உ
யோகிராம் சுரத்குமார்
அந்தகரணம்
எத்தனை படித்தாலும், எவ்வளவு ஞானஸ்தனாக இருந்தாலும், உலகில் கேட்கப்படும் எல்லா கேள்விகளுக்கும் என்னால் பதில் சொல்ல முடியும் என்கிற அறிவு ஏற்பட்டாலும், உணவு உட்கொள்வதை செய்ய வேண்டியிருக்கிறது. தினம் தினம் ஒரு கவளம் உணவாவது உண்ண வேண்டியிருக்கிறது. இப்படிக் காடுகள் வழியே நடக்கும்போது கூட, நாலு கவளம் உணவு வேண்டியிருக்கிறது.
தினம் ஒரு வேளை நாலு கவளம் உணவு எடுத்துக் கொண்டால் தான் நடக்க முடியும். நடந்து நடந்து பரதகண்டம் முழுவதும் சுற்ற முடியும் நேற்று பிற்பகலில் தயிர் கலந்து அன்னமும் வழுதுணங்காய் பிரட்டலும், சிறிது கோவில் வாசலில் கிடைத்தது. உஷத் காலத்தில் இரண்டு சிறிய உருண்டை வேப்பங்கொழுந்து, மறுபடி நாலு கை ஜலம். எல்லாம் வல்ல இறைவன் பெயரை உச்சரித்தபடியே பதினாறு காதம் கடந்தாயிற்று.
எதிரே மலை. மலை கூட அல்ல. குன்று. சரளைக் குன்று. அதைக் கடந்தால் ஊர் ஏதோ இருக்கலாம் என்று தெரிகிறது.
அந்த ஊரிலிருந்து குன்று தாண்டி ஆடு மாடுகள் மேய்க்க வருவார்கள் போலும். அருகே உள்ள செடிகள் எல்லாம் கடிக்கப்பட்டு இருக்கின்றன. மரத்தின் பட்டைகள் மாடுகள் உரசி இடம்பெயர்ந்து இருக்கின்றன.
கீழே நிறைய ஆட்டுப்புழுக்கைகள். இங்குள்ள புழுக்கைகள் பெண் ஆட்டினுடையது. ஆடு கர்ப்பம் போலும். பால் உள்ள இலைகள் அதிகம் மென்றிருக்கிறது. புழுக்கை சற்று பச்சை கலந்து மென்மையாய் தாவர வாசனையோடு இருக்கிறது. சுள்ளெறும்புகள் புழுக்கைகளை இழுத்துப் போகின்றன. கர்ப்பமான ஆடுதான் பால் உள்ள இலைகளை அதிகம் மெல்லும். இதோ பின்பக்க குளம்பு கனமாய் முன்பக்கம் மெலிதாய் பதிந்திருக்கிறது. எத்தனை ஆடுகள்… மெல்ல அவர் நோட்டம் விட்டார். எண்ணினார். பதினாறு, பதினேழு, இருபது, இருபத்தெட்டு… இருபத்தெட்டு ஆடுகள். சந்தேகமில்லை. யார் இடையன்… சிறுவன்… இதுகோல் அடிபாகம். வட்டக்குறி அழுந்தி நின்ற தடம். ஏன் அழுந்தி நிற்கிறான். நின்றபடி தூங்கினான். இல்லை. வேறு இடத்திலும் இவ்விதமே இருக்கிறது. ஏன் இப்படி?
அட வலக்கால் இல்லை. இடக்கால் அழுத்தி வலப்பக்கம் கொண்டு ஊன்றி… அட நொண்டி! நொண்டி இடையன். நொண்டிச் சிறுவனை மாடு மேய்க்க அனுப்பும் ஊர். அடப்பாவிகளா…? அப்படியெனில் ஊரில் ஆட்கள் குறைவு. மந்தைகள் அதிகம். முன்னேறி வந்து நொண்டிச் சிறுவன் மாடு மேய்க்கும் கட்டாயம். அங்கஹீனர்களை பாதுகாக்காத ஊர்.
மறுபடி தரை பார்த்தே நடக்க. வலக்கால் தடம் தெரிந்தது. அட நொண்டிதான். ஆனால், கால் இல்லாது இல்லை.
வலதுகால் சூம்பியிருக்கிறது. இடதுகால் அழுந்த ஊன்றி கொம்பு பிடித்து வலதுகால் லேசாய் உரச, வேகமாய் நடக்கிற இடையன். இடைச்சிறுவன் அவன் கால் திசையும், ஆடுகளின் குளம்பு திசையும் சீராய் ஒரே கோணத்தில் இருக்கின்றன. அதாவது ஆடுகள் அவனுக்கு கட்டுப்படுகின்றன. எப்படி? குரலா? குரலில் வளைத்திருக்கிறானா? கள்ளி பூத்திருக்கிறது.
-தொடரும்
Gopal Gopall
நேற்றிரவு நடந்து செல்கையில் நடராஜர் கோவிலொன்றில் சிறிது தயிர்சாதமும் சில கவளம் சாம்பார் சாதமொன்றும் நிறைவாய் கிடைக்க, அன்னம் பாலித்த ஆடிய பாதனுக்கு அன்றும் நன்றிபெருக்கோடு முத்தமிட்டு நடந்தேன். மெல்லிய தூரல்களில் பூமியினை நனைக்க சில கவனித்தலோடு நடந்தேன். எதிரே வரும் மனிதர் என்ன நோக்கத்தோடு வருகிறாரென அவரின் முகம் கண்டே கணிக்கும் விளையாட்டோடும், இயற்கையின் தழுவலை உணர்ந்து சில புன்னகையோடும் தொடர்ந்து நேற்றய வழக்கமான நடை !
ஆனால் ஐயனின் பார்வை எத்தனை ஆழமானது. எவ்வளவு தெளிவிருந்தால் கவனிக்கும் பயணிக்கும் சத்தியமுள்ளில் இருந்தால் இத்தனையழகாய் எழுத முடியும்.
இடையனையும், மந்தையின் நுணுக்கமதனையும் சிறுபார்வையொன்றினது ஆழம் எழுத்தாக்கி, படிப்போருக்கு காட்சியாக்கி பயணிக்க வைக்கிறதென்பது சாதாரண விஷயமல்ல..
குறைவுணவு யோசிக்குமென்பதனையும், உள்ளத்தெளிவு கவனிக்குமென்பதனையும்,
இவையெல்லாம் வேண்டுமெனில் ப்ராணாயாமம், நாடிசுத்தி வேண்டுமென்ற சூசகமும், ஒரு எழுத்தாளன் இப்படி எழுத வேண்டுமெனவும், இன்னும் இன்னும் பலவும் படிப்போரனைவருக்கும் உணர்த்துகிறார் ஐயன் !
என்றும் நம்முடன் ஐயா பாலகுமாரன் பயணித்துக்கொண்டுதான் இருக்கிறார். பற்பல தலைமுறைக்குமிது தொடரும் !
???