Loading...

About Me

எழுத்து சித்தர் பாலகுமாரன் பற்றிய ஒரு அறிமுகம்

அறிமுகம்

About Me

எழுத்து சித்தர் பாலகுமாரன் பற்றிய ஒரு அறிமுகம்

1946-ம் ஆண்டு ஜூலை மாதம் 5-ம் நாள் பிறந்தவர். தஞ்சை மாவட்டத்தில் திருக்காட்டுப்பள்ளி தாலுக்கா அருகே பழமார்நேரி என்ற கிராமம் இவரது சொந்த ஊர் .

பள்ளி இறுதி வரை தேறிய பாலகுமாரன் பின்பு தட்டச்சும் சுருக்கெழுத்து கற்று தேறி தனியார் அலுவலகத்தில் சுருக்கெழுத்தாளராக பணி துவங்கி ஒரு டிராக்டர் கம்பெனியில் உயர் அதிகாரியாக பதவி வகித்தவர். அலுவலில் சேர்ந்த காலகட்டத்தில்(1969) கவிதைகள் எழுத துவங்கிய பாலகுமாரன், சிறுகதைகளில் நாட்டம் செலுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதினார். இருநூற்று எழுபத்து நான்கு நாவல்கள் இதுவரை(2017) எழுதியிருக்கிறார். பாலகுமாரன் நாவல்கள் விற்பனையில் முதலிடம் கொண்டவை.

இரும்பு குதிரைகள் என்கிற நாவலுக்கு ராஜா சர் அண்ணாமலை செட்டியார் அறக்கட்டளை பரிசும் மெர்குரிப்பூக்கள் நாவலுக்கு இலக்கிய சிந்தனைப்பரிசும் கடற்பாலம் சிறுகதை தொகுப்புக்கு தமிழக அரசு இரண்டாம் பரிசும், சுகஜீவனம்நாவலுக்கு தமிழக அரசு முதல் பரிசும் கிடைத்திருக்கின்றன .

இவர் தன் நாவல்களில் குடும்பம் என்பதின் முக்கியத்துவம் குறித்தும் பெண்களை மதிக்க வேண்டிய அவசியம் குறித்தும் தன்னைத்தான்உணர்தல் குறித்தும், அதற்காக தியானம் மூச்சுப்பயிற்சி போன்றவைசெய்ய வேண்டிய அவசியம் பற்றியும் தனிமனித மேம்பாடே சமூக மேம்பாடு என்கிற விளக்கமும் எளிய இனிய நடையில் எழுதியிருக்கிறார்.

பழந்தமிழ் இலக்கிய பயிற்சி பாலகுமாரனுக்கு அவர் தயார் தமிழ்ப்பண்டிதை அமரர் சுலோச்சனா அவர்களால் கவனமுடன் தரப்பட்டது.முப்பத்தி ஆறு வருடம் ஆசிரியராக இருந்த தாயின் துணையே பாலகுமாரன் எழுத்தில் சிறந்து விளங்க உதவிற்று இவர் தனது நூல்களில் பாத்திரங்கள் வாயிலாக தேவார திரு வாசக பிரபஞ்ச பாடல்களையும் அதன் விளக்கங்களையும் சித்தர்கள் உயர்வினையும் அடிக்கடி எழுதி வருகிறார்.தகுந்த பழந்தமிழிலக்கிய பெருமையை நாவல்களின் ஊடே சொல்லுகிறபோது அவைகளை பயிலும் ஆவல் மக்களிடையே ஏற்படுகிறது.

இது மட்டுமின்றி கதைக்களன்களாய் பல்வேறு தொழில்களை ஆராய்ந்து உள்ளது உள்ளபடியே விளக்கும் திறமை இவரிடம் உண்டு.லாரி போக்குவரத்து, விமான நிலையம், காய்கரி மார்க்கெட், தங்க நகை வியாபாரம் என்று பெரிய துறைகளை படம் பிடித்து காட்டுவது போல் எழுதுவது மக்களிடையே சமூக விழிப்பை தந்து சகமனிதர் வாழ்க்கையை தெரியப்படுத்துகிறது.

வெறும் நாவல் எழுத்தாளராக மட்டுமல்லாது சினிமாத்துறையில் சிறந்த வசனகர்த்தாவாக இவர் விளங்குகிறார்.

சிந்துபைரவி, புன்னகை மன்னன், சுந்தரசொப்பனங்களு (கன்னடம்) என்கின்ற மூன்று படங்களில் இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் அவர்களுடன் உதவி இயக்குனராக பணியாற்றினார் .

