உ
யோகிராம் சுரத்குமார்
திருவிளையாடல் புராணம்
[பிரஹலாதன் புத்தகத்திலிருந்து …]
அந்த ஊருக்கு திருபுவனம் என்று பெயர். திருபுவனத்தில் மிக அழகான சிவன் கோயில் இருந்தது. 4 கால பூஜைகள் மிக சிறப்பாக நடைபெற்றன. கோவிலுக்கு வெளியில் இருந்த மக்கள் வந்தபடி இருந்தனர். அந்தக் கோவிலின் தேவரடியாளாக பொன்னையாள் என்பவள் இருந்தாள். அவள் வீணை வாசிப்பதிலும் பாட்டு பாடுவதிலும் நடனம் ஆடுவதிலும் மிக சிறப்பாக இருந்தாள். கோவிலில் எழுந்தருளியுள்ள சோமசுந்தரக் கடவுளிடம் உயிரையே வைத்திருந்தாள்.
சோமசுந்தரக் கடவுளே சாட்சியாக வைத்து தேவரடியாராக வாழ்கின்றோம். எனவே, இந்த குலத்தொழிலுக்கு உண்டான மரியாதையை நாம் செய்ய வேண்டும் அல்லவா. எவர்வரினும் அவரிடம் இனிமையாக பேசுவதும் பண்போடு நடந்து கொள்வதும் நம்முடைய குணம் அல்லவா என்று தீர்மானித்தாள்.
திருபுவனத்தில் நல்ல செல்வந்தர்கள் இருந்தார்கள். வணிகர்கள் இருந்தார்கள். இரும்புத்தாது அதிகம் கிடைப்பதால் வாள், வேல், அரிவாள், உழுகலப்பை போன்ற கருவிகள் செய்யும் வலிவு மிகுந்த திறன் மிகுந்த கம்மாளர்கள் இருந்தார்கள். அந்தக் கம்மாளர்களை நாடி மதுரையில் இருந்தும் வெளியூரில் இருந்தும் நிறைய செல்வந்தர்களும் விவசாய பெருங்குடி மக்களும் வந்தார்கள். திருபுவனம் எப்பொழுதும் ஜனங்கள் நிறைந்த இடமாக இருந்தது.
கருவிகளுக்கு முன் பணம் கொடுத்துவிட்டு இருந்து வாங்கிக் கொண்டு போவார்கள். இரண்டு மூன்று நாட்கள் திருபுவனத்தில் தங்குவார்கள். தங்குகிறபொழுது, பொழுது போவதற்காக பொன்னையாள் வீட்டிற்கு வருவார்கள். அவள் பாடுவதையும் ஆடுவதையும் வீணை வாசிப்பதையும் வாய்பிளந்து கேட்பார்கள். “ஒரு இரவு ஒரு வீட்டில் அமர்ந்து உன் பாடலை கேட்பதற்கு ஒரு பொன் கேட்கலாம். பத்து பொன் கேட்கிறாயே என்ன நியாயம் இது” என்று ஒரு செல்வந்தர் பொருமினார்.
நான் எனக்காகவா கேட்கிறேன். நான் ஏதாவது ஆடை, அணிகலன்கள் அணிந்து கொண்டு இருக்கிறேனா. எளிமையாக தானே இருக்கிறேன். இரவு நேரம் உங்களைப்போல செல்வந்தர்கள் வருகிறார்கள் பாட சொல்லி கேட்கிறார்கள். ஆடச் சொல்லி கேட்கிறார்கள். அவற்றை செய்கிறேன். காசு வாங்குகிறேன். பகல் நேரம் என் பணியாளர்களை விட்டு நன்றாக உணவு சமைக்கச் சொல்லி, சிவனடியார்களுக்கும், ஏழை எளியவர்களுக்கும் சோறு போடுகிறேன். இது அங்கே போக வேண்டிய காசு. உங்கள் பணம் நல்ல ஒருவருக்கு உணவாகப் போகிறது. எனவே இறுக்கிக் கொள்ளாமல் கொடுங்கள் என்று சொன்னாள்.
செல்வந்தர்கள் மனம் மகிழ்ந்தார்கள். வாரி கொடுத்தார்கள். அவளும் தன் வீட்டின் பின்பக்கத்தில் பெரிய கூடம் எழுப்பி சமையல் செய்து வந்த ஏழைகளுக்கும், சாதுக்களுக்கும், சிவ யோகிகளுக்கும் விருந்தளித்தாள். அவர்கள் வயிறார சாப்பிட்டு பொன்னையாளை வாழ்த்தி விட்டுப்போனார்கள். இரவு சம்பாதித்த காசு பகலில் செலவாயிற்று. எதுவும் மிஞ்சவில்லை. ஆனால் பொன்னையாளுக்கு தனக்கு என்று செய்துகொள்ள விரும்பாவிடினும் தன்னால் செய்யப்படவேண்டிய காரியம் ஒன்று இருக்கிறது என்று தோன்றியது.
திருபுவனநாதருக்கு ஒரு உற்சவர் சிலை அமைக்க வேண்டும். மிக அழகான சிலையாக அது இருக்க வேண்டும் முற்றிலும் பொன்னால் ஆனதாக இருக்க வேண்டும் என்று அவள் விரும்பினாள். எத்தனை பாடி, எத்தனை ஆடி எத்தனை வருமானம் வந்தாலும் அடுத்த நாள் கூடுதலாக ஆட்கள் வந்து,கூடுதலாக அரிசியும், மற்ற பண்டங்களும் தேவைப்பட்டு காசு செலவாகிவிடும். இது என்ன இந்த சிறிய கைங்கரியம் கூட என்னால் செய்ய முடியவில்லையே என்று பொன்னையாள் வருத்தப்பட்டாள். மனம் அதிலேயே லயத்து கிடந்ததால் முகம் வாடி இருந்தது. என்னதான் பாடினாலும், ஆடினாலும் அதில் சோகை குறைந்திருந்தது.
