உ
யோகிராம் சுரத்குமார்
ஒரு தகவல்
வலைப்பக்க வாசகர்களுக்கு வணக்கம் வாழிய நலம். உடல் நலம் தேவலாம். ஆனால் அதிகம் அலைய முடியாது. அலைய விரும்பவில்லை. ஊட்டியோ, கொடைக்கானலோ எனக்கு ஏற்ற இடமல்ல. என் மயிலாப்பூர் இல்லத்தை கொடைக்கானலாய் மாற்றிக் கொண்டு படித்தும், எழுதியும் வருகிறேன். நீண்ட பயணங்கள் மூச்சிரைப்பைத் தருமோ என்கிற நினைப்பும் நான் அமைதியாக இருக்கக் காரணம். அப்படி ஏற்படின் சரிசெய்யும் உபகரணங்கள் எனக்கு அருகிலேயே இருக்கின்றன. அதாவது இவைகளை சுமந்து கொண்டு வெளியூர் போக முடியாது.
வயது முதிர்வால் வரும் இந்த நோய், அதனோடு வரும் தள்ளாமை என்னை சாய்த்து விடவில்லை. மாறாக இன்னும் விரைவாக எழுதத் தூண்டுகின்றன. அரட்டை அடிக்கிற நேரத்தை குறைத்துக் கொள்ளச் சொல்லி அறிவுறுத்துகின்றன.
மகாபாரத்தை ஆழ்ந்து படித்து மனதுள் வாங்கி புரிந்து தெளிந்து விதுர நீதி எழுதியிருக்கிறேன். சனத் சுஜாதர் என்ற முனிவர் சொன்ன பிரம்ம இரகசியம் பற்றி தெளிவு படுத்த முயற்சித்திருக்கிறேன். இது சொல்லித் தெரிவது அல்ல. கற்றுக் கொடுப்பதும் கற்றுக் கொள்வதும் அல்ல. பசித்த புறாக்களுக்கு தானியம் இறைப்பது போல இறைபட்டு கிடக்கின்ற சத்திய வாக்குகளை பசித்தோர் எடுத்துக் கொள்வர். ஜீரணம் செய்வர். உற்சாகம் மிகுந்து மேலே பறப்பர். புறாக்களுக்கு எவரும் ஊட்டி விடுவதில்லை. இடையறாது தானியம் தேடுதல்தான் புறாக்களின் வேலை. தேடலையும், தேடல் பூர்த்தியாவதையும் வேறு ஏதோ ஒரு சக்தி நிர்ணயம் செய்கிறது. இறைஞ்சுதல் தேவையில்லாத சக்தி அது. அதுதான் எழுதுவிக்கிறது. இது பரிமாறல் அல்ல. அனாதியாய் சத்தியத்தின் இருப்பு கூறல். காதுள்ளோர் கேட்கக் கடவர்.
விதுர நீதியிலிருந்து சனத் சுஜாதரின் பிரம்ம இரகசியத்திலிருந்து சில பகுதிகளைப் இந்த வலைப்பகத்தில் பதிவு செய்ய பாக்கியலகூஷ்மி வற்புறுத்துகிறார். எனக்கு மறுக்க இயலாது. திருமதி. பாக்கியலகூஷ்மி காரணமற்று காரியம் செய்வதில்லை. சில நட்புகள் ஈஸ்வர சங்கல்பம். வேறு ஏதோ ஒரு நல்ல நிகழ்வுக்கான விதி.
மகாபாரதம் தொடர்ந்து எழுதுகிறேன். அந்தப் பகுதியில் சிறப்பாய் உண்டானது பதிவு பெறும்.
A R KRISHNAKUMAR
நன்றி அய்யா. எதிர்பார்த்து காத்திருக்கிறோம்