இன்று கிழவி சாமந்தியும் துளசியுமாய் தொடுத்துக் கொண்டிருக்கிறாள். அத்தனையும் கணிகண்ணன் பறித்துக் கொண்டு வந்தவை. தடவித் தடவி பூ எது துளசி எது என்று பிரித்துச் சரம் கட்டிக் கொண்டிருக்கிறது. நாற்பது கை தொடுத்திருக்கும்.

” என்ன இன்று கைங்கர்யம் பெரிதாய் இருக்கிறது? ” கணிகண்ணன் கேட்டான்.

” சீக்கிரம் செத்து போய்விடுவேன் என்று தோன்றுகிறது. ”

” அட, என்ன அச்சான்யம் இது? ”

” மரணம் தவறா… நடக்க வேண்டிய விஷயம் தானே. சாகப் பயமேயில்லை. இதற்குப் பூமாலை சாத்த யாருமில்லையே என்கிற குறை இருக்கிறது. நானும் யார் யாரையோ கேட்டுப் பார்த்தேன். எவரும் ஏற்கவில்லை. இது மிகப்பெரிய விஷயம் என்று சொன்னால் வாய்பிளந்து கேட்டுக் கொள்கிறார்களே தவிர, உள்ளே விஷயம் தைக்கவில்லை. ”

” தைத்து என்ன?”

சேவைக்கு ஆள் வருமே. இது பேர் சொல்லிக்கோயிலைச் சுத்தப்படுத்தி அடியார்களுக்கு அமுது செய்வித்து, இதன் பாடல்களை உலகெல்லாம் பரப்பி, பல தொண்டுகள் செய்ய மனிதர்கள் வருவார்களே. ”

” கிழவி… இது நினைத்தால் அனைத்தையும் ஒரு நொடியில் செய்யும் ”

” உண்மை. இதுவும் செய்யவில்லை. இதற்கு சேவை செய்யும் வலிவும் எனக்கு இல்லை. வர வர முதுகுவலி, கண்ணெரிச்சல். நடந்தால் மேல் மூச்சு வாங்குகிறது. இது யோகத்திலிருக்கும் போது பசும்பால் போதும். மற்ற நேரங்களில் அமுது செய்விக்க வேண்டாமா. ச்சே…என்ன பாழுடம்பு. நான் ஆடிப்பாடி கொண்டிருந்த காலத்தில் இதைப் பார்திருந்தால் எல்லாம் விட்டுவிட்டு இங்கேயே இதன் காலடியிலேயே சேவை செய்து கொண்டிருப்பேன்.” திருமழிசைபிரானைக் கிழவி சுட்டிக் காட்டினாள்.

” அப்படியென்ன இவரிடம் கண்டுவிட்டாய் கிழவி..” கணிகண்ணன் வாயைக் கிளறினான்.

” தெய்வம் மனித ரூபம் கண்ணா. ஊரில் மழை பொழியவும், மக்கள் ஷேமத்துக்கும் இவர் போன்றவர் செய்யும் யோகம் தான் காரணம். இவர்கள் இருக்கும் இடம், உயிர்ப்பு இருக்கும் இடம். இவர்கள் செய்யும் யோகம் ஊர் நலத்துக்கு உதவும். காஞ்சி இத்தனை செழிப்பாய் இருப்பதற்கு இதுவே காரணம் ” கிழவி அவரைச் சுட்டிக் காட்டினாள்.

” சரி… இப்போது இளமை வந்துவிட்டால் இவர் சேவையே என்று இருந்து விடுவாயோ…? ”

” நிச்சயம். ”

” பொய். ”

” கண்ணா, நான் மனதிலும் பொய் சொல்லாதவள். ”

” ஆடல், பாடல் என்று ஓடிவிடுவாய். ”

” மாட்டேன் கண்ணா. ”

அது கனைத்தது. கிழவியும் கணிகண்ணனும் திடுக்கிட்டு எழுந்தார்கள். மெள்ளக் கண் விழித்தது.

