05.07.2021#எழுத்துச்சித்தர் #பாலகுமாரன் தந்தையுமானவன்,
75 வது பிறந்தநாள் நினைவலைகள்
ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது முதல் முதலாக படித்த பாலகுமாரன் நாவல் “நல்ல முன் பனிக்காலம்”. ‘சரியான சமயத்தில் சரியான வழிகாட்டியை அடைபவர்கள் அதை வரம் என்று உணர்ந்து கெட்டியாகப் பிடித்துக் கொள்பவர்கள் புத்திசாலிகள்’ என்று அவரே சொன்னதை இன்று பூரணமாக உணர்கிறேன்.
அதென்னவோ இளம் வயதில் பாலகுமாரன் படித்தவர்கள் வேறு எந்த எழுத்தாளரையும் அவரளவில் வைத்துக் கொண்டாட முடியவே முடியாது என்று அறுதியிட்டுச் சொல்ல அவர் செய்ததென்ன?
அவர் எழுதவில்லை காகிதம் வழி அச்சு மொழி மனதோடு பேசினார்… மூளையின் நுட்ப அறிவின் திறனை நிரூபிக்க ஒருபோதும் முயலவில்லை மாறாக கண்ணீர் வழியும் தருணங்களில் கைப்பிடித்துக் கொள்ள எழுந்து நடக்க கதைகளோடே கற்றுத் தந்தார். கற்றுக் கொடுப்பதில் கர்வம் இல்லாத கனிவு, ‘நான் இவ்வளவுதான் நானே இப்படி வந்திருக்கிறேன் என்றால் உன்னால் முடியாதா’ எனத் தன் வாழ்வையே தமிழ் இளைஞர் இளைஞிகளுக்காக திறந்த புத்தகம் ஆக்கியவர்.
இரும்புக் குதிரையில் ஏறி மெர்க்குரிப் பூக்கள் நுகர்ந்து கரையோர முதலைகள் கண்டு ஒதுங்கி மனதை உற்றுக் கேட்டால் … பின்நாட்களில் வடிவம் மாறி சொல்லும் பங்கை காலத்திற்கேற்ப மாற்றி வாழ்வை பூவாக்கி கையில் தந்தவர் பாலகுமாரன். இந்த வாழ்வு வாழ்வு என்கிறீர்களே அப்படி என்ன என்று கேட்பவர்களுக்குச் சொல்கிறேன். அதை வாழத்தான் முடியும் சொல்லிக்கொடுக்க அவரால் மட்டுமே முடியும் வேண்டுமானால் கடலோரக் குருவிகள் படித்துப் பாருங்கள். புரியலாம்.
அன்பை, வாஞ்சையை, கருணையை முன்னிறுத்திப் பேசுபவர்கள் எவரும் தொழில்நுட்ப அறிவில், வரலாற்று நடப்புகளை நவீன நுட்பங்களை ஆராய்வதில் சற்றும் சளைத்தவர்கள் இல்லை என்று செல்லமாக காதைப்பிடித்து இழுத்து 70, 80, 90 களின் தலைமுறையை எளிய விலையில் நம்பிக்கையின் எழுத்துக்களை அருகேயே இருக்கின்ற வாழ்க்கைப் பாடங்களை வாசிக்கச் செய்தவர்.
ஆன்மீகப்பிடிப்பில் ஆழ்ந்த சில எழுத்துக்களோடு அந்த வயதில் முரண்பாடுகள் சில ஆங்காங்கே தோன்றும் போதும் குரு என்று மாறிவிட்ட பிறகு அவற்றின் ஆழம் புரியாமல் விமர்சிக்கலாகாது என கைகூப்பி வணங்கச் செய்யும் எழுத்து பாலாவின் எழுத்து. பின்னாளில் தர்க்க ரீதியாக மனம் பக்குவப்பட வெளிச்சமாய் எல்லாம் புரியும்.
உரக்கச் சொல்வேன் பாலகுமாரன் ஒரு இறவா வரம். தமிழ் இலக்கியத்திற்கு வாய்த்த நம்பிக்கை ஊற்று. எத்துணையோ எழுத்தாளர்கள் மாபெரும் சாதனை நிகழ்த்திய ஜாம்பவான்களை விருதுகளைக் குவித்த பிரபலங்களை நீங்கள் உயர எடுத்துச் செல்லுங்கள்.. நான் மெல்லச் சொல்லிக் கொண்டேயிருப்பேன் கண்ணீர் துளியை துடைக்கும்… கைகொடுத்து தூக்கிவிடும் எழுத்து எல்லாவற்றையும் விட மிகப்பெரிது. அறிவின் சுடர் போற்றும் அனைவரும் கடைசியில் ஏங்குவது ஒரு சிறு அணைப்பைத்தான் என்பதை மறுப்பவர் மனிதராக இருக்க முடியாது.
அப்பா.. அப்பா.. என எழுத்துச் சித்தர் பாலாவின் மரணத்தில் அத்தனை நெஞ்சங்கள் கதறக் காரணம் emotional idiots என்பதால் அல்ல. Emotions are made pure by him என்பதால் ஆசான் சொன்னது போல் ஒன்றோடொன்று தொடர்பு கொள்வதே (Communication) உலகம், உறவு என்பதால்.. என் தந்தை ஆசான் குரு என்று பெருமிதமாய்ச் சொல்வேன் பாலகுமாரன் அப்பா எங்களோடுதான் என்றும் இருக்கிறீர்கள்.
#அன்புத்தோழி ஜெயஸ்ரீ
என் பெருமதிற்குறிய ஐயா அவர்களுக்கு,
வணக்கம்.
நான் ரேணுகாதேவி. 86ஆம் ஆண்டு ஜனவரியில் பச்சை வயல் மனது படித்ததிலிருந்து 1-12-17 ல் வந்த யானைப்பாலம் வரை உங்கள் எழுத்துக்களை படித்து உங்களைப் பற்றி வியந்து கொண்டிருக்கிறேன். உடையார் ஒன்று போதும் உங்கள் பெருமையை காலாகாலத்துக்கும் சொல்லிக் கொண்டிருக்க.
போன வாரம் யானைப் பாலம் படித்ததிலிருந்து கிருஷ்ணன் ராமன் அவர்களை சித்தப்பா என அழைத்து அவருடன் கூட இருந்து யானைப்பாலம் அமைத்ததும் நீங்கள்தானோ என்றுத் தோன்றுகிறது. இவ்வளவு விரிவாக, விளக்கமாக அந்தப் பாலம் அமைத்திருப்பதை படித்து வியப்படைந்தேன்.
உங்களால் என் வாழ்வு மேன்மையடைந்தது. என் வாழ்வின் சந்தோஷமான தருணங்களை அடையாளம் காணவும் அனுபவிக்கவும் நான் உங்களால்தான் கற்றுக் கொண்டேன். கடந்த வாரம் முண்டகக்கண்ணியம்மன் கோவிலில் 108 நெய் தீபம் ஏற்றி நேர்த்திக் கடன் நிறைவேற்றி வந்தேன். நீங்கள் அங்கு வரமாட்டீர்களா என ஆவலுடன் காத்திருந்தேன்.
நீங்கள் சென்றமுறை 2006 ல் என் மகனுக்கு டாக்டர் சீட் கிடைக்க வேண்டி முண்டகக்கண்ணியம்மன் பின்புறம் உள்ள நாகர் சாமிக்கு பாலாபிஷேகம் பண்ணி வேண்டிக் கொள்ளச் செய்தீர்கள். என் மகன் விக்னேஷ் திண்டுக்கல் ஜி எச் சில் குழந்தைகள் நல மருத்துவராக பணிபுரிகிறான். திருமணமும் நடந்து விட்டது. உங்களை சந்திந்து ஆசிர்வாதம் பெற்று நாங்கள் குடும்பத்துடன் உங்கள் வீட்டிற்கு வந்திருந்த பொன்னான தருணங்கள் எப்போதும் எங்கள் நினைவிலிருக்கும்.
உங்கள் அன்பிற்கும், ஆசிர்வாதத்திற்கும் எங்களின் மனமார்ந்த நன்றிகள்.
என்றும் அன்புடன்,
த.ரேணுகாதேவி.
அன்புள்ள ஐயா அவர்களுக்கு, தங்களின் சுமதி அநேக வணக்கத்துடன் வரையும் மடல். நலமா? தங்களின் வீட்டில் உள்ள ஏனையோரும் சுகமா? நீண்ட நாட்களுக்கு பின் என் மடல் வரைகிறேன்.
தங்களின் “ராஜகோபுரம்” நாவல் வாசித்தேன், இனிய எளிய தமிழ்ச் சொற்களால் ஒரு கால கட்டத்தில் நாமும் அங்க இருந்திருப்போமோ என்ற நினைவு அலைகளில் நெஞ்சை இதமாய் வருடியது.
வரதன் சிவபக்தனா? இல்லை வைணவனா? என்ற மழைக்கால ஆரம்பத்துடன் இறைக்கு உணவளிக்கும், ஈடு இணையில்லா அவரின் செயல், பின் அவர் காளமேகப்புலவராக கவி எடுத்து நெய்த அந்த எளிய கவிதை சொற்கள்.
கோனேரி நாயரின் அறிமுகம் இப்படிப் பல இடங்கள் புதையல் கிடைத்ததுபோல், ஓர் நினைப்பு உள்ளத்தின் ஓரத்தில் ஊஞ்சலாட்டம் போடுகிறது எனக்கு. நாகப்பட்டினத்தில் ஓர் கோவில் வாசலில் கத்துக்கடல் சூழ்நாகைக் காத்தான் சத்திரம் என்ற பாடல் எழுதியிருக்கும். இதனை பாடியவர் யார் என்று இதுவரை தெரியாது இப்பொழுதுதான் புரிந்தது.
மேலும் நாகை சுட்டிக்குழந்தைகள் அவரிடம் பேசியபொழுது அவர்களைப் பற்றி ஒரு பாடலும் உண்டு. கெட்டி கொட்டைப்பாக்கு என முடியும் அந்தப் பாடலும் அவர்தான் எழுதியது என்று சொல்வார்கள். தமிழ் சாதாரண மொழியல்ல என புரிய வைத்தீர்கள். கந்தாடை வீரநாச்சி, பெருமாள் நாச்சி, சித்ராங்கி, கோனேரிராயன் காளமேகம் இடையில் நானும் இருந்தது போல் தங்கள் படைப்பை வாசிக்கும்பொழுது ஒரு மெல்லிய உணர்வு தங்களின் ராஜகோபுரம்.
நெஞ்சில் ஓர் உயர்ந்த கோபுரமாய் உணர்வளிக்க செய்தமைக்கு நன்றி. மற்றவை தங்களின் ஆசீர்வாதத்துடன்.
எழுத்துச் சித்தர் திரு. பாலகுமாரன்
அவர்களுக்கு,
வணக்கம். நலம்தானே,
உடையார் படித்துவிட்டு அந்த பிரம்மிப்பில் அமர்ந்திருந்த போது சொல்லி வைத்தாற்போல உங்கள் தொலைபேசி அழைப்பு வந்தது. உடையாரில் “ராஜராஜ சோழன் இறந்து போனான். நான் கதறி கதறி அழுதேன். என்னோடு இருபத்தைந்து வருடம் வாழ்ந்தவனல்லவா அவன்” என்றீர்கள்.
உண்மைதான். உடையாரோடு வாழ்ந்திருக்கிறீர்கள். உடையாரின் உடமையாய்த் தன்னை ஒப்புக் கொடுத்த ராஜராஜனை உயிரோவியமாய்த் தீட்டியிருக்கிறீர்கள். அவனது மரணத்தை எழுதிய நிமிஷங்களில் மிகுந்த வேதனையை அனுபவித்திருப்பீர்கள்.
இதற்கு முந்தைய பகுதியில், தன் மரணத்தைப் பற்றி ராஜராஜன் பேச, பஞ்சவன் மாதேவி பதறுவாள். “காலாகாலத்திற்கும் இந்த இராஜராஜன் உயிரோடு இருப்பார். அவர் மரணமடைந்ததாக யாரும், எப்போதும், எதன் பொருட்டும் என்னிடம் தகவல் சொல்ல மாட்டார்கள்” என்பாள்.
ராஜராஜனை ஸ்தூலமாகத் தழுவிக்கிடந்த பஞ்சவன் மாதேவியைக் காட்டிலும் அவன் மீதான உங்கள் காதல் பெரியது. மக்களுக்கு மிக இதமான தலைவனாக ராஜராஜன் இருந்ததை, கருவூர் தேவரின் காருண்ய மழையில் நனைந்ததை, உத்தமமான கணவனாய், தோழமைமிக்க தந்தையாய், குடிமக்கள் மீது வாஞ்சை கொண்ட அரசனாய் ராஜராஜனை எத்தனை கம்பீரமாக சித்தரித்திருக்கிறீர்கள்.
ராஜராஜி வீட்டு வாசலில் போர் வீரர்கள் அலம்பல் செய்ததை எழுதியிருக்கிறீர்கள். இன்று அச்சு அசலாய் அதே கித்தாப்போடு வீடு வீடாய் வாக்கு சேகரிக்க வருகிற சில தொண்டர்கள் நடந்து கொள்கிறார்கள். போதையும் போலிக்கும் பிடுமாய் வலம் வரும் அவர்கள், சோழர் காலத்துப் படைகளின் வாரிசுகளோ என்னவோ!
உடையார் உங்களின் மகத்தான் பங்களிப்பு. சோழர்காலத்தை மீள் மீட்சி செய்திருக்கிறீர்கள். அரசனுக்காக உயிரையும் தர பொதுமக்கள் சித்தமாயிருக்கிறார்கள். குடியாட்சித் தலைவர்களை விடவும், மக்களுக்கு நெருக்கமாக ராஜராஜனும் ராஜேந்திரனும் வாழ்ந்திருக்கிறார்கள் மாளிகைப் பிணக்கில் இருந்து மக்கள் பிணக்குவரை எல்லாவற்றையும் தலையில் தூக்கிப் போட்டுக் கொண்டு திரிந்திருக்கிறார்கள்.
இத்தனை அம்சங்களையும் துல்லியமாகவும், நுட்பமாகவும் விவரித்துக் கொண்டே போகிறீர்கள்.
“உடையார்” நாவலுக்குப் பிறகு ஓர் இடைவெளி விடப் போகிறேன் என்று தொலைபேசியில் சொன்னீர்கள். இறந்து போன உங்கள் நண்பன் ராஜராஜனுக்கு செலுத்தும் சிறிய மௌன அஞ்சலியாய் அந்த இடைவெளி அமையட்டும்.
“புருஷ விரதம்” நாவலில் ஆரம்பித்து சூட்சமமான அம்சங்களை நீங்கள் நாவல் வடிவில் தரத் தொடங்கியது எவ்வளவோ இளைஞர்களை ஆன்மீகத்தில் ஆற்றுப்படுத்தியிருக்கிறது.
உடையார் நாவலின் அத்தனை பாகங்களும், தமிழர் இல்லங்கள் தோறும் இடம்பெற வேண்டியவை. தமிழரின் கலைகளை, கோவில்களை, போர்களை, பருவமாற்றங்களை , கருவூர்தேவர் போன்ற ஞானிகளின் இருப்பை, ஒரு சேரப் படித்துணரும் அற்புதமான அனுபவம் உடையார்.
“உடையார்” நிறைவுப் பகுதி வெளியீட்டுக்காக ஆயிரமாயிரம் வாசகர்களோடு நானும் காத்திருக்கிறேன்.
அன்புடன்,
மரபின் மைந்தன் முத்தைய்யா
ஆசிரியர் நமது நம்பிக்கை மாத இதழ்
திரு பாலகுமாரன் அவர்களுக்கு,
அன்புடையீர்,
தாங்கள் முண்டகக்கண்ணி அம்மன் குறித்து எழுதிய கட்டுரையை சமீபத்தில் படிக்கும் பேறு பெற்றேன். தங்களின் எழுத்தில் காந்தம் இருக்கிறது. கட்டுரையின் மின்சாரம் என் உடல் முழுவதும் பாய்ந்து கோமாவில் இருந்தவன் ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொள்வது போன்றதொரு உணர்ச்சிகளை உசுப்பிவிட்டது. காளஹஸ்தியில் , காளத்தியப்பர் சிவலிங்கத்தின் மீது கொண்ட வெறி;த்தனமான பக்தியைப் போன்றது முண்டகக் கண்ணி அம்மன் மீது நான் கொண்டிருந்த பக்தி.
தங்களின் கட்டுரையைப் படித்ததிலிருந்து அந்த பக்தி ஒரு முறைப்படுத்தப்பட்டு சீராக மாறியது. முண்டகக்கண்ணி அம்மனின் தலவரலாறு அறிந்து நான் அளவிலா மகிழ்ச்சி அடைந்தேன்.
தங்கள் கட்டுரையைப் படிக்கும் சில நாட்களுக்கு முன் எனக்கு உறக்கத்தில் ஒரு கனவு வந்தது. அதன்படி அம்மன் தற்போதுள்ள கர்ப்பக்கிரகத்திற்குப் பின் உள்ள நாகலிங்கத்திற்கு 4 அடியின் கீழ் தெளிந்த தண்ணீரின் மேல் உள்ள அழகிய தாமரைப் பூவில் அமர்ந்திருக்கும் அழகிய காட்சி என் கண்ணில் தென்பட்டது.
எனக்கு ஏற்பட்ட வியப்பு என்னவென்றால் சில தினங்களுக்குப் பின் இதே கருத்தை தாங்கள் ஒரு சொற்பொழிவில் கூற நான் கேட்க நேர்ந்தது. அம்மனின் தல வரலாறு பல பக்தர்களுக்கு தாங்கள் எழுதிய பின்னரே தெரிய வந்தது என்பது உண்மை.
தங்களுடைய எழுத்தின் எளிய நடை பாமர மக்களும் பரிந்து கொள்ளும் வண்ணம் இருந்தது போற்றத் தக்கது. தங்களுடைய நற்பணி இது போன்று மேன்மேலும் தொடர வேண்டும் என்பதே என் போன்ற பாமரர்களின் அவா.
வாழ்த்த வயதில்லை வணங்குகின்றேன் .
இப்படிக்கு பா. இரவிகுமார்,
துணை மேலாளர்,
ஆந்திரா வங்கி ,
அம்மனின் பக்தன்.
அன்புள்ள திரு பாலகுமாரன் அவர்களுக்கு,
கோவையிலிருந்து சங்கர மீனாட்சி எழுதிக்கொண்டது. இந்த கடிதத்தை ஏன்? எதற்க்காக? எப்படி? எழுதுவது என்று கூட எனக்கு தெரியவில்லை. ஒரு உண்மை மனிதருக்கு உண்மையை உணர்ந்த மனிதருக்கு கடிதம் எப்படி எழுதப்பட வேண்டுமென்று தெரியவில்லை.
ஐயா உம்மை நான் அறிந்த விதம் தேவை இல்லை என்றாலும், நாலு வரி அதற்காக,
1. நான் படித்த முதல் புத்தகம் குரு. உம்முடைய உண்மை இறைவனின் உண்மை.அற்புதமான நிகழ்வு.
2. அடுத்து தங்ககை, பேய் கரும்பு, காதற்பெருமான், அரசமரம், என்னோடு பேசுகிறேன் …
3. ஆன்மீக சம்பந்தமாக நீங்கள் எழுதும் புத்தகத்தை விரும்பி தேடுகிறேன்
இந்தக் கடிதத்திற்கான காரணம் இதுவாக இருக்கலாம். குரு என்ற நிகழ்வில் உங்களுடைய நிலையை குண்டலினி எழும் போது நீடித்து நிலைத்து நிற்கும் நான் என்று உயர்ந்த உண்மையை கூர்மையாய் செதுக்கி இருந்தீர் என்று எழுதிருப்பது உண்மை,சத்தியம் என்று தெரிகிறது. ஆனால் உணர முடியவில்லை. சத்தியமாக, உன்னத உண்மைகளை உரைத்த என் வாழ்வில் கிடைத்த பொக்கிஷ நாமங்களான பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணரும் பகவான் ராமணரும் உரைத்த நான் யார்? என்பதிற்க்கான விடையை “நீடித்து நிலைத்து நிற்கும்” நானில் அடங்கிவிட்டது.
