உ
யோகிராம் சுரத்குமார்
கோள் என் செய்யும்
தெலுங்கில் அற்புதமான கீர்த்தனைகள் எழுதிய தஞ்சையை அடுத்த திருவையாறில் வாழ்ந்த தியாகராஜ சுவாமிகள் வாழ்கையிலிருந்து ஒரு நல்ல சம்பவம்.
மனம் முழுவதும் ஒருமைப்படுத்தி வேறு எதிலும் சிதற விடாது, இடையறாது ராமநாமம் சொல்லி, ராம பக்தியே வாழ்க்கை என்று தீர்மானித்து, அவரை பூஜை செய்வதும் அவர் நாமம் சொல்வதும் தவிர வேறு வேலை எனக்கில்லை என்று தியாகய்யர் உறுதியாக இருக்க, அவருடைய தமையனார் வேறு விதமாக இருந்தார்.
” உனக்கு நல்ல குரல் வளம், சாஹித்தியம் வேறு செய்ய வருகிறது. உன் சாஹித்தியத்தைத் தெருவில் போவோர், வருவோர் கொண்டாடுகிறார்கள். ‘ அடடே ‘ என்று வியக்கிறார்கள். எனக்கு அப்படி ஒன்றும் தெரியவில்லையாயினும், மற்றவர் வியப்பதை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அப்படி பாராட்டுபவரிடம் ‘ நன்றாக இருக்கிறதா கேட்டாயா, இன்னும் இரண்டு சாஹித்தியங்கள் எழுதித் தருகிறேன் காசு கொடு ‘ என்று பேச வேண்டும்.
இப்படி எதுவும் செய்யாமல், பாராட்டுக்குத் தலைகூட அசைக்காமல் இது இறைவனுடைய கருணை என்று பெருமிதமாய் பேசிக் கொண்டிருக்கிறாய். இறைவனது கருணை என்பது உண்மைதான். ஆனால் இறைவன் கருணை சோறு போடுமா, சட்டை துணி வாங்கிக் கொடுக்குமா. இடுப்பு வேட்டிக்கு உதவுமா, பாத்திரம் பண்டங்கள் ஆகுமா. எனவே, உன்னுடைய சாஹித்திய திறமையை காசாக மாற்றுவதில் நீ முதலில் கவனம் செலுத்த வேண்டும். இறை பக்தி அவசியம் தான். ஆனால் லௌகீகம் தான் முதல் என்று தியாகய்யரின் தமையனார் சகலமும் தெரிந்தவர் போல் தந்திரம் பேசினார். தம்பிக்கு நல்ல புத்தி சொல்வது போல் அலட்டிக் கொண்டார். வாழ்க்கையினுடைய சூட்சமங்கள் அதிகம் தெரிந்தவர் போல் பொய்க் கம்பீரத்தோடு பேசினார்.
இங்கு நடப்பது அத்தனையும் இறைவன் செயல். அவன் கட்டளை. இங்கு நான் செய்தேன், என்னால் முடிந்தது என்று எவர் சொல்லினும் அது மிகப்பெரிய அறியாமை. குரூர புத்தி. வெறும் அகம்பாவச் சிதறல் என்பதை தியாகய்யர் உணர்ந்திருந்ததால் தமையனின் பேச்சுக்கு பதிலே சொல்லவில்லை. வெறுமே அமர்ந்திருந்தார்.
“இவ்வளவு புத்தி சொல்லியும், உலக வாழ்க்கையில் ஈடுபடாத, காசு சம்பாதிக்காது அடுத்தபடியான கீர்த்தனைக்கும் போகிறாயே, உனக்கு ஏதோ கேடுகாலம் தான் பிடித்திருக்கிறது. இந்த சனிப்பெயர்ச்சி சரியில்லை உன்னை ஆட்டிப் படைக்கிறது. உனக்கு கேதுவும், ராகுவும் விரோதியாக இருக்கிறார்கள். எனவே, பெரிய நவக்கிரக சாந்தி செய்வது நல்லது என்று தோன்றுகிறது” என்று தமையனார் பேசிக்கொண்டு போக, அதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று அலட்டிக் கொள்ள, தியாகய்யர் அவரிடமிருந்து விலகி தனியே போய் அமர்ந்து கொண்டார்.
” கிரகபலம் ஏமி ராமா, நீ அனுக்கிரக பலம் உந்தி” என்று ஒரு அழகான கீர்த்தனை இயற்றினார்.
கிரகபலன்கள் என்னை என்ன செய்யும். கிரகதோஷங்கள் என்னை எப்படி வாட்டும். உன்னுடைய அனுக்கிரகம் என் மீது இடையறாது பாய்ந்து கொண்டிருக்கிறபோது, ராமா எனக்கு என்ன கவலை என்பது போல் அந்தக் கீர்த்தனை அமைந்திருந்தது. அசைக்க முடியாத பக்தி உள்ளவர்களுக்கு ஜோசியமும், கிரக மாறுதல்களும் முக்கியமே இல்லை. ஹோமங்களும், பூஜைகளும் அவசியமே இல்லை.
K.venkatachalapathy
யோகி ராமாசுரதகுமாரா
ஜெயகுரு ஜெயகுரு
ஜெயகுருராயா
ஐயனே சரணம்