‘ குரு பிரம்மா, குரு விஷ்ணு, குருதேவோ மகேஸ்வரஹ… குரு சாட்சாத் பரப்பிரம்மா தஸ்மை ஸ்ரீ குருவே நமஹ.’

கணிகண்ணன் விழுந்து வணங்கினான். அருகே போய் ஈரத்துணி எடுத்து உடம்பு துடைத்தான். திருமண் இட்டான்.

” மாலை எங்கே…?” திருமழிசைபிரான் குரல் கொடுத்தார்.

” எந்த மாலை? ”

” வண்ணமாலை. ”

” இதோ, எடுத்து வருகிறேன். ”

” அழைத்து வா”

” ஸ்வாமி? ”

” வண்ணமாலையை அழைத்து வா.”

‘ அட! கிழவி பெயர் வண்ணமாலை அல்லவா…’ கிழவி கிழவி ‘ என்று யோசித்து, கூப்பிட்டு பெயர் மறந்து விட்டது.’

” ஏய் கிழவி…இல்லை வண்ணமாலை! ஆச்சார்யார் அழைக்கிறார் வா.”

கிழவி தொலைவிலிருந்து தட்டில் பூமாலை வைத்து நீட்டினாள்.

போய் வாங்கி வர எழுந்தான். அது அமர்த்தியது.

” வரச்சொல். ”

” வண்ணமாலை வாருங்கள்.”

எதிரே மெள்ள வந்தாள். உடம்பு முழுவதும் போர்த்தி, நடுங்கும் தட்டோடு எதிரே வந்து பத்தடி தள்ளி தட்டைத் தரையில் வைத்து வணங்க முற்பட,

” போதும்…” அது கையமர்த்தியது.

கிழவி பயந்தாள்.

” மாலை போட்ட பிறகு நமஸ்கரிக்கலாம்.”

‘ மாலை போடவா, நானா… ‘ கணிகண்ணனை மிரட்சியுடன் பார்த்தது.

” வண்ணமாலை பயப்படுகிறாள். ”

” சாகப் பயமில்லாதவளுக்கு வேறெதில் பயம்?”

” பெருமாளே, எல்லாம் கேட்டுக் கொண்டிருந்ததா?”

கிழவி தட்டிலிருந்து மாலை எடுத்து வந்து பாதங்களில் வைக்க போனாள். வாங்கி அது கழுத்தில் போட்டுக் கொண்டது. சரமாய்த் தொடுத்துப் பிறகு முறுக்கித் திண்டு மாலையாய் செய்யப்பட்டிருந்தது. கழுத்தில் ஏறியதும் புதுப் பொலிவு மாலைக்கு கிடைத்துவிட்டது.

” பகவானே…” எதுவும் சொல்லத் தெரியாது கிழவி அழுதாள்.

” செத்துப் போக தயாராய் இருக்கிறாயா…?” அது கேட்டது.

கணிகண்ணன் திடுக்கிட்டான். ‘ இதென்ன திருமழிசைபிரானும் இப்படிப் பேசுகிறார். ‘

” எனக்குச் செய்த பணிவிடை போதும். போய் வா… ” _ அது உத்தரவிட்டது.

” பெருமாளே… கிழவி எங்கே போவாள்? தாசி குலத்தில் பிறந்த கிழவியை எவர் வைத்துச் சீராட்டுவார்கள்?”

” என்ன…?” அது அதட்டியது.

கிழவி சரணடைந்தவள். அவர் எது சொன்னாலும் மீறாதவள்.

” சரி ” என்று தலையசைத்தாள்.

” செத்த பிறகு எங்கே போவதாய் உத்தேசம்? ”

” எங்கே போக உத்தரவாகிறதோ அங்கே… ” _ கிழவி முணுமுணுப்பாய் பதில் சொன்னாள்.

-தொடரும்