டாடி வந்தவர்களுக்குத்தான் இப்பிறப்பில் திடுமென்று தொடர்பு ஏற்படும். வில்லிதாசன் இராமானுஜருடைய பெயரைக்கூட தெரிந்து வைத்திருக்கவில்லை. ராமானுஜர் என்ன செய்கிறார் என்று அவனுக்கு தெரியவில்லை. ராமானுஜர் முக்கியமானவரா, அல்லரா என்பது பற்றி அவனுக்கு அபிப்ராயம் ஏதுமில்லை. அவன் பொன்னாச்சியின் அழகிலேயே கட்டுண்டு கிடந்தவன். ஆயினும் ராமானுஜர் வலியப்போய் அவனை ஆட்கொண்டார். ‘என்னிடம் வா, என்னிடம் வா’ என்று அவனுக்காக ஏங்கினார். குரு, சிஷ்யனை அழைத்தார். அருகில் வைத்துக் கொண்டார். அவனுக்கு நல்லவைகளை செய்தார். அவன் பக்குவப்பட்ட போது அவனை அழைத்துக்கொண்டு போய் இறை தரிசனம் காட்டினார்.
குருவின் அண்மை ஒருவனுக்கு கிடைத்தால், அதைவிட மிகப்பெரிய பொக்கிஷம் உலகத்தில் எதுவும் இல்லை. செல்வத்தை விட, நல்ல மனையாளை விட, உயர்ந்த குலத்தை விட, அகன்ற படிப்பை, ஆழமான தத்துவ ஞானங்களை விட, குருவின் அண்மை, குருவின் நட்பு, குருவினோடு ஏற்படுகின்ற உறவு மிகப் பெரியது. இவை எல்லாவற்றையும், கீர்த்தியையும், ஞானத்தையும், புலமையையும், நல்ல வாழ்க்கையையும், ஆரோக்கியமான உடம்பையும், நீண்ட ஆயுளையும் குருவினுடைய நட்பு கொடுப்பதற்கு வல்லது.
ஞானம் பிறப்பால் வருவதன்று. எல்லாரிடமும் அன்பு செலுத்துவதற்குப் பெயர்தான் ஞானம். எல்லாரிடமும் அன்பு செலுத்துவதற்கு உயர்குடிப் பிறப்போ, ஆழ்ந்த படிப்போ, வசதியோ, தேவையே இல்லை. அன்பாக இருக்கவும் பூர்வஜென்ம புண்ணியம் செய்திருக்க வேண்டும். எல்லா பிறவிகளிலும் அன்பாக இருந்து பழக்கப்பட்டிருக்க வேண்டும்.
மல்லனாக வாழ்க்கை இருந்தாலும், வில்லிதாசன் அன்பாக இருந்தான். அவன் தொழில் அடித்து துன்புறுத்துவதாக இருந்தாலும், யாரையும் அழச்செய்யாது இருந்தான். அவனுடைய குலம் வன்முறைக்கு பெயர்போன குலமாக இருந்தாலும், அவன் எவர் மனதையும் நோகச் செய்யாது இருந்தான். அந்தணனாகப் பிறந்துவிட்டு, அறவழி நிற்பது பெரிதல்ல. செல்வனாக வாழ்ந்துவிட்டு, வள்ளலாக இருப்பது வியப்பல்ல. அறிஞனாக இருந்துவிட்டு, அற்புதமாக பேசுவது ஒன்றும் அதிசயமல்ல. ஆனால், இவைக்கு நேர் எதிரான ஒரு குலத்தில் பிறந்து விட்டு அந்தக் குலத்தின் தன்மைகளுக்கு தலை வணங்காமல் தெளிவாய், திடமாய் நல்லது நோக்கி ஒருவன் வளர்ந்திருக்கிறானேயானால், அதற்கு அவன் பூர்வஜென்ம புண்ணியம் தான் காரணம்.
திகழ் சக்கரம் என்று மக்களால் வர்ணிக்கப்படுகின்ற ஸ்ரீராமானுஜர் மனிதருள் மாணிக்கத்தை கண்டார். குளிக்கப் போகும்போது, முதலியாண்டான் என்கிற சீடரின் தோள் பிடித்துப் போய், காவிரியில் நீராடிவிட்டு, தூய்மையான பிறகு வில்லிதாசன் என்கிற இந்த இளைஞனுடைய கையைப் பற்றிக்கொண்டு கரையேறினார். கோயிலுக்கு நடந்தார்.
உள்ளத்தால் பரிசுத்தமானவன். புத்தியில் தெளிவு உள்ளவன். அன்பினால் எல்லோரையும் கவர்ந்தவன். அடக்கத்தால் குருவின் அன்பிற்கு பாத்திரமானவன். கையை பிடித்துக்கொண்டு அவர் அரங்கன் கோயிலுக்கு நடந்தார். மனிதர்களில் உயர்ந்தவனை கண்டுபிடித்த பெருமிதத்தோடு அரங்கனை தரிசிக்க சென்றார். உயர் குலத்தில் பிறந்ததாய் நினைத்துக் கொண்டவர்கள், வெறும் பழக்க வழக்கங்களால் தங்களை உயர் குலத்தோராகக் கற்பித்துக் கொண்டவர்கள், சிறிதளவு மொழி அறிவாலும், சிறிதளவு தத்துவ அறிவாலும், தாங்கள் மிகப்பெரிய விற்பன்னர்களாக கதைத்துக் கொண்டவர்கள், வில்லிதாசன் கையைப்பிடித்து ராமானுஜர் நடப்பதை பார்த்து மனம் நொந்தார்கள்.