பின்பு குணா, நாயகன், செண்பகத்தோட்டம், ஜென்டில்மேன் காதலன், கிழக்குமலை , மதங்கள் ஏழு,ரகசிய போலீஸ், பாட்ஷா, சிவசக்தி, உல்லாசம், வேலை, ஜீன்ஸ், சிட்டிசன், மஜ்னு, கிங், உயிரிலே கலந்து, மன்மதன், கலாபக்காதலன்,முகவரி, புதுப்பேட்டை,வல்லவன் போன்ற படங்களுக்கு வசனகர்த்தா.

இதில் குணா படத்திற்காக சினிமா எக்ஸ்பிரஸ் விருது தரப்பட்டது. ஜென்டில்மேன், காதலன் இரண்டு திரைப்படங்களும் வசனத்திற்காக பல பத்திரிக்கைகளால் பாராட்டப்பட்டன. காதலன் திரைப்படத்திற்கு மிகச்சிறந்த வசனகர்த்தா என்கின்ற தமிழகஅரசு விருது பெற்றார். சென்னை அரிமா சங்கம்,சிந்தனை செம்மல் என்கின்ற பட்டத்தை 1994ம் ஆண்டு வழங்கியது. காஞ்சிகாமகோடி பீடாதிபதி சதகுரு ஸ்ரீ ஜெயேந்திரர் பாலகுமாரனுக்கு காஞ்சிகாமகோடி ஆன்மீக எழுத்துலக வித்தகர் என்ற பட்டம் வழங்கி கவுரவித்தார்.

தனது 50 வயது வரை தொடர்ந்து திரைப்பட பணியிலும் எழுத்து பணியிலும் பாலகுமாரன் ஈடுபட்டு கொண்டிருக்கிறார்.

பலதரப்பட்ட அமைப்புகளின் சங்கங்களின் பாராட்டு பாத்திரங்களும் விருதுகளும் இவருக்கு தரப்பட்டிருக்கின்றன. வாசகர்கள் இவரை எழுத்தாளர் என்று மட்டுமே கொள்ளாது,வழிகாட்டியாகவும்,குருவாகவும் ஏற்றுக்கொண்டு மிகுந்த உயர் இடத்தில் இவரை பார்க்கிறார்கள்.

உடையார் என்கின்ற தலைப்பில் சோழ மாமன்னர் ஸ்ரீராஜராஜத்தேவரைப் பற்றியும், அவர் கட்டிய பெரியகோயில் பற்றியும் மிக விவரமாய் ஆறு பாகங்கள் கொண்ட 2500 பக்கங்களுக்கு மேலான ஒரு நாவல் எழுத்திருக்கிறார். பிற்காலசோழர் சரித்திரத்தை இன்றைய இளைய சமுதாயத்திற்கு பரிமாறும் மகத்தான முயற்சி இது. மிகுந்த வரவேற்பை பெற்றது. கங்கை கொண்ட சோழன் நான்கு பாகங்கள் எழுதி அமோகமான விற்பனையில் இருக்கிறது.

மன்னர் பாஸ்கர சேதுபதி தொலைக்காட்சி தொடருக்கு திரைக்கதை வசனம் எழுதினார்.

திருமதியர் கமலா, சாந்தா என்கிற இரு மனைவியரோடு வாழ்ந்து வரும் பாலகுமாரனுக்கு செல்வி ஸ்ரீகௌரி,செல்வன் வேங்கடராமன்(சூர்யா) என்கிற இரண்டு மக்கட்செல்வங்களும் உண்டு. செல்வி ஸ்ரீகௌரி எம்.எஸ்.ஸி., பயோ கெமிஸ்ட்ரி முடித்து பேராசிரியையாக சென்னையில் பணிபுரிந்து பிறகு சிரஞ்சீவி கணேஷ் அவர்களை மணந்து ஷார்ஜாவில் வாழ்ந்து வருகிறார்.அவருக்கு ஆகாஷ் என்கிற மகன் பிறந்து வளர்ந்து வருகிறார். படிப்பில் முன்னனியில் இருக்கிறார்.

செல்வன் வேங்கடரமணன் என்கிற சூர்யா வணிகவியல் பட்டதாரி எம்.பி.ஏ முடித்து டாடா கன்சல்டன்ஸி சர்வீஸ் நிறுவனத்தில் அதிகாரியாக பணிபுரிந்து,கலை ஆர்வம் காரணமாக திரை துறையில் உதவி இயக்குனராக மலர்ந்து விரைவில் திரைப்படம் எடுக்க இருக்கிறார்.இவரது மனைவி சுகன்யா Fashion Designer. இவர்களுக்கு செல்வன் வாசுதேவ கிருஷ்ணா என்கிற மகன் இருக்கிறான் .