ஐயா இந்த லெட்டரை எழுதுறத்துக்குள் நிறைய கண்ணீர் வருது. எல்லா நன்மைகளையும் எனக்கு தந்திருக்கிற இறைவனுக்கு, நான் ரொம்ப உன்னத சத்திய குணத்தோடு இருக்கணும் அல்லவா? நான் மட்டும் நான் யார்? ன்னு உணர்ந்திட்ட என் செயல் எல்லாமே கர்ம யோகம்தான். இந்த கர்மயோகம் வார்த்தை உரைத்தலும் உரைக்கவிட்டாலும் நான் கர்மயோகித்தான்.
ஆம் உங்களுக்கு நீங்கள் யார்? என்று தெரியும் எனக்கும் தெரியப்படுத்துங்க. நிலைத்து நிற்கும் நான் எப்பமுடியும்?.
என்னையே நான் ஏமாற்றமா நடிக்கமா வாழ வழி சொல்லுங்க. ஐயா நீங்க ரொம்ப பெரியவங்க உங்ககிட்டேயிருந்து நான் நிறைய படிக்க வேண்டியிருக்கு. உங்க வார்த்தைகளில் உண்மை இருக்கு இந்த பிறவியில் என் வயது 24, இனியும் இந்த பிறவியில் பலப்பல உண்மைகளை தெரிஞ்சு இந்த பயணத்திற்க்கான படிப்பை படிக்கணும் இல்லையா? தயவு செய்து என் இதயத்தின் ஆழத்தில் உம் வார்த்தைகளின் உண்மைகளை வேர் போல நிற்க எனக்கு பல உண்மைகள் கற்றுத் தாங்க.
அன்புடன்
சங்கர மீனாட்சி . ஆ
கோவை.
என்னை வாசிக்கச் செய்து, நேசிக்க தூண்டி, பூசிக்கவும் வைத்துவிட்ட திரு பாலகுமாரன் அவர்களுக்கு, வயதால் வாழ்த்தி வாய்மையால் வணங்கி இந்தப் பெருக்கோலையை எழுதுகிறேன்
பொலிக நலன்கள்
என் மகன் தங்கள் வாசகன் அதுவும் தீவிர வாசகன். தங்கள் நாவல்கள் எல்லாவற்றையும் வாங்குவான். என்னிடம் காட்டுவான். நான் அதை எல்லாம் சம்பந்தப்படாமல் சாட்சியாகவே இருந்து மட்டும் பார்ப்பேன்.
இப்பொழுதெல்லாம் இலக்கியத்தில் சம்பத்தப்பட்ட எதுவும் இருப்பதாக தெரியவில்லை, அதனால் ஒதுங்கி இருக்கிறேன்.
இலக்கியத்தில் ஓங்கிய விளம்பர பெயராக இருந்த நான், எத்தனை எத்தனை சடுகுடுகள்..? எத்தனை எத்தனை நூல்கள் நூற்றுக் கணக்கில்? எத்தனை எத்தனை சிறுகதைகள் ஆயிரக்கணக்கில்? எல்லாமே கலை கூத்துகள்.
ஸ்ரீ வித்தையை தீவிரமாக உபசரிக்க தொடங்கியவுடன், ஏறி நின்றது கோபுரத்தில் அல்ல, குப்பை மேட்டில் என்ற உண்மை புரிந்தது. மாயை தெளிந்தது.
என்னை எனக்கு காட்டி, எனக்கு அம்மா அருள் செய்த நிலையில் , தாகம் தனிந்த வேளையில், என் மகன் தங்களுடைய என் கண்மணி தாமரையை கொண்டு வந்து கொடுத்தான் வழக்கம் போல.
நான் எப்பொழுதுமே உங்கள் நாவல்களில் அட்டைப் படமாக வரும் உங்கள் உருவத்தை உற்றுப் பார்ப்பேன். உங்கள் பார்வையின் தீட்சண்யம் என்னைச் சுழற்றி அடிக்கும்.
அப்படி நான் வீழ்ந்த போதெல்லாம் உங்கள் பார்வையிலிருந்து எதையாவது எடுத்துக் கொண்டு நிமிருவேன்.அந்த சுவீகரிப்பும் சுகமும் எனக்குப் போதுமானவையாக இருந்தன.
உங்கள் உருவமே எனக்கு அப்படி ஒரு திருப்தியை தந்து விடுவதால் உங்கள் படைப்புக்குள் நுழைய வேண்டிய அவசியமே ஏற்படுவதில்லை.
ஆனால் என் கண்மணி தாமரை ன் அட்டையில் உங்களை பார்த்துக் கொண்டிருந்த பொழுது நீ ஏன் கோபுர வாசலோடு நின்று விடுகிறாய் கர்ப்பக்கிரகம் வரை சென்று பார் என்று எனக்குள்ளிருந்து ஒரு குரல் கட்டளையிட்டது.
நான் உங்களின் பக்கங்களை புரட்டினேன், பிறகு நானே புரட்டி அடிக்கப்பட்டேன். வெந்தழலாய் வெந்தேன். நீராய் புரண்டேன், நானின்றி வான் கலந்தேன். கண்மணி தாமரையாய் மலர்ந்தேன்.
அபிராமி பட்டரின் வாழ்க்கை என்றால் ஒரு பத்துப் பதினைந்து பக்கங்கள் வரலாம். அபிராமி அந்தாதி பாடிய நிகழ்ச்சியை விவரிப்பது என்றால் மேலும் ஒரு பத்து பதினைந்து பக்கங்கள் வரலாம்.
இந்த முப்பது பக்கங்களையும் அர்த்த புஷ்டியாக்குவதற்கு அம்பாள் 150 பக்கங்களில் அலகிலா விளையாட்டு விளையாடி இருக்கிறாள்.
ஸ்ரீ வித்தை ரசமானது, ரகசியமானது.
அதன் ரகசியக் கதவு குரு மூலமாகத்தான் திறக்கப்பட வேண்டும்.இல்லையா?
ஸ்ரீ வித்தையின் பல கதவுகளை திறந்து விட்டிருக்கும் நீங்கள் குரு மூலம் திறக்கப்பட வேண்டிய ரகசிய கதவை மட்டும் திறக்கவே இல்லை. அதுதான் நெறி.
பாலா திரிபுரசுந்தரி மந்திரத்தின் அஃசுரங்களைக் கூட வெளிப்படையாகச் சொல்லலாம். ஆனால் பீஜாசுரத்தை மட்டும் குரு மூலமாகத்தான் பெற வேண்டும்.
பாஷை அதென்ன அப்படியோர் அமானுஷ்யமான பாஷை. அய்யன் சொற்களில் சொக்கி நிற்கும் போது. அந்தச் சொற்களுக்குள் இருக்கும் சூட்சமம், எங்கேயோ தூக்கிக்கொண்டு போய்விடுகிறது.
போன இடம் புரியவில்லை திரும்பி வந்த இடமும் தெரியவில்லை . இன்னும் சரியாகச் சொல்லப் போனால் வந்தோமா வரவில்லையா என்பது கூட விளங்கவில்லை.
நூற்றி தொண்ணூறு பக்க நூலை பத்து பதினைந்து நாட்கள் படித்தேன். சில இடங்கள் என் மூளையை முளை அடித்து கட்டி விடும்.பிறகு அதுவாக என்னை விடுவிக்கும் வரை நான் என்னில் இருக்க மாட்டேன் இருக்கவில்லை.
இது நாவலை வரலாறு ஆன்மீக கருவூலமா அபிராமபட்டரே தன்னை சொல்லிக் கொள்வதற்க்காக பாலகுமாரனுக்குள் இருந்து வெளிப்படுத்திய குரலா? இன்னது என்று சொல்ல முடியாத அளவுக்கு எல்லாமுகமாகிப் பாலித்த அற்புதம் இது.
பெரிய தேரை சிறிய வடத்தைக் கொண்டு இழுப்பதை போல ஒரு பிரம்மாண்டத்தை இலகுவாக்கி சாமானியரும் புரிந்து கொள்ளக் கூடிய எளிய பாஷையில் சினிமா ஷூட்டிங் ஸ்கிரிப்ட் முறையில் சொல்லி இருக்கிறீர்கள். உண்மைதான் உங்கள் எழுத்திலும் அதே ரீங்காரம் ஒலிக்கிறது வெளியே அல்ல உள்ளே.
அது உங்கள் குருநாதர் உங்களுக்குள் கொடுத்த வரம் ரீங்காரம் இந்த ரீங்காரம் உடல் தாண்டும் காலம் முழுமைக்குமான ஆக்கத்தைச் சுமக்கும் தாய் இந்த ரீங்காரம்.
யாரும் யாரையும் நம்பாத காலம் இது.
லட்சக்கணக்கான பிரதிகளை விற்கும் வியாபார பத்திரிக்கைகள் தங்கள் வாசகர்களை சுத்தமாக நம்புவதில்லை அதனால்தான் வைரம் தங்கம் புடவை என்று ஏலம் போட்டு வாசகர்களை இழுக்கப் போட்டி போடுகின்றன.
ஆனால் நீங்கள் வாசகர்களை நம்புகிறீர்கள். அவர்களை பெரிய வித்வத் சதஸில் உட்கார வைத்து ” என் கண்மணி தாமரை “யை மனம் குளிர கை குளிர சம்பாவனை செய்கிறீர்கள் இவ்வளவு பெரிய நம்பிக்கை வேறு யாருக்கு வரும். பிறர் உயர எவன் தோள் கொடுப்பான்.
இந்த நாவலைப் படித்த ஒரு சிலரால் நாட்டில் தர்மங்கள் போற்றப்படும்.
சரி இதை படித்த பிறகு ஒரு நவாபரான பூஜை செய்தது போன்ற சந்தோசம் எனக்கு.
பாலகுமாரன், நான் இதுவரை இப்படி ஒன்றைப் படித்ததில்லை இனி படிக்க முடியுமா என்பது கேள்விக்குறிதான்.
ஐம்பத்து ஐந்து ஆண்டு காலமாக எழுதிக்கொண்டு வரும் நான் சொல்கிறேன் இதை போல இன்னொன்று இல்லை இதற்க்கு மேலே எதுவும் இல்லை.
ரஸித்ததை பொறாமை காரணமாக பாராட்டாத ஒருவன் கொலைகாரனுக்கு சமமாவான். என்று ஒரு சம்ஸ்கிருத ஸ்லோகம் சாட்டை வீசுகிறது
அந்த சாட்டை என் மீது விழாமல் இருக்க அந்த ஸ்லோகக்காரனின் காதில் விழும்படி உரக்க கூவுகிறேன்
பாலகுமாரன் நீ உன்னதமானவன்
எல்லாவற்றிலும் இருந்துகொண்டே
எல்லாவற்றையும் கடந்து நிற்கும் ஞானி நீ
உன் எழுத்து வேதம்
ஐந்தாவது வேதமாக அதை உலகம் பயிலும்
உன் வேதம் வெல்க .
அன்பு ஐயா திரு. பாலகுமாரன் அவர்களுக்கு
வணக்கம் நான் நலம், நாடுவதும் அதுவே.
ஒரு இன்ப அதிர்ச்சியிலிருந்து இன்னும் விடுபட இயலாமல் விடுபட விருப்பமின்றி இந்த மடல் வரைகிறேன்.
23 .11 .2014 ஞாயிற்றுக் கிழமை நெருப்பு குளித்து, பின் நெஞ்சு குளிர்ந்த நன்னாள். என் வாழ்வில் மறக்க முடியாத ஒரு திருநாள். உங்கள் அன்பும், ஆசியும் ஒருங்கே பெற்ற உன்னதமான நாள் . அப்பன் யோகியை பற்றி அதிகமாக புரிந்து கொண்ட நாள். அவர் மேல் வைத்திருந்த நம்பிக்கை என்னும் திரவம் வஜ்ஜிரமாக இறுகி இதயமாகிய நாள். அத்தனையும் உங்கள் அருளுரையை அனுபவித்து கேட்டதால் வந்தது.
ஒரு சிறிய flash back. உங்கள் நாவல்களை எல்லாம் படித்திருக்கிறேன். ஒரு அழுங்கல் குலுங்கல் இல்லாமல் கதை முடிந்ததில்லை. சண்டாளன் என்னமா எழுதுறான்? இவன் பிறந்தானா? வானிலிருந்து வழுக்கி விழுந்தானா? என்று செல்லமாய் சினுங்கியதுண்டு. உங்கள் எழுத்தின் அதிர்வுகள் அப்படி.
மனதில் ஒரு வைராக்கியம் வந்தது. எப்படியேனும் ஒரு நாள் இவரை சந்தித்து நண்பனாகி நம் பகவானைப்பற்றி பேச வேண்டும். அவரோடு இவருக்குள்ள அனுபவங்களை தங்கச் செம்பில் கறந்து குடிக்க வேண்டும்” என்று ஒரு வைராக்கியம். நம் பகவனிடமே விண்ணப்பித்தேன். உள்ளே வைராக்கியம் நெருப்பு உழன்று கொண்டேயிருந்தது.
நீங்கள் ஒரு நாள் என் தொலைபேசியில் வருகிறீர்கள் ” திருமலை நம்பி, பாலகுமாரன் பேசுகிறேன், உங்கள் காலெண்டர் அருமை எனக்கு ஒன்று தர முடியுமா?
பசித்த கன்று பாலுக்கு அழுகையில் எதிரில் புடைத்த மடுவுடன் தாய் பசுவா ?
ஆடிப்போனேன் ஐயா ஒரு நிமிடம் தடுமாறிப்போனேன் ஐயா .
அத்தனையும் அப்பன் யோகி : உங்களுக்கு பெருமாளைத் தடவிப் பார்ப்பது போல, நரசிங்க பெருமாள் தரிசனம் போல, திருப்பதி வெங்கடாஜலபதியின் மூன்று மணி நேர தரிசனம் போல எனக்கு உங்கள் அறிமுகம்.
பின் அந்த நட்பு என் முகமே தெரியாமல் தொலைபேசி வழியே வளர்ந்து வளர்ந்து “தேடி கண்டு கொண்டேன் “என்னும் தெய்வீக சாரல் பெய்து, நான் நனையும் அளவிற்கு வந்தது. அப்பன் செயலின்றி வேறென்ன ?
அன்றய (23.11.2014)என் மன நிலை ஒரு வெற்றிடமாகத்தான் இருந்தது. என்ன நடத்ததென்றே எனக்கு நினைவில் இல்லை. அந்த வீடியோ வை இன்று தான் பார்த்தேன். கோமாவிலிருந்து மீண்டவன் போல் பரவசப்பட்டேன்.
Chance யே இல்லை ஐயா. என்னமாய் பேசியிருக்கீங்க?எத்தனை ஆழமான கருத்துகள்? எத்தனை தெளிவான பார்வை ? எத்தனை கேள்விகள்? எத்தனை கேலி ? எத்தனை ரம்மியமான பாட்டுகள்? முடிவில் கேள்வி பதிலாய், முத்தாய்ப்பாய் முடிவுரை. சூப்பர் சூப்பர் …. “நீர் நீர் தான் உணர்ந்து உணர்ந்ததை உரைக்க உன்னை விட்டால் யாரும் இல்லை என் இனிய பலகுமாரனே…. இனியும் இல்லை …”
அந்த வீடியோ பதிவைக் கண்டு மகிழ்ந்து கிறங்கி கொஞ்சம் கர்வத்தோடு கத்துகிறேன்” நீங்கள் பகவானை பற்றி எங்கு பேசியிருந்தாலும் இதை போல் புதுக்கோட்டை போல் எங்கும் வந்திருக்க வாய்ப்பில்லை.
நீங்கள் வாயார மனதார வாழ்த்தி எனக்கு சால்வை அணிவித்து மாலையிட்டதில் மயங்கி போனேன். ஐயா இது என் யோகியின் வாழ்த்து. என் இனிய பாலகுமாரனின் ஆசிர்வாதம். இது கிடைப்பதற்கரிய பெரும் பேறு. என் ஆயுள் முழுவதும் இதன் வசம் நிறைந்திருக்கும் என் உள்ளத்தில்.
25.11.2014 (செவ்வாய் ) நீங்கள் சென்னை சென்ற பின்னால் காலை என்னோடு தொலைபேசியில் பேசும் பொது “அன்பு அண்ணன் திருமலை நம்பி “வணக்கம். பாலகுமாரன் , பகவான் உனக்கு வைத்த test ல் நீ பாஸாகிவிட்டாய் நம்பி. என்று கூறும் பொது உயிர் போய் உயிர் வந்தது ஐயா. இப்படியா ஒருவன் நெஞ்சை அடைத்து திறப்பது? என் பகவானே ஆசிர்வதித்ததாக உணர்ந்தேன்.
நன்றி ஐயா . விமானம் ரத்தாகியதை காரணம் காட்டி நான் வீட்டிற்கு செல்கிறேன் என்று தாங்கள் கூறினால் நான் என்ன செய்ய முடியும் ? தனியே அழுவதை தவிர வேறு வழி?
ஆனால் அப்படிச் சொல்லாமல் வீட்டிற்குச் செல்லாமல் எப்படியும் புதுக்கோட்டை சென்று பேசியே தீருவேன் என்று உங்களது பெருந்தன்மை எப்படி நன்றி சொல்ல முடியும்? நீங்கள் அன்று வராவிட்டால் அந்த சபை நிறையுமா? அதற்காக உங்களுக்கு கோடானகோடி நன்றிகள் ஐயா.
மறுநாள் 24.11.2014 அன்று உங்களோடு திருச்செந்தூர் சென்று முருகனை வழிபட்டதும், வள்ளிக் குகையின் வாசலில் எனக்கு நீங்கள் நெற்றியில் திருநீறு அணிவித்ததும், நான் செய்த பெரும் பாக்கியம் அல்லவா?
இந்த நட்பு நான் வாழும் வரை தொடர என் அப்பன் யோகியை சத்குருநாதனை மனதார வேண்டி மடல் முடிக்கிறேன்.
நன்றி வணக்கம்
பின் குறிப்பு :(அந்த DVD உங்களுக்கு பின்னால் தபாலில் வந்து கொண்டிருக்கிறது)
என்று அன்புடன் உங்கள்
(S. திருமலை நம்பி)
புதுக்கோட்டை
யோகி ராம்சுரத்குமார்
இந்தப் பரதகண்டம் தன்னுள் அடக்கிக் கொண்டிருக்கும் ஆச்சர்யங்களில் மிகப் பெரிய ஆச்சர்யம் ஆனந்தமாக வாழ்வதற்கான அணுகுமுறையை வாழ்க்கையோடேயே சொல்லிவைத்திருப்பது. ஞானிகளுக்கு வசப்பட்ட வாழ்க்கை சூத்திரங்கள் சாமான்யர் களுக்கு வெகு தூரமாகவே இருந்திருக்கிறது. வாழ்க்கையில் நீள அகலங்களுக்குள் அகப்படாமல் இருக்கும் எத்தனையோ விசயங்களில் துள்ளித் துவளவைக்கும் துன்பம் முதலிடமே வகிக்கிறது. துன்பத்தை துரத்தியடிக்கும் வாழ்க்கைச் சூத்திரங்களை நம் வாசல் வரை எடுத்து வருவதற்கு கடவுள் எழுத்துச் சித்தரைப் போல ஒரு சிலரை மட்டுமே தேர்ந்தெடுக்கிறார் என்றே தோன்றுகிறது. Yes, அவர் பகவான் யோகி ராம்சுரத்குமார் அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.பகவான் யோகி ராம்சுரத்குமார் “பால்குமார் இஸ் மை பென். His writings will be remembered here for long long time” என்று சொன்னது “இது போதும்” என்ற இந்த புதினம் படிக்கும்போதும் உணரப்படும்.
“இது போதும்”.
