“மன்னா, மேலேறச் சொல்லி ஏணி சார்த்தப்பட்டிருக்கிறது. முயன்று படிகளில் ஏற வேண்டும். பூமியின் சம்பந்தம் அறும்வரை மேலே போக வேண்டும். நான் சொல்வது ஒரு உபமானம். அப்பொழுது பிறந்த இடமும், வளர்ந்த இடமும் இதனால் இதனிலிருந்து விடுபட்ட சரீர தன்மையும் அகங்காரம் கொண்ட மனிதனுக்குத் (மனதுக்கு) தெரியும். அந்த மனது அகங்காரத்தையும் விடுகிறது. முட்டையிலிருந்து குஞ்சு வந்த பிறகு சிறகு மீதுதான் பறவைக்கு எண்ணமே தவிர, அதுவரை காத்து வந்த முட்டையை கொண்டாடாது.”

“இதுவும் புரிகிறது.ஆனாலும் சிக்கலின் அடி ஆழம் புரியவில்லை. ”

மன்னன் கவலையோடு கேட்டான்.

“இந்த பூமி ஐம் பெரும் பூதங்களால் ஆனது. இங்கு சரீரம் எடுத்த ஆன்மாவை ஐந்து புலன்களால் சூழ்ந்து கொள்கிறது. ஐந்து பூதங்களும் ஐந்து புலன்களாகின்றன. இந்தப் புலன்களின் கூட்டால் மனம் என்கிற விஷயம் தோன்றுகிறது. இந்த மனம் தன் இருப்பை பலப்படுத்திக் கொள்ள புலன்களை தூண்டுகிறது. புலன்களின் ஆவேசத்தால் அல்லது ஆற்றலால் மனதின் இருப்பு பெரிதாகிறது. சரீரம் மனதை தான் என்று கொள்கிறது. மனம் சரீரத்திற்குள் அடக்கமாகிறது. ஒன்றை ஒன்று தோள் பற்றிக் கொண்டு பிரம்மாண்டமாகின்றன. ஆன்மா முற்றிலும் மறைக்கப்படுகிறது. ஆன்மா சரீரம் விட்டு நகரும் வரை இந்தக் கூத்து நடைபெறுகிறது. சரீரத்திலிருந்து இந்த மாயா விஷயங்கள் நகராது இருக்க, ஆன்மாவின் நகர்தலுக்கு எதிராக அதாவது மரணத்திற்கு எதிராக பெரும் வலியை கலவரத்தை இவைகள் ஏற்படுத்துகின்றன. வலிக்கும் தனிமைக்கும் பயந்து சரீரம் மன போஷாக்கு நடைபெறுகிறது. ஆனால் ஆன்மாவின் நகர்வை அதாவது மரணத்தை நிறுத்த முயலாது.

ஆன்மா ஏன் நகர்கிறது. ஏன் பிறக்கிறது என்று சொல்ல, மனிதனுக்கு பக்குவம் இல்லை. அதற்கான வார்த்தை இல்லை. அந்த வித்தை மொழி வசப்படவில்லை. சொல்லித்தரப்படவில்லை. உலக மொழி அறியாதவன் வாழ்வு பற்றி எப்படி விவரிக்க முடியாதோ பிரம்ம இரகசியத்தை அறியாதவன் பிறப்பு இறப்பு பற்றி ஏன் நடக்கிறது என்பது பற்றி அறிய இயலாதவனாகிறான்.

இந்தப் புவியில் ஆன்மாவின் இருப்பை உணர்வதே அதாவது மாயையிலிருந்து விடுபடுவதே அதாவது புலன்களும் புலன்களிலிருந்து உருவகிக்கப்படும் சரீரமும் என்ற உணர்வை தவிர்த்தலே முக்கியம். வெளிப் பார்வைக்கு சிக்கலெனத் தோன்றும். ஆராயப் புகுந்தால் எளிதாகப் பிரித்து விடலாம்.

