உ
யோகிராம் சுரத்குமார்
யுத்தம்
ஒரு நாளைக்கு 120 சிகரெட்டுகள் இழுத்த காரணத்தால் ஐம்பது வயதில் அப்பழக்கம் கைவிட்டும் நுரையீரல் செயல் திறன் பாதிக்கப்பட்டது. அதாவது 25 சதவிகிதம் தான் வேலை செய்யும். அதிகம் ஆட, ஓட தாவ முடியாது. ஒரு மாதிரி இளமையில் முதுமை.
முதுமை வர இந்நிலை மோசமாகும் நுரையீரல் மேலும் திறன் இழக்கும் இதற்கு COPD என்று பெயர் Chronic obstructive pulmonary disease.
நெபுலைசர் என்கிற மருந்துப் புகையை தினமும் உபயோகப்படுத்த வேண்டும். தினமும் O2 என்கிற ஆக்ஸிசனும் ஏற்கவேண்டும். குளிர் காலம் எதிரி.
நெஞ்சு கவசம் போல் ஸ்வட்டர் அணிய வேண்டும்.
ஆனால் எழுத்து வேலை இவைகளால் தடைபடாது.
மாமல்லபுரத்தின் அர்ஜுனன்தபஸ் பேனல் பற்றி ஒரு குறு நாவல் எழுதி முடித்து விட்டேன். நண்பர் ரகுநாதன் ஜெயராமன் நண்பர் மெடிகல் சுந்தர் இருவரும் படித்து கொண்டாடினார்கள்.
செகண்ட் வேர்ல்ட் வார் படித்து … படம் பார்த்து குறிப்புகள் எடுக்கிறேன். சென்னை சிங்கப்பூர் தைவான் சீனா தாய்லந்த் பர்மா மலாயா மறுபடி சிங்கப்பூர் பிறகு லண்டன் ந்யூயார்க் பேர்ல் ஹார்பர் என்று கதைக்களம் போகிறது. உதவ பாக்யலக்ஷ்மி சேகர், ராஜூ கந்தசாமி போன்றோர் உண்டு.
இராமாயணம் மகாபாரதம் பாகவதம் தலா ஒரு பாகம் வந்து விட்டது. அடுத்த பாகங்கள் எழுதப் படிக்கிறேன். அவனி நாவல் எழுத பிரயாணம் செய்ய வேணும். இரண்டாம் பாகம் எழுத வேண்டும். கோடை ஆரம்பம் கிளம்புவேன்.
COPD முதுகில் ஏறிய வேதாளம். வெட்டி வீழ்த்தி தொடர வேணும். மறுபடி பற்றும். மறுபடி வெட்டு.
என்னால் சும்மா இருக்க முடியாது. எழுத்து எனக்குத் தெரிந்த வேலை. வேறு வேலை தெரியாது. ஸ்போர்ட்ஸ் பகுதி பார்க்கவே மாட்டேன். அதிகம் சங்கீதத்தில் லயிக்க மாட்டேன். சீரியல் இல்லை. அரட்டை No. வீடு நிர்வாகம் மொத்தமும் மனைவி. எதாவது ஏவினால் உடனே செய்வேன். தாசானு தாசன். என் மகள் மகனுக்கு நான் ஹீரோ.
இரவு தூங்குவதில்லை படிப்பு எழுத்து தியானம். வனதுர்கா, ப்ரதயங்கரா ஜபம். 7.30 மணிக்கு உறங்கப் போவேன்.
வயது 72. நிறைவான வாழ்க்கை குறையொன்றுமில்லை. ஆயிரக்கணக்கான் வாசகர் அன்பை அனுபவிக்கிறேன். வாட்ஸ் அப் அன்பால் நிறைகிறது. நேரே கட்டிக்கொண்டு கொஞ்சுகிறார்கள். நடுவே கல் ஏதும் விழும். ஏற்றுக் கொண்டு போக வேண்டியதுதான். சண்டையிட்டால் வேலைகள் பாதிக்கும். கவனம் சிதறும்.
இவைகளை எழுதி இறக்கி விட்டு உள்ளார்ந்து கிடக்க வேணும். தெரிந்த பிறகே மரணம் வரவேணும். இப்போதே முதுகுச்சக்கரங்கள முழு வேகத்தில் இயங்குகின்றன. மயில் குயிலாகிறது. விஷன் உடைகிறது. இதனாலும் பல் கிட்டும் குளிர் வரும். அந்தகரணம் அடித்தால்தான் கொம்புக்குள்ளே குளிர் எடுக்கும்.
என்னுள் நடக்கும் யுத்தமே பெரிது. பல ஜன்ம சண்டையது. வேறு எவரோடு எதற்கு சண்டையிடுவது.
வம்பிழுக்கும் நண்பர்கள் மிகவும் நல்லவர்கள். இழுத்தும் நான் வரவில்லை என்றால் விட்டுவிடுவார்கள். கிடக்கான் கேனப் பய என்று போய்விடுவார்கள். அது உண்மைதானே. உலகாயதமாக நடக்கவில்லையெனில் வந்து உலுக்குவார்கள்தானே.
பேர்ள் ஹார்பர் கதையை முதலில் முடிக்கவேண்டும். பிறகு…..