உ
யோகிராம் சுரத்குமார்
வெள்ளிப் பதக்கம் (விதுர நீதி) – பகுதி 4
யாருக்கும் அபகாரம் செய்யாத வாழ்க்கை நல்லது. பெண், அரசன், படித்த பாடம், மனித சாமர்த்தியம், பகைவன், சுகபோகம், தன் ஆயுள் மீது முழுமையான நம்பிக்கை உடையவன் அறிவுள்ளவன் அல்ல.
அறிவுள்ளவனுக்கு வைத்தியம் ஏதுமில்லை. மந்திரமில்லை. மங்கள காரியம் இல்லை. அவன் இவையெல்லாம் தாண்டி நிற்கிறான். ஒரு மனிதன் பாம்பு, அக்னி, சினேகம், தன் குலத்தில் தோன்றிய மனிதன் ஆகியோரை அவமதிக்கக் கூடாது.
அக்னி ஒரு மரக்கட்டைக்குள் மறைந்திருக்கிறது. தூண்டப்படுமானால் அது ஒரு காட்டையே அழித்து விடும். பாண்டவர்கள் மரக்கடையில் மறைந்த தீயைப் போல இருக்கிறார்கள். நீங்கள் ஒரு கொடியைப் போன்றவர். பாண்டவர்கள் பெரிய சால மரத்திற்கு ஒப்பானவர்கள். அந்த மரத்தை சாராது கொடி வளராது.
தர்ம, அர்த்த, கர்ம காரியங்களை செய்வதற்கு முன்பு சொல்லக் கூடாது. செய்து விட வேண்டும். நாளைக்கு உணவு தானம் செய்கிறேன் என்று இன்று சொல்லக் கூடாது. செய்து விட வேண்டும். வீட்டு மனை வாங்கப் போகிறேன் என்று சொல்லக் கூடாது. செய்து விட வேண்டும். இந்த பூஜை இன்ன தேதியில் செய்யப் போகிறேன் என்று பறையறிவிக்கக் கூடாது. அமைதியாக ஆரம்பித்து விட வேண்டும். மன்னன் இரகசிய ஆலோசனையை மலை உச்சி, அல்லது அரண்மனையின் மேல் மாடம், காட்டில் புல் இல்லாத இடம் ஆகிய இடங்களில் தான் செய்ய வேண்டும்.
எவன் நண்பன் இல்லையோ, நண்பனாக இருந்தாலும் எவன் பண்டிதன் இல்லையோ, நண்பனும் பண்டிதனாக இருந்தாலும் எவன் மன்னனுடைய பேச்சை கேட்க மாட்டானோ அவனை இரகசிய ஆலோசனையிலிருந்து விலக்கி விட வேண்டும். இரகசியத்தை இரகசியமாக வைக்கின்ற மன்னனுக்கு வெற்றி கிடைக்கிறது.
வேதங்களை படிக்காமல் ஒரு அந்தணனுக்கு சிரார்த்த காரியங்களில் செய்வதற்கு அதிகாரம் இல்லை. அதேபோல ஒரு மன்னன் தியானம், ஆசனம், சமாதானம் போன்ற குணங்களை அறியாமல் இரகசிய ஆலோசனை செய்ய தகுதியற்றவன். எந்த மன்னன் அவசியமான காரியங்களை நேரிடையாக கவனிக்கிறானோ, எவருக்கு பொக்கிஷத்தின் கணக்கு பற்றி அறிவு கொண்டிருக்கிறானோ அவனை வெற்றி பெற முடியாது. ஒரு அரசன் தன்னுடைய பணியாளர்களுக்கு திருப்தியான அளவுக்கு செல்வம் அளிக்க வேண்டும். எல்லாவற்றையும் தானே சுருட்டிக் கொள்ளக் கூடாது. அந்தணனை அந்தணன் அறிகிறான். மனைவியை கணவன் அறிகிறான். மந்திரியை மன்னன் அறிகிறான். ஆனால் மன்னனை இன்னொரு மன்னன்தான் அறிய முடியும். மன்னனுடைய அசைவுகள் குறித்து, யோசிக்கும் முறை குறித்து இன்னொரு மன்னனுக்குத்தான் தெரிகிறது. வதத்திற்கு வந்த வதத்திற்குறிய எதிரியை ஒருபொழுதும் விடக் கூடாது. எதிரி பலம் மிகுந்திருந்தால் அவனோடு பணிவாக நடந்து கொள்ள வேண்டும். இல்லையெனில் சமயம் பார்த்து கொன்று விட வேண்டும். பகைவனை குறித்த பயம் ஒரு அரசனை தூங்க விடாது.