ஆனால் மாயை தன் வலிமையை காட்டும். உணவாலும், மதுவாலும், பெண் போகத்தாலும், மற்றைய கர்வங்களாலும் ஆன்மாவை மறக்கும். மறைக்கப்பட்டாலும் வெளிச்சம் உள்ளே இருக்கிறது. அது மறையாத அகலாத வெளிச்சம். குறைபாடு வெளிச்சத்தில் இல்லை. மறைக்கப்பட்டது மறைக்கப்பட்ட வஸ்துக்களில் உள்ளது.

இன்னொரு சூட்சமம் சொல்கிறேன் கேள்.

இந்த பூமியில் பிறந்து சொர்க்கம் நரகம் என்பதை உணர்ந்து அதாவது சுகம் துக்கம் என்ற உணர்வுகளை அறிந்து அதற்கேற்ற செயல்களில் ஈடுபடுகிறான். சுகத்தின் போது சந்தோஷமும், இது நீண்டு தங்கவேண்டுமே என்கிற பயமும், துக்கம் வரவே கூடாது என்கிற பதட்டமும் அவனை அலைகழிக்கின்றன. பற்றற்ற மனமே இதை ஆராய்ந்து பார்க்கத் துவங்குகிறது. மனம் பற்றற்று இருப்பதற்கு ஒரு தர்மம் இருக்கிறது. (ஒரு நியதி) இந்த நியதி வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. இதனாலேயே வேதம் உயர்வென்று கருதப்படுகிறது.

வேதம் என்பது வாழ்வுக்கான வழிகாட்டி. வாழ்வுக்கப்பாலும் அதுவே வழிகாட்டி. எனவே, அது ஒருகாலும் புறக்கணிக்கக் கூடியது அல்ல.

ஒரே விதமான சரீர மன அமைப்புகளுடைய மனிதருக்கு நடுவே போட்டி ஏற்பட்டிருக்கிறது. இந்த போட்டியால் எப்படியும் மேன்மையடைய வேண்டும் என்ற எண்ணத்தில் தர்ம காரியங்களில் அந்தணர்கள் அதிகம் ஈடுபடுகிறார்கள். இங்கேயே இந்த விஷயத்தை தெளிந்து ஆன்ம தரிசனம் பெற்று தெளிவு என்கிற உன்னத லோகத்தை அடைகிறார்கள். தர்மத்தை பகீர் முகமாக பேசுபவன் உயர்ந்தவன் இல்லை. தர்மத்தை பேசியும், தான் இருப்பதாகச் சொல்லியும் வாழ்வதில் வெற்றி கிடைப்பதில்லை. மாறாக தர்மம் அந்தர்முகமாகி விட வேண்டும். அவனே தர்மமாகி விட வேண்டும். இது மிகப் பெரிய சாதனை. ஒரு அளவுக்கு மேல் இதைச் சொல்லித் தர முடியாது.

அப்படி தர்மத்தை அந்தர்முகமாக்கிக் கொண்டவனுக்கு அதுவாகவே வாழ்கின்றவனுக்கு மரணம் பயம் தருவதில்லை. அவனைத் தீண்டுவதே இல்லை. தன்னைப் பற்றிய பெருமையை வெளியே சொல்லி தன்னை மிக உத்தமன் என்று சொல்லிக் கொள்கிறவன் அப்படி வாழ்வது உண்மையாயினும் நாய்க்கு ஒப்பாவான். நாய் கக்கியதை மறுபடி தின்பது போல தான் வாழ்வதைச் சொல்லி அதனால் மறுபடியும் பிராபல்யம் அடைய முயற்சிக்கிறான். இவன் எப்பொழுது வேண்டுமானாலும் வீழ்ச்சியடைவான். எவன் தன் குடும்பத்து மக்களாலும் தன் பிரபாவத்தை மறைத்துக் கொள்கிறானோ தன்னை சாதாரணனாகக் காட்டி வலம் வருகிறானோ உலக குணங்கள் பார்த்து உள்ளே நகைத்தபடி இருக்கிறானோ அவனை மரணம் தீண்டுவதில்லை. அவனை காலம் நினைவில் கொள்கிறது. அவன் வாழ்பவனாக ஆகிறான். சரீரம் உகுத்தப் பிறகும் கௌரவிக்கப் படுகிறான். இருப்பதாக உணரப்படுகிறான். இவனை ஞானி என்றும் அழைக்கிறார்கள். இந்த ஞானிக்கு மரணம் இல்லையென்றும் சொல்கிறார்கள்.

