உ
யோகிராம் சுரத்குமார்
தெய்வதரிசனம் பகுதி-2
கிருஷ்ணபரமாத்மா அல்லவா, ஶ்ரீ கிருஷ்ண பரமாத்மா கடவுளின் அவதாரம் என்று சொல்கிறார்களே, ரிஷிகளும், முனிவர்களும், சாதுக்களும், அந்தணர்களும் அத்தனை பவ்யமாக கை கூப்புகிறார்களே.
கோட்டைக்கு முன்னே இருக்கின்ற நீண்ட தெருவின் ஆரம்பத்தில் அந்தணர்கள் ஒன்று கூடினார்கள். ஸ்வாகதம் ஸ்வாகதம் கிருஷ்ணா என்று வரவேற்க தயாராக இருந்தார்கள். கலசம் கொண்டு வந்திருந்தார்கள். குளுமையாக வரவேற்கிறோம் என்று நீர் குடத்தை காட்டி மங்கள வாத்தியங்கள் முழங்க உள்ளே வரச் சொல்வார்கள். உங்கள் வரவு நல்வரவாகட்டும் என்று பேசுவார்கள்.
“ஆமாம். அவர் வரப் போகிறாராம். வந்து என்ன செய்யப் போகிறார் என்றெல்லாம் தெளிவாகத் தெரிந்து விட்டது.”
வாசலில் பேசிக் கொண்டார்கள்.
“நேரே அரண்மனை தானாம். வழியில் எங்கும் தங்கவில்லையாம். ஆனால் மக்களைப் பார்த்து கை ஆட்டிக் கொண்டு நகர்வார் என்று சொல்லிக் கொள்கிறார்கள். அரண்மனைக்கு போய் பீஷ்மரை சந்திக்கிறார். பிறகு துரோணர் , பிறகு திருதாஷ்டிரன், பிறகு துரியோதனன் என்று சகலரையும் சந்தித்து பேசுகிறார். பாண்டவர்கள் பக்கத்திலிருந்து பேச வந்திருப்பதாகத்தான் சொல்கிறார்கள். எனவே, பேச்சு முடிய ஒருநாள் ஆகலாம். இரண்டு நாள் ஆகலாம். அல்லது வாரங்களும் ஆகலாம். அதுபற்றி கவலையில்லை. எனவே, வேறு எங்கும் வரவில்லை. வழியிலேயே பார்த்து விடுவது நல்லது. ஒருவேளை சரியாக பேச்சு இல்லை என்று விருட்டென்று போய்விடக் கூடும். அதனால் வரும்போழுதே கும்பிடுவது நல்லது”
ஜனங்களுக்கு செய்தி பரவிற்று. தூரத்திலுள்ள கிராமத்திருந்தெல்லாம் வண்டி கட்டிக் கொண்டும், குதிரை மீதும், ஓட்டமும் நடையுமாக ஆண்களும், பெண்களுமாய் வந்தார்கள். குழந்தைகளை தூக்கிக் கொண்டு மூச்சு வாங்க வந்தார்கள். கடவுளின் சொரூபமா இல்லையா, அது வேறு கேள்வி. ஆனால் அந்த முகத்தை வாழ்நாளில் ஒருமுறையாவது பார்த்து விட வேண்டும். என்ன கனிவு, என்ன கம்பீரம், மயில்பீலி வைத்த கிரீடம், நெற்றியில் திருமண், வளைவான புருவங்கள், கூர்த்த நாசி, செவ்விதழ்கள், பெரிய விழிகள், மாயப்புன்னகை, கருங்குழல், சிறுகுழல், சங்கு போல கழுத்து, வெள்ளை நிறம் அல்ல. வெய்யிலில் காய்ந்த மட்டான நிறம் என்று பார்த்தவர்கள் சொல்ல, பார்க்கப் போகிறவர்கள் ஆவலுடன் கேட்டுக் கொண்டார்கள்.
கருடக் கொடியோடு தேர் வந்தது. தெருமுனையில் நின்றது. ஜனங்கள் மேல் துணியை விசிறிப் போட்டார்கள். வாழ்க வாழ்க என்று சொன்னார்கள். பூக்களைத் தூவினார்கள். பல முதியவர்கள் கண்களில் நீர் வழிய கை கூப்பினார்கள். பல இளைஞர்கள் பரவசமாக கை உயர்த்தி கும்பிட்டார்கள். பல பெண்கள் நெஞ்சு ஆடை நெகிழ நின்றார்கள். பல பெண்கள் விம்மினார்கள். சிலர் தூணை கட்டிக் கொண்டார்கள். நிற்க முடியாமல் தவித்தார்கள். கிருஷ்ணர் என்னைப் பார்த்தார், உன்னைப் பார்த்தாரா என்று ஒருவரை ஒருவர் கேட்டுக் கொண்டார்கள். ஆனால் கிருஷ்ணர் எல்லோரையும் பார்த்தார் என்றுதான் எல்லோருக்கும் தோன்றியது.
எல்லோருக்கும் பார்க்க வேண்டும் என்று தேர் முனையில் ஏறி நின்று கையில் குதிரையின் கடிவாளத்தை பிடித்து இன்னொரு கையில் சவுக்கை ஏந்தி , மெல்ல சிரிப்போடு ஜனங்களை பார்த்து தலையாட்டியவாறு வந்தது.
அந்தணர்கள் குடம் கொண்டு வந்து கொடுக்க, தொட்டு நமஸ்கரித்தது. தட்சிணை தந்தது. சவுக்கின் பின் புறத்தால் நெருங்கிய இளைஞர்களின் தோளை தட்டியது. யாரோ ஒரு முதியவர் தேர் காலை பற்றிக் கொண்டு அலைய , வண்டியை நிறுத்தி சற்று முன்னே வந்து அந்தக் கிழவரை தொட்டு நிமிர்த்தி பெயர் கேட்டு மெல்ல விலக்கியது.
அருகே அழைத்தது பெயர் கேட்கவா, அல்லது விலக்கி நிறுத்தவா என்ற சந்தேகம் எல்லோருக்கும் இருந்தது. இரண்டும்தான் என்று முடிவாயிற்று.
‘எது செய்தாலும் ஒரு துல்லியம் இருக்குதய்யா’ மத்திம வயதுகள் வியந்தார்கள். ‘இவரையா நாம் பகைத்துக் கொள்ளப் போகிறோம். இந்த அஸ்தினாபுரம் இவருக்கா எதிரியாகப் போகிறது’ பலர் துக்கப்பட்டார்கள். அயர்ந்து திண்ணையில் வந்து உட்கார்ந்தார்கள்.
தேர் தாண்டியது. கோட்டைக்குள் நுழைந்தது. கோட்டைக்குள் நுழைந்ததும் ஒரு செய்தி சொல்லப்பட்டது.
-தொடரும்
K.venkatachalapathy
பகவானே