“உளமே புகுந்த அதனால்” என்ற கோளறுபதிகப் பாடலோடு தொடங்குகிற புதினம் உள்ளுக்குள் புகுந்து பந்து விளையாடுகிறது.உடலின் வலிகளுக்கு ஓடி ஓடி மருந்து தேடும் உலகம் மனதின் ரணங்களுக்கு மருந்து தேடுவதும் இல்லை தேடி ஓடுவதும் இல்லை. இந்த வாழ்க்கையில் கவலையோ துன்பமோ மனது கிரகித்துக் கொண்டதாகவோ அல்லது அனுமானித்துக் கொள்வதாக மட்டுமே இருக்கிறது என்று ஆணி அடித்துச் சொல்கிறார். ஆணி என்பது வார்த்தை மட்டுமல்ல. நிஜமாகவே அடிக்கிறார்.அவரின் வரிகளில்
“மனம்தான் உங்களை அழவைக்கிறது.என்னை இழிவு படுத்தி விட்டார்கள்.என்னைப் புறக்கணித்து விட்டார்கள்.என்னை வசை பாடி விட்டார்கள் என்றெல்லாம் புலம்புகிறது. வசவை, இழிவை,புறக்கணித்தலை ஏற்க மறுக்கிறது.என்னைக் கொண்டாடு.என்னைக் கவனி.என் பேச்சைக் கேள்” என திமிறுகிறது.அதற்கு உங்களைத் தயார் செய்து கொள்ள வேண்டியிருக்கிறது.” தயார் செய்வது எப்படி ?.
”இது போதும்” விரல் பிடித்து அழைத்துப் போகிறது. ஒரு அத்தியாயம் முடிந்து அடுத்த அத்தியாயம் போகும்போது ஒரு வயது கூடியது போல பக்குவம் வந்து விடுகிறது.இது எப்படிச் சாத்தியம்?.சத்தியமான தீர்வுகள் அப்படித்தான் அதிசயங்கள் நடத்தி விட்டுப் போகும். சிறிய விதைநெல்குவியல் வீடு முழுவதையும் அரிசியைக் குமிப்பதில்லையா?..அதுபோலவே. அதனை உணரத்தான் கொடுப்பினை தேவை.இது போதும் வாழ்வின் பிரச்சினைகளுக்கு மருந்து. எழுத்துச் சித்தர் தனது சத்தியமான தீர்வுகளுக்கு “இது போதும்” என்று தலைப்பு தாங்கி தந்து இருக்கிறார்
எழுத்துச் சித்தர் “இப்படியெல்லாம் கல்லை உடைத்தால் சிற்பம் வரலாம்” என்று ஏட்டுச்சுரக்காய் சொல்லவில்லை.. தானே கல்லாக இருந்து தானே உளியாக இருந்து,வலி தாங்கி,வைராக்கியம் தாங்கி,குருவருளால் நுண்மையாக தன்னைச் செதுக்கிக் கொண்டதால்,தெளிவாகச் சொல்கிறார்.”இது மனம் என்ற கல்.நாடி சுத்தி முதல் உளி.இப்படி உடைக்கவேண்டும்.வா சொல்லித்தருகிறேன்.நீ உன்னை சிற்பமாகச் செதுக்கி விடலாம்.கல்லாகவே இருந்து கஷ்டப்படாதே என்று சொல்வதோடு. வெறும் கல்லாக இருந்தால் நாய் கூட உன்னை அசிங்கம் செய்யும் என்று பதைபதைத்து, அசிங்கப் பட்டு விட்டாயா? இதுதான் துணி.நானே துடைத்து விடுகிறேன்..இனிமேல் இப்படித்துடைத்துக் கொள் என்று ஒரு அத்தியாயம் சுத்தப் படுத்திவிடுகிறது. அடுத்த அத்தியாயம் உளியைக் கையில் கொடுத்து நம்மை நாமே செதுக்கச் சொல்லிக் கொடுத்துவிடுகிறது. எவ்வளவு பெரிய பாக்கியம்.இந்த புதினம் படிப்பது. பகவானே! உன் பாதங்கள் பணிகிறேன் .நன்றி!படித்து முடிக்கும் ஒவ்வொருவரும் இதைச் சொல்வார்கள் தான்.
உணவு ஒழுக்கம் பற்றி விளக்குமிடத்தில் சொல்கிறார்.
”வயிறு அமைதியாக வைத்துக் கொள்ள மூளை என்பது விழிப்பாக இருக்க மனம் என்பது கூர்மையாக இருக்கிறது..ஆகா ஏதேதோ விஷயங்கள் மனதைச் சார்ந்திருக்கின்றன.குறைவான உணவானது கவனமாக யோசிக்க வைக்கிறது” யாரும் புரியும் படி சொன்னதே இல்லையே அய்யா.. பூரி கிழங்கு எந்தக் கடையில் நல்லாருக்கும் என்றுதானே ஓடிக்கொண்டிருக்கிறோம்.இந்த ஓரிரு வரிகளும் எத்தனையோ பேர் வாழ்க்கையை மாற்றிவிடுமே.. இதை உணர்ந்து படிப்பவர்கள் உயர்வது நிச்சயமே.
கீழே வரும் எழுத்துச் சித்தரின் வரிகள் படிப்பவனோடு பயணித்து அவனின் யதார்த்தமான எண்ணங்களுக்குக் மதிப்புக் கொடுத்து விட்டு பின் தீர்வு சொல்கிறது
“கடவுளே கடவுளே இங்கு வாழ என்னவெல்லாம் யோசிக்க வேண்டியிருக்கிறது.எவ்வளவு பெரிய துக்கமிது.ஒரு புளிய மரம்போல இருந்து விட்டுப் போகலாகாதா?ஒரு புலியைப் போல தின்றோம் தூங்கினோம் என்று இருக்கக் கூடாதா?..என்ன வாழ்க்கை இது. மூச்சைக் கவனித்தல்.உடம்பைப் பேணுதல் மனம் என்பதோடு வாழ்தல் இந்த மனித குலம் மட்டுமே சந்ததிக் கொண்டிருக்கிறது”
“மனிதனுக்கு மட்டுமே என்று கவனித்து மனதைச் சீர் செய்து கொள்வோம். இது போதும் என்பது என்னை அறியும் அறிவு போதும் என்பதாகவே த்வனிக்கிறது.இது சாதாரண அறிவல்ல.மிகப் பெரும் அறிவு.இது தெரிந்து கொண்டால் போதும்..இது அடைந்தால் போதும் .அடைய என்னவெல்லாம் அறிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.”இதுபோதும்” என்ற நிறைவை நோக்கியே ….
அன்றாட வாழ்க்கையில் இல்லக் கடமைகளை செய்து கொண்டிருக்கும் இல்லத்தரசிகளும் மிகப்பெரிய அலுவலகத்தில் உயரதிகாரியும் கவலைப்பட்டுக் கொண்டுதானே இருக்கிறார்கள். உலகம் முழுமைக்கும் காய்ச்சலுக்கு மருந்து PARACETAMOL .தான். “கவலைக்கான மருந்தும் மன ஆரோக்கியத்திற்கான மருந்தும் ஒன்றாகவே இருக்க முடியும்” என்றோ? “அது எது?” என்றோ தேடத் தெரியாதவர்களுக்கும் தேட முடியாதவர்களுக்கும் “இது போதும்” மட்டுமே போதும்.
கோடிகளில் புரள்பவனும், கோடி வீட்டில் இருப்பவனும் துன்பம் என்ற விஷயத்தில் துடித்துத்தான் போகின்றான்.இன்றைய இயந்திர வாழ்க்கை உடல் உழைப்பை அபேஸ் செய்துவிட்டது. வரும் காலங்களில் துணி துவைப்பது என்பது முடியவே முடியாதது என்றாகிவிடும். Washingmachine என்ற விசயம் வாரிச்சுருட்டிக் கொண்டு போய்விட்டது. இது போலவே அமைதியாகவும் ஆனந்தமாகவும் இருப்பதற்கு வாழ்வியல் பூக்களை பூத்துக் கொடுத்துக் கொண்டிருந்த இந்த தேசத்து நாகரீகம் எல்லாவற்றையும் மறந்துவிட அதை ஞாபகப்படுத்தி அனைவருக்கும் எழுத்துச் சித்தர் “இது போதும்” மூலம் சொல்லிக் கொடுக்கிறார்
ஒரு தகப்பன் தன் மகனுக்கு சைக்கிள் கற்றுக் கொடுத்துவிடலாம் ஆனால் ஊருக்கே சைக்கிள் ,அதுவும் ஒரே நேரத்தில் ஒரே வேகத்தில் கற்றுக்கொடுக்க வேண்டிய சவால் இருந்தால்?சவாலில் ஜெயிப்பதற்கு சத்தியம் மட்டுமே கையில் எடுத்துக் கொண்டு எழுத்துச் சித்தர் வாழ்க்கைச் சைக்கிளை விழாமல் ஓட்ட..சிராய்ப்புகளை புறம் தள்ள
கிளிப்பிள்ளைக்கு சொல்லிக்கொடுப்பதைப் போல சொல்லிக் கொடுக்கிறார்.
அந்தச் சத்தியம் மட்டும் தான், கற்றுக் கொள்பவனே கற்றுக்கொண்டு ஜெயிப்பதற்கான ஆசீர்வாதத்தை தரமுடியும். Only the blessed ones will get a chance to read “இது போதும்”.
எழுத்துச் சித்தர் எல்லாவரிகளிலும் .“இது புரிய வேண்டுமே இது புரிய வேண்டுமே” “புரிந்து கற்றுக்கொள்ள வேண்டுமே கற்றுக்கொள்ள வேண்டுமே” கற்றுக்கொண்டு தொடர்ந்து “பயிற்சி செய்ய வேண்டுமே பயிற்சி செய்ய வேண்டுமே” பயின்றதை பயன்படுத்த வேண்டுமே என்று தவித்திருக்கிறார். எப்படி படிப்பவர் பயன்படுத்த முடியும் என்பதற்கு உதாரணங்களை உள்ளுக்குள் ஓடி ஓடி தேடி எடுத்து வந்து தெளிந்த நீரோடையில் தெரியும் மீன்களைப் போல கண்களால் காண வைத்திருக்கிறார்.
முதலில் வரும் அத்தியாயங்களில் நெறிமுறைகளை சொல்லிக் கொடுத்துவிட்டு,அடுத்து வரும் அத்தியாயங்களில் தான் எவ்வாறு கடவுளைத் தேடினேன் என்று சொல்கையில்,அவரைப் போலவே ஜெயிக்க வேண்டும் என்ற வெறியும் வைராக்கியமும் வந்து விடுகிறது. இதைத்தான் “இது போதும்” எதிர்பார்க்கிறது .எழுத்துச் சித்தருக்குக் கிடைத்தது போல கௌடியா மடத்து பிரமச்சாரி எல்லாருக்கும் வேண்டும் என்று மனம் பிரார்த்திக்கிறது.
மந்திர ஜபங்கள் மூலம் உன்னைத் தயார் செய்து கொள்ளவே முடியும். எல்லைக் கோட்டிற்கான பாதை மட்டுமே அது, அதுவே எல்லைக்கோடு அல்ல. ஆனால் பாதையில் நின்றால்தானே பயணத்தைத் துவக்கமுடியும்.நான் இப்படித்தான் துவங்கினேன்.இங்கு சறுக்கினேன் என்று சொல்லிவிடுகிறார்.இங்கே விபத்து தடுக்கப்படுகிறது.விழாமலும் சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொடுக்கிறார்..ஆனால் நீ தான் ஓட்டத் துவங்க வேண்டும் என்று உச்சியில் அடித்துச் சொல்கிறார்.
புத்தகயாவில் அவரின் ஆன்மீக அனுபவம் படித்து முடிக்கையில் அவர் இருக்கும் திசை நோக்கி கை கூப்பிவிட்டு கயா போக வேண்டும் என்ற கிளர்ச்சி எழுந்து விடுகிறது .இப்படித்தான் நடக்கும் போல சில சங்கிலித் தொடர்வுகள். கயா செல்லத் தேர்ந்தெடுக்கப்பட்ட மனிதர்களில் “இது போதும்” புதினம் படிப்பவர்கள் பெயரும் இருக்கக்கூடும்.
ஏழாவது அத்தியாயம் படித்தவுடன் “Jesus of Nazareth” படத்தையும், ஜீ.வீ.அய்யரின் படங்களையும் தேடத்துவங்கி விடுகிறது மனசு.
நடக்க வேண்டிய இடத்திலும், ஓடிக்கொண்டிருக்கும் நாகரீக உலகத்தில்,ஓட வேண்டிய இடத்திலும் நிதானமாக நடந்து சென்று சாதிக்கமுடியும் என்ற நம்பிக்கையை இந்தப் புதினம் சொல்லித்தருகிறது.
ஒன்று நிச்சயம்.”இது போதும்” படிப்பதற்கு முன்பு. “இது போதும்” படித்ததிற்கு பின்பு. என்று படித்து முடிப்பவர்கள் தங்கள் வாழ்க்கையை பிரித்துப் பார்க்க முடியும். நிலாவை வானத்தில் மட்டுமே அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்த நாமே ஒரு நிலவைச் செய்து மாட்டிக் கொள்ள முடியுமா?.முடியும். “எது செயல்முறை.?” “இதுபோதும்” தான் செயல்முறை. நிலா என்பது ஆனந்தமான வாழ்க்கை.
படித்து முடிக்கும் எல்லோருக்குள்ளும் பௌர்ணமி நிலா வீச பகவான் யோகி ராம்சுரத்குமார் அருள் புரியட்டும்.எழுத்துச் சித்தரின் வரிகளை வாசிப்பது மிகப் பெரிய வரம்.அது நிறையப் பேருக்குக் கிடைக்கட்டும்.“இது போதும்”.இது மட்டுமே போதும்.
முதல் முறையாக தட்டச்சில் பதிவாக இருக்கும் எழுத்துக்களாக இருப்பதால் சற்று நடுக்கத்துடன் விரல்கள் வேலை செய்து கொண்டிருக்கின்றன.
ஒரு தந்தையுடன் இருந்த உணர்வை தாண்டி, பாசத்தை தாண்டி, காதலை தாண்டி, ஒரு எழுத்தாளனாக நான் கண்ட பாலகுமாரன் SIRஐ பற்றியே இது இருக்க விரும்புகின்றேன். தவிர்க்க முடியாமல் சில இடங்களில் காதல் எட்டி பார்த்தால் அதற்கு அவரின் எழுத்துக்களே காரணம்.
நான் பொதுவாக புத்தகம் படிக்க ஆரம்பித்த காலத்தில் இருந்த நோய்களும் அதன் பெயர்களும் அவ்வளவு பரிச்சயமாக இருந்ததில்லை.
கடல்தாண்டி, கிராமம் தாண்டி, தெப்பக்குளத்தின் அழகை தாண்டி, கபாலியை தாண்டி ஒரு நோயின் பெயர் மட்டும் மயிலாப்பூர் வருவதற்கு தினத்தந்தி தேவைபட்ட காலம்.
பாடப் புத்தகத்தை திறந்தால் எழுத்துக்கள் சரியும். நினைவுகள் கமல் சாரின் BULLET BIKE கிலேயே இருக்கும். ஒரு வரி படித்து முடிக்க அதன் அர்த்தம் புத்திக்கு எட்ட நிறைய நேரம் ஆகும்.
ஒரு பக்கம் புரட்டினால் அது PHOTOGRAPH ஆக மனசுள் பதிய வேண்டும் என்று தவறாக சொல்லிக் கொடுக்கப்பட்டது. இன்று வரை எனக்கு முதல் குறளின் கிழிந்து போன தமிழ் TEXT BOOKஏ தான் மனதில் இருக்கிறது.
வள்ளுவர் இல்லை… அர்த்தம் இல்லை… பொருள் இல்லை… பாடப்புத்தகத்துக்கே இந்த கதினா… சின்ன SIZE ல வந்த பாக்கெட் நாவல் மற்றும் நாவல் டைம் எம்மாத்திரம்.
காலம் போன போக்கில், ஒரு புத்தகத்தின் அருமை வெறும் ரயிலில் பயணிக்கும் சக பெண் பயணியை கவரும் ஒரு SET PROPERTY யாகவே எனக்கு இருந்தது. போதா குறைக்கு ஆங்கிலம் வேறு. தமிழே தள்ளாடும், ENGLISH மட்டும் வெரச்சு நிக்குமா?”
கண்ணோரத்தில் பெண்ணை FOCUS செய்து OUT OF FOCUS ல் ஒரு வரி படிக்க மூனேமுக்கால் மணிநேரம் ஆகும். அதன் அர்த்தம் புத்தியில் எட்டுவதற்கு மூன்று நாள் ஆகும்.
எனக்கு புரிந்த அந்த ஒருவரியின் அர்த்தம் தவறு என்று தெரிந்து கொள்ள 3 வருடம் ஆகியது….
LOLITA. LIGHT OF MY LIFE, FIRE OF MY LIONS, MY SIN, MY SOUL. THE TIP OF THE TONGUE. TAKING A TRIP OF THREE STEPS DOWN THE PALATE TO TAP, AT THREE ON TEETH. LO-LEE-TA. வெறும் TONGUE TWISTER ஆக இருந்தது. இன்னும் பெரிய வசனம் இது.
மனப்பாடமாக ஏற்ற இறக்கத்துடன் இதை அனுபவித்து நடித்துக் காண்பித்த அப்பாவை ஆச்சர்யத்துடன் பார்த்ததுண்டு. முதல் குறளுக்கு அப்புறம் நான் மனதில் புகைப்படம் எடுத்தது இந்த வாசகம்.
இந்த வயசுல இது புரியாது, வேற படி என்று SYDNEY SHELDON ஐ புத்திக்குள் வைத்து அழுத்தி அறிமுகப்படுத்திய அக்கா ஏமாந்து போனதே மிச்சம். SYDNEY SHELDON ஏ புரியலன்னா உனக்கு பாலகுமாரன் ரொம்ப கஷ்டம் என்று BACK அடித்தாள்.
வீட்டிற்கு வந்தவர்கள் நீங்க அப்பாவோட எந்த BOOKS லாம் படிச்சிருக்கீங்க என்று அவளை பார்த்து கேள்வி கேட்டவுடன் எனக்கு பயம் TYPE அடிக்க ஆரம்பிக்கும்.
சின்ன பையன் இன்னும் கொஞ்ச நாள் ஆகும் என்று தட்டிக்கொடுத்த ஜீவிகளை தாண்டி ஒன்னு கூட படிச்சதில்லையா என்று ஆச்சர்யப்பட்டவர்களே அதிகம். அதிலும் பலர் பெண் வாசிகள்.
அப்பா BOOK ஒன்னு கூட படிச்சதில்ல? வேண்டாம் படிக்காத… படிச்சா ADDICT ஆயிடும் என்று கன்னத்தை கிள்ளி கள்ள சிரிப்பு விட்டுச் சென்ற அழகான ஒரு வாசகியின் மீது கோவம் மட்டுமே வந்தது.
எப்படி TWO WIVES ஓட ஒரே வீட்ல இருக்கீங்க பாலா என்ற அச்சு பிச்சு கேள்வியை கிறக்கமாக கேட்க தெரிந்த உனக்கு அவர் கூறிய பதில் என்னவாக இருக்கும்?
எதுவாக இருந்தாலும் என் கோவம் அச்சு பிச்சு கேள்வியில் மட்டுமே இருந்ததால் பதிலில் கவனம் இல்லை. அது ஒரு COMMON ADOLECENT WOMEN ன் கேள்வியாக எனக்கு தெரியவில்லை.
POSSESIVENESS ன் PEAK ல் ஒரு நாள் அருவாமனையில் (WRONG TIMING ) காய் நறுக்கிக் கொண்டிருந்த அம்மாவிடம் அன்று வந்த வாசகியை பற்றி LIGHT ஆ வத்தி வைத்துவிட்டு, அந்த அச்சு பிச்சு கேள்விக்கான பதிலையும் கேட்க, அதிகப்ரசங்கி என்ற பட்டத்திற்கு அப்புறம் எனக்கு கொடுக்கப்பட்ட முதல் புத்தகம் “என்றென்றும் அன்புடன்.”
