உ
யோகிராம் சுரத்குமார்
பரிசோதனை
உணவு முடித்து கை அலம்பும் போது வாசல் மணி சத்தம் கேட்டது. கதவு திறக்க எழுத்தாளர் புன்னைவனம் நின்று கொண்டிருந்தார்.
இன்று இரவு நானும், அவரும் வெகு நேரம் பேசுவது என்று தீர்மானம் ஆகி இருந்தது. மாதத்துக்கு இரண்டு மூன்று முறைகள் அப்படி பேசுவது எங்கள் வழக்கம். நானும் ஒரு எழுத்தாளன் என்பதால் எழுத்தாளர்களுக்குள் பேசிக் கொள்ள நிறைய விஷயங்கள் உண்டு என்பதால், நானும் புன்னைவனமும் இரவு பத்து மணிக்கு மேல் சந்தித்து மூடிய கடையின் படியில் அமர்ந்து பேசுவோம்.
புன்னைவனம் என்னை விட மூன்று வயது பெரியவர் இரண்டு பேருக்குமே நன்கு நரைக்க தொடங்கிவிட்ட வயது. அகலமான அந்த தெருவில் நகரத்தின் முக்கிய வீதியில் நாங்கள் இரவு 2 மணி வரை கூட பேசிக் கொண்டு இருப்போம். தற்சமயம் நகரம் இருக்கிற நிலையில் இப்படி எல்லாராலும் உட்கார்ந்து பேச முடியாது. இரண்டு வயதான எழுத்தாளர்களால் மட்டுமே பேச முடியும்.
வாலிபமாய் யார் இருந்தாலும் காவல் துறையினர் கூட்டிக் கொண்டு போய்விடுகிறார்கள். விசாரித்து காலையில் தான் அனுப்புகிறார்கள்.
ஆனால் எங்களை பார்த்தால், ” வணக்கம் ஐயா இன்னும் பேச்சு முடியலியா? பனி கொட்டுதே. உடம்பு கெடுத்துக்காதீங்க. வீட்டுக்கு போங்க ” என்று பவ்யமாய் சொல்கிறார்கள்.
அல்லது அவர்களும் சிறிது நேரம் விவாதத்தில் கலந்து கொண்டு, தேனீர் வரவழைத்து குடித்து விட்டு தொடர்ந்து பாராவுக்கு போய் விடுகிறார்கள்.
வேறு யாரும் இந்த பேச்சை தொந்தரவு செய்வதில்லை. பேச்சு எப்போது முடிகிறதோ அப்போதுதான் நானும், புன்னைவனமும் எழுந்திருப்போம்.
ஒருமுறை பேசிக் கொண்டிருக்கும்போது இரண்டு ரவுடிகளுக்கு நடுவே சண்டை நடந்தது. வடக்கு பக்கம் பிரியும் இரண்டு சாலைகளையும் ஒரு ரவுடி உருட்டுக் கட்டையோடு பார்த்துக் கொண்டிருக்க தெருவில் போகிறவர்கள் ஆங்காங்கே நின்று விட்டார்கள். வடக்குப் பக்கத்தில் இருந்து ஒரு சிறிய சலனம் கூட இல்லை. ” என்னப்பா தம்பி கட்டையும் கையுமா நிக்கறியே என்னா சமாச்சாரம். ”
” கொலை பண்ண பார்க்கறாங்க சார். ஒரு வாரம் திட்டம் போட்டு எப்படி எப்படியோ மடக்கப் பார்க்கிறாங்க. நான்தான் தூங்கறேன்னு என் சிநேகிதக்காரனை குத்திட்டானுங்க. நான் கூரைமேல் படுத்து தூங்கிக்கிட்டு இருந்தேன். இவங்க குத்திட்டது தெரிஞ்சு இருட்டுலே பதுங்கி ஓடி வந்துட்டேன். நான் ஓடி வர்றத எங்காளே காட்டிக் கொடுத்துட்டான் சார். பத்து பேர் சேர்ந்து தொரத்தறாங்க. என் கையில கட்டை கிடைச்ச உடனே கிட்ட வர்றதுக்கு பயப்படறானுங்க.”
” உன் பேர் என்னப்பா. ”
” பார்த்தசாரதி சார். ”
” ஜனம் அப்படியே தேங்கி நிக்குதே”
” நடுவுல போலீஸ் பூந்துடுச்சு சார். அதான் அவங்க பின்னாடி வரலை ஒரு அஞ்சு நிமிசத்துல போயிடலாம் சார். ”
” போலீஸ் வந்துடுச்சுன்னு நினைக்கிறேன். ”
புன்னைவனம் எழுந்து நிற்க, அந்த போலீஸ்காரர் தன் முதுகில் இருந்து மிகப்பெரிய பட்டாகத்தி எடுத்தார். பார்த்தசாரதியின் பின்பக்கம் போய் அவன் தோளில் ஒரு வெட்டு வெட்டினார்.
-தொடரும்