ஒரு மன்னன் தன் கோபத்தை முதியோன், பகைவன், நோயாளி ஆகியோரிடம் காண்பிக்கக் கூடாது. முட்டாள்களால் ஏற்படுத்தப்படும் அறிவற்ற கலகத்தை ஒரு மன்னன் வெறுமே பார்த்ததுக் கொண்டிருக்கக் கூடாது.
தைரியம், மன அடக்கம், புலனடக்கம், தூய்மை, இரக்கம், மென்மையான வாக்கு இந்த ஏழு விஷயங்களும் லக்ஷ்மி கரத்தை அதிகப்படுத்துபவை. மற்றவர்களை நிந்திப்பவர்கள், பொதுமக்களுக்கு துயரம் தருபவர்கள், கலகம் செய்வதில் ஆவல் உள்ளவர்கள், எவரோடு இருப்பது ஆபத்தானதோ அம்மாதிரி மனிதர்களிடமிருந்து செல்வம் பெறக் கூடாது. தரவும் கூடாது. தீமை தீமையைத்தான் விளைவிக்கும். காமுகன், கலகம் செய்பவன், போக்கிரி, வெட்கமற்றவன், ஊரறிந்த பாபியோடு சினேகம் கொள்ளக் கூடாது. அவனால் ஏதும் லாபம் இருப்பினும் அதை தியாகம் செய்து விட வேண்டும் .
ஒருவன் தன் குடும்பத்தினரிடமும், ஏழையிடமும், தீனர்களிடமும், நோயாளிகளிடமும் அன்போடும் அருளோடும் இருக்க வேண்டும். அவனுடைய குடும்பமும், பசுக்களும் விருத்தியடைகின்றன. அவன் மங்களகரமான விஷயங்களை அடைகிறான். மேற்சொன்ன மனிதனுக்கு உதவும் போது அவர்களிடமிருந்து பெருகும் நன்றிப் பெருக்கு எந்தத் தடையும் இல்லாத ஆசிர்வாதமாக அன்பு செய்தவனை சூழ்ந்து கொள்கிறது. தன் குடும்ப ஜனங்களுக்கு மரியாதை செய்பவன் விருத்தியடைகிறான். அந்த குடும்ப அங்கத்தினர்கள் குணமற்றவர்களாக இருந்தாலும் அவர்களை காக்க வேண்டிய கடமை அவர்களுக்கு உண்டு.
மன்னா, நான் பேசியவற்றைகளை மனதில் வைத்து பாண்டவர்கள் மீது கருணை செய்யுங்கள். அவர்கள் வாழ்க்கை நடத்த சில கிராமங்களை கொடுங்கள். நீங்கள் இந்த குடும்பத்தில் பெரியவர். நீங்கள் எல்லோரிடமும் அன்பாக இருக்க வேண்டும்.
துரியோதனால் ஒரு சபையில் குற்றம் செய்யப்பட்டிருக்கிறது. நீங்கள் இந்த குலத்திற்கு முதியவர். உங்களால் அந்தக் குற்றம் கழுவப்பட வேண்டும். உங்கள் குலத்திற்கு ஏற்பட்ட கலங்கம் நீக்கப்பட வேண்டும். அப்பொழுது நீங்கள் அறிவுடையவர்களால் மதிக்கப்படுவீர்கள். எவன் ஆழ்ந்து யோசித்து தன் யோசனையை காரிய ரூபமாக மாற்றுகிறானோ அவன் பெரும் புகழ் பெறுகிறான். வெறுமே யோசித்துக் கொண்டிருப்பவனும், அதைக் காரியமாக்க மனம் இல்லாதவனும் அவமானத்தை அடைகிறான். இது நல்லது பயக்கும் என்று தீர்மானித்து விட்டால் நாலு பேர் ஆலோசனை புரிந்து விட்டால் அந்த யோசனை செயலாக்கப்பட வேண்டும். தட்டிலிருக்கிற உணவு பசியை போக்காது.
-தொடரும்
சிவா
உங்கள் சேவைக்கு உளமார்ந்த நன்றி