முதல் இரண்டு பக்கம் தாண்ட முடியவில்லை. ஆனால் இந்த முறை வார்த்தைகள் சரியவில்லை. கோவத்தின் காரணமாக கவனம் சிதறவில்லை. சிதறவிடவில்லை. ஒரு வாரம் தலையில் வைத்து படிக்க புத்தகம் முடிந்தது. ஆனால் புரியவில்லை.
மறுபடியும் படித்தேன் – சுமார்- மறுபடியும் படித்தேன் காட்சி விரிந்தது. மறுபடியும் படித்தேன் என் வீடு விரிந்து விசாலமாகியது. மறுபடியும் படித்தேன் – ஸ்ரீனிவாசன், பாலகுமாரனாகவும் மற்ற அனைவரும் என் வீடாகவும் தெரிய விக்கி விக்கி அழுதேன்.
அற்புதமான ஒரு இடத்தில் நாம் பிறந்திருக்கிறோம் என்று உணர்ந்தேன். எவ்வளவு பெரிய SACRIFICES, எவ்வளவு பெரிய சோகம், எவ்வளவு உண்மையான இடத்தில் நாம் பிறந்திருக்கிறோம் என்று புரிந்து துடிக்க ஆரம்பித்தேன்.
பசிச்சா பெரியம்மா கையால சாப்பாடு, சில சமயம் ஊட்டியும் விடுவாங்க. அக்காக்கு ஒண்ணுனா துடிச்சுப்போற என் அம்மா. இதுக்கு மேல ஒரு வீடு எப்படிடா பாசமா இருக்க முடியும் என்று அதிர்ந்து போய் நின்றேன். இது அத்தனைக்கும் காரணம் ஒரு ஆணின் உண்மை.
உன் கேள்வி அச்சு பிச்சு, உன் சிரிப்பு அச்சு பிச்சு, உன் கள்ளக் கிள்ளல் அச்சு பிச்சு. இந்த வீடு சக்தி, இந்த வீடு உண்மை. இந்த வீடு தெய்வம். “நெஞ்சுக்கு நீதியும் தோளுக்கு வாளும் நிலைத்த சுடர்மணிப்பூண்” 5 பேரும் ஒண்ணா ஒக்காந்து வீடு அதிர பாரதி பாடின வீடு.
இந்த வீட்டுல இருக்கறவங்க சிரிச்சா நீ தாங்க மாட்ட. அந்த உண்மை உன்ன எரிச்சு தூக்கி விசிறியடிக்கும் என்று புரிந்துகொண்டேன்.
பக்கத்து ரூம்ல சிங்கம் மாதிரி ஒக்காந்திட்டிருக்கு. எழுந்து மூணு அடி எடுத்து வெச்சா கதவ திறந்து ஓடி போயி கட்டிக்கலாம்…. சரமாரியா வெள்ளைதாடில முத்தம் கொடுக்கலாம்.
காலால எட்டி ஒதைச்சு கழுத்த கடிச்சு விளையாடலாம். கைய மடக்கி முதுகுக்கு பின்னால் இழுத்து கிச்சு கிச்சு மூட்டி நடு முதுகில் ஓங்கி குத்தலாம். என்னால் ஒரு அங்குலம் கால் எடுத்து வைக்க முடியவில்லை. பயம்… உண்மையின் மீதுள்ள பயம்.
எட்டுமுழ வேஷ்டி கட்டிக்கிட்டு, வெள்ளித் தலைமுடிய விரிச்சு போட்டுக்கிட்டு, தாடிய தடவியபடி கண்ணை மூடிட்டு உட்காந்திட்டிருக்கு. இந்த பக்கம் இன்னொரு உண்மை சமயக்கட்டுல வெந்துட்டிருக்கு.
ஒரு உண்மை தரையில ஒக்காந்து அபிராமி அந்தாதி படிச்சிட்டிருக்கு. இன்னொரு உண்மை MICRO BIOLOGY யில சில பல DNA க்களை உடைத்து கொண்டிருக்கிறது.
தனியறையில் நான். எந்த ஒரு சத்தமும் இல்லாமல் இருக்க உள்ளே நடுக்கம் தாங்கமுடியவில்லை. SMS ல் BOOK படித்தேன் அழுதுவிட்டேன் என்று வெறும் வார்த்தைகளை மட்டும் அப்பாவிற்கு அனுப்பிவிட்டு, BATHROOM சென்று கலங்கிய கண்களை துடைத்து முகம் கழுவி என்னை நானே கண்ணாடியில் பார்த்தேன்.
முதல் முறை நானே என்னை கண்டு அழுத தருணம் அது… இது சந்தோஷமா, துக்கமா, பாவமா, புண்ணியமா தெரியவில்லை. என் முகத்தில் உண்மையின் ஒரு சாயல் ஏதோ ஒரு மூலையில் மட்டும் இருந்திருக்கக்கூடுமோ என்ற ஒரு நிதர்சனம், ஒரு SELF REALISATION.
என் வாழ்க்கையின் TURNING POINT அதுவாகதான் இருக்கும். அனுப்பிய SMS ற்கு REPLY வந்ததாக MOBILE சிணுங்க, தயக்கத்தில் தடுமாறி திறக்க, THANK U SO MUCH MY SON என்ற REPLY இருந்தது.
ஓடிச்சென்று கதவைத் திறந்து அவர் முன் நின்றேன். என்ன செய்யணும் என்ற குழப்பம் முட்டி காது வேர்த்தது. வேறு என்ன செய்ய முடியும். சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்தேன்.
நெடுஞ்சாண்கிடையாக சர்வத்தையும் உதறி படுத்துக்கிடந்தேன். என்னை முதுகில் தட்டி தூக்கி கட்டிபிடித்து முத்தம் கொடுத்தது. வெடித்துக் கொண்டிருந்த என் மனதை மெதுவாக தடவிக் கொடுத்தது. I ALWAYS LOVE U MY SON என்று கூறி கண்கலங்க வைத்தது. சமாதானப்படுத்தியது.
TIP OF THE TONGUE TAKING A TRIP OF THREE STEPS DOWN THE PALATE TO TAP, AT THREE ON THE TEETH. LO-LEE-TA. இப்பொழுது புரிந்தது. காமம் புரிந்தது, காதல் புரிந்தது, உறவுகள் புரிந்தது. மிக முக்கியமாக பெண் என்பவள் யார் என்று எனக்கு புரியப்படுத்தப்பட்டது.
இன்றுவரை நான் அவரின் அனைத்து புத்தகங்களையும் படித்ததில்லை. படிக்க முயற்சித்துக் கொண்டு இருக்கிறேன். ஒரே ராத்திரியில் நான் படித்து முடித்த பல புத்தகங்கள் இன்றுவரை REFERENCE ஆக என் அலமாரியில் உள்ளன. REFERENCE பலது வேலைக்கு, சிலது வாழ்க்கைக்கு.
புருஷவதம், அகல்யா படித்து முடித்து தேடிப்பிடித்து ஒரு தோழியிடம் மன்னிப்பு கேட்டிருக்கிறேன். உடையார் முடித்து தஞ்சை கோவிலில் நெஞ்சு நிமிர்த்தி நடந்துள்ளேன்.
என் மனைவி சுகன்யா நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நேரத்தில் தினமும் ஒரு CHAPTER கிருஷ்ணாவதாரம் படித்தேன். என் மகன் அயான் சூர்யா என்கிற வாசுதேவகிருஷ்ணன் பிறந்து 5 மாதம் ஆகிறது. அவரைக் கண்டால் அத்தனை சிரிப்பு, அத்தனை முகபாவம். என்ன புரிந்ததோ அவனுக்கு.
என்னைப் பொறுத்தவரை EVERY CRAFT SHOULD COMMUNICATE AN EMOTION. ஏதோ ஒன்று யோசிக்க வைக்க வேண்டும். ABSTRACT PAINTING ஐ பார்த்து அழுபவர்களை எனக்கு தெரியும்.
கவிதை, சினிமா என்று எல்லாவற்றிற்கும் இது பொருந்தும். எல்லா மனிதர்களுக்கும் உண்டான ஒரு TRUE SELF ஐ IDENTIFY பண்ணுவதை தான் EMOTION என்று கூறுகிறேன். நான் அவ்வாறு என்னுடைய TRUE SELF ஐ IDENTIFY செய்யக் காரணமாய் இருந்தது பாலகுமாரனின் எழுத்துக்கள்.
இரண்டு BYE PASS க்கு அப்புறம் COPD, LUNGS ல HEAVY FLUID CONGESTION. சொத்து பத்திரத்துல கையெழுத்து வாங்கிக்கோ என்று நெருங்கிய DR கள் கூற, ICU வில் உள்ள அனைத்து நர்ஸ்களும் சம்பள உயர்வு கேட்டு வேலை நிறுத்தம் செய்த சமயம் அது.
இரவு நேரம் கால் வலி குடைய ஒரு நிமிடம் அவரும் தூங்கவில்லை, நானும் தூங்கவில்லை. என்ன யோசனை? என்று கண்களை மூடிக்கொண்டு கேட்டதும்… நான் உன்ன அப்பாவா பார்க்கறதா குருவா பார்க்கறதான்னு யோசிக்காம சட்டுன்னு கேட்டுட்டேன்.
இரண்டு வினாடி கண்களை மூடி யோசித்து, சிரித்தபடி YOU ARE ALWAYS MY SON DEAR என்று கட்டி அணைத்துக்கொள்ள அந்த நிமிடம் அந்த இடத்தில் அத்தனை POSITIVITY பரவியது. அந்த வருடம் COPD நொறுங்கியது. NURSE களுக்கு சம்பள உயர்வு கிடைத்தது. எனக்கு மட்டும் அந்த குழப்பம் அடிக்கடி வந்து போய் கொண்டிருக்கிறது.
கடவுள் வாழ்த்து, கடற்குளியல், சாமி பாட்டு, சினிமா பாட்டு, பெண், ஆண், காதல், காமம், சினிமா, எழுத்து, குரசோவா, 2 ND WORLD WAR சோழம், பூஜை, புனஸ்காரம், மந்திரம், ஜபம் இன்னும் என்னென்னவோ கற்றுக்கொடுத்த உன்னை எப்படி வெறும் அப்பாவாக மட்டும் பார்க்க முடியும்.
நீ எனக்கு குரு. தந்தை ஸ்தானத்தில் இருக்கும் குரு. எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும்.
‘திக்கற்றவர்க்கு தெய்வமே துணை’ என்றோ ‘தெய்வம் மனுஷ்ய ரூபேண’ என்றோ என்னிடம் பதினைந்து வருடங்களுக்கு முன்பாக சொல்லியிருந்தால் அனுபவம் வரட்டும் பிறகு ஒத்துக்கொள்கிறேன் என்று ஓஷோவின் தத்துவம் பேசி இருப்பேன்.
ஆனால், நம்மை ஆண்டு கொண்டிருக்கும் பிரபஞ்ச சக்தி மிகுந்த கருணை உடையது. தேவை என்று எதையெல்லாம் விரும்பி பிடித்துக் கொண்டிருக்கிறோமோ அவற்றையெல்லாம் பிடுங்கி எறிந்துவிட்டு, நமக்குத் தேவையானது எதுவோ அதை மட்டும் நம் கையில் திணித்துவிட்டுப் போகும் வல்லமையுடையது.
அப்படி என் வாழ்க்கையில் எந்த பிடிப்பும் இல்லாமல் மிகப் பெரிய விரக்தியோடு திருமணம் பற்றிச் சிந்திக்கவே முடியாமல் அலுவலகத்தில் உற்ற நண்பர் என்று ஒருவரும் இல்லாமல் வீடு பகைமை பாராட்டிக் கொண்டிருந்த நேரம். என்னை யாரும் புரிந்துகொள்ள மாட்டார்களா என்று தவித்த நேரம், எனக்குத் துணையாகக் கிடைத்தவர் என் குரு பாலகுமாரன்.
அவரால்தான் என் வாழ்க்கை வளமாயிற்று. என்னுடைய வாழ்க்கையின் ஒவ்வொரு பக்கமும் அவர் கையொப்பம் இருக்கிறது. நான் சொல்வதைச் செய் என்று பல சமயங்களில் அவர் முரட்டுத்தனமாக கட்டளை இடுவார். என் மனம் மறுக்கும். ஆனால், அவர் என்ன சொன்னாரோ அதுதான் சரியாக வரும்.
அப்படிச் சரியாக வந்தவர் என் மனைவி. அவர் எனக்களித்த உன்னதமான பரிசு. என்னுடைய மனைவியை மிகப்பெரிய வாயாடி, அதிகாரமுள்ளவர் என்றுதான் அறிமுகம்.
அதனால் இவர் சம்பத்லக்ஷ்மியை திருமணம் செய்துகொள் என்று சொன்னபோது நான் நடுங்கியே போனேன். ஆனால், இன்று நான் மிகுந்த சந்தோஷத்துடன் இருப்பதற்குக் காரணம் சம்பத்லக்ஷ்மி. அவருடைய நிர்வாகம், அவருடைய அன்பு, அவருடைய ஆதரவு. அவர் ஒரு பலாப்பழம். அதை எனக்குப் பரிசளித்தவர் என் குரு பாலகுமாரன்.
என்னுடைய ஒவ்வொரு உடல்நலக் குறைபாட்டிற்கும் அவரிடம் தான் ஓடுவேன். அதில் சிலவற்றைப் பற்றிக் கவலைப்பட்டு அவருக்குத் தெரிந்த டாக்டரிடம் விவாதிப்பார். பிரார்த்தனை செய்தார். பிரச்னை இருந்த இடமே தெரியவில்லை.
பிரச்னை மறைந்ததோடு மட்டுமல்லாது திருமணத்திற்குப் பின் ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்தது. அவனுக்கு சீனிவாசன் என்று பெயரிட்டதும் அவரே. சீனு என்று அழைக்கச் சொன்னதும் அவரே.
அவருடைய ஆளுமை என்னுடைய இல்லத்தில் எல்லா பகுதிகளிலும் பரந்து இருக்கிறது. என் மனைவி என்னுடைய கட்டளையைக் கேட்பதற்கு முன்பு குருவின் அனுமதியைப் பெற்றுவிட்டுத்தான் ஒரு காரியத்தைச் செய்ய ஆரம்பிப்பார். அதே வழியில் நானும் இருப்பதால் எங்கள் இல்லறம் சிறந்து விளங்குகிறது.
என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்பதை அவர் தெளிவாக மிகுந்த அக்கறையோடு அறிவுறுத்துவார். அலுவலகத்தில் பிரச்னைகள் இருந்தன. என் மனைவிக்கும் இருந்தன. இப்படி ஒரு பரிகாரம் செய்யேன், அப்படி ஒரு பரிகாரம் செய்யேன் என்று சொல்வார்.
பரிகாரம் என்பது நம்முடைய சமாதானத்திற்கு. ஆனால், அவர் மனம் ஒருமுகப்படுத்தி எங்களைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருக்கிறார். எங்கள் தடைகளை அகற்றிக் கொண்டிருக்கிறார் என்பதை நாங்கள் அறிவோம்.
குரு ஒரு பலம். யானை பலம். உங்களுக்குப் பின்புறத்தில் உருவிய வாளோடு அல்லது ஸ்டென் கன்னோடு ஒரு பாதுகாவலர் நிற்கிறார் என்றால் வேறு என்ன வேண்டும். என்ன கவலை வரும்.
பாதுகாப்பு மட்டுமல்ல, படிப்பு பற்றியும் அவர்தான் சொல்லித் தருவார். நான் சொல்வது புத்தகப் படிப்பல்ல. பள்ளிக்கூடப் படிப்பல்ல.
இந்த மந்திர ஜபம் இந்த விதமாக, இந்த மௌனம் இந்த விதமாக, இந்த தியானம் இந்த விதமாக, இந்த பூஜை இந்த விதமாக என்று அவர் தெளிவாகக் காரண காரியங்களோடு சொல்லிக் கொடுப்பார். எல்லாவற்றையும் எங்கிட்ட விட்டுடு நான் பாத்துக்கறேன் என்ற பம்மாத்து இல்லை.
இப்படி மூச்சுப் பயிற்சி செய்து இப்படி உட்காரும் பொழுது இன்ன விதமாக மனம் மாறுகிறது. அந்த மாற்றத்தில் மந்திர ஜபம் செய்கிறபோது இப்படி ஒன்று கூடுகிறது என்று ஞானத்தை விஞ்ஞான பூர்வமாகச் சொல்லுவார்.
அவருடைய கதைகள் எங்களுக்கு மிகப்பெரிய inspiration. என் மனைவி என்னை திருமணம் செய்வதற்கு முன்பு அவர் காஸெட்டில் சொல்கின்ற கதைகளை எழுதிக் கொடுத்து மிகப் பெரிய உதவி அவருக்குச் செய்திருக்கிறார். அந்த நன்றியை அவர் மறந்ததே இல்லை.
என்னைவிட என் மனைவி மீது அவருக்கு பரிவும் பாசமும் அதிகம். அவர் செய்த உதவியை மறக்கவே முடியாது என்பது அவருடைய எண்ணம். அவருடைய மிகச்சிறந்த நாவல்கள் சம்பத்லக்ஷ்மியால் கூட இருந்து அவர் சொல்லச் சொல்ல எழுதப்பட்டவை.
அவருடைய பேச்சு, அவருடைய பார்வை வாரத்திற்கு ஒருமுறையேனும் உணராது எங்களால் இருக்க முடியாது. அவரோடு உல்லாசப் பயணம் போவது என்பது மிகப்பெரிய கொடுப்பினை.
தமிழகத்தின் மிகச்சிறந்த கோவில்களுக்கு நானும் என் மனைவியும் என் குழந்தையும் அவரோடும் சத்சங்க நண்பர்களோடும் பயணப்படுவோம். அநேகமாக நான்தான் கார் ஓட்டுவேன்.
குறிப்பாக பெருவுடையார் கோவிலுக்கும், கங்கைகொண்ட சோழபுரத்திற்கும் தாராசுரத்திற்கும் வேறு சில கோவில்களுக்கும் அவரோடு போக தலை கிறுகிறுத்துப் போகும். ஒவ்வொரு கோவிலிலும் நூறு ஆயிரம் தகவல்கள் இருக்கும். பெரிய நாவல் இருக்கும். கதை இருக்கும்.
காலையில் ஒன்பது மணிக்குப் போனால் டிசம்பர் மாதம் வெயில் உறைக்காத நேரம் இரண்டு மணிக்கு உணவுக்கு வருவோம். அயர்ந்து தூங்குவோம். கால் பிடித்து விடச் சொல்வார். அவருக்கு கால்வலி உண்டு. அவருக்குக் கால் பிடித்து விடுவது எங்களுக்கு மிகப்பெரிய பாக்கியமாகக் கருதி நாங்கள் போட்டி போட்டுக்கொண்டு கால் பிடித்து விடுவோம்.
ஒரு குருவினுடைய அண்மையை நான் யோகி ராம்சுரத்குமாரிடம் உணரவில்லை. ஆனால் பாலகுமாரனிடம் உணர்ந்தேன். யோகி ராம்சுரத்குமார் தொலைதூரத்தில் இருந்தார். பாலகுமாரன் மிக அண்மையில் இருந்தார்.
யோகி ராம்சுரத்குமார் யார் என்று பலசமயம் விவரித்து அழகாக தன் குரு அனுபவங்களைச் சொல்வார். அதே குரு அனுபவங்களை நாங்கள் பாலகுமாரனிடமும் உணர்ந்திருக்கிறோம்.
உள்ளே நுழைந்ததும் இன்னது வேண்டும் என்று கேட்பதற்காக திட்டமிட்டுக் கொண்டிருக்கும் போது, வா இது கேட்கத்தானே வந்தாய் என்று அதிசயிக்க வைத்துவிடுவார்.
எப்படித் தெரிந்தது என்றே தெரியவில்லை. என்னமோ தோணித்து கேட்டேன். இதுக்கெல்லாம் என்ன ஆராய்ச்சி என்று சாதாரணமாக்கி விடுவார். கொஞ்சம் யோசித்தால் அது சாதாரணமில்லை என்று தெரியும்.
