ஸ்வப்னா பஸ்டாண்டில் காத்திருந்தாள். ஒரு சைக்கிள் ரிக்க்ஷா அருகில் வந்து மணி அடித்தபோது அவசரமாய் வேண்டாம் என்றாள். சைக்கிள் ரிக்க்ஷா சற்றுத் தள்ளி இவள் மனசு மாறலாம் என்பது போல் நின்றான். வெள்ளை வேட்டியுடன் இரண்டு பேர் பஸ்டாண்டில் பேசிக் கொண்டிருந்தார்கள். ஒரு சிறிய பெண் தகப்பன் மாதிரி ஆளுடன் வந்து நின்று கொண்டாள். நல்ல வேளை துணை கிடைத்துவிட்டது என்று ஸ்வப்னா நிம்மதியானாள்.

பஸ் வளைவு திரும்பி வந்து நின்றது. பஸ்ஸிலும் கூட்டமில்லை எட்டு ஒன்பது பேர் இருந்தார்கள். அந்தச் சிறுமி ஸ்வப்னாவுடன் ஏறினாள். தந்தை மாதிரி நின்றவனுக்கு விடைகொடுத்தாள். பத்து வயது பெண் எப்படி இந்த இரவில் தனியாகப் போகிறாள்.

ஏன் அனுப்புகிறார்கள். ஒரு வேளை அந்த பத்து வயசுதான் காரணமோ….. ஸ்வப்னாவுக்கு முப்பதெட்டு வயசு. முதல் குழந்தை இறந்து பிறந்தது. மறுபடி கர்ப்பமாகாமல் இருப்பது நல்லது என்று சொல்லி விட்டார்கள். வெறுமனே உழன்று கிடப்பதை விட…. இப்படி இலக்கியம் எழுத்து என்று திரும்பலாமே என்று யோசித்து நிறையப் படிக்க ஆரம்பித்தவள் படித்ததன் விளைவாய் யோசிக்க ஆரம்பித்தாள். யோசிப்பு தொடர கூட்டங்களுக்குப் போனாள். கலந்துரையாடல்களில் உட்கார்ந்து கேள்வி கேட்டாள். ஸ்வப்னாவின் புருஷனுக்கு இலக்கியத்தை விட பேட்மிட்டன் பிடிக்கும்… தத்துவங்களை விட யோகாசனம் பிடிக்கும். ஆனாலும் அவள் தனிமையைப் புரிந்து கொண்டு அவன் கூட்டங்களுக்குப் போக அனுமதித்தான். உனக்கு இதுல நிம்மதி இருக்குன்னா போய்ட்டுவா. முடியறப்ப நானும் வரேன், என்னோடதான் போகணும்னு தொந்தரவு பண்ணாத.

விருப்பமில்லாதவனை தொந்தரவு பண்ணுவது நாகரிகமில்லை…. இவ்வளவு விட்டுக்கொடுக்கிற புருஷனை வரச்சொல்லி ஹிம்ஸிப்பது உத்தமமில்லை. ஆனால் எட்டே முக்கால் – ஒன்பது என்றால் தனியே திரும்புவது கலவரமாகத்தான் இருக்கிறது. புருஷன் உதவியாய் இருந்தாலும் மாமனாருக்கு இந்த நடவடிக்கைகள் பிடிப்பதில்லை. ஏழு ஏழரை பரவாயில்லை. எட்டு மணியானாக் கூடப் போனாப் போறதுங்கலாம். ஒன்பது மணிவரைக்கும் பொம்மனாட்டி வீடு திரும்பலைன்னா என்னனுன்னு நினச்சுக்கறது….. இன்றைக்கும் கத்தலாம் இருந்த இடம் விட்டு நகரலாம் வராண்டாவில் சாய்ந்து கொண்டபடி அரைமணி நேரம் அரற்றலாம். என்னம்மா இது….. என்ன நினைச்சுட்டிருக்க? என்று வாசற்படி மிதித்ததும் அதட்டலாம். ஆனால் எவர் துணையுமின்றி வருவது சிரமமாகத்தான் இருக்கிறது.

-தொடரும்