உ
யோகிராம் சுரத்குமார்
வித்தை
[இதுபோதும் புத்தகத்திலிருந்து …]
இந்த சனாதன தர்மத்தில் ஒரு அழகான கதை உண்டு. ஒரு கிராமத்தில் ஒரு முனிவர் அமைதியாக வசித்து வந்தார். அந்தக் கிராம மக்கள் அவருடைய சௌகரியங்களை கவனித்து வந்தார்கள். வெளியூரிலிருந்தும் மக்கள் வந்து அவரோடு பேசி விட்டுப் போனார்கள். தங்கள் பிரச்சனைகளை சொல்லி அதற்கு தீர்வு கண்டு போனார்கள். எந்நேரமும் கடவுளுடைய நினைப்பில் இருந்த அந்த முனிவருக்கு மக்களைப் புரிந்து கொள்வதும், அவர்கள் சங்கடங்களை தீர்ப்பதும் எளிதாக இருந்தது. பெரிய மனிதர்கள் கொடுத்த உதவிகளை அப்படியே கிராமத்தாருக்கு கொடுத்துவிடுவார். தனக்கென்று அவர் எதுவுமே வைத்துக்கொள்ளாது மக்களிடம் பேசிய நேரம் போக மற்ற நேரங்களில் எல்லாம் தனக்குள்ளே ஆழ்ந்து உறைந்து இருந்தார். அந்த சாந்நித்தியம் பெருகிக்கொண்டே இருந்தது. பதிலுக்கு எந்த உதவியும் எவரிடமும் எதிர்பார்க்காத தன்மை அவர் புகழைப் பரப்பிற்று.
வானத்தில் உள்ள தேவர்கள் வியந்தார்கள். என்ன ஒரு அமைதியான மன நிலைமை என்று சந்தோஷப்பட்டார்கள். அவருக்கு மேலும் சக்திகள் கொடுக்க தீர்மானித்து இரவு நேரம் அவரிடம் வந்து பேசினார்கள். அந்த முனிவர் சிரித்தார்.
“எனக்கு எதற்கு உங்கள் உதவி? எதற்கு கூடுதலான சக்தி? இருப்பது போதுமே. எனக்கு ஏதாவது கொடுக்க வேண்டுமென்றால் இடையறாது நான் கடவுள் நினைப்பிலேயே நான் இருக்கவேண்டும் என்பதை கொடுங்கள்” என்று பேசினார்.
“அது உம்மிடம் இருக்கிறதே. அதைவிட்டு நீர் நீங்கவே இல்லையே. உம்மால் நீங்கவும் முடியாதே. வேறு ஏதேனும் சக்தி கேளுங்கள் தருகிறோம்” என்று தேவர்கள் சொல்ல,
“இல்லை. எனக்கு எதுவும் வேண்டாம். அந்த சக்தி எனக்கு இருக்கிறது என்று தெரிந்தால் நான் அந்த சக்தியை நினைத்துக் கொண்டிருப்பேன். என்னுடைய கடவுள் நினைப்பு அப்போது நகர்ந்து போகும். அதை விட சக்தி முக்கியமான தாகிவிடும். எனவே அவ்விதமாக நீங்கள் ஏதும் தரவேண்டாம்”. ஏதாவது தந்துதான் ஆகவேண்டும். தேவர்கள் வற்புறுத்தினார்கள். “அப்படியானால் நான் நடந்து போகிற இடமெல்லாம் நல்லது நடக்க வேண்டும். நான் பார்க்கின்ற இடமெல்லாம் நல்லது நடக்க வேண்டும். என் சுவாசம் பட்ட இடமெல்லாம் நல்லது முகிழ்க்க வேண்டும். இது எனக்குத் தெரியாது நடக்க வேண்டும். நான் இதை அறியக்கூடாது. என்னால் நல்லவைகள் நடக்கின்றன என்று எனக்குத் தெரியக் கூடாது. அவைகள் தெரியாது என்னைச்சுற்றி இருக்கட்டும்” என்று சொன்னார். தேவர்கள் வியந்தார்கள்.
“அவ்விதமே ஆகட்டும்” என்றார்கள். அந்த முனிவர் தன்னால் நன்மை விளைகிறது என்ற எண்ணமே இல்லாது வாழ்ந்து அமைதியாக மறைந்தார். அவர் இருந்த இடம் சிறப்புற்றது. நடந்த இடம் செழிப்புற்றது. பார்த்த இடம் பளபளத்தது. இதுதான் மனிதனுடைய வாழ்க்கையாக இருக்க வேண்டும். தன்னால் ஏற்பட்டது என்ற நினைப்புதான் தடுமாற வைக்கும். அவரால் அவர் இருப்பு உணரப்படவேயில்லை. தான் இருக்கிறோம் என்ற நினைப் பற்று வெறுமே இருந்திருக்கிறார். இந்த இருப்பு எப்பொழுது வேண்டுமானாலும் குலைந்துபோகும் என்ற நினைப்பில் இருந்திருக்கிறார். வேறுவகையில் சொல்லவேண்டுமென்றால் ஏதோ ஒரு நாள் மரணம் வரும் அப்பொழுது இந்த உடலை நீத்து விட்டு உயிர் வேறு எங்கோ பறக்கும் என்ற எண்ணத்தில் இருந்திருக்கிறார். அதுவரை தன்னைச் சுற்றி நல்லவை நிகழட்டும். அது தனக்கு தெரியாது இருக்கட்டுமே என்றும் உணர்ந்திருக்கிறார். ஒரு சிறிய அளவுகூட தான் என்கிற எண்ணம் இல்லாமல் தன்னுடையது தன்னால் என்கிற எண்ணம் இல்லாமல் வாழ்ந்து மறைந்திருக்கிறார். இதுதான் சனாதன தர்மம் சொல்லிக் கொடுக்கிற வித்தை.
அவருக்குப் பெயர் உண்டா? தெரியாது. அப்படி பெயர் இருந்தாலும் அவர் சொல்லியிருக்க மாட்டார். அந்த கிராமத்து மக்களே ஏதாவது பெயர் சூட்டி அழைத்து இருப்பார்கள். ஒரு அடையாளத்திற்காக வைத்திருப்பார்கள். ஆனால் அந்தப் பெயரை கூப்பிட்டால் அவர் திரும்பிப் பார்த்திருக்க மாட்டார். எதிரே போய் வணக்கம் சொன்னால் நின்று வணக்கம் சொல்லி இருப்பார். அவர் தனக்கு பெயர் கூட சூட்டிக் கொள்ளாமல் வாழ்ந்து மறைந்தவர். இப்படிப் பல மகான்கள் இந்த பூமியில் வாழ்ந்து மறைந்திருக்கிறார்கள்.