அஸ்தினாபுரம் அதிர்ந்து நின்றது.

“அவரா வருகிறார். இன்றா? இங்கா? இப்பொழுதா?” என்று அதிசயித்தது. ஜனங்கள் செய்தியைச் சொல்ல இடதும் வலதும் அலைந்தார்கள்.

“ஏதேனும் போர் அறிவிப்பா. அவர் பஞ்ச பாண்டவர்கள் பக்கமாயிற்றே. படை திரட்டி வருகிறாரா, அல்லது நல்ல குணத்தோடு வருகிறாரா. எப்படி வந்தால் என்ன, எவர் மீது அவருக்கு கோபம் வந்தால் என்ன, நம்மீது அவருக்கு கோபம் இல்லை. அவர் மீது நமக்கு கோபம் இல்லை. அவர் வரவேண்டும். அவரை கண் குளிர பார்க்க வேண்டும். வரும்போது வருக வருக என்று மலர் தூவ வேண்டும்.

அரசாங்கம் தண்டிக்குமோ?

தண்டித்து விட்டு போகிறது. என்ன, மிஞ்சினால் கசையால் அடிப்பார்கள். ஒரு பூவுக்கு ஒரு கசை அடி என்று வாங்கிக் கொண்டால் போயிற்று. பத்து பூவாவது அந்த பாதத்திற்கு போட வேண்டும்.”

ஜனங்கள் பித்து பிடித்தது போல தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தார்கள். தெருவில் நீர் தெளித்தார்கள். கோலமிட்டார்கள். இளம் வாலிபர்கள் நீண்ட கயிறு எடுத்து மாவிலையும், தென்னங்கீற்று தோரணமும் ஏற்றி எதிர் வீட்டிற்கும் தன் வீட்டிற்கும் குறுக்கே கட்டினார்கள். வாழை மரமும், பாக்கு மரமும் கட்டினார்கள். குங்கிலியப் புகை போட்டார்கள். தெருவில் அலையும் மாடுகளை கட்டி கொல்லைப்புறத்தில் வைத்தார்கள். பட்டப்பகலில் வீட்டு வாசலில் நெய் விளக்கு ஏற்றினார்கள்.

ஒருவேளை உள்ளே வந்தால்….வாசலில் பெரிய குடத்தில் ஜலத்தை தயாராக வைத்தார்கள்.

வந்தவர் குடிக்க தண்ணீர் கேட்டால்…வேறொரு சொம்புடன் குடி தண்ணீர் வைத்தார்கள். காய் அரைத்துப் போட்டார்கள். பெண்கள் வேகமாக உடுத்திக் கொண்டார்கள். தலையை சரி செய்து கொண்டார்கள். சலவைக்கல் முன் நின்று முகம் சரியாக இருக்கிறதா என்று பார்த்து வாசலுக்கு வந்தார்கள். தெருவின் ஆரம்பத்திலிருந்து கடைசி வரை தோரணங்கள் . உள்ளே போய் முகம் அலம்பி வெளியே வருவதற்குள் நகரத்தின் முகமே மாறீவிட்டது. எல்லோருக்கும் சந்தோஷமாக இருந்தது.

ஆமாம். வரப் போகிறவர் சாதாரணமானவரா….

-தொடரும்