அவர் அதிசய மனிதர் என்று நான் சொல்ல வரவில்லை. அவர் அன்பான மனிதர். அவருடைய அன்புக்கு மிக நீண்ட கைகள். சிலசமயம் அந்த கைகள் நமது புத்திக்குள்ளும் இருதயத்திற்குள்ளும் நுழைந்துவிட முடிகிறது.
இந்த அற்புதமான மனிதரை எங்களுக்குத் துணையாக நாங்கள் கொண்டிருப்பது போன ஜென்மத்துப் புண்ணியம். எங்களை பலமுள்ளவராக, நாங்கள் எங்களை அறிகின்ற தன்மை உள்ளவராக இன்னும் ஆழ்நிலைக்கு தியானத்தில் போகக்கூடிய வல்லமை உள்ளவராக அவர் மாற்றி வருகிறார்.
அவர் தொட்டது துலங்கும். அப்படியென்றால் நாங்களும் விளங்கித்தானே ஆகவேண்டும். நாங்களும் முன்னேறித்தானே ஆகவேண்டும். எங்கள் முன்னேற்றத்தை எங்கள் தெளிவை அவருக்கு காணிக்கையாகக் கொடுத்து அவர் பல்லாண்டு வாழ வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்ளுகிறோம்.
சொல்வதற்கு ஏகப்பட்ட விஷயங்கள் உண்டு. ஆனால், இவ்வளவுதான் சொல்லக்கூடும். மற்றவை எங்களுக்குள்ளே புதைந்து புன்னகை பூக்க வைத்துக் கொண்டிருக்கும்.
எல்லோருக்கும் மாதா, பிதா, குரு, தெய்வம். எனக்கு பாலகுமாரன் பாலகுமாரன் பாலகுமாரன் பாலகுமாரன். ஒரே ஒரு வரி மட்டும் சொல்ல விரும்புகிறேன். பாலகுமாரன் சாதாரணமானவர் அல்ல.
வாழ்க பாலகுமாரன். வாழ்க யோகி ராம்சுரத்குமார்.
ஐயாவைப் பற்றி யோசிக்கும் போதெல்லாம் எனக்கு விரிஞ்சிபுரம் எனும் தலத்திலுள்ள ஈசனின் ஞாபகம்தான் வரும்.
எழுத்தாளன் என்பவன் ஒரு சமூகத்தின் அந்தர்வாஹிணியாக ஓடும் சரஸ்வதி நதியைப் போன்றவன். எல்லோரின் மனதும் ஒரு புள்ளியில் அவனிடத்தில் குவிகின்றன. சூரியனின் கதிர்கள் சிறு லென்சுக்குள் குவிவது போன்றது அது.
சகல மனங்களின் பிரதிநிதியாக இருப்பவன் மனங்களின் நிறங்களை தொட்டுணர்வதுபோல எல்லோரையும் எளிதாகக் கண்டறிகிறான். மானுடத்தின் சகல உணர்வுகளும் பெரும் பெருக்காக அவனிடத்தில் ஒடுங்கியபடியும், விரிந்தபடியும் இருக்கின்றன.
எழுத்துக்களால் மனதை நிரப்பி குறுக்கும், நெடுக்கும். மேலும், கீழும் தறியை ஓடவிட்டு ஒரு வாழ்க்கையை வார்த்துப் போடுகிறான். தனியொரு மனிதனின் மனதின் அந்தரங்கத்தின் அருகே உட்கார்ந்து பேசுபவன்.
எல்லோரின் குரலையும் சேர்த்து ஒரே ஸ்ருதியில் தனிக்குரலாக கம்பீரமாக எல்லோருக்கும் உரைப்பவனே எழுத்தாளன். இவை அனைத்தும் ஒருமித்திருந்தது எழுத்துச் சித்தர் பாலகுமாரனிடம் எனில் அது மிகையில்லை.
அவரின் எழுத்துக்களுக்குள் எல்லோரும் தங்களையே கண்டனர். தவிப்புகளையும், ஏக்கங்களையும், கானகத்தில் திக்குத் தெரியாத அந்தகனாக அலைவதையும் அவரின் எழுத்தில் கண்டனர்.
ஆனால், ரணத்தின் மீது தடவப்பட்ட களிம்புபோல அவரின் எழுத்துக்கள் எல்லோரையும் ஆற்றுப்படுத்தியது. கொஞ்சம் பொறு… கொஞ்சம் பொறு… இதேதான் நானும். மெல்ல மேலெழுந்தேன். நீயும் வந்துவிடலாம்.
கொஞ்சம் தலையை சிலுப்பிக்கொள். அவமானத்தை ஏற்கப் பழகு. இன்று உன்னை அவர்கள் புறக்கணிக்கலாம். ஆனால், நாளை நீ அவர்களுக்கு முக்கியமானவன் ஆவாய்..
ஐயாவைப் பற்றி யோசிக்கும் போதெல்லாம் எனக்கு விரிஞ்சிபுரம் எனும் தலத்திலுள்ள ஈசனின் ஞாபகம்தான் வரும். அழகான பொருத்தமான பெயர். மார்க்கபந்தீஸ்வரர் என்பது சிவனின் திருப்பெயர். அழகிய தமிழில் வழித்துணைநாதர் என்று சொல்வார்கள்.
இப்படிப்பட்ட பெரும் எழுத்தாளரின் நிழலில் அவருக்கு உதவியாளராக ஏழு வருடம் வேலை செய்யும் பாக்கியம் கிடைத்தது.
“டேய் எங்கிட்ட குட் வாங்கறதுக்காக ரொம்ப ஜாக்கிரதையா வேலை பண்ணாத. எல்லாமே சரியா வரணும்னு பண்ற. தப்பு பண்ணு. நான் ஒரு வேலையை சொல்லி நீ கேட்கும்போது பதட்டமா தலையாட்டுற.
உனக்குள்ள சரியா பண்ணணுமேங்கற தவிப்பு வந்துடறது. அதனால தப்பு பண்ணு. திட்டும் வாங்கு. அப்போதான் இயல்பா ஒரு வேலையை பண்ண முடியும்” என்றார். அந்தக் கணத்தை நான் காட்சியாக என் மனதில் வைத்திருக்கிறேன்.
வேலைக்கு சேர்ந்த ஒருவாரத்தில், ஒருநாள் காலில் விழுந்து நமஸ்கரித்துவிட்டு ஏதாவது சொல்லிக் கொடுப்பார் என்று மண்டியிட்டபடி அமர்ந்திருந்தேன்.
சட்டென்று என் மனதை படித்தவர், “இப்படி உட்கார்ந்து எதையுமே கத்துக்க முடியாது. வாழ்க்கையில அது போற போக்குல அந்த ட்ரைவ்லதான் கத்துக்க முடியும்.
ஏதாவது பண்ணினாதான் சரியா தப்பான்னு தெரிஞ்சு அடுத்தடுத்து போக முடியும். இப்படி உட்கார்ந்து ஏதாவது கேட்டுக்கிட்டே சுகமா உட்கார்ந்திருக்கலாம்னு ஒரு மனோநிலையில் இருந்தா ஒன்னும் பண்ண முடியாது. இந்த பாவனை செயற்கையானது” என்றார்.
ஐயாவின் வெற்றிக்கு முன்னணியாக இருப்பது சுறுசுறுப்பே. ஒரு அதிர்தல்… மின்சாரம் போன்ற தன்மை அவரிடம் இருந்துகொண்டே இருக்கும். நம் புத்தி தூங்குவது நமக்கு நன்றாக தெரியும்.
ஆனால், அவரிடம் விழிப்பாகவே இருக்கும். “டேய்.. அவரை போன்ல புடி” ஒருமுறை முயற்சித்து விட்டு சொன்னதைச் செய்துவிட்டோம் என்று அமைதியாக இருப்பேன்.
மீண்டும், “புடிச்சியாடா…” குரலில் கொஞ்சம் கடுமை தெரியும்போது, “ட்ரை பண்ணேன். என்கேஜ்டா இருக்கு” இந்த சாதாரண பதிலில் உள்ள அலட்சியத்தை கடுமையாக சுட்டிக் காட்டுவார்.
“ஒருத்தரை போன்ல புடிங்கன்னா அப்படியே ஒரு தடவைல விட்டுடறதா. தொடர்ந்து ட்ரை பண்ணக் கூடாதா. எங்க ஸார் உங்ககிட்ட பேசணும்னு சொல்றாருன்னு கேட்க வேண்டாமா.
அப்படி நான் என்ன கேட்கணும்கற விஷயம் உனக்குத் தெரிஞ்சா நீயே கேட்டு ஒட்டு மொத்தமா பதில் சொல்லு. அப்போதான் நீ எனக்கு பி.ஏ.” என்று விளாசுவார்.
சிறிய வேலையாக இருந்தாலும் தள்ளிப் போடாமல் செய்வார். அவசரமாக படிக்கட்டில் இறங்கி வந்துவிட்டு, மீண்டும் மேலே வந்து தலைக்கு மேல் விட்டத்தில் தெரியும் ஒட்டடையை அடித்து அகற்றி விட்டு மீண்டும் கீழே வருவார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
“ஏன் வந்து பார்த்துக்கலாமே” என்றால் “என்னை அது டிஸ்டர்ப் பண்ணும். மண்டையிலேயே இருக்கும். அதை முடிச்சுடணும்” என்பார். எனக்குத் தெரிந்து இதுவரை அவர் எந்த ஒரு வேலையையுமே தள்ளிப்போட்டதே இல்லை.
இந்த ஒரு பழக்கம் அவருள் தன்னியல்பாக பதிந்திருக்கிறது. இதுவே எழுத்து விஷயத்திலும் பழக்கமாகி இருக்கிறது.
நம்மோடு அவர் நேரடியாக பேசுவதைக் காட்டிலும், அவரைச் சந்திக்க வருபவர்களிடம் அவர் பேசுபவை அனைத்தும் முக்கியமானவை. சிறிய போன் உரையாடலில் கூட பெரிய விஷயங்கள் தொம்மென்று விழும்.
அதுவே நமக்கு பெரிய திறப்பாக இருக்கும். அதனால் இயல்பாக ஏற்றுக் கொள்ளும் மனோநிலையில் இருந்தால் அவரிடமிருந்து நமக்குள் உள்ளே சென்று கொண்டே இருக்கும்.
அவர் எந்த நிலையில் ஒரு விஷயத்தை புரிய வைக்க முயற்சிக்கிறார், நம்மிடம் உள்ள தடை என்ன என்கிற அளவுக்கு மேலேறினால் கூட போதுமானது.
அவரை இமிடேட் செய்யக் கூடாது. திடமாக அவர் கூறுவதை புரிந்து கொண்டால். அது ஆவியாகி நமக்குள் சென்று தங்கும். ஜே. கே. இதை லெவல் ஆப் அன்டர் ஸ்டேண்டிங் என்பார்.
அவர் வெளியூருக்குச் செல்லும்போது கூட அவரின் அறைக்குள் நாம் பயத்தோடும், மரியாதையோடும் நுழையும் ஆளுமையை நமக்குள் ஏற்படுத்தியிருப்பார்.
அங்கிருக்கும் ஒவ்வொரு பொருளும் அவரே. அவர் உபயோகப்படுத்தும் குப்பைத் தொட்டியை கூட நாம் ஜாக்கிரதையாக கையாளுவோம். அவர் அணிந்து கழற்றிய சட்டையைக் கூட சுருட்டாமல் மடித்து வைப்போம்.
ஒரு மாபெரும் ஆளுமை எப்படி தன்னைச் சுற்றிலுமுள்ள ஜட வஸ்துக்கள் வரை நம்மை ஆதிக்கம் செலுத்துகிறார் என்பதை உணரலாம். அவரோடு கூடவே இருக்கலாம். ஆனால், அவரை அவதானித்தபடி இருப்பது என்பது வேறு.
அவரின் சொல்லை நீங்கள் உங்களுக்குள் எப்படிக் கொண்டு செல்கிறீர்கள் என்பது முக்கியமானது. இல்லையெனில் நீங்கள் தொடர்ச்சியாக ரயிலை தவற விடுவீர்கள்.
நான் வேலைக்குச் சேர்ந்த முதல் நாளே என்னைப் பார்த்து நான் ரொம்ப டப் பர்சன் என்றார். அது போகப் போக புரிந்தது. சாதாரண வாழ்க்கையே போதும் என்பவர்கள் இவரோடு இணையாக நடக்க முடியாது.
ஏதேனும் சாதிக்க வேண்டுமென்று இருப்பவர்களுக்கு இவருக்கு இணையாக இன்னொருவர் கிடைக்க மாட்டார்.
எழுத்துச் சித்தர் பாலகுமாரன் ஒரு ஆலமரம். அதன் ஒரு விழுது என்று என்னைபோன்ற சிலர் கர்வத்தோடு திரிகிறோம். எத்தனை விழுதுகள் என்கிற கணக்குகளை ஆலமரம் வைத்துக் கொள்வதில்லை என்பதையும் அறிந்திருக்கிறோம்.
பாலகுமாரன் ஐயாவைப் பற்றி என்ன சொல்வது. சொல்ல எனக்குண்டான தகுதி என்ன. நான் அவர் வாசகனா, அப்படி சொல்வதற்கில்லை. சில புத்தகங்களே படித்திருக்கிறேன்.
விவாதம் செய்பவனா. அவருக்கு அருகே இருப்பேன். ஆனால் பேச்சு குறைவு. பலபேரைப் போல் அவருக்கு சீடனா. எனக்கு மகான் ஸ்ரீராகவேந்திரர் குரு.
எனக்கு இருப்பது போல அசைக்க முடியாத அவர் குரு நம்பிக்கைதான் அவரிடம் என்னை ஈர்த்தது.
இனிய பேச்சு. கண்மூடி மனம் குவித்த பிரார்த்தனை. இடைவிடாத உதவி செய்யும் பங்கு. சத்தியம் பேசுதல், தந்திரங்கள் செய்யாது இருத்தல் போன்ற அவரின் குணங்களும் என்னை ஈர்த்தன.
நான் ஜோசியன் என்பது உலகு அறிந்த விஷயம். அவர் என்னிடம் தன் வாசகர்களை அனுப்புவார். நான் பலனும், பரிகாரமும் சொல்வேன். இதைத்தான் ஐயாவும் சொன்னார் என்பார்கள்.
அவர் மனோபலம் மிகப் பெரியது. வெண்மையாக இருப்பது. அந்த வெண்மைக்குள் ஒரு மனிதர் உள்ளே நுழைந்ததும் இறைநோக்கி இறங்கி விடுவார். இது ஒரு மாதிரி தேவபிரசன்னம்.
அதனாலேயே இவர் ஆசீர்வாதங்கள் பலிக்கின்றன. அதனாலேயே நான் இவர்பால் ஈர்க்கப்படுகின்றேன். அதனாலேயே என் குடும்பமும் இவரைக் கொண்டாடுகிறது.
மனம் சோர்வாகும் நேரத்தில் பாலகுமாரன் ஐயா வீட்டிற்கு போவது என் மனைவிக்கு பிடிக்கும். எனக்குள்ளும் சோர்வு நீங்குவதை உணர்கிறேன்.
குருகடாட்சம் உள்ளவர்களுக்கு இந்த உயர்நிலை கிடைக்கும். ஆனால் பலர் அதை தவறாக பயன்படுத்துவார்கள். பாலகுமாரன் ஐயா மறந்தும் அதைச் செய்வதில்லை.
மீனும், பறவையும் போகும் வழிக்கு தடங்கள் இல்லை. இவர் நட்பு கிடைத்தது என் பாக்கியம். நல்லது செய்தால் மனமுவந்து பாராட்டுவார். உற்சாகப்படுத்துவார். அது இன்னும் பெரிய பாக்கியம்.
பாலகுமாரன் எழுத்தாளர் என்பது ஒரு சட்டை. உண்மையில் அவர் வேறு. இதை உணர்ந்த பலர் அவருக்கு அருகே உண்டு.
அந்த எழுத்து இனிப்பு. ஈர்க்கப்படுவீர்கள். மகரந்தம் இன்னும் ஆழ இருக்கிறது. நல்ல தலையெழுத்து உள்ளோருக்கு உணரக் கிடைக்கும்.
சபையோருக்கு வணக்கம். யோகிராம்சுரத்குமார் என்னும் அமுதத்தை தேவாம்ருதத்தை பலருக்கும் அளித்த என் குரு ஐயன் பாலகுமாரன் அவர்களுக்கு நமஸ்காரம்.
மிகப்பெரிய பிரம்மாண்டத்தை ஐயனை அருகிலிருந்து உணர்ந்ததை அனுபவித்ததை எழுத சில பக்கங்கள் போதாது. சில துளிகளை பகிர்கிறேன்.
பத்தொன்பது வருடங்களுக்கு முன்பு ஐயா பாலகுமாரன் அவர்களை பார்த்தபோது +2 எக்ஸாம் எழுதப்போறேன். இன்னும் மேலே படிக்கணும்னு ஆசை. உங்க ஆசிர்வாதம் வேண்டும் என்று கேட்க, உனக்கெதுக்கு இந்த படிப்பெல்லாம். நீ படிக்க வேற படிப்பு இருக்கு என்று அவர் சொன்ன அந்த க்ஷணமே என் மேற்படிப்பு எண்ணம் உதிர்ந்துவிட்டது.
அவர் சொன்ன படிப்பு என்னை திடப்படுத்தியது. தெளிவாக்கியது. உயர்த்தியது. இது போதாது இன்னும் வேண்டும் என்ற ஏக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது..
இருபது வருடங்களுக்கு முன் இருந்த பாக்கியலக்ஷ்மி இல்லை நீங்கள். பேச்சு. செயல் எல்லாம் மாறியிருக்கிறது. பெயர் தவிர என்று மற்றவர் சொல்லும் அளவுக்கு என்னை மாற்றியிருக்கிறார். நான் மட்டும் அல்ல இங்கு பலரும் அவ்விதமே வரம் பெற்றிருக்கிறோம்.
சிறு வயதிலிருந்தே எந்த மரணம் பார்த்தாலும் என் தந்தைக்கு இப்படி நேர்ந்தால் எப்படி தாங்குவேனோ என்ற பயம் என்னுள் வந்து போவதுண்டு. அப்படி இருந்த எனக்கு, என் தந்தை மரணத்திற்கு முன்னால் திரும்பத் திரும்ப என் தலை தடவி ஆசிர்வாதம் செய்து கொண்டிருந்தார்.
அன்று இரவு தூக்கம் இல்லாமல் அமர்ந்திருந்தேன். மறுநாள் காலை எனதுயிர் அப்பா இறந்து போனபோது அழாது அடுத்த வேலைகளை கவனித்துக் கொண்டும் என் அப்பா எங்கு இருந்தாலும் சௌக்கியமாக இருக்க வேண்டும் என்ற இடைவிடாத பிரார்த்தனையோடும் செயல்பட்டது, மிக மிக ஆச்சரியமான விஷயம்.
என் தந்தைக்காக குருநாமமும், ராமநாமமும் சொல்லி, அடுத்து அடுத்து செய்ய வேண்டியதை உடன் இருந்து கவனித்து என் தந்தையை ஐயனும் அவரது குடும்பமும் வழியனுப்பி வைத்தார்கள்.
என் அப்பா தகனம் முடிந்த இரண்டாவது நாள் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தபோது, இன்னார் இராமேஸ்வரம் போகிறார்கள், நீ போறயா. உங்க அப்பாவிற்கான காரியங்கள் அங்கு செய்துவிட்டு வா என்று சொல்லி அதற்குண்டான ஏற்பாடுகளையும் மிக விரைவில் செய்து கொடுத்தார்.
நான் இராமேஸ்வரம் சென்றது என் அப்பாவின் பத்தாவது நாள். பத்தாவது நாள் போக வேண்டுமென்று திட்டமிடப்படவில்லை. ஆனால், அமைந்தது.
