இரண்டு நண்பர்களின் மனதோடு மனம் சேர்ந்தாலும் மறைக்க வேண்டிய இரகசியத்தை மறைக்கப்பட வேண்டும். ஆனால் அறிவோடு அறிவு சேரலாம். இத்தகைய நட்பு அழிவதில்லை. நண்பன் என்பவன் நன்றியுள்ளவனாக, தர்மம் உடையவனாக, சத்தியவானாக, உதார குணம்(இரக்கம்) உள்ளவனாக, உறுதியான அன்புடையவனாக, புலன்களை வென்றவனாக, மரியாதைக்குட்பட்டவனாக , நட்பை துறக்காதவனாக இருக்க வேண்டும்.

புலன்களை எப்போதும் அடக்கி வைத்திருப்பது மரணத்தை விட கடுமையானது. புலன்களை கட்டவிழ்த்து விடுவது அந்த தேவர்களையும் அழிக்கக் கூடியது. மங்களப் பொருட்களில் ஸ்பரிசம் (உதாரணம் கையில் எலுமிச்சை பழம் வைத்திருத்தல்) உள்ளத்தை அடக்குதல், சாஸ்திர பயிற்சி, உழைப்பு, எளிமை, நல்லவர்களின் தரிசனம் எப்போதும் நன்மை தரும். முயற்சியை விடாத மனிதன் மகானாகிறான். முயற்சியோடு கூடிய பொறுமை மிகுந்த நன்மையை அளிக்கக் கூடியது. முயற்சிக்கும் பொறுமைக்கும் என்ன சம்பந்தம். சிறிது யோசித்தாலும் தெரிந்து விடும்.

துக்கத்தால் பீடிக்கப்பட்டவன், நாஸ்தீகன், குற்றம் செய்தவன், சோம்பல் உள்ளவன், புலனடக்கம் அற்றவன் மற்றும் உற்சாகம் இல்லாதவனிடம் லக்ஷ்மி வாசம் செய்வதில்லை. அவனை சக்தியற்ற மனிதனாகக் கருதி ஊர் விலக்கி வைக்கிறது. வேதங்களின் பலன் அக்னி ஹோத்ரம் செய்வது. சாஸ்திரங்களின் பலன் நன்னடத்தை. பெண்ணின் பலன் ரதி சுகமும், புதல்வனை பெறுதலும் , செல்வத்தின் பலன் உபயோகமும், தானமும்.

தீய வழியில் சம்பாதித்த பணம் என்ன விதமான தானத்தில் ஈடுபட்டாலும் அப்படி செய்தவனுக்கு தர்ம பலனை தருவதில்லை. ஏனெனில் அது தீய வழியில் வந்தது. கோபமின்மையால் கோபத்தை வெல்ல வேண்டும். சாது இல்லாதவனை நல்ல செயலால் வெல்ல வேண்டும். கருமியை தானத்தால் வெல்ல வேண்டும். பொய்யை சத்தியத்தால் வெல்ல வேண்டும்.

எவன் தினந்தோறும் பெரியவர்களை வணங்குகின்றானோ, முதியவர்கனின் சேவையில் ஈடுபடுகின்றானோ அவர் கீர்த்தி, புகழ், பலம், செல்வம் நான்கும் வளர்கின்றன.

தலை குனிவு காரியத்தால் கிடைக்கும் செல்வத்தை விரும்பக் கூடாது. வித்தை இல்லாத மனிதன், பிள்ளை பெறாத பெண், ஆகாரம் கிடைக்காத பிரஜை, மன்னன் இல்லாத ராஜ்ஜியம் இதற்காக துயரப்பட வேண்டும். அதிகமாக நடப்பது தேகம் உள்ளவர்களுக்கு துக்கம். தொடர்ந்து நீர் விழுவது மலைகளுக்கு துக்கம். புருஷன் இருந்தும் சேர முடியாத பெண் பெரும் துக்கம். சொல்லால் ஏற்படும் காயம்தான் மிகப் பெரிய துக்கம். ஒரு பதிவிரதை பெண்ணுக்கு விளையாட்டும் , பரிகாச பேச்சும் துயரம் தருபவை. கணவன் வேறு தேசத்தில் இருப்பது பெண்களுக்கு துயரம் தருபவை.

தங்கத்தின் மாசு வெள்ளி. வெள்ளியின் மாசு ஈயம். ஈயத்தின் மாசு கண்ணாடி. கண்ணாடியின் மாசு தூசு. மாசற்று இருப்பது என்பது ஒவ்வொரு மனிதனும் கவனம் கொள்ள வேண்டியது. காமத்தை பயன்படுத்தி பெண்ணை வெல்ல முடியாது. விறகை போட்டு தீயை அணைக்க முடியாது. அதிகம் குடித்து விட்டு மது அருந்தும் பழக்கத்தை விடுவது பற்றி பேச முடியாது. மது அருந்தி நல்லது பேசுவது எவ்வளவு அபத்தமோ அத்தனை அபத்தம் பெண்ணிடம் காமத்தை கிளறி வசப்படுத்தல்.