எவன் இந்த ஒரு விஷயத்தை அடைய களைப்படைவதில்லையோ, எவன் இந்த விஷயத்தை வழங்க தானம் பெறுவதில்லையோ, எவன் நல்லோர்களால் மதிக்கப்படுகிறானோ, எவனால் இந்த பூமிக்கு உபத்திரவம் இல்லையோ, எவன் இந்த விஷயத்திற்கு சீடனாக இருக்கிறானோ அவனே பிராமணனாவான். பெரிய வித்வான் ஆவான். பிரம்ம வேதாவும் அவனே.

எவன் உலகப் பார்வையில் ஏழையாக இருந்தும் இந்த வித தெய்வ சம்பந்தம் கொள்கிறானோ, எவன் பூஜை உபாசனை முறைகளில் முழுமையாக இருக்கிறானோ, இந்த தத்துவத்திலிருந்து எவன் அசைக்க முடியாதவனாக இருக்கிறானோ, எவனை இந்த உலகம் அடக்க முடியாதோ அவன் பிரம்மத்தின் சாட்சாத் உருவம். உலகம் மதிப்பதால் எவன் கர்வப்படவில்லையோ அல்லது மதிக்கப்படும் மனிதனைப் பார்த்து எரிச்சலடைவதில்லையோ, எவன் இந்த வித ஆராய்சி செய்பவர்களால் மதிக்கப்படுகிறானோ அவன் கௌரவிக்கப்பட வேண்டியவன். கண்களைத் திறந்து மூடுவது போன்ற இயல்பான தன்மையோடு இந்த வித்வானை மதிக்க வேண்டும்.

கட்டளை இட்டா இமைகள் அசைகின்றன. தானாக நடைபெறவில்லையா. இத்தகைய வித்வானை கண்டதும் தானாக பணிவு வரவேண்டும். இதுவே பூமியில் நல்லது வளரும் விதம்.

ஆனால் இந்த உலகத்தில் அதர்மத்தில் நிபுணனும், ஏமாற்றுவதில் கபடத்தில் நிபுணனும் கெட்டிக்காரனும், மதிக்கத்தக்க மனிதனை வலிந்து அவமதிப்பவனும் இருக்கிறார்கள். மானமும் மௌனமும் ஒருபொழுதும் ஒன்றாக இருப்பதில்லை. மானம் இந்த உலக சுகத்தோடு சம்பந்தப்பட்டது. மௌனம் பரலோக சுகத்தோடு சம்பந்தப்பட்டது. இப்பூவுலகில் ஐஸ்வர்ய ரூபமுடன் இருக்கும் லட்சுமி சுகத்தின் இருப்பிடம். அவளே இடையூறுகளும் செய்வாள். ஆனால் பிரம்ம ஞானமயமான லட்சுமி மனிதனுக்கு கிடைத்ததற்கு அரியவளாவாள். வித்வான்கள் பிரம்ம ஞானமயமான லகூஷ்மியை அடைய பல வழிகளைக் கூறுகிறார்கள். இவற்றை பின்பற்ற கடினமானவை. அவற்றின் பெயர்கள் சத்தியம், எளிமை, வெட்கம், தவம், சௌசம், வித்தை என்பனவாகும்.