உ
யோகிராம் சுரத்குமார்
பாரதி யார்?
இன்று நானும் பாக்யலக்ஷ்மியும் நண்பர் சுந்தரும் பாரதி யார்? என்கிற நாடகத்திற்குப் போயிருந்தோம். எஸ்பிஎஸ் ராமன் இயக்க இசைக்கவி ரமணன் பாரதியாக நடித்தார். இரண்டு மணி நேரத்திற்கும் அதிகமான நாடகம். அநேகமாய் பாரதியின் வாழ்வு முக்கிய நிகழ்ச்சிகளெல்லாம் கோர்த்திருந்தார்கள். அவரின் நல்ல பாடல்களுக்கு நடுநடுவே பத்து இளம் பெண்கள் நடனமும் ஆடினார்கள். வசனங்கள் பொறி பறந்தன. அரங்கம் ஆர்பரித்தது. பல பாரதி பாடல்களை அவையோரும் சேர்ந்து பாடினார்கள். ஒரு பித்து நிலைக்கு அவையோரை நாடகம் கொண்டு வந்தது. அழவைத்தது.
பாரதியின் மனைவியாக நடித்த பெண்மணி மிக மிக இயல்பாய் நடித்தார் . பாரதியின் வேலையாள் விஜய் சிவா கர்நாடக ஜாம்பவான். தூள் கிளப்பினார்.ஒரு பெஞ்ச் ஒரு நாற்காலி மேஜை ஒரு ஷெல்ப் இவையே அரங்கப் பொருள்கள். பின்னே வெள்ளைத்திரை. ஸ்லைட். காலம் சொல்லவும் களம் காட்டவும் உபயோகப்படுத்தப்பட்டது.
இசைக்கவி ரமணன் நடிக்கவில்லை வாழ்ந்தார். பாரதியை அணு அணுவாய் அனுபவித்தவர்தான் இப்படி வெளிக் கொணர முடியும்.
நாடகம் முடிந்து ஜனங்கள் நகரவில்லை. தோய்ந்து கிடந்தார்கள். இதுதான் நாடகத்தின் வெற்றி.
பலநூறு முறைகள் இந்நாடகம் உலகமெங்கிலும் மேடையேறப் போகிறது. இது மகாகவி சுப்ரமண்ய பாரதிக்குக் கிடைத்த வெற்றி.
பாரதியை படித்து புரிந்து கொள்ள இந்த நாடக முயற்சி ஒரு தூண்டுதல். அடுத்த தலைமுறைக்குக் கிடைத்த பாரதி ஐஸ்க்ரீம். இனி இலக்கியத்தை இளக்கிக் கொடுத்தல்தானே புரிபடும்.
வாழ்க எஸ்பி க்ரியேஷன்ஸ். வாழ்க இசைக்கவி ரமணன்.
இராஜ்குமார்.ம
இது போன்ற நாடகங்கள் நாட்டுக்காகவும் தமிழுக்காகவும் வாழ்ந்தவர்களை பற்றி வரும் தலைமுறையினர் கொண்டாட வழி வகுக்கும்.