ஒரு நாள் மதுரையிலிருந்து அழகான ஒரு சிவ பைராகி வந்திருந்தார். திண்ணையில் அமர்ந்து கொண்டார். உணவு வேளை வந்ததும், எல்லோரும் உள்ளே போனார்கள். வேலையாட்கள் அவரை வரவேற்க, அவர் அதை காது கொடுத்து கேட்காதவர் போல அமர்ந்திருந்தார். வேலையாட்கள் பொன்னையாளிடம் தெரிவித்தார்கள். அவள் வெளியே வந்து பணிந்தாள்.
“நீங்கள் யார்? எதற்கு உண்ண வர மறுக்கிறீர்கள். தயவுசெய்து உள்ளே வாருங்கள்” என்று பணிவோடு கேட்டாள். குடிக்க நீர் கொடுத்தாள். அவர் நீர் குடித்து விட்டு அவளை வாழ்த்தினார்.
“எவ்வளவு அழகான காரியங்கள் செய்கிறாய். அதேநேரம் பகல் நேரத்தில் எல்லோருக்கும் உணவளிக்கிறாய். கோவிலுக்கு போய் அங்கு செய்ய வேண்டிய நியமங்களை தவறாது செய்கிறாய். நீ எப்போது உறங்குகிறாய். எப்பொழுது ஓய்வெடுக்கிறாய் என்று தெரியவே இல்லை. எல்லா நேரமும் பரபரத்துக் காணப்படுகிறாய். உன் உடல் இளைத்துக் காணப்படுகிறது. உன் முகம் பொலிவின்றி இருக்கிறது. வேலைப்பளு காரணமாக உடல் இளைத்து இருக்கலாம். முகத்தில் பொலிவு இல்லையே என்ன காரணம்” என்று கேட்க…
தான் நேர்ந்து கொண்ட ஒரு விஷயத்தை செய்ய முடியவில்லையே என்ற கவலை இருப்பதாக அவள் விவரித்தாள்.
“என்ன காரியம் அது?”
“தங்கத்தில் ஓர் உற்சவமூர்த்தி திருப்புவனநாதருக்காக செய்யவேண்டும்”
“அவ்வளவுதானே. இதற்கு ஏன் கவலை, எனக்கு சித்து வேலை தெரியும், ரசவாதம் தெரியும். எனவே, நெல் முனையளவும் கவலை இன்றி உன்னிடம் இருக்கின்ற எல்லாவித உலோகங்களையும் கொண்டு வா இரும்பு, பித்தளை, வெண்கலம், காரீயம் இவைகளால் செய்த பாத்திரங்களை கொண்டு வா. அந்தப் பாத்திரங்களை எல்லாம் விறகு அடுப்பு மூட்டி உள்ளே போடு. அவை நாளை காலை தங்கமாக இருக்கும்” என்று சொன்னார்.
அவள் ஆச்சிரியத்தில் துள்ளி குதித்தாள். வீட்டில் இருக்கும் எல்லா பாத்திரங்களையும் கொண்டுவந்து அடுப்பில் அடுக்கினாள்.
பெரும் தழல் எரிந்தது. கட்டைகள் அடுக்கப்பட்டன. பாத்திரங்கள் உருகின. இன்று இரவு முழுவதும் இவை இப்படியே இருக்கட்டும் என்று சொல்லிவிட்டு, அவள் ஆடல், பாடலை கேட்டுவிட்டு அந்த பைராகி மதுரைக்கு போனார்.
ஏன் இங்கு தங்கி இருங்கள் என்று சொன்னபோது, “இல்லை, இல்லை இரவு நேரம் மதுரைக்கு போய் விடுவதே என் வேலை. ஒரு இரவு முழுவதும் நான் இங்கு தங்குவதற்கு இல்லை. நான் பொண்டாட்டிக்காரன்” என்று சொல்லி, வேகமாக இருளில் மறைந்தார்.
மறுநாள் காலை தகடு தகடாய் சொக்கத்தங்கம் ஊற்றிய குழம்பு போல மிளிர்ந்தது. உரசிப்பார்க்க எல்லாப்பக்கமும் தங்கம் என்று தெரிந்தது. அந்த தங்கத்தை வைத்துக்கொண்டு மிக அழகிய உற்சவர் சிலையை பொன்னையாள் செய்தாள். அந்த பொன்னையாள் சிலை வந்ததும் எடுத்து இடுப்பில் வைத்து, ‘அய்யோ, இத்தனை அழகோ என் சிவபெருமான்’ என்று அணைத்துக் கொண்டாள். அந்த சிலையில் அவள் நகக்குறியும், முத்தமிட்ட வடுவும் விழுந்தன. இன்றளவும் அந்த சிலையில் அந்த வடுக்கள் இருக்கின்றன.
பொன்னையாள் மறைந்து பல நூற்றாண்டு காலம் ஆயினும் ஒரு உண்மையான சிவபக்தையின் முத்திரை அதோ அந்த சிவபெருமான் உற்சவர் சிலையில் மின்னுகிறது. நெல் முனையளவும் தன்னலமின்றி இறை பணிக்கே வாழ்க்கையை ஏற்றுக் கொண்டவர்களை நினைக்க நினைக்க பெருமையாக இருக்கிறது.
Vaduvoor rama
பக்தி .. இது என்ன, எப்படி இருக்கனும்னு தெரிஞ்சுக்கவே இந்த ஜென்மம் போறாத்ய் போலிருக்கு