சதாசிவம் குதிரை ஏறி பொற்கிழியோடு பரஞ்சோதி இருக்கின்ற இடத்திற்கு போனான். மாட்டு வண்டிகளில் அவன் சித்திரங்கள் ஏற்றப்பட்டு மாமல்லை நோக்கிப் போயின.

பரஞ்சோதி வீட்டு வாசலில் எதிர்பக்கத்தில் ஒரு சிறிய கூட்டம் இருந்தது.

“என்ன? பரஞ்சோதிக்கு ஏதேனும் தொந்தரவா.”

“ஒன்றுமில்லை. உள்ளே ஒரு சிவனடியார் வந்திருக்கிறார். அவருக்கு பரஞ்சோதி உணவிட்டுக் கொண்டிருக்கிறார்”

“இதற்கேன் வாசலில் திகைத்து நிற்கிறீர்கள்?”

“இல்லை. வந்த சிவனடியார் கேட்டதும், இவர் வைத்த விருந்தும் வேறு விதமாக இருக்கின்றன. அதனால் மயங்கி என்ன ஆகுமோ என்ற பயத்தில் இருக்கிறோம்.”

“உள்ளே நுழைந்து பார்க்க வேண்டியதுதானே?”

“நுழைய முடியவில்லை. கதவு இறுக தாழ் போட்டிருக்கிறது. படி ஏறினால் ஓடுகள் சரிந்து விழுகின்றன. இரண்டு பேர் தலையில் அடிபட்டு ஓடிப் போனார்கள்.”

அவன் எழுந்து தெருவில் இறங்க இரண்டு ஓடுகள் சரிந்து தரையில் விழுந்து அவனுக்கு அருகே வந்து விழுந்தன.அவை எச்சரிப்பது போல் இருந்தது.

அவர்களோடு நெருங்கி உட்கார்ந்து கொண்டான்.

“எந்த சிவனடியார், என்ன விருந்து?”

“பைராகி போல் இருக்கிறார் அப்பா. வடதேசத்திலிருந்து வந்தவர் போல் இருக்கிறார். சடை முடியும், நீண்ட தாடியும், கமண்டலமும், தண்டும், இடுப்பில் புலித்தோலும், நெஞ்சு நிறைய ருத்திராட்சங்களும், நெற்றியில் திருநீறும், தோள்பட்டையில் தங்க கங்கணமும் அணிந்திருக்கிறார். இடுப்பில் பாம்பு தோலாலான கயிறை முறுக்கி கட்டியிருக்கிறார். பாதரட்சை அணிந்திருக்கிறார். பாதரட்சைகள் வாசலில் இருக்கின்றன. அருகே கூட போக முடியவில்லை.”

“சரி. வடஇந்திய பைராகி அப்படித்தானே இருப்பார்கள்.”

“இல்லை வந்தவர் கேட்ட விருந்து தான் பயமாக இருந்தது.”

“என்ன?”

“இவர் யாருமே வரவில்லை என்று அந்த பைராகியிடம் போய் விருந்துக்கு வரும்படி அழைக்க, என்னுடைய விருந்து வேறுவிதம் என்று சொன்னார். என்ன விருந்து என்று பரஞ்சோதி கேட்டார். எனக்கு பிள்ளைக் கறி வேண்டும். தலைச்சன் பிள்ளையாக இருக்க வேண்டும். ஐந்து வயதுக்கு உட்பட்டவனாக இருக்க வேண்டும். மறுக்காது அவனை சமைத்து எனக்கு உணவிட்டால் நான் உண்பேன். இதுதான் என் உணவு என்றார். வேறு எங்கும் சிவனடியார் கிடைக்காததால் இவரே என்ன செய்வது என்று யோசித்து தனக்கு ஒரு பிள்ளை இருக்கிறானே அவனை அறுத்து தருவோமே என்று தீர்மானித்து அவனை அழைத்து, மனைவியும், தாதியும் கால் தலை பிடித்துக் கொள்ள அவன் கழுத்தை அறுத்து..

“ஐய்யோ” அவன் கத்தினான்.

“சமையல் செய்து பரிமாற ஆரம்பித்து விட்டார்கள். தலைக்கறியை தனியாக செய் என்று உரத்த குரலில் பைராகி உத்தரவிட்டதாகவும், சரி என்று தாதி சொன்னதாகவும் சப்தம் கேட்டது. என்ன கூத்தடா இது” என்று உட்கார்ந்திருக்கிறோம்.

“இங்கு ஒரு அந்தணர் சொல்கிறார். வந்தவர் பைராகியாகத் தெரியவில்லை. வேறு ஏதோ நடக்கப் போகிறது என்று சொல்லிவிட்டு மயக்கத்தில் ஆழ்ந்துவிட்டார்.”

அவன் உள்ளுக்குள் இறைவனை நினைத்தபடி அந்த வீட்டிற்கு அருகே போனான்.மனம் முழுவதும் ஒருமைபடுத்தி உள்ளே என்ன நடக்கிறது என்று காது கேட்டான்.

“நீயும் உட்கார்.” கம்பீரமான குரல் கேட்டது.

“உனக்கும் ஆகட்டுமே உணவு” உத்தரவு போல் இருந்தது.

பெற்ற பிள்ளையை கறி செய்த கொடுத்து அந்த கறியமுதை உண்ண தகப்பனையும் அழைக்கிற வினோதம் உள்ளே நடந்து கொண்டிருந்தது. அவன் திகைத்தான். தள்ளாடினான். கையிலிருந்த பொற்காசு இரும்பைப் போல் கனத்தது. என்ன இது என்ன நடக்கிறது உள்ளே. மூச்சடைத்தான்.

“உன் மகன் எங்கே?”

அதுதானே அறுத்து பரிமாறியிருக்கிறார்.அவருக்கு கோபம் வந்தது.

” உன்னைத்தானய்யா கேட்கிறேன். உன் மகன் எங்கே? அவனையும் வரச் சொல்.”

-தொடரும்