உ
யோகிராம் சுரத்குமார்
உடையார் மின்னூல்
உடையார் புத்தகத்தை அமேசானில் மின்நூலாகப்பெற இந்த உரலியை சொடுக்கவும்: https://amzn.to/2LT3kc2
20 வருடங்களுக்கு மேல் உழைப்பை கொட்டி ஒரு படைப்பை எழுதி முடித்துவிட்டு பரம்பொருள் ஆகிவிட்ட நிலையில், அதை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் பொருப்பு எனக்கு வாய்த்திருக்கிறது. இது என் பிறவிப் பயனின் முதல் படி. உடையார் ஶ்ரீ ராஜராஜத் தேவர் புகழையும் சோழதேசத்தின் பெருமையையும், பிரகதீஸ்வரர் கோவிலின் அழகையும், அதிசயத்தையும் வெளிச்சமிட்டுக் காட்டுவது என்னுடைய பிறவிக் கடமையும் கூட. எங்களுக்கு தஞ்சையை திட்டினால் கோவம் வரும். சோழத்தை, அய்யன் ராஜாராஜத் தேவரின் வம்சத்தை தவறாக பேசினால் உச்சி பிளக்கும். ரயிலோ காரோ ஏறி, சட்டென்று கிளம்பி, மடித்த வேட்டியை இறக்கிவிட்டு அகழி தாண்டி நடக்க கால்கள் இடறி நடை மாறும், மூச்சு காற்று சீறாகி நெஞ்சு விரியும், கண்கள் பெரிதாகும், உள்ளுக்குள் வேறு ராகம் ஒலிக்கும், வேறு தாளத்திற்கு இதயம் துடிக்க ஆரம்பிக்கும். பேச்சு குறைந்துபோய் திசைக்கு ஒன்றாய் அலைவோம். பிரகதீஸ்வரனின் பிரம்மாண்டம் கண்டதும் கைகள் தானாக உயர்ந்து சிரம் தொடும். இது எங்கள் குடும்பத்தவர்க்குள் மட்டுமல்ல, எங்களுடன் பயனப்படும் நண்பர்களுக்கும், என்றோ இருந்திருந்த தொடர்பை அதிகம் செய்யும்.
இது எங்கள் தேசம். இது நாங்கள் பிறந்து வளர்ந்து வாழ்ந்து ஊர். நாங்கள் சோழத்திற்காக உயிர் நீத்தவர்கள். சோழம் எங்கள் உயிர்.
ஆறு பாகம் கொண்ட இந்த படைப்பை எழுதி முடித்து விட்டு, இனிமேல் எதுவும் எழுத வேண்டாம் என்று அப்பா இருந்திருக்கிறார். உடையார் ஶ்ரீ ராஜராஜத் தேவரின் இறுதி நிமிடங்களை எழுதி முடித்து விட்டு விக்கி விக்கி அழுதிருக்கிறார். நண்பர்களுக்கும், உதவியாளர்களுக்கும் போன் செய்து தகவல் கூறி அழுததை நான் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன். காவிரிக்கரையில் பித்து பிடித்ததுபோல் நடந்ததை பார்த்திருக்கிறேன். பாழடைந்த கோவிலில் துண்டு விரித்து படுத்து உறங்கியதை பார்த்திருக்கிறேன். அது தூக்கம் அல்ல விழித்திருத்தல் என்றும் புரிந்தது.
எங்களுக்கும், எங்களை சார்ந்தவருக்கும் சோழதேசத்தின் கோவில்களில் ஏற்பட்ட அனுபவங்கள் ஏராளம். இதில் துளிகூட அமானுஷ்யம் இல்லை. இதில் துளிகூட பயமோ பைத்தியக்காரத்தனமோ இல்லை. இது ஒரு நிலை. உணர்வுப் பூர்வமான ஒரு நிலை. ஒருவிதமான பிரமை என்றும் சொல்லலாம். ஆனால், இது என்றும் மாறாது. காலகாலமாக தொடர்ந்து கொண்டேயிருக்கும்.
இந்த படைப்பை எழுத உதவி செய்த அப்பாவின் நண்பர்கள் கூட்டத்திற்கும், வாசக செல்வங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
கிருஷ்ணன்ராமனான அனிருத்த பிரம்மராயரின் பாதங்களில் என் சிரம் பதியவைத்து, உடையார் ஶ்ரீ ராஜராஜத்தேவரின் பேரருளால், புன்னை நல்லூர் மாரியம்மனின் ஆசியால், அய்யன் எழுத்துச் சித்தர் அய்யா பாலகுமரான் அவர்களின் துணையுடன் இந்த படைப்பை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்ல முயர்ச்சிக்கிறேன்.
எத்தனையோ படைப்புகள் எழுதியிருந்தாலும் நீர் இங்கு அவதரித்தற்கான அர்த்தமாக உடையார் என்றும் விளங்கும். புலிக் கொடி மேலும் மேலும் பறக்கும் என்றும் வீழாது பிடித்துக்கொண்டிருப்பேன், இனி என் முறை.
சோழம் !! சோழம்!!! சோழம்!!
திருமகள் போல பெருநிலச் செல்வியுந் தனக்கேயுரிமை பூண்டமை மனக்கொளக் காந்தளூர்ச் சாலைக் களமறுத்தருளி வேங்கை நாடும் கங்கைபாடியும் நுளம்பபாடியும் தடிகை பாடியும் குடமலை நாடும் கொல்லமும் கலிங்கமும் எண்டிசை புகழ்தர ஈழ மண்டலமும் இரட்டபாடி ஏழரை இலக்கமும் திண்டிறல் வென்றி தண்டால் கொண்டதன் பொழில் வளர் ஊழியுள் எல்லா யாண்டிலும் தொழுதகை விளங்கும் யாண்டே செழிஞரை தேசுகொள் ஸ்ரீ்கோவிராஜராஜகேசரி பந்மரான ஸ்ரீராஜராஜ தேவர்.
-சூர்யா பாலகுமாரன்