ஒரு லட்சம் ரூபாய் உடையவனும், ஒரு லட்சம் பொன் உடையவனும் உயிரோடு இருக்கிறான். நூறு லட்சம் பொன் உடையவனும் உயிரோடு இருக்கிறான். பத்து பொன் இருப்பவனும் உயிரோடு இருக்கிறான். பொன்னே இல்லாதவனும் உயிரோடு இருக்கிறான். எனவே வாழ்வதற்கும் செல்வத்திற்கும் சம்பந்தம் இல்லை. இதை புரிந்து கொண்டால் பேராசை வராது.

எல்லோரிடமும் சமபாகமாகவே நீங்கள் நடப்பதற்காக இத்தகைய விஷயங்களை உங்களுக்கு கூறினேன்.

பொய் சொல்லி உன்னதம் அடைதல், அரசனிடம் கோள் சொல்லுதல், பெரியவர்களிடம் பொய்யான குற்றச்சாட்டு சொல்லுதல் போன்றவை பிரம்ம ஹத்தி தோஷத்திற்கு சமானம். செல்வம் அந்த இடத்தில் நிலைப்பதில்லை. அவசரம், தற்புகழ்ச்சி, சேவை செய்யாதிருத்தல் இவை வித்தைக்கு பகை. சோம்பல், தந்திரத்தன்மை, கோஷ்டியாக அலைதல், கர்வம், சுயநலம், அநாகரீகம், மத மோகம் ஏழும் மாணவர்களுக்கு குற்றமாகக் கருதப்படுகின்றன.

ஒரு வீட்டில் வெள்ளாடுகள், வெள்ளி, தேன், வில், பறவை, வேதம் அறிந்த பிராமணன் நட்பு, குடும்பத்து முதியவன், வெண்கல பாத்திரம் ஆகியவை எப்பொழுதும் உன் வீட்டில் இருக்கட்டும். வீட்டிற்கு வந்த விருந்தினரை பூஜிப்பதற்காக ஆடு, மாடு, சந்தனம், வீணை, கண்ணாடி, தேன், நெய், நீர், தாமிரப் பாத்திரம், சங்கு, சாலக்கிராமம், கோரோஜனம், ஆகிய பொருள்கள் வீட்டில் இருக்க வேண்டும். இப்படிப்பட்ட பொருள்களையெல்லாம் கொண்டு வீடும், நாடும் நகரமும் வைத்து ஆண்ட மன்னர்களெல்லாம் யமலோகத்திற்கு போய் விட்டார்கள். அந்த மன்னருக்கு முன்னால் அவன் புதல்வன் இறந்தால் உடனே வீட்டை விட்டு வெளியே எடுத்துப் போய்விடுகிறார்கள். ஊரின் கோடியில் தகனம் செய்து விடுகிறார்கள். இவையெல்லாம் ஒட்டுமொத்தமாய் யோசிக்கும் போது ஆச்சரியமாய் இருக்கிறது. இந்த லோகம் மட்டுமல்ல, பரலோகத்திலும் அறியாமை என்னும் இருள் பரவியிருக்கிறது. எல்லா இடங்களிலும் அந்த இடத்திற்கேற்ப புலன்களும், மோகங்களும் உண்டாகின்றன. அறிவுடையவன்தான் இதை ஆராய்ந்து தப்பித்துக் கொள்கிறான்.

மன்னா, இந்த ஜீவாத்மா ஒரு நதி. இதில் புண்ணியம்தான் ஜலம். தைரியமே இதன் கரைகள். இரக்கம் இதன் அலைகள். புண்ணிய கர்மங்கள் செய்த மனிதன் இதில் நீராடி புனிதம் அடைகிறான்.

பேராசையற்ற மனம், எப்பொழுதும் பவித்ரமாக இருக்கிறது. எவன் தன் பந்துக்களை மரியாதையால் மகிழ்விக்கிறானோ செய்யக் கூடியது செய்யக் கூடாதது என்று அவர்களுடன் விவாதிக்கிறானோ அவன் மோகத்தில் சிக்குவதில்லை.

பசியை பொறுத்துக் கொள்வது போல ஒரு மனிதன் காமத்தை பொறுத்துக் கொள்ள வேண்டும். காமம் பசியை காட்டிலும் உக்கரமானது. அறிவு அழிப்பது. பசியில் கெஞ்சத் தோன்றும். காமத்தில் அதிகாரமும், அத்துமீறலும் இருக்கும். கை, கால்களை கண்களாலும் , கண் காதுகளை மனதாலும் , மனம், வாக்கை தர்ம பேச்சுக்களாலும் சுத்தம் செய்து கொள். காமம் என்பது பெண்ணிடம் மட்டுமல்ல, எத்தனையோ விதமாக வெளிப்படும். காமம் என்பதற்கு ஆசை என்றே பொருள் கொள்ள வேண்டும்.

-தொடரும்