உ
யோகிராம் சுரத்குமார்
ஆசிரியர் தினம்
முக நூலில் எல்லோரும் கூவிய பின் என் பதிவை ஆசிரியர் தினம் பற்றி இடுகிறேன்
ஆசிரியர் என்றால் பிரம்புதான் நினைவுக்கு வருகிறது. நான் அடி தாங்காதவன். அடி என்பது வலி மட்டுமல்ல அது அவமானப்படுத்துவதுவதும் கூட. என்னை அவமானப் படுத்த எவருக்கும் உரிமையில்லை. இது என் மூன்றாம் வகுப்பு நினைப்பு.
அடியாத மாடு படியாது. அது மாட்டுக்கடா நாயே. மாணவனுக்கல்ல.
நான் படிப்பில் மந்தமானது அவர்கள் அடித்ததால்தான். நான் மக்கு அல்ல. இதை 270 படைப்புகள் சொல்லும்.
ஆசிரியர்கள் முரட்டுப் பேய்கள். ஒருவர் கூட அன்புடன் இல்லை. இது என் கர்மா. வீட்டில் தந்தை அராஜகம். தாயின் வேதனை. என் இளமைப் பருவம் முழுதும் நெருப்பில் நடத்தல். தமிழ் பண்டிதையான தாயில்லை என்றால் கடலில் குதித்து உயிர் இழந்திருப்பேன். ஒரு முயற்சியும் செய்ததது உண்டு. சொல்லித்தர இவர்கள் அறியாதவர்கள்.
நாமே கற்போம். பதினெட்டு வயதில் முடிவு செய்து உருண்டு புரண்டு வாழ்க்கைக் கற்றேன். என் குழந்தைகளை நான் அடித்ததே இல்லை . காசு அதிகம் இல்லை ஆயினும் அன்பு கொட்டி வளர்த்தேன். கடும்புயல் அரைமணியில் சென்னைக் கரை தாண்டும் நான் மகள் மகன் மெரினாவுக்கு பறப்போம். சொட்டச் சொட்ட நனைந்து புயல் அனுபவிப்போம்.
மொட்டை அடிக்க மகன் வெட்கப்பட்டான் நானும் அடித்துக் கொண்டேன். பள்ளியிறுதிக்குப் பிறகு எந்த ஆசிரியரையும் விரும்பி சந்திக்கவில்லை. சந்தித்தவரை போலி மரியாதையுடன் விலக்கியிருக்கிறேன்.
என் அம்மா தமிழாசிரியை. ஆனால் அவள் எனக்கு சிநேகிதி மட்டுமே.
நல்லாசிரியர் எவரேனும் உண்டு எனில் என் பணிவான நமஸ்காரங்கள். ஒரு விண்ணப்பம். எதன் பொருட்டும் மாணவர்களை அடிக்காதீர்கள்.
என் வாசகர்கள் என்னை ஆசிரியராகக் கொள்ள வேண்டாம். தோழனாகக் கொள்ளுங்கள். கற்க கற்பிக்க இது சிறந்த வழி. கர்வம் இல்லாத நெறி.
வாழ்க (நல்)ஆசிரியர் தினம்
கற்பகமாலா
மாணவர்களை அடிக்க மாட்டேன் அப்பா.அன்பால் வழிநடத்துவேன்.ஒரு பொழுதும் சிறுமைப்படுத்தேன்.அவரவர் திறமை அறிந்து,அதில் சிறக்க வழிகாட்டுவேன்.ஏனெனில் நான் உங்கள் வாசகி.ஒவ்வொரு உயிரின் துடிப்பையும் அறியச் சொல்லிக் கொடுத்துள்ளீர்கள்