காதலாகிக்கனிந்து என்கிற கட்டுரை தொடரில் தன் ஆன்மீக வளர்ச்சி பற்றி சுய வரலாறு போல் மிகசுவையாக எழுதியுள்ளார்.இது தனித்த ஒரு வேத புத்தகமாக வளரும் ஆன்மீகர்களுக்கு உதவும். மரணத்திற்கு அப்பால் உள்ள உலகம் பற்றி சொர்க்கம் நடுவிலே என்கிற நாவல் புதிய கண்ணோட்டத்தில் எழுதப்பட்டது. பாகசாலை குருசீடன் உறவின் சிறப்பை சொல்வது. பெற்றோரிடமிருந்து பிரிந்து குரு மட்டுமே சீடனை வளர்க்கும் விஷயம் பேசுவது. வெற்றி வேண்டுமெனில் எளிமையான முறையில் இன்றைய இளைஞர்கள் தங்களை செம்மைப்படுத்திக் கொள்வதற்கான வழிகாட்டி. பகவான் ஸ்ரீ ராமணமகரிஷியின் சரிதம் ஆனந்த விகடனில் தொடராகவும்,பிறகு புத்தகமாவும் வந்து பெரும் வரவேற்பு பெற்றது.

ஆன்மீக சிந்தனைகள் எல்லா வயதினருக்கும் சனாதன சிறப்பை சொல்லும் படைப்பு.ஆன்மீக பெரியோர்களின் வாழ்க்கை வரலாறு வீட்டில் இருக்கவேண்டிய புத்தகம். இதுபோதும் 432 பக்க புத்தகம் படித்தால் போதும் வாழ்வு ரகசியம் புரியும் என்கிற திடத்தோடு எழுதப்பட்டது. மூச்சு மனம் உடல் பற்றிய தொடர்பு விளக்குவது. குருவால் பாலகுமாரன் பெற்ற சூட்சம தன்மைகளை விளங்குவது. 333 அம்மையப்பன் தெரு என்கிற 688 பக்க நாவல், ஆசிரியர் வெகுநாள் இடைவெளிக்கு பிறகு எழுதிய சமூக நாவல்.70ல் அந்தண சமூகம் பற்றிய சித்திரம். சுவையான செறிவான படைப்பு.

ஸ்ரீ கிருஷ்ணாவதாரம் பல்சுவை நாவலில் தொடராக வந்து பிறகு புத்தகமாக வெளிவந்துள்ளது

இரண்டாம் இராஜராஜனை பற்றிய முதல் பாகம் அவனி என்கிற பெயரில் எழுதி வெளிவந்துள்ளது. சோழர் வீழ்ச்சியும் தாராசுரம் என்கிற அற்புத கற்றளி பற்றியும் அதில் விளக்குகிறார்.நான்கு பாகங்கள் வெளியாகும் .

Pearl Harbour தாக்குதல் இரண்டாம் உலக போரில் ஏற்பட்டது பற்றி ஒரு நாவல் எழுதத் திட்டமிட்டிருக்கிறார். அப்போது அந்த நேரம் அங்கு வாழ்ந்த ஒரு தமிழ் சமையல்காரர் பார்வையில் இது எழுதப்படும். மனித குலம் அழிவது பற்றிய கவலையை தெரிவிக்கும்.

மஹாபாரதம் முதல் பக்கம் ஆரண்ய காண்டம் வரை எழுதி வெளியாகிவிட்டது. அற்புதமான நடை. 532 பக்கங்கள். ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் எழுதிக் கொண்டிருக்கிறார் . முதல் பாகம் அச்சில் உள்ளது. இவை எழுதுவது வாழ்வின் இலட்சியம் என்கிறார்.

குடும்பத்தினர்

``தமிழ் பண்டிதை`` அமரர் சுலோச்சனா
திருமதி. கமலா பாலகுமாரன்
திருமதி. சாந்தா பாலகுமாரன்
தமக்கை. சிந்தாரவி
திரு. கணேஷ், திருமதி. ஸ்ரீகௌரி கணேஷ்
செல்வன். ஆகாஷ்
திரு. சூர்யா, திருமதி. சுகன்யா சூர்யா
செல்வன். அயான் (எ) வாசுதேவ கிருஷ்ணா