ஒரு குரு ஒரு சீடனிடம் என்ன கொடுப்பார் என்பது பலருக்குத் தெரியாத விஷயமாக இருக்கிறது.

இது கொடுக்கிற விஷயமல்ல. சொல்லாமல் சொன்ன விஷயம். நினையாமல் நினைக்கும் விஷயம். எனக்குள் எந்தவித போதனையும் இல்லாமல் என் குருநாதர் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தினார்.

தனியே இருக்கும்போது உள்ளுக்குள் அமிழ்ந்து என்னை இழந்து வெறுமே எந்த முயற்சியுமற்றுக் கிடக்கின்ற ஒரு தன்மை எனக்குள் வந்து சேர்ந்தது. அது உடம்போடும், பூமியோடும் சம்பந்தமின்றி நடுவே இருக்கின்ற விஷயமாக இருக்கிறது.

அப்படி நடுவே எந்தப் பிடிப்பும் இல்லாமல், ஓர் அந்தரத்தில் எந்த இயக்கமும் இல்லாமல், ஒரு வெறும் கிடப்பில் வேறு எந்த முயற்சியுமில்லாமல், எந்த யோசிப்பும் இல்லாமல், வெறும் மௌனத்தில் ஆழ்ந்திருக்க முடிகிறது.

அப்படி ஆழ்ந்த மௌனத்தில் கிடக்கிறபோது, என் இருப்பு மறைந்து எதிரே இருப்பவராக நான் மாறுகிறேன். எதிரே இருப்பவரின் வலி, மன உளைச்சல், அவஸ்தை, சிரிப்பு, ஆனந்தம், அழுகை எல்லாம் தெள்ளத் தெளிவாக என்னுள் மிதக்கின்றன.

சுயம் மறைந்து எதிரே இருக்கின்ற விஷயம் நானாகி விடுகிறேன். அது தாவரமோ, புழுவோ, பூச்சியோ, நாயோ, பன்றியோ, குதிரையோ, மாடோ, மனிதரோ எவராயினும் அதுவாக எனக்குள் மாற்றம் நிகழ்கிறது.

ஐயோ எதிரே உள்ளதுக்கு வலிக்கிறதே. இந்த வலியை எப்படித் தாங்குகிறது என்று மனம் யோசிக்கிறது. அப்பொழுது நானும் மையமில்லை. அதுவும் மையமில்லை. வலிதான் மையம்.

நானும் மையமில்லை. எதிரே இருக்கின்ற மனிதரும் மையமில்லை. அந்த துக்கம்தான் மையம் என்று அந்த துக்கத்தைப் பார்க்கிறபோது மனம் பரபரத்து ஏதோ ஒரு காரியம் செய்கிறது.

என்ன என்று எனக்குத் தெரியவில்லை. அதுபற்றி நினைவுகூர முடியவில்லை. என்ன உணர்வு என்றும் விளக்க முடியவில்லை. ஆனால், என் பார்வை அவர்களை ஏதோ மாற்றுகிறது. வலியை நீக்குகிறது. துக்கத்தைப் போக்குகிறது.

மெல்ல வந்து கைகூப்பி ” நீ அன்று என் முதுகைத் தொட்டாய். கை வலி சரியாகி விட்டது” என்று சொல்கிறார்கள். “உன்னோடு ஐந்து நிமிடம் உட்கார்ந்து பேசினேன், என் பிரச்சினை சரியாகி விட்டது” என்கிறார்கள்.

“பர்ஸ் திறந்து நூற்றியொரு ரூபாய் காசு வைத்தாய். இன்றுவரை காசு குறையவே இல்லை. ஆயிரம் ஆயிரமாய் காசு நிரம்பிக் கொண்டுதான் இருக்கிறது” நீ என்ன செய்தாய் என்று கேட்கிறார்கள்.

இப்படியெல்லாம் உன்னால் செய்ய முடியுமா, என்னை ஏதாவது நீ செய்யேன் என்று யாரோ வந்து மாரை நிமிர்த்த, என்னால் எதுவும் செய்ய முடியவில்லை.

என் முயற்சியால் இது விளையவில்லை. அது என்னை முன்னிறுத்தி ஏதோ காரியம் செய்து கொள்கிறது.