அவருக்காக இராமேஸ்வரம் கரையில் தர்ப்பணம் செய்து, அஸ்தி கரைத்து விட்டு வரும்போது மிகப் பெரிய மனோ பலத்தை உணர்ந்தேன். ஏன் எப்படி தெரியவில்லை. பிறகு தானங்கள் கொடுத்ததும் மிகப்பெரிய சந்தோஷமும் மனமும், உடலும், மிக மிக லேசானதையும் உணர்ந்தேன்.
ஐயாவிடம் மனம் கரைந்து பேச முடியாமல் அழுது தீர்த்தேன். துக்கத்தால் அல்ல. ஏதோ மிகப் பெரிய விஷயத்தை எனக்கு செய்திருக்கிறார் என்பது நன்கு தெரிந்தது. இது வாழ்வில் மறக்க முடியா ஒரு அனுபவம். இது குரு கருணை. குருவால் மட்டுமே இப்படி சூட்சுமமான விஷயங்களையும் தரமுடியும். நீத்தார் கடனை மனமொப்பி செய்ய குருவைத் தவிர யார் சொல்லித் தரமுடியும்.
என் அப்பாவிற்கு நல்லவிதமா ய் காரியங்கள் செய்ய வேண்டும் என்று நினைத்தோம். ஆனால் எப்படி செய்வது தெரியாது. நாம் திட்டமிடுவதை விட மிகச் சிறப்பாய் என்னென்னெ காரியங்கள் எப்பொழுது செய்ய வேண்டுமோ அவ்விதம் செய்யும்படி என்னை நகர்த்தினார். இதை நான் எப்பொழுது நினைத்தாலும் நெகிழ்ச்சியாவதுண்டு.
நான் மட்டுமல்ல, இந்த சத்சங்கத்தில் பலரும் மிக பிரியத்தோடு எந்த எதிர்பார்ப்பும் இன்றி அவரவரால் இயன்ற பணிகளை செய்து கொண்டும், தன்னை தயார் படுத்திக் கொண்டும் இருக்கிறார்கள். அப்படி அவருக்கென ஏதேனும் பணிகள் செய்கிறபோது அதற்கு கைமாறாய் பலமடங்கு நன்மை, செய்தவருக்கு கிடைக்கும்.
அமைதி கிடைத்தவர்கள் பாக்கியவான்கள். இன்றுவரை எனக்கும் அந்த பாக்கியம் கிடைத்திருப்பது பகவான் கருணை. ஐயனின் அன்பு.
ஜாதகத்தில் தடைகள் இருக்கின்றன என்று சத்சங்க ரம்யாவைப் பற்றி பலர் சொல்ல அந்த ரம்யா ஐயாவின் உடல்நலத்தை இரவு பகலாக அருகில் இருந்து கவனித்துக் கொள்ள மூன்றாவது மாதமே ரம்யாவிற்கு திருமணம் நடந்து உன்னதமான வாழ்க்கை கிடைத்தது. இது ஐயா கொடுத்த உத்தரவாதம். அவருக்கு உதவி செய்வது வீணாகாது.
ஒரு வேலையை அவரிடம் சொல்லிவிட்டு செய்தால் அது சிறப்பாக நடக்கும். ஒரு இடத்திற்கு போவதை அவரிடம் தெரிவித்து விட்டால் அந்தப் பயணம் பாதுகாப்பாய் இருக்கும். சத்சங்கத்து மகளிர் தாய் வீட்டிற்கு போவதென்றாலும் அவரிடம் சொல்லாது போகமாட்டார்கள்.
அதேபோல அவர் எதிரே தியானம் செய்யும்போது வெகு விரைவில் மனம் ஒன்றுகூடும். சில சமயம் பரவச நிலையும் ஏற்படும். துர்விஷயத்தில் சிக்கிக் கொண்டவரை அவர் விரட்டி குணப்படுத்தியதை நேரே கண்டிருக்கிறேன். குலை நடுங்க வைக்கும் அனுபவம் அது.
அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது சத்சங்கத்து அங்கத்தினர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் இருந்தால் அவருக்கு தொந்தரவாய் இருக்கும் என்று ஒவ்வொருவரும் அவரவர் நேரத்தை பிரித்துக் கொண்டு அவரை கவனித்துக் கொண்ட அன்பு நெஞ்சங்களை பெற்றவர்.
மன குழப்பமோ, பிரச்னையோ சொல்லக்கூட வேண்டாம். அவரைப் பார்த்து சில நிமிடங்கள் அவர் அருகில் அமர்ந்திருந்தாலே மனம் அமைதியாகிவிடும். மன வேதனை நீக்கிவிட்டது போல உணருவோம். வரும் போது மனசு கஷ்டமா இருந்தது. அவரை பார்த்துவிட்டு வந்தபிறகு என்னவோ மனசு அமைதியா இருக்கு. இதை பலரும் சொல்வதுண்டு.
ஏதோ சாதாரண விஷயம் பேசிக் கொண்டிருப்பார். ஆனால், நம் மனதின் உள்ளே வருடி விடுவது போல் மெல்ல மெல்ல மிக ஆழ்ந்த சலனமற்ற அமைதிக்கு கொண்டு சென்று விடுவார்.
யாருடைய காரியமாயிருந்தாலும் மிகத் தெளிவாக துல்லியமாக சிரத்தையோடு திட்டமிட்டு வழிகாட்டுவார். அவர் கணிப்பு மிகச் சரியாக இருக்கும். அதனாலேயே அவர் சொல்வதை உடனே ஏற்றுக் கொள்வோம். மாறாய் யோசித்தாலும் அந்த முடிவுக்கே வருவோம். அதுவே சிறப்பானதாக இருக்கும்.
இவர் அனுமதியோடும், வழிகாட்டுதலோடும் இங்கு பல குடும்பங்கள் மேன்மையான வாழ்க்கை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. சுயமாய், தெளிவாய், திடமாய் முடிவெடுக்கவும், பிரச்னைகளை எதிர்கொள்ளவும், அணுகவும் சொல்லியும், சொல்லாமலும் உணர்த்தியும் எங்களை வழிநடத்தும் இவருக்காக நாங்கள் எவ்வளவு செய்தாலும் அது போதாது. ஜென்ம ஜென்மத்திற்கும் கடன்பட்டிருக்கிறோம். இது என்னுடைய எண்ணம் மட்டுமல்ல. பலரின் வார்த்தைகளும், எண்ணங்களும் இதுவே.
இவரிடம் வருவதற்கு படிப்போ, பணமோ, உயர்பதவியோ என்ற கணக்கெல்லாம் கிடையாது. யாரை அழைப்பார், யாரை சத்சங்கத்தில் சேர்த்துக் கொள்வார் என்றும் கணிக்க முடியாது. போலியாய் பேசுகிறவர்களை பிடிக்காது.
தேவார திருவாசகமும், பிரபந்தமும் அவர் பாடி விளக்கும்போது மெய்மறந்து கேட்டுக் கொண்டிருப்போம். அவர் குரலும் பாவமும் விளக்கமும் மிக அற்புதமாக இருக்கும்.
எப்பொழுது எந்த இடத்தில் பரவச நிலைக்கு போவார் என்று தெரியாது. அந்த நேரம், அந்த இடம், அந்த சூழ்நிலை மாறிவிடும். தானாக நம்முள் ஒரு அலர்ட்னெஸ் வந்துவிடும். அப்பொழுது அவர் பார்வை வேறு, முகம் வேறு, பேச்சு குரல் வேறு விதமாய் இருக்கும். இதை பலமுறை கண்டிருக்கிறேன். சிறிது நேரத்தில் மிகச் சாதாரணமாய் பேசும் நிலைக்கு வந்துவிடுவார்.
சிறியவரிலிருந்து பெரியவர்கள் வரை தினம் தினம் இவரைப் பார்க்கமாட்டோமா, பார்க்க ஏதாவது சந்தர்ப்பம் கிடைக்காதா என்று பலர் ஏங்கும்படி இருக்கும் இனிமை நிறைந்தவர்.
ஐயா நான் அமண்குடி கோவில்லேர்ந்து பேசறேன். நான் உங்க வாசகன். உங்க பேருக்கு நான் அர்ச்சனை செய்யும்போது வேறொருவரும் உங்க பேர் நட்சத்திரம் சொல்லி அர்ச்சனைக்கு கொடுத்தார். அவரும் உங்க வாசகராம். நாங்க ரெண்டுபேரும் பேசி பிரண்ட்ஸ் ஆயிட்டோம். நீங்க பலகாலம் நல்லா இருக்கணுமய்யா. எதனால் இத்தனை அன்பு.
அப்படி என்ன அவர்கள் வாழ்க்கையில் மாற்றம் தந்திருப்பார். கபாலி கோவில் வாசல் “என்னை ஆசிர்வாதம் பண்ணுங்க. உங்களால நான் நல்லாயிருக்கேன். இன்னைக்கு வாழ்க்கையில நான் நல்லாயிருக்கேன்னா, முன்னேறியிருக்கேன்னா அதுக்கு நீங்க காரணம், நீங்கதான் காரணம். உங்களை பார்த்துட்டேன். ரொம்ப சந்தோஷம். எனக்கு இது போதும். என்னை ஆசிர்வாதம் பண்ணுங்க” என்று நான் உங்களுக்கு கடன் பட்டிருக்கேன் என்கிற விதமாய் மிகுந்த அன்போடும், உரிமையோடும் பேசும் வாசகன். எவ்விதம் அவர்கள் வாழ்க்கையில் மாற்றம் தந்திருப்பார்.
இவரை படிச்ச பிறகுதான் வீட்டுல கோபப்படாம பேசற குணம் எனக்கு வந்தது. அனுசரிச்சு போற குணம் வந்தது. இல்லைன்னா நான் ரொம்ப தப்பானவனா இருப்பேன். என்னை மாத்தினது, என் வாழ்க்கையை மாத்தினது இவர்தான், இவர் எழுத்துதான். இல்லைன்னா நான் கெட்டவனா இருந்திருப்பேன். பொண்டாட்டியை மதிக்க தெரிஞ்சதே இவராலதான். அதுக்கு முன்னாடி நான் காட்டு மிராண்டியாதான் இருந்தேன். என்ன மாறுதல் எப்போது.
ஏம்மா அழற.
ஒன்னும் தெரியலை. ஏன் உங்களை பார்த்தவுடனே அழுகை வந்துடுச்சுன்னு தெரியலை என்று சொல்லும் பலரை பார்த்திருக்கிறேன். ஐயா நீங்கதான் எனக்கு ஆறுதல். உங்கள் புத்தகம்தான் எனக்கு நிம்மதி. நான் என்ன கஷ்டம் வந்தாலும் உங்க போட்டோவை பார்த்து என் கஷ்டத்தை சொல்லுவேன். என்னவோ கொஞ்ச நேரத்துல பாரம் குறைஞ்ச மாதிரி இருக்கும்.
எங்க அப்பாவுக்கு உடம்பு சரியில்லை. ஐயா போட்டோ முன்னாடி நின்னு எனக்கு என்ன பண்றதுன்னே தெரியலைன்னு அழுதுட்டிருந்தேன். கொஞ்ச நேரத்துல ஐயாகிட்டே இருந்து போன். ஐயா யோகி ராம்சுரத்குமார் யோகி ராம்சுரத்குமார் யோகி ராம்சுரத்குமார்னு மூணு தடவை சொன்னார். கவலைப் படாதேன்னு சொல்லி வைச்சுட்டார். கொஞ்ச நேரத்துல டாக்டர் வந்து உங்க அப்பாவுக்கு கவலைப் படும்படி ஒண்ணும் இல்லைன்னு சொன்னார். அழுகையோடு விவரிக்கும் பெண்.
எங்க வீட்டுக்காரர் குடிகாரர். எனக்கு உறவுகளும் சரியில்லை. எனக்கு யாரும் இல்லை. நீங்கதான் உங்க எழுத்துதான் எனக்கு ஆறுதல். உங்க எழுத்துதான் எனக்கு நம்பிக்கை. அதனால்தான் நான் உயிரோடுஇருக்கேன். என்னவோ தெரியலை இது போதும் ஒவ்வொரு அத்யாயம் படிக்கும்போதும் எனக்கு அழுகை. ஏன்னு தெரியலை. இப்படி அன்பா என்கிட்டே யாருமே பேசினது இல்லை. என்று கண்ணீரோடு பேசும் பெண்.
நான் தினம் மனசுக்குள்ள அவர்கிட்ட பேசிட்டு இருப்பேன். பாலா பாலான்னு பேசுவேன். என்னவோ யாரோ ஒருத்தர் மாதிரி இருக்காது. எனக்கு அம்மாவா அப்பாவா…
இப்படி பலதை நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன். இவை எல்லாவற்றுக்கும் காரணமாய் இருந்துவிட்டு சாதாரணனாய், மிகச் சாதாரணனாய் நம்மில் ஒருவரைப் போலவே பேசும் குணம். புகழ்ச்சியை அலட்சியப்படுத்தும் விதம்.
நான் குருஜி பேசுறேன் என்று மிக மெல்லிய குரலில் நிதானமாய் அப்படி பேசுவதாலேயே தான் பேரமைதியில் இருப்பதாய் காட்டிக்கொண்டு விலகி நிற்கும் போலியான குருமார்களுக்கு நடுவே, மிக உண்மையாய் அடுத்தவருக்காக பிரார்த்தனை செய்து பிரச்னையை மிக வேகமாய் தீர்க்கும் இவர் நொடிப்பொழுதில் நம்மை உள்முகமாய்ப் பார்க்கும்படி செய்து நமக்கேற்றாற்போல் பேசிக்கொண்டே நம்மை மிக ஆழ்ந்த அமைதிக்கு கொண்டுசென்று, தெளிவாய் யோசிக்க வைத்து, தன் பார்வையால், தன் இருப்பால் மற்றவரின் வேதனையை துடைத்து இதமான மனோநிலைமைக்கு கொண்டு சென்று, குண்டலினியை தூண்டிவிடும் பாலகுமாரன் ஐயா.
பல லட்சம் பேர் வாழ்க்கையை புரட்டிப் போட்டு செம்மையாக்கி சாதாரணனாய் எந்த பேதமும் இல்லாமல் நம்மில் ஒருவராய் பழகிக் கொண்டிருக்கிறார்.
என்னவோ இவரை பார்த்துட்டா அப்பாடான்னு ஒரு நிம்மதி. பாதுகாப்பாக இருக்கோம்ங்கற உணர்வு இவரை பார்த்தவுடன் இருக்கும். யாரும் இவ்வளவு பிரியமா இருக்கமாட்டாங்க. பல பெண்கள் இப்படி பேச கேட்டதுண்டு. ஆமாம். அந்த பலரில் நானும் ஒருத்தி.
இப்படிப்பட்டவரை குரு என்றழைக்காமல் வேறென்னெவென்று அழைப்பது?
மனிதர்கள் மனமே வாழ்க்கையில் முழுமையாய் ஆக்கிரமித்துக் கொண்டிருப்பது. அப்படி முழுமையாய் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிற மனதை படித்து அவரவர் வேதனை, சந்தோஷம், கோபம், காமம், காதல் எனபதை மற்றவர் மனோநிலையிலிருந்து பார்த்து மதிப்பவர். கடவுள் என்பதையும், மனம் என்பதையும், மரணம் என்பதையும், சூட்சும விஷயங்களையும் தான் அறிந்தது மட்டுமல்லாமல் பிறருக்கும் அதை அறியும்படி விளக்கிச் சொல்லித் தருபவர்.
எந்த கோவிலுக்குச் சென்றாலும் எவ்வளவு கூட்டமாக இருந்தாலும் இவரைப் பார்த்தவுடன் சன்னதிக்கு அருகில் அழைத்துப் போவார்கள். தமிழ்நாட்டு கோவிலில் மட்டுமல்ல. கர்நாடகத்து மூகாம்பிகை கோவிலில் ஆயிரம் பேருக்கு நடுவே இவரை சுட்டிக் காட்டி சன்னதிக்கு அருகே அழைத்துக் கொண்டு போனார்கள். அந்த ஊர் நதியில் இவருக்கு உள்ளங்கை அகல பிள்ளையார் சிலை கிடைத்தது. பொளிக்காத சிலை. அதை தான் வைத்துக் கொள்ளாது உடனே தன்னோடு வந்தவருக்கு கொடுத்துவிட்டார்.
இவரைப் பார்த்ததும் பரவசத்தின் உச்சிக்குப் போய் அலறுகிறவர்களையும் கண்டிருக்கிறேன். ஒரு யானைப் பாகனின் மனைவி, ஒரு அரசாங்க சேவகி, ஒரு வியாபாரி என்று பலரும் பரவசப்பட்டிருக்கிறார்கள். இதையெல்லாம் புரிந்துகொள்ள முடியவில்லை. ஐயாவும் இதை பெரிதாக பேசியதில்லை.
சோழர்கால சிற்பங்கள் பார்க்கும்பொழுது இவர் முகம் மிகப் பிரகாசமாயிடும். இவர் உடன் வந்தவர்களை முற்றிலும் மறந்து விடுவார். பெரிய கோவில் இவருக்கு வீடு. முகம் சிவந்து பல இடங்களை தடவி முணுமுணுப்பார்.
என்னை பெரிய கோவில் வரவேற்கும் என்பார். பலவிதமான வரவேற்புகள், யானை பிளிறல் உட்பட அங்கே நிகழும். வியக்க வைக்கும்.
ஐயன் பாலகுமாரன் அவர்கள் ஒரு பார்வைக்கு சாதாரணம். இன்னொரு பார்வைக்கு? சிலருக்குத்தான் தெரியும். அதிகமாக பேசுகிறேனோ என்று என்னை நினைப்பவர்களைக் கண்டு பரிதாபப் படுகிறேன். அமுதக்குடம் என்று புரிந்தால்தானே அமுதம் பருக முடியும். ஆனால் உலகம் துவந்தமயமானது. ஆம் இல்லையென அடித்துக் கொள்வது. நல்லவேளை எனக்கு எந்த துவந்தமும் இல்லை.
ஐயனை குருவாகக் கொண்டு தெளிவாகியிருக்கிறேன். உலகில் உருப்படியாய் வாழ ஐயன் உதவிசெய்ய வேண்டும். ஐயன் பாலகுமாரன் அவர்களுக்கு என் ஆத்மார்த்தமான நமஸ்காரங்கள்.
குருவே துணை.
எழுத்துக்கும், தமிழுக்கும் எந்த ஒரு சம்மந்தமும் இல்லாத ஒரு குடும்பத்தில் பிறந்து, வளர்ந்து இன்று ஒரு தமிழ் எழுத்தாளருக்கு மருமகளாய் வந்தவள் நான்.
முதல் முறை சாந்தா அம்மாவின் அறுபதாவது பிறந்த நாளில் சூர்யா என்னை அறிமுகப்படுத்தியபோது சுமார் இரண்டு நிமிடம் என்னை உற்று கவனித்தார்.
அப்பொழுது தொற்றிக் கொண்ட நடுக்கம் இன்றும் எப்பொழுதாவது வந்து போவதுண்டு. பயத்தால் வரும் நடுக்கம் இல்லை என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது.
கல்யாணம் என்பது எல்லா பெண்களைப் போன்று எனக்கும் ஒரு கனவாகவே இருந்தது. சூர்யாவுடன் ஏற்பட்டது காதலைத் தாண்டிய ஒரு connect பிடித்திருக்கிறது.
ஆனால் நண்பர்களாகவே இருப்போம் என்று முடிவெடுத்த நேரத்தில் என்னை நோக்கி சூர்யா விட்ட முதல் அஸ்திரம் இந்த வீடு. FIRST BALL லயே CLEAN BOLD. COLLEGE LECTURER வெறும் COLLEGE க்கு மட்டுமே கடனேன்னு COTTON புடவை கட்டிக்கொண்டு போற, JEANS TSHIRT யுவதியாக இருந்தவள் நான்.
வீட்டுல ஒரு FAMILY FUNCTION புடவை கட்டிட்டு வா என்றார். ஒற்றை வாக்கியமாக கூறி PHONE ஐ வைத்த சூர்யாவின் மீது கோபம்தான் வந்தது. அப்படி என்ன சட்டம் போடற பழக்கம்ன்னு மனதுள் திட்டத் தோன்றியது.