தங்கள் கையைப் பிடித்து நடக்கவில்லையே என்ற பொறாமை, அவர்களை வேறு விதமாக பேச வைத்தது. குளித்துவிட்டு தாழ்ந்த குலத்தோனின் கையைப் பிடித்துக்கொண்டு கோயிலுக்குள் நுழைவதா! ஏன் இப்படி திகழ் சக்கரத்தார் செய்கிறார்? ஸ்ரீராமானுஜர் செய்வது சரி அல்லவே? இதை நாம் மறைமுகமாகவேனும் அவருக்கு எடுத்துரைக்க வேண்டுமே என்று சொன்னார்கள். அவ்வப்போது பின்புறமாக உரத்த குரலில் புலம்பினார்கள். நொந்து கொண்டார்கள். ராமானுஜர் காதுகளிலும் இவை விழுந்தன. ஆனால், சிறிதளவும் லட்சியம் செய்யாமல் கரையேறியதும் வில்லிதாசன் எங்கே என்றுதான் தேடினார்.
வில்லிதாசனும், பொன்னாச்சியும் அவருடைய அன்புக்கு அடிமையானார்கள். அவர் ஆதரவுக்கு ஏங்கினார்கள். வில்லிதாசன் தோள் கொடுத்து வரும்போது பொன்னாச்சி ஸ்ரீராமானுஜரையும் வில்லிதாசனையும் பின் தொடர்ந்தாள். புருசன் ராமானுஜருக்கு தோள் கொடுத்து நடந்து வருவதை, புளகாங்கிதத்துடன் பார்த்தாள். ஸ்ரீரங்கத்தில் குலப்பெண்கள் அந்த தேவரடியாரை கையெடுத்துக் கும்பிட்டார்கள். ‘என்ன பாக்கியம்? என்ன பாக்கியம்?’ என்று அவள் காதுபட புகழ்ந்து பேசினார்கள்.
ஸ்ரீரங்கத்தின் வைணவர்கள் பலர், வில்லிதாசனின் மகிமையை உணர்ந்த குரு அவனுக்கு கொடுத்த அனுபவத்தை காதார கேட்டு வியந்தார்கள். ‘இது ஏதோ ஒரு அற்புதமான விஷயம்’ என்று நெட்டுயிர்த்தார்கள். வில்லிதாசன் முகத்தில் தேஜஸை புரிந்துகொண்டு அவனுக்கு ஜாதி வித்தியாசம் பாராமல் வணக்கம் செய்து, அவனோடு சந்தோசமாக பேசினார்கள். ஆனால் ஐந்து விரல்களும் ஒரு மாதிரி இல்லை. உலகத்தில் பொறாமையாளர்களும் உண்டு.
தனக்கு குருவின் அன்பு கிடைக்காததால், தான் குருவின் அன்பிற்கு பாத்திரமாகாததால், அதற்குண்டான வழிகளை நேராக கடைபிடிக்க முடியாமல் குருவின் அன்பிற்கு பாத்திரமானவர்கள் மீது பொறாமைப்பட சிலர் ஆரம்பித்தார்கள். குரு தன் தோள் மீது கை வைத்து, காவிரியிலிருந்து திரும்பி வந்தால், அதை சாக்காக வைத்து அவன் செய்கையை காசாக மாற்றியிருக்கலாம். தன்னையும் குருவாக உயர்த்திக் கொண்டிருக்கலாம். பலபேரை தன் காலில் விழும்படி சொல்லி, ஆசீர்வாதம் பண்ணி கம்பீரமாய் வாழ்ந்திருக்கலாம். இவையெல்லாம் வில்லிதாசனுக்குப் போய்விட்டது. வில்லிதாசன் இவையெல்லாம் செய்யவில்லை. தானும் உண்ணாமல், உண்பவருக்கும் கொடுக்காமல் ஒரு நல்ல விஷயம் கலைந்து போய்விட்டது. எனவே ஆசை அதிகம் உள்ளவர்கள், பேராசை ருசியில் உள்ளவர்கள், வில்லிதாசனை பார்த்து பொறாமை பட்டார்கள். இந்த விஷயத்தை உபயோகப்படுத்திக் கொள்ளேன் என்று அருகே போய் காதோரம் பேசினார்கள்.
[தொடரும் ….]
தா.அ.கோபிநாதன்.
பதிவு வெளியானால்,வாசித்தால்,மனம் நிறைகிறது.வருடத்தில் ஒரேஒரு நாள் அவரை தரிசிப்பதைப் போல.