உ
யோகிராம் சுரத்குமார்
காதோடுதான் நான் பேசுவேன் – மூன்றாம் பகுதி
நீர் அருந்துதல் என்பது முக்கிய கடன். அதாவது கடமை. காற்றுக்குப் பிறகு உடலுக்குத் தேவை நீர். சுத்தமான நீர் மட்டுமே குடிக்க வேண்டும் என்கிற சங்கல்பத்தில் இருக்க வேண்டும். ஐயோ துட்டு ஆகுமே என்று உரக்க கத்துபவர்களுக்கு தவறாக நீர் அருந்தினால் மருத்துவச் செலவு நிச்சயம். உழைப்பு நேரம் களவாடப்படும். உழைப்பும், வருமானமும் போய் மருத்துவ செலவும் வந்தால் உங்கள் வாழ்க்கை தள்ளாடும். அதற்கு தண்ணீருக்கு செலவு செய்வது குறைவாகி விடாது.
விடியற்காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்தி பார்த்திருக்கிறீர்களா. தொண்டை வழியே உணவுக் குழாயில் இறங்கி இரைப்பை நிரம்பி குடலுக்குள் நுழைவது வரை அந்த அனுபவம் ஒரு சிலிர்ப்புத் தரும். சிறுநீரகம் சுத்தமாகும். இரைப்பை நல்ல குணத்தோடு இருக்கும். மலம் கழிதல் தங்கு தடையின்றி நடக்கும். கண் தெளிவாகும். தோல் மினுமினுக்கும். ரத்த ஓட்டம் சமணப்படும். இந்த மருத்துவக் குறிப்புகள் விட்டு விடுங்கள். வெறும் வயிற்றில் நீர் அருந்துவது ஒரு சுகம். சிறுநீர் சுகமாகப் பிரிய அல்லது சுகத்தோடு சிறுநீர் பிரிய நன்கு நீர் அருந்துதல் காரணம். நீர் அருந்தினால் உடம்பு துர்நாற்றம் அதிகம் வராது.
சிறு வயதிலிருந்தே நீர் அருந்துதலை ஒரு சடங்காக நான் செய்தவன். திணறத் திணற நீர் குடித்தவன். பிறகு நீர் பிரிய ஒரு எக்ஸ்ட்ரா எனர்ஜியை உணர்ந்தவன். தாகம் தாங்காதவன். அப்படி தாகம் எடுத்தாலும் தவறான தண்ணீர் குடிக்காதவன். சினிமா போகும்போது தோளிலே ஒரு பை, பையிலே ஒரு பெரிய பாட்டில், அது முழுக்க சுத்தமான குடிநீர் என்று எடுத்துப் போய் இடைவேளைகளில் மடக் மடக்கென்று குடிக்கிறவன். நான் குடித்த மிச்சத்திற்கு மிகப் பெரிய போட்டி இருக்கும். இடைவேளை முடியும் முன்பே பாட்டில் தீர்ந்து இருக்கும். ஒரு நல்லவர் சொன்னார் என்று சாப்பிடும்போது தண்ணீர் அருந்துவதில்லை. சாப்பாடு முடித்து சிறிது நேரம் பொறுத்து தண்ணீர் அருந்துவேன். வீட்டில் தண்ணீர் அருந்தும் போது முகம் கழுவிக் கொண்டு தண்ணீர் அருந்துவேன். பிடரி , கழுத்து , மார்பு இவைகளை நீரால் துடைத்துக் கொள்வேன். பிறகு நீர் அருந்துவேன். இந்த சடங்கின் முழு அர்த்தம் இதுவரை புரியவில்லை. ஆனாலும் அப்படி செய்வது வழக்கமாகிறது. நீங்கள் செய்து பாருங்கள். நீர் குடிக்கும் முன் முகம் கழுவிப் பாருங்கள்.
நீர் மட்டுமே அல்ல. நீராகாரம், நீர் மோர், சாத்துக்குடி ஜுஸ், கமலா ஆரஞ்சு, இளநீர் போன்றவைகள் இன்னும் குதூகலத்தை தரக்கூடியவை. இவைகளில் ஏதேனும் ஒன்றை தினசரி அருந்தாமல் நான் இருந்ததில்லை. பதினேழு வயதில் வேலை கிடைத்து நூற்று தொன்னூறு ரூபாய் சம்பளம் கிடைத்தால் அன்று ராஜ வாழ்க்கை வாழலாம். மாப்பிள்ளை வினாயகர் கோலாவும், வீட்டில் தயாரித்த எலுமிச்சை பழ சாறும் , இரண்டு ரூபாய்க்கு இளநீரும் என் உடலை ஆரோக்கியமாய் வைத்தன.
நான் இளம் வயதிலேயே தியானத்தில் இறங்கியதற்கு இந்த குளுமையே காரணம் என்று நினைக்கிறேன். என் நண்பர்கள் பலருக்கு உடம்பைத் தொட நெருப்பு போல காந்தும். கண்ணம் வற்றிப் போயிருக்கும். கண்களில் நீர் தங்கும். ஒற்றைத் தலைவலி சகஜம். எனக்கு இவையெல்லாம் இல்லை. எப்படிடா சில்லுன்னு இருக்கே என்று கேட்பார்கள். மனசா, உடம்பா எது காரணம்? உடம்பால் மனசு. மனசால் உடம்பு. ஒன்றன் பின் ஒன்று. உடம்பை பேணுங்கள். நீர் குடியுங்கள். உடம்பை வளர்தேன் உயிரை வளர்த்தேனே என்று பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள். சொன்னவர் சித்த புருஷர். அந்த வாக்கு பொய்க்காதப்பா…
( என் அப்பனல்லவா என் தாயுமல்லவா பொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா )
கற்பகமாலா
என் அப்பன்அல்லவா