BUT என்னவோ தெரியல அன்னிக்கு பட்டுப்புடவையும், பூவுமாக வீட்டை விட்டு கிளம்பினேன். என் வீடு என்னை ஆச்சர்யமாக பார்த்தது.
FUNCTION HALL ன் நடுவில் நான் மட்டும் தனியாக பாலா அப்பா எதிரே நிற்கிறேன். உற்று பார்ப்பது முடியவில்லை. அந்த இரண்டு நிமிடம் முடிவேனா என்கிறது.
ஹோமப்புகை நெடி, தோள்பட்டையில் குத்திக்கொண்டிருக்கும் பட்டுப்புடவையின் SAFETY PIN. ஆங்காங்கே எட்டிபார்க்கும் மடிசார் முகங்கள். நூறு, நூற்றைம்பது கண்கள். இவை அத்தனையும் தாண்டி உற்று நோக்கிக் கொண்டிருக்கும் பாலா அப்பா.
சூர்யாவை தேடினால், மூலையில் கைகட்டி நின்று STYLE ஆக பார்த்துக் கொண்டிருக்க, வாசலில் கொடுத்த கற்கண்டு வாயில் வெட்கத்துடன் வெளியே தெரிய நெளியத் துவங்கி விட்டேன்.
GOD BLESS YOU SUGANYA என்று ஒரு கையர்த்தி ஆசிர்வாதத்ததுடன் நிம்மதி வந்தது. அதன் பிறகு சூர்யாவுக்கு நான் செய்த அர்ச்சனை தனி ஹாஸ்யம்.
இந்த குடும்பம் என்னை அரவணைத்துக் கொண்ட விதம் வேறு எவருக்கும் இவ்வளவு எளிதில் கிடைத்திருக்குமா என்று தெரியவில்லை. எழுதிவைக்கப்பட்டால் ஒழிய இந்த வீட்டில் நுழைய முடியாதென்பது மிகப்பெரிய உண்மை. எனக்கு இது எழுதிவைக்கப்பட்டது.
ஒரு மாமியாருக்கே கஷ்டப்படும் மருமகள்கள் இருக்கும் காலத்தில் எனக்கு இரண்டு மாமியார்கள். இருவரும் என்னை ஸ்வீகரித்துக் கொண்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.
நான் சூர்யாவை காதலிக்க… ஒரு குடும்பமே என்னை திருப்பி காதலித்தது ஒரு விதமான SHOCK. எவ்வளவு சுதந்திரம், எவ்வளவு நேர்த்தி, எவ்வளவு நிம்மதி.
சாதாரண நாயுடு பொண்ண உள்ளங்கையில் வைத்து தாங்கும் ஒரு குடும்பத்தை நினைக்கும் போதிலெல்லாம் என்னுடைய MEDICORE மனசாட்சி இவங்களுக்கு என்ன திரும்பி பண்ணலாம்னே யோசிக்கும். அதையும் இந்த வீடு ரொம்ப SIMPLE ஆ மறுத்துடும்.
தெலுங்கு தாய் மொழியாக இருந்தாலும், தமிழ் சரளமாக வரும். வீட்டில் சகஜமாக வாழும். வகுப்பு இல்லாத நேரத்தில் சூர்யாவின் கட்டளைக்கு இணங்க அப்பாவின் ஒரு புத்தகத்தை படிக்க மேஜையில் எடுத்து வைக்க அருகிலுள்ள ஆசிரியர் கூட்டம் என்னை அண்ணாந்து பார்த்தது.
அதில் ஒரு தோழி அருகே வந்து உட்கார “இனிது இனிது காதல் இனிது” என்ன சுகன்யா பாலகுமாரன்லாம் படிக்கிற, யாரையாச்சும் LOVE பண்றியா என்று கேட்க, ஆமாம் இவரு பையனதான் LOVE பண்றேன்னு சொன்ன மறுநொடி என்னை என் கல்லூரி CELEBRITY யாக பார்க்க ஆரம்பித்தது.
இருப்பினும் இவ்வளவு அன்யோன்யமாக பழகக்கூடிய ஒரு குடும்பத்தில் நானும் ஒருவள் என்று நினைத்துப் பார்க்கவே ஆச்சர்யமாக இருக்கிறது.
அப்பாவை சுற்றி ஒரு மிகப்பெரிய சாம்ராஜ்யம் உருவாகிக் கொண்டிருப்பதை நான் பலமுறை கவனித்திருக்கிறேன். இவரின் ஒரு வார்த்தைக்காக, சந்திப்பிற்காக ஏங்கும் பலரை நான் பார்த்திருக்கிறேன். அப்பேற்பட்ட ஒரு மரியாதைக்குரியவரின் மருமகள் நான் என்பதில் எனக்கு மிகப்பெரிய பெருமை.
பூஜை புனஸ்காரம் ஆன்மிகம் இவை அனைத்துமே எனக்கு CHINESE பாஷை போன்ற விஷயம். பிள்ளைபேறுக்காக சொல்ல ஆரம்பித்த யோகி ராம்சுரத்குமார் நாமம் இன்று உறங்கும் போதும் மனதின் ஓரத்தில் ஓடிக் கொண்டிருக்கிறது. இது இவர்களின் ஸ்வீகரிப்பிலே எனக்கு கிடைத்த வரம்.
அது சினிமா குடும்பம்மா, வேண்டாமே என்று ஒதுங்கி நின்ற என் அப்பாவும் அம்மாவும் இவர்களின் நேர்மையை கண்டு வியந்து போனார்கள். என் அண்ணனின் மகனை கொஞ்சி குவிப்பார்.
என் அண்ணன் அண்ணியிடம் நிறைய நேரம் மனம் விட்டு LONDON நாகரீகத்தை பற்றியும், BRITISH MUSEUM ல் உள்ள சோழ சிற்பங்களை பற்றியும் பேசுவார்.
என் குடும்பம் இப்பொழுது நிம்மதியாக இருக்கிறது. எங்கோ ஒரு நாயுடு குடும்பத்தில் நான் வாக்கப்பட்டிருந்தாலும் என் பெற்றோர்கள் இவ்வளவு நிம்மதியாக இருப்பார்களா என்பது சந்தேகம்தான்.
என் உலகம் இப்பொழுது முழுவதுமாக அயான் சூர்யா (எ) வசுதேவ கிருஷ்ணாவை சுற்றியே இயங்குகிறது. அவன் பிறந்த சில தினங்களில் COLIC எனப்படும் வயிற்றுவலியால் துடிப்பதுண்டு.
இரவு நேரம் என்று பார்க்காமல் நான் பாலா அப்பாவிற்கு MESSAGE அனுப்பி PRAY செய்யும்படி கேட்க, இரவு முழுவதும் உட்கார்ந்து பிரார்த்திப்பார்.
ஒரு மணிக்கு ஒரு முறை MESSAGE அனுப்பி நலம் கேட்பார். வலி இருந்த இடம் தெரியாமல் அயான் தூங்கிவிடுவான். பாலா அப்பாவிடம் இன்னும் நிறைய விஷயங்களை, நான் MIRACLE ஆக பார்க்கிறேன்.
நான் என்றோ செய்த புண்ணியம் இன்று அன்பான கணவர், அழகான குழந்தை, சந்தோஷமான புகுந்த வீடு என்று வாழ்கிறேன்.
எளிமையிருக்கும் இடத்தில்தான் நேர்மை இருக்கும். நேர்மை இருக்கும் இடத்தில்தான் சந்தோஷம் இருக்கும். சந்தோஷம் இருக்கும் இடத்தில்தான் தெய்வம் இருக்கும்.
இது தெய்வங்கள் வாழும் வீடு.
திருச்சி செயின்ட் ஜோசப்பில் பி.எஸ்.சி. முடித்து விட்டு, முதுகலை படிப்பிற்கு மும்பை வந்தேன். ஐந்து வருடங்கள் மும்பையில் பணி செய்தபின் துபாயில் வேலை கிடைத்தது.
என் வீட்டில் எனக்கு பெண் பார்க்கும் படலம் தொடங்கியது. என் அக்கா திருமதி. கல்பனா குணசேகர் அவர்கள் எழுத்தாளர் பாலகுமாரனின் ஆதர்ச வாசகி.
பாலகுமாரனின் மகள் ஸ்ரீகௌரியின் ஜாதகம் எனக்கு வந்தபொழுது அவள் குதூகலமடைந்து இந்த சம்பந்தத்தைத் தேர்வு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.
நான், என் தந்தை திரு. ராமகிருஷ்ணன், தாயார் மங்களம் ராமகிருஷ்ணன் அவர்களுடன் பெண் பார்க்க வந்த பொழுது, பாலகுமாரன் மாமா அவர்களின் அன்பும், கமலாம்மா, சாந்தாம்மா அவர்களின் அக்கறையும், அந்த வீட்டின் ஒற்றுமையும் மிகவும் கவர்ந்தது.
2002, மார்ச் 24 திருமணம் முடித்து துபாயில் எங்கள் வாழ்க்கையை இனிதே தொடங்கினோம்.
அவரின் நாவல்களை அதிகம் வாசித்தது இல்லையென்றாலும், கௌரி சொல்ல அவரின் பல கதை சுருக்கங்களையும் கேட்டிருக்கிறேன்.
வெளிதேசத்தில் பணிபுரிவதால் அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு எனக்கு மிகவும் குறைவு. அவரோடு அதிகம் பேசிப் பழக வேண்டுமென்ற ஆதங்கம் இன்றும் எனக்குண்டு.
எனக்கு கிடைத்த குறைவான நேரத்தில் பல கோயில்களுக்கு எங்களை கூட்டிச் சென்று, அந்த தெய்வங்களின் புகழ் விளக்கி, கோயில்களின் மகத்துவத்தை விவரித்தார்.
இந்த புதுமையான அனுபவங்களும், பயணங்களும் இன்றும் இனிமையாய் என் நினைவில் நிற்கிறது.
அவர் வழிகாட்டுதலின்படி கௌரி செய்யும் பூஜைகள் என் வீட்டில் நல்ல அதிர்வலைகளை கொண்டு சேர்த்திருக்கிறது. எங்கள் அமைதியான, சந்தோஷமான, நிறைவான வாழ்க்கைக்கு இது வழிவகுத்தது.
அன்பான மனைவி, அறிவான குழந்தை, அனுசரணையான உறவுகள் என்று என் வாழ்க்கை ரம்மியமாக இருக்கிறது. ஒருவர் வீட்டின் பலம் அவர்கள் பெற்றோர்களின், மூத்தவர்களின் ஆசியும், அன்புமே.
இதில் எனக்கு மிகுந்த நம்பிக்கையுண்டு. உற்றார் உறவினர் சூழ அவர்கள் அன்பில் நனைந்து வாழ்வது பெரும் கொடுப்பினை. இது வரம்.
எல்லா நேரமும் எனக்காய், என் நலனுக்காய் இடையறாது பிரார்த்தனை செய்யும் ஆசிர்வதிக்கும் பாலகுமாரன் மாமா அவர்களை வணங்குகிறேன். அவரின் ஆரோக்யமான வாழ்விற்கும், மேன்மைக்கும் இறைவனை வேண்டுகிறேன்.
இதுவும் ஒரு முன்கதைச் சுருக்கம்தான். என்னுள் தேடிக் கிடைத்தவற்றை சில பக்கங்களில் சுருக்கியிருக்கிறேன் என்ன எழுத வேண்டும், எவ்வளவு எழுத வேண்டும் என்று யோசித்து சுருக்கியிருக்கிறேன்.
திருச்சி ஜங்ஷனில் இன்றும் இருக்கும் கார்முகில் லெண்டிங் லைப்ரரி நாற்பது வருடங்களுக்கு முன் என் புத்தக வாசிப்புக்குப் பெரிதும் உதவியது. அதிகம் படித்தது தி. ஜானகிராமன், ஜெயகாந்தன் இருவருடைய எழுத்துக்களைத்தான்.
பாலகுமாரன் அறிமுகம் உயிரின் நிறம் மஞ்சள் சிறுகதை மூலம்தான். சாவியில் அட்டைப்படமாக சுஜாதா, மாலன், சுப்ரமண்ய ராஜு, சிந்துஜா இன்னும் சிலரை சேர்த்து ஒரு Group Photo வந்திருந்தது.
பாலகுமாரனின் மெர்க்குரிப்பூக்கள் தொடரின் போதுதான் அவருக்குக் கடிதம் எழுதினேன். ஒரு ஆடிப்பதினெட்டு விடியற்காலை திருச்சி ஜங்ஷனில் பாலகுமாரனைப் பார்த்ததும் அதன் தொடர்ச்சியாக நடந்த சம்பவங்களும் பாலகுமாரனின் சிறுகதைகளாக வந்துவிட்டன.
என் அலுவலகத்தில் ஒரே ஒரு போன் அதுவும் அதிகாரி அறையில்தான் இருக்கும். ஒரு நாள் என்னை அழைத்து போனை எடுத்துப் பேசும்படி சொன்னார். அதுவரை போனில் பேசியதில்லை. எப்படி போனை பிடித்துக்கொள்ள வேண்டும் என்றுகூட தெரியாது.
தடுமாறி காதில் வைத்தால் பாலகுமாரன் குரல். அதிரடியாய் சாந்தா ஐ லவ் யூ என்றார். பயந்துவிட்டேன். அதிகாரி காதில் விழுந்திருக்குமோ என்கிற பயம் இன்னும் தடுமாற வைத்தது.
அதிகாரி, என் தாய்மாமாவின் நண்பர். சரி என்று ரொம்பவும் மெலிதான குரலில் பதில் சொன்னேன். சரிதான் பதிலா. பக்கத்தில் யாராவது இருக்காங்களா. நேரில் பேசலாம் என்று போனை வைத்துவிட்டார்.
அடுத்து சில மாதங்களில் சென்னைக்கான என் அலுவலக மாற்றம், கமலாவின் சம்மதம், சென்னை வருகை, திருமணம் என்று பாலகுமாரன் வேகமாக செயல்பட்டதில் நான் சென்னையில் செட்டிலாகி விட்டேன்.
இதுதான் என் உலகம். இவர்களுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று முதல்நாளே தீர்மானம் செய்துகொண்டேன். கலவரமும் இனிமையுமாய் வாழ்க்கை நகர்ந்தது.
எதை இழந்தோம் எதை பெற்றோம் என்று கணக்குப் பார்க்க வேண்டிய அவசியமில்லை. நிறைய கற்றுக் கொண்டிருக்கிறேன். பார்த்து, படித்து, நேரடியாக மறைமுகமாக நிறைய கற்றுக் கொண்டிருக்கிறேன். மனிதர்களைப் பற்றி ஒரு அலட்சியம் என்னிடம் இருக்கும். பாலகுமாரனுக்கு சரிசமமான கோபம் உண்டு. நிறைய மாறியிருக்கிறேன்.
பாலகுமாரன் குடும்பத்தில் எல்லோரும் நல்லவர்கள். அதனாலேயே என்னைப் பற்றி நம்பிக்கை தருவது எனக்கு சுலபமாக இருந்தது. ஸ்ரீ கௌரிக்கு வரன் பார்த்துக் கொண்டிருந்த நேரம். ஒரு இடம் தகைந்தது. ஆனால், சாந்தாவும் சாந்தா குடும்பத்தினரும் கலந்து கொள்ளக்கூடாது என்று நிபந்தனை விதித்தார்கள்.
என் மாமியார் சுலோச்சனா அம்மா இந்த சம்பந்தமே வேண்டாம் என்று சொல்லிவிட்டார். காதல் என்பது மதித்தல், விட்டுக்கொடுத்தல், எந்த நிபந்தனையுமின்றி என்கிற ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியின் வாசகம் எனக்கு இன்றுவரை ஆச்சரியமாக இருக்கிறது.
ஆனால், கமலா அப்படித்தான். பாலகுமாரன் மீது தேவதா விஸ்வாசம் இன்றும் உண்டு. கோபம் வந்தால்கூட அபகடமாகப் பேசமாட்டார்கள். மூளைக்காய்ச்சல் வந்து நினைவிழந்த சமயத்தில் கூட பாலகுமாரனை மட்டும் ஞாபகம் இருக்கும். சூர்யா மீதும் அதே பிரியம். கமலாவின் எதிரில் சூர்யாவின் நண்பர்கள் கூட கேலி செய்துவிட முடியாது. சூர்யாவை யாரும் குறை சொல்லக்கூடாது.
ஸ்ரீ கௌரி நல்ல தோழி. ஸ்கூட்டர் கற்றுக்கொண்ட பிறகு நானும் அவளும் நிறைய சுற்றியிருக்கிறோம். பாண்டிபஜார், கோடம்பாக்கம், மயிலாப்பூர், கபாலிகோவில் திருவிழா, மயிலாப்பூர் ஃபெஸ்டிவல், சினிமா, பீச் என்று செமையாய் சுற்றியிருக்கிறோம்.
நல்ல குடும்ப வாழ்க்கைக்கு ஆசைப்பட்டாள். கிடைத்திருக்கிறது. அருமையான கணவர். கெட்டிக்கார குழந்தை எல்லாம் பகவான் ஆசிர்வாதம். பகவான் பற்றிய பாட்டுக்களை அவள் பாடி கேட்க வேண்டும். ஒவ்வொரு முறை சென்னை வரும்போதும் “மலரின் மேவு திருவே” பாடச் சொல்லி கேட்பேன்.
என் பிள்ளை சூர்யா திருப்பதி வெங்கடாஜலபதி கொடுத்த வரப்பிரசாதம். என்னுடைய சந்தோஷம். அவனை பிள்ளையாண்டிருந்த சமயம் நானும் பாலகுமாரனும் கமல்சார் வீட்டில் நிறைய ஆங்கில சினிமாக்கள் பார்த்திருக்கிறோம்.
சூர்யா சினிமாவைத் தொழிலாக ஏற்கும் ஆர்வம் வந்ததற்கு இதுவும் ஒருகாரணம். பகவான் யோகி ராம்சுரத்குமார் தன் மடியில் அமர்த்தி ஆசிர்வதித்த குழந்தை சூர்யா.
எழுத்தாளர்களில் திரு.ஜானகிராமன், திரு.ஜெயகாந்தன் இருவருக்கும் கடிதம் எழுதியிருக்கிறேன். ஜெயகாந்தன் சாரிடமிருந்து பதில் வரவில்லை. ஜானகிராமன் சாரை ஒருமுறை திருச்சி மெயின்கார்ட் கேட்டில் ஒரு கடைவாசலில் பார்த்து நமஸ்காரம் பண்ணினேன்.
சென்னை வந்தபிறகு பாலகுமாரனோடு அவருடைய வீட்டுக்குச் சென்று பார்த்தேன். புதுநாவல் பற்றி கேட்டேன். என்னுடையது யானை கர்ப்பம் என்றார்.
நான் பிள்ளையாண்டிருப்பது தெரிந்து, தி.ஜானகிராமன் சார் தன் மனைவியுடன் பூ, பழம், வெற்றிலைபாக்கு, ரவிக்கைத்துண்டு என்று ஒரு தாம்பாளம் நிறைய பொருட்கள் கொண்டுவந்து ஆசிர்வாதம் பண்ணினார். நான் திருச்சிக்கு பிரசவத்திற்கு சென்றிருந்த சமயம் இறைவனடி சேர்ந்துவிட்டார். என் சூர்யாவை அவர் பார்க்கவில்லை என்கிற துக்கம் இப்போதும் உண்டு.
சூர்யாவின் உபநயனத்தை நடத்தித் தரும்படி பகவான் யோகிராம்சுரத்குமார் அவர்களை வேண்டிக்கொண்டோம். நாள் குறித்து, திருவண்ணாமலையில் ஓயா மடத்தைத் தேர்ந்தெடுத்து குறிப்பிட்ட நாளில் கமலாவின் உடல்நிலை சரியில்லாத போதும் தானே முன்னின்று நடத்தி வைத்தார்.
சூர்யாவுக்கு ஆசீர்வாதம். பாலகுமாரனுக்கு பட்டாபிஷேகம். கபாலம் தாண்டிய தரிசனம். ஜன்மாந்திரத் தொடர்பால் படிப்படியாக என்றில்லாமல் நேரடியாக பட்டம் சூட்டப்பட்டது. பாலகுமாரனுக்கு இறைபணி உணர்த்தப்பட்ட நாள் அது.
If at all any rebirth, this beggar likes to be with Balkumar. என்று பாலகுமாரன் கைகளைக் கோர்த்துக்கொண்டு பகவான் தீவிரமான முகபாவத்தோடு பேசினார்.
பகவான் மீது பாலகுமாரன் காட்டிய பக்தியும், உருகலும் எங்களை மிரள வைத்தது. ஆனால், அடுத்தடுத்த பகவான் தரிசனங்களில் வீடு மொத்தமும் பகவானிடம் சரணடைந்தது. என்னுடைய கடவுள் பச்சைத் தலைப்பாகையும், விசிறியும், கொட்டாங்குச்சியுமாய் இருக்கிறார் என்று நானும் மாறிவிட்டேன்.
ஒருமுறை நாடார் மேன்ஷனில் பகவானோடு இரண்டு நாட்கள் தங்கியிருந்தோம். பகவான் பாலகுமாரனிடம் காட்டுகிற நெருக்கம் சந்தோஷமாக இருக்கும். தோளில் இடிப்பதும், பாலகுமாரனைத் தோளோடு சேர்த்து அணைத்துக் கொள்வதும், முதுகில் தட்டுவதும், வாய்விட்டுச் சிரிப்பதும் ஆச்சரியமாக இருக்கும். என்ன இருக்கிறது இந்த பாலகுமாரனிடத்தில் என்று தோன்றும்.
Balkumar is my pen. Whatever he writes it is for ever. என்று பகவான் சொன்னதும், கட்டளையிடுங்கள் எழுதுகிறேன் என்று பாலகுமாரன் பரவசமாக கண்களை மூடியபடி சொன்னார். உடனே பாகவதம், மகாபாரதம், இராமாயணம் எழுத கட்டளையிட்டார்.
கிருஷ்ணாவதாரம் ஒரு பாகம், தினகரன் ஆன்மிக இதழில் மகாபாரதம், புதிதாக வரப்போகும் பொற்கோவில் இதழில் இராமாயணம். பகவான் கட்டளையை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார். பாலகுமாரனின் ஆரோக்கியத்திற்கும், ஆயுளுக்கும் பகவான் பொறுப்பேற்றுக் கொண்டிருக்கிறார்.
பகவான் யோகி ராம்சுரத்குமார் அவர்களிடம் இது வேண்டும், அது வேண்டும் என்று லௌகீகமாகப் பேசுவதெல்லாம் நான் தான். கார் வாங்க அனுமதி கேட்டபோது, Balkumar should not drive the car, உன்னால் டிரைவர் வைத்து சம்பளம் கொடுக்க முடியும் என்றால் வாங்கலாம் என்றார்.
சொந்தவீடு பற்றி கேட்டபோது வீட்டு வரவு செலவு, சேமிப்பு, கணக்கு எல்லாம் கேட்டார். கடன் பற்றி, கடனடைப்பது பற்றியும் கேட்டார். பாலகுமாரன் சினிமாவில் மிகப்பெரிய ஆர்வம் காட்டவில்லை. நிறைய சினிமா வாய்ப்புகளைத் தேடிச்செல்லவேண்டும். ஆனால் அதில் பாலகுமாரனுக்கு விருப்பமில்லை என்றும் சொன்னேன்.
Why you want to change his nature? என்றார். ஆனால், சொந்த வீட்டின் அவசியம், கௌரி கல்யாணம் பற்றி என் கவலையை சொன்னதும், Shantha should not worry. My father blesses Shantha என்றார். வீடு அமைந்தது. சிரமமில்லாமல் வீட்டுக்கடன் தீர்ந்தது. கௌரி கல்யாணம் எங்கள் குடும்ப நண்பர், வாசகர் கோவை ரவிச்சந்திரன் உதவியால் மிகச்சிறப்பாக நடந்தது.
பாலகுமாரனை let him do thapas என்று கட்டளையிட்டிருந்தார்.
பாலகுமாரனுக்கு பகவானைப் பற்றி ஒரு புத்தகம் எழுத ஆசை இருந்தது. தேவகி அம்மா அதற்கு உதவி செய்வதாகச் சொன்னார்கள். தினம் பகவானை தரிசிக்க அவருடைய தேரடி தெரு வீட்டிற்கு தேவகி அம்மா செல்லும்போது யார் வந்தார்கள் என்ன நடந்தது என்று விவரமாக பாலகுமாரனுக்குக் கடிதம் எழுதுவார்கள்.
ஆனால், பின்னாளில் தேவகி அம்மா தானே புத்தகம் எழுத ஆசைப்பட்டு பாலகுமாரனிடம் கடிதங்களைக் கேட்க இவர் அவற்றை கொடுக்க மறுத்துவிட்டார். ஒருவருக்கு கடிதம் எழுதி அது அவரிடம் சேர்ந்தபிறகு அதை எழுதியவர் கேட்பதற்கு எந்த அதிகாரமுமில்லை என்று சொல்லிவிட்டார்.
அதற்குப் பிறகு நான் திருவண்ணாமலைக்கு சென்றிருந்தபோது காலை உணவருந்த ஆசிரமக் குடிசையில் பகவானோடு அமர்ந்திருந்தபோது பகவான் என்னைத் தனியாக வெளியே அழைத்துப்போய் இருகரம் கூப்பி பாலகுமாரனிடம் அந்த கடிதங்களை தேவகிக்கு அனுப்பும்படி சொல். இந்த பிச்சைக்காரன் பாலகுமாரனிடம் இந்த உதவியைக் கேட்கிறான் என்றார்.
நீங்கள் கட்டளையிட்டால் போதும் பாலகுமாரன் உடனடியாக செய்துவிடுவார் என்று பகவானை நமஸ்கரித்து எழுந்து கரம் கூப்பி சொன்னேன். சென்னை வந்து பாலகுமாரனிடம் சொன்னதும், உடனே அந்த Fileஐ கவரில் வைத்து தேவகி அம்மாவுக்கு அனுப்பி விட்டார்.
தேவகி அம்மாவும் அவற்றை வைத்து புத்தகம் எழுதிவிட்டார். ஆனால், பாலகுமாரன் என்கிற பெயரை அவர் ஒரு இடத்தில் கூட அந்தப் புத்தகத்தில் குறிப்பிடவில்லை. சரி, இதுவும் பகவான் சித்தம்.
குரு என்கிற இறை கொடுத்த கொடை பாலகுமாரனிடம் பெரும் பொக்கிஷமாக உள்ளது. தன்னைத் தேடி வருபவர்களின் பிரச்னைக்காகப் பிரார்த்தனை செய்கிறார். சரித்திரம், புராணம், இதிகாசம், தியானம், மரணம், இந்து மதச் சிறப்புகள் பற்றி எழுதுகிறார்.
இதுபோதும் என்கிற நிறைவு எங்கள் அனைவருக்கும் இருக்கிறது.
என் கணவர் பாலகுமாரன் அவர்களுக்கு 70 வயது பூர்த்தியடைகிறது. அவர் நீண்ட ஆயுளுடன் நெடுங்காலம் வாழ வேண்டுமாறு யோகி ராம்சுரத்குமார் பாதங்களில் பணிந்து வேண்டுகிறேன்.
அவரைப் பற்றி சில துளிகள்…
நான் 1975 ஆம் ஆண்டு அவருக்கு மனைவியானேன். எனக்கு இலக்கிய நயம் கிடையாது. அவருக்கோ அதிக இலக்கிய நயம். ஆனால், எனக்கு அவ்வாறு இலக்கிய நயம் இல்லையென்று அவர் கடிந்து கொண்டதில்லை. கோபப்பட்டதில்லை. ஆனால், அவருக்கு உதவி செய்வதற்கு ஆளில்லாமல் தவித்துக் கொண்டிருந்தார்.
காலையில் 7 மணிக்கு டிராக்டர் கம்பெனிக்குச் செல்வார். மாலை 5 வரை வேலை முடித்துவிட்டு குமுதம், சாவி, போன்ற பத்திரிகை அலுவலகங்களுக்குச் சென்றுவிட்டு இரவு 9 மணிக்குமேல்தான் வீடு திரும்புவார்.
இரவு உணவு முடித்துவிட்டு மறுபடியும் கதை எழுத உட்காருவார். 3 மணி 4 மணிவரை எழுதுவார். மீண்டும் ஒரு தூக்கம் போட்டுவிட்டு 7 மணிக்கு அலுவலகம் சென்று விடுவார். எனக்கு இது வியப்பாக இருக்கும்.
அவரது கடும் உழைப்பும், விடாமுயற்சியும்தான் அவர் வெற்றிக்குக் காரணம். அவர் அவ்வளவு கடும் உழைப்பாளியாக இருந்தார். இவரது வேலைக்கு உபயோகமாக இருக்க இவர் கதைகளை விமர்சித்த சாந்தாவை திருமணம் செய்து கொண்டார்.
சாந்தா இவருக்கு மிகவும் உறுதுணையாக இருந்து உதவி செய்தார். எங்களிடம் மிகவும் அன்பாக நடந்து கொண்டார். எனக்கு ஒரு மகள் ஸ்ரீ கௌரி. அவருக்கு சூர்யா என்ற வெங்கட்ரமணனும் பிறந்தான்.
பாலகுமாரன் அவர்கள் குழந்தைகளிடம் மிகவும் அன்பாக நடந்து கொள்வார். ஒரு கடுஞ்சொல் கூட சொல்ல மாட்டார். அவர்களுக்கு இணையாக விளையாடுவார். அவர் எழுதும்போது அவர்கள் இருவரும் வந்து விளையாண்டால் கூட ஒன்றும் சொல்ல மாட்டார்.
எந்தவிதமான சப்தத்திலும் எந்த நேரத்திலும் அவர் எழுதுவார். அவருக்கு எழுதுவதற்கென்று தனி மேசை, நாற்காலி கூட கிடையாது. எங்களது வீடு மொட்டை மாடியில் உட்கார்ந்து எழுதுவார். அப்போது ஒரு வசதியும் இவருக்கு இல்லையே என்கிற வேதனை எனக்கு வரும்.
இப்படி உழைப்பவர்களை என் பிறந்த வீட்டிலோ, நண்பர்கள் இல்லத்திலோ பார்த்ததில்லை. அதேசமயம் என் இல்லத்தில் எல்லா விஷயங்களிலும் மனதார ஈடுபடுவார்.
எங்களுக்கு ஏதாவது வாங்கித் தருவதில் மிகுந்த பிரியம். வெளியே அழைத்துப் போவதில் ஆர்வம். குழந்தைகளுக்குப் பாட்டு, நீச்சல், கம்ப்யூட்டர் என்று பயிற்சி தருவார்.
வீட்டில் பூஜைகள் பலவும் நடத்துவார். எனக்கு பல மந்திரங்கள் சொல்லிக் கொடுத்திருக்கிறார். எனக்கு 50 வயது நெருங்கும்போது மூளையில்ஆபரேஷன் நடந்தது. சாந்தாதான் கவனித்துக் கொண்டார். அசைக்க முடியாத ஒற்றுமை எங்களுக்குள் வர என் கணவரே காரணம்.
நான் அவரை கணவராக அடைந்ததில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். தற்போது ஆன்மிக சிந்தனைகளோடு வாழ்கிறார். அவரைப் பலரும் போற்றுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. அவரால் எனக்கு பெரிய மரியாதை கிடைக்கிறது.
அவர் நீடுழி வாழவேண்டும் என்று எல்லாம் வல்ல திருவண்ணாமலை மகான் யோகி ராம்சுரத்குமார் அவர்களை பிரார்த்திக்கிறேன்.
வாழும் சித்தர் ஐயா அவர்களுக்கும் எனக்கும் பத்து வருட பந்தம். இந்த பந்தம் ஏற்படுத்தப்பட்டது என் குருநாதர் வாப்பா செய்யது பாவா அவர்களால்.
ஆம்… என் உயிரினும் மேலான என் மகன் நெய்னார் முகம்மதுவுக்கு ஒரு கண்டம் ஏற்பட்டது. அவர் அதிலிருந்து மீள, இறைவனிடம் நான் கெஞ்சிக் கதறிக்கொண்டிருந்த நேரத்தில், என் குருநாதரிடமிருந்து அலைபேசி அழைப்பு.
உனக்கு எழுத்தாளர் பாலகுமாரனைத் தெரியுமா?…. தெரியாது வாப்பா…. கேள்விப்பட்டிருக்கிறேன்…. என் பேரன் திப்புசுல்தானுக்காக அவரிடம் சொல்லி பிரார்த்தனை பண்ணிக்கொள்ளச் சொல்… நல்லது வாப்பா.
ஐயாவை அலைபேசியில் தொடர்புகொண்டு, அழுதுகொண்டே என் மகனைப் பற்றிய விவரங்களைச் சொல்லி, பிரார்த்தனை பண்ணக் கேட்டுக்கொண்டேன்
அழாதே ராஜ்கிரண்… உன் மகனுக்கு பேரை மாத்திடலாமா என்றார். என்னடா இது சம்பந்தமில்லாமல் பேசுகிறாரே என்று எனக்குள் ஒரு சிறு குழப்பம்.
அதைத் தவிர்த்துக்கொண்டு, ஐயா, திப்புசுல்தான் மாமன்னர் கட்டிய ஸ்ரீரங்கப்பட்டணம் மசூதியில் நான் தொழப் போயிருந்த பொழுதில் மாமன்னர் திப்புசுல்தான் அவர்களும், என் குருநாதர் செய்யது பாவா அவர்களும் இறைவனிடம் எனக்காகக் கெஞ்சி அதன் பயனால் எனக்குக் கிடைத்தவர் என்று நான் நம்பும் என் மகனுக்கு என் குருநாதரும் நானும் ஆசையோடு வைத்த பெயர் திப்புசுல்தான். அதை எப்படி மாற்ற முடியும்….
நான் பேசி முடிக்க அலைபேசியை துண்டித்துவிட்டார். நுங்கம்பாக்கம் Child Trust மருத்துவமனையில் ஆபரேஷன் தியேட்டரில், ஒரு மணி நேர போராட்டத்திற்குப் பின்பு, எந்தக் குறையுமில்லாமல் என் மகன் எனக்குக் கிடைத்தார்.
ஐயாவின் பிரார்த்தனைக்கு நன்றி சொல்ல, குடும்பத்தோடு அவர் வீட்டுக்குச் சென்றோம். நன்றி சொல்ல என்னை அவர் விடவில்லை. என் மனைவியைப் பார்த்துக் கேட்டார்.
பத்மாவதி, ராஜ்கிரணுக்கும் எனக்கும் என்ன உறவு தெரியுமா? ஐயாவை முதன் முதலாக அப்பொழுதுதான் நானே பார்க்கிறேன். அதனால் எனக்கும் என் மனைவிக்கும் ஒரே குழப்பம்.
அவரே தொடர்ந்தார். ராஜ்கிரண் என் நண்பன். இது ராஜ்கிரணுக்கே தெரியாது. உனக்கு எங்கே தெரியப் போகுது. நேரம் வரும் போது எல்லோருக்கும் தெரியும் என்று கூறிக்கொண்டே என் கையைக் கெட்டியாகப் பிடித்தபடியே என்னை அணைத்துக் கொண்டார்.
என் மெய்சிலிர்த்து, உடல் நெக்குறுகி கண்ணீர் மல்கியது. என் மகனின் பெயரை ஏன் மாற்றச் சொன்னார் என்ற குழப்பத்திற்கு அப்பொழுதுதான் எனக்கு விடை சொன்னார்.
திப்பு சுல்தான் என்பது சாதாரண மன்னனோ, சாதாரண ஆத்மாவோ அல்ல. அது பெரும் ஜுவாலை…. அதைத் தாங்கிக் கொள்ளும் சக்தி யாருக்கும் கிடையாது. அதனால்தான் அந்தப் பெயரை மாற்றச்சொன்னேன் என்றார்.
ஐயா என் மகனுக்கு வைத்த பெயர் தான் நைனார் முஹம்மது. இந்தப் பெயர் மாற்றம் குறித்து என் குருநாதர் வாப்பா செய்யது பாவா அவர்களிடம் சொன்னதும் மகிழ்ந்து போனார்.
மற்றுமொரு நாளில், ஐயாவைப் பார்க்க அவர் வீட்டிற்குச் சென்றிருந்தபொழுது, ராஜ்கிரண், “உன் குருநாதர் செய்யது பாவா அவர்களை பார்க்கணும் போல இருக்கு. என்னை கூட்டிக்கிட்டுப் போறியா? என்று ஒரு குழந்தையின் குதூகலத்தோடு என்னிடம் கேட்டார்.
அப்பொழுதுதான், எனக்குப் புரிந்தது. என் குருநாதர் செய்யது பாவா அவர்களுக்கும், அவரால் கைகாட்டப்பட்ட வாழும் சித்தர், எனது இன்னொரு குருநாதர் ஐயா அவர்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பது.
ஆன்மிகம் என்பது ஆழம் காணமுடியாப் பெருங்கடல். இந்துத் தத்துவங்கள் பலவற்றை வாப்பா செய்யது பாவா அவர்கள் எனக்கு அவ்வப்போது விளக்குவார்.
குர்-ஆனிலிருந்து பல விஷயங்களை பாலகுமாரன் ஐயா அவர்கள் என்னிடம் பகிர்ந்து கொள்வார். இந்தப் பத்து வருடங்களாக ஐயாவைக் கலந்து கொள்ளாமல் என் குடும்பத்தில் எதுவும் நடந்ததில்லை.
குருமார்கள் கிடைப்பதென்பது இறைவனின் மிகப்பெரும் கருணை…..
திரு. பாலகுமாரன் அவர்களைப் பற்றி நினைக்கும் போது பல எண்ணங்கள், பல நினைவுகள். சுமார் 32 வருடங்களுக்கு முன்னால் திரு. பாலச்சந்தர் அவர்கள் சொல்லி, ஏதோ ஒரு பத்திரிகைக்காக பேட்டி எடுக்க என்னிடம் வந்தார்கள்.
திரு. பாலகுமாரன் அவர்கள் அன்று அவர் என்னிடம் கேட்ட கேள்விகள் அதுவரை என் வாழ்க்கையில் நான் சிறிதளவும் நினைத்து பார்க்காத, எதிர்பார்க்காத, யாருமே என்னிடம் கேட்காத கேள்விகள்.
அவர் ஒரு வித்தியாசமான மனிதர் என்பதை அன்றே நான் உணர்ந்தேன்.
“பாட்ஷா” படத்தில் நடிக்கும் போது அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அந்த படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு காரணமானவர்களில் இவரும் ஒருவர்.
இருந்தும் அதைப்பற்றி அவர் எங்கும் யாரிடமும் அதைப்பற்றி பேசியது கிடையாது. “பாட்ஷா” படத்தில் நான் பேசிய ஒவ்வொரு வசனமும் பாலகுமாரனின் சிந்தனையில் உதித்த முத்துக்கள்.
அந்த படத்தில் என்னுடைய நெருங்கிய நண்பராகிவிட்ட பாலகுமாரன் ஒரு மிகப்பெரிய எழுத்தாளர் என்பதைவிட அவர் ஒரு ஞானி என்கிற நிலைக்கு தன்னை உயர்த்திக்கொண்டது, என்னுள் இருந்த எங்களது நட்பையும் மீறி அவர்மீது அதிக மதிப்பையும், மரியாதையையும் உண்டாக்கியது என்பதுதான் உண்மை.
இன்றளவும் நான் அவருடைய நண்பர் என்று சொல்லிக் கொள்வதில் எனக்குதான் பெருமை.
எழுபதாம் ஆண்டில் அடி எடுத்துவைக்கும் திரு. பாலகுமாரன் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
ஆண்டவன் இவருக்கு நீண்ட ஆயுளையும், ஆரோக்கியத்தையும், மன நிம்மதியையும் கொடுத்து இவர் மேலும் பல சாதனைகளை புரிய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.
வாழ